Thursday, March 8, 2012

மகளிர்தின வாழ்த்துக்கள், சாந்தாக்கா...!

. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (அ)சாதாரண பெண்ணைப் பற்றிய பதிவு இது. தெருக்கோடியில் இருந்தது சாந்தாக்காவின் வீடு. எப்போதாவது எதிரெதிரேப் பார்த்தால் புன்னகைத்துக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பரிச்சயம். பக்கத்து ஊருக்கு குடி போன பின், அதிகம் இங்கு வருவதில்லை. ரொம்ப நாளைக்கப்புறம் நேற்று அவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்ததும் அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.


நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள்.... வருஷந்தோறும், சித்திரைமாதம், கோலாகலமாய் நடக்கும் நடக்கும் கோயில்கொடையின் கடைசிநாள். வியாழக்கிழமை உணவெடுக்கும் நாள். மதியம் கறிச்சாப்பாட்டுக்குப் பின் தெருவில் விளையாட்டு போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, மியுசிக்கல் சேர், நடந்து கொண்டிருந்தன. ஒரே ஆரவாரமும், கூச்சலும் களிப்புமாயிருந்தது. திடீரென யாரோ, ஏதோக் கூச்சலிட, சட்டென அத்தனையும் அடங்கி போனது. ``இசக்கிமுத்து மருந்தக் குடிச்சிட்டானாம், கடற்கரைல பெண்மாக் கெடக்கானாம்’. உடைப்பதற்காக கட்டப் பட்டிருந்த பானை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. `பாவிப்பய, எதுக்கு இப்பிடி செஞ்சான்னு அரற்றிய படியே கடற்கரைக்கு ஓடினர். இசக்கிமுத்து சாந்தாக்காவின் கணவர். 35 வயதுக்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியானவன், சங்கோஜி, யாரிடமும் அதிகம் பேசமாட்டான், பழகமாட்டான். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பான். அப்படிப்பாட்டவன் திடீரென த்ற்கொலை செய்து கொண்டது அதிச்சியாயிருந்தது. காரணம் தெரிந்தபோது,` சீ... இவெனெல்லாம் ஒரு மனுஷனா? இதுக்குப் போயி எவனாவது சாவானா?’ திட்டி தீர்த்தனர். 



இசக்கிமுத்து பக்கத்து ஊரில் சிறிய கடை நடத்தி வந்தான். பெட்டிக்கடையாயுமில்லாத, மளிகைகடையாயுமில்லாத கடை அது .கணவன், மனைவி இருவருமே சேர்ந்து தான் கடையை பார்த்துக் கொண்டனர். கோடைக்காலமாதலால் சர்பத் போன்ற ஒரு குளிர்பானம் தயாரித்து விற்பார்களாம். கலர் பொடி, சீனி, ஐஸ் ஆகியவற்றை கலக்கும் போது அந்த பொடியில் உள்ள ஏதோ ரசாயனம் கைகளுக்கு ஒத்துக் கொள்ளமல், அலர்ஜி ஏற்பட்டு, நாளடைவில் கைவிரல் நகங்கள் எல்லாம் சுருங்கி, விரல்முனைகள் முடங்கி ஒருமாதிரி மொக்கயாய் மாற ஆரம்பத்திருக்கிறது. தனக்கு `பெருவியாதி’ தான் வந்துவிட்டது என பயந்து புலம்பிக்கொண்டிருந்தானாம். இந்த பயத்தில் தான், கட்டிய மனைவியையும், இரண்டு மகன்களையும் நிர்கதியாய் தவிக்க விட்டு போய்விட்டான். ``ஐயோ.. இனி நா என்ன பண்ணுவேன், ரெண்டுபுள்ளைங்களையும் எப்படி காப்பாத்துவேன்..’ கடற்கரை மணலில் கிடந்து புரண்டு சாந்தாக்கா அழுததை தெருவே சொல்லிச் சொல்லி மாய்ந்து போயிற்று.


