.
பதிவர் செல்வேந்திரனின் திருமணத்தில் கலந்து கொள்ள மறுநாள் காலை
திருச்செந்தூர் வரப்போவதாக, புதன்இரவு மாதுஅண்ணனிடம் இருந்து
போன் வந்தது. பதிவுலக நண்பர்கள் சிலரும் வந்திருப்பதாகவும்,
திருமணம் முடிந்து திரும்பும் போது என்னை பார்க்க வருவதாகவும்
மாதுஅண்ணன் கூறியதும் சந்தோஷத்துடன், ``அப்போ நம்ம வீட்டுக்கு
மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள்’ என்றேன். நண்பர்களிடம்
கேட்டு, அண்ணன் சரியன்றதும், மிக உற்சாகமாக, சந்தோஷமாக
காத்திருந்தேன். ஸாரி, காத்திருந்தோம். ஆம், என் கணவரும் லீவு
போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.
இந்த டிசம்பர் வந்தால், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பீடிகை
யுடன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. எழுத
ஆரம்பித்த சில நாட்களில், `நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரி, தற்சமயம்
துபாயில் இருக்கிறேன்’என்று் இமெயிலில் அறிமுகமானவர் அன்புத்தோழி
சுந்தரா. பின்னர் chat ல் தொடர்ந்த அன்பு, சென்ற ஆகஸ்ட் மாதம்,
லீவில் ஊர் வந்திருந்த போது, ஆறுமுகனேரி வந்து, என் வீட்டை
விசாரித்து, திடீரென என்முன் வந்து நின்றபோது சந்தோஷத்தில் திக்கு
முக்காடிப் போனேன். மிகக் குறைந்த நேரமே பேசிக் கொண்டிருந்தோம்.
அவரும் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. நானும் வெளியே
கிளம்பிக்கொண்டிருந்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச் சென்றார்.
மறுநாள் செல்லில் அழைதுப் பேசினேன். இரண்டொரு நாளில் ஊர்
திரும்புவதாகவும், அடுத்தமுறை வரும்போதும் கட்டாயம் வருவேன் என்று
விடைபெற்றார். நான் சந்தித்த முதல் வலையுலக சொந்தம் இவர் தான்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பதிவர் தீபாவின் வீட்டில் வைத்து,
அகிலா ஸ்ரீ அகிலாவை தீபா அறிமுகப் படுத்தினார். `அக்கா’ என வாய்
நிறைய அழைத்து அன்போடு பேசிய அகிலாவை சந்த்தித்தது அதுதான்
முதல்முறை என என்னாலேயே நம்ப முடியவில்லை.
நேற்று (வியாழன்) மதியம் பன்னிரண்டு மணியளவில், மாதுஅண்ணன்
பாரா அண்ணன், அண்ணன் மணிஜீ, வடகரைவேலன் ஆகியோர் வந்தனர்.
பின்னூட்டங்கள் மூலம் அன்பை பொழியும் பாரா அண்ணன், எங்கேயோ
கண்காணாத தேசத்தில் இருந்து அன்பால் அறிமுகமான பாரா அண்ணன்,
என்முன் எளிமையான சிரிப்புடன் அமர்ந்திருந்தார். என்னை கட்டாயம்
பார்க்க வேண்டும் என்றதாக மாதுஅண்ணன் கூறிய போது நெகிழ்ந்து
போனேன். அண்ணன் மணிஜீ, வேலன் ஆகியோர் எழுத்துக்களை ஓரளவு
வாசித்திருக்கிறேன். சிறிது நேரம் குடும்பம், குழந்தைகள் என பரஸ்பர
அறிமுகங்கள், விசாரிப்புகளை தொடர்ந்து கலகலப்புக்கு பஞ்சமில்லாத
அரட்டை, சிரிப்பு, பேச்சு, பின் மதிய உணவு என நேரம் போனேதே
தெரியவில்லை. தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்
போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு
பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.
மணிஜீஅண்ணன் பிறந்தநாள் என்றறிந்து சந்தோஷத்துடன் வாழ்த்தினோம்
அப்பாவை வணங்கி பிறந்தநாள் ஆசீர்வாதங்கள் பெற்றபின்னர், அனைவ
ரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றனர். வீடு வெறுமையாய் ஆனாலும்
மனம் நிறைந்திருந்தது.
புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,
ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம். எங்கோ ஒரு
கிராமத்தில் வாழும் என்னையும், இணைய குடும்பத்தில் இணைத்து
வைத்த பதிவுலகை, சந்தோஷமாய், பெருமையாய், நன்றியுடன்
நினைக்கிறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணமான செல்வேந்திரன்
தம்பதியினர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
.
36 comments:
உங்கள் சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி அக்கா.
மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
மகிழ்ச்சியாக உள்ளது.
நேற்று அவுங்க உங்க வீட்டில் இருக்கும் போது பா ரா வுடனும், மாதவராஜ் அண்ணனுடனும் பேசினேன்.. உங்களிடம் தான் பேச முடியல.. :(
நெகிழ்ந்து களிக்கவும் நினைவில் தோயவும் தானே நட்பும் உறவும்
மீன்குழம்பு வாசம் பற்றி பேசக் கேட்டேன். அன்பில் நனைந்த தருணங்கள் அடிக்கடி வாய்க்கட்டும்
வினோ,
உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. நீங்கள், சரவணக்குமார் எல்லாம் அப்போது தான் பேசியிருக்கிறீர்கள். பத்மாவிடம் மட்டும் பேசமுடிந்தது. இன்னொருமுறை கட்டாயம் பேசாலாம் வினோ.
படிக்கவே மகிழ்ச்சியாய் இருக்கு. அது என்ன வகை மீனு.
எல்லோரும் நண்பர் மாதவராஜின் எழுத்துக்கும் முகத்துக்கும் சம்பந்தமில்லைகிராங்களே! கொஞ்சம் யோசிச்சு வைங்க, அண்ணன் நடை, உடை, மீசைய மாத்தலமா அல்லது எழுத்துனடையா!
மாதவராஜ் சாரின் பதிவில் காணும் ஊர்மணமும், உங்கள் பதிவில் காணப்படும் உங்கள் சமையலின் நறுமணமும் என் மூக்கைத் தொலைக்கின்றன நூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும்.
இந்தச் செய்தி தமிழ்மணம் வரை எட்டி விட்டதாகக் கேள்விப்படுகிறேன். அவர்கள் தமிழ்மணம், திரைமணம் ஆகிய பிரிவுகளுக்கு அடுத்து ஊர்மணம், கைமணம் என்று புதுப் பிரிவுகளை ஓட்டுப பட்டையில் இணைக்கப் போவதாகக் கேள்வி.