 சாந்தாக்காவை வைத்து ஆதரிக்கும் அளவுக்கு அவளுடைய அக்காவோ, கணவரது தம்பி, தங்கை குடும்பத்தினரோ வசதியானவர்கள் இல்லை. பெரிய பையனுக்கு 12, 13 வயதிருக்கலாம். அவனை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திக் கொண்டிருந்த கடையை தொடர்ந்து நடத்தலானார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சாந்தாக்காவுக்கும் விரல்களில் அதே நோய் இருந்து தோல் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், அந்த சர்பத் கலப்பதை விட்டு விட்டார்கள்.. கடையையும் பார்த்துக் கொண்டு, லோனுக்கு கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு, வீடுகளுக்கு மாவு அரைத்துக் கொடுக்கவும் தொடங்கினார்கள். பின்னர் அதுவே மாவு பாக்கெட்டுகளாக மாறின. சில வருடங்களில் படித்துக் கொண்டிருந்த சின்ன பையனும், உறவினர் கடை ஒன்றுக்கு வேலைக்குப் போய்விட்டான்.


 பதினைந்து வருட உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றின் பலன், தெருமுனையில் சிதிலமாகும் நிலையிலிருந்த ஓட்டுவீடு, சிறிய காங்கிரீட் வீடாகி, வாடகைக்கு விடப் பட்டிருக்கிறது. கடை நடத்திக்கொண்டிருந்த ஊரிலேயே சொந்தமாக இடம் வாங்கி, அங்கேயும் சொந்தமாக சிறிய வீடு, சொந்த கடை, போக இரண்டு கடைகள் வாடகைக்கும் விட்டுருக்கிறார்கள். வெளிர்நிறத்தில் சாதாரணசேலை, வெறுமையான நெற்றியில் உழைப்பின், அனுபவத்தின் ரேகைகள் பளிச்சிட நடமாடும் சாந்தாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பிரமித்துப் போகிறேன்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருந்தது என்ன...? .

Sunday, January 15, 2012

இனிய பொங்கல்வாழ்த்துகள்

அனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள்.


.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டது. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.


.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.



-

.

Wednesday, April 6, 2011

`அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’



சாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


திரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே!


டைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.


இளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.







அன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.



ஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...!





சுஜாதா...! எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.

.

Tuesday, March 22, 2011

விளையாட்டு அம்மன்...

.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது? குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா?’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி? மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா? என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.


L மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.


டாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே! பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.


மறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா? பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.



நாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.


`நான் தந்த சிரப்பக் குடுத்தியா ? கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது? இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.


பார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?’ கத்தினாள் இவள்.


ஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.

.

Monday, March 14, 2011

கொஞ்சம் சிரிக்கலாமா....?



கொஞ்சம் சிரிக்கலாமா....?

இ.மெயிலில் வந்த படங்கள் இவை.

உங்கள் பார்வைக்காக...









































vijay to star in Dhoom 3!!!!




Excited?







After Sivaji... The NEXT BIG BLOCKBUSTER!!!

Just wait till you see vijay bike ride in his next movie...( just like he won in KURUVI CAR race by holding accelerator wire using histeeth !!!!!)

IN HIS NEXT MOVIE DHOOM-3


Just go through the mail step by step...
....
...
..
....
vijay is Chasing Villains
...
...
....
...
...
...
His bike is almost out of gas. NO FUEL!!!
....
...
....
....
....
What would you do???
..
...
...
...
...


Give up, of course. YOU are NOT vijay.
...
...
...
...
....

So what would HE do???
..
...
...
....
....


.

Monday, March 7, 2011

பெயர் புரா(கார)ணம்; தொடர்பதிவு.

.

`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.


`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.


பிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா!


ரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.


அப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.


அம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.


கிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.


ஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.


சிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.


இது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....


.

Friday, February 25, 2011

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

இதற்கான லிங்க் ஐ என் மகன் அனுப்பியிருந்தான்.






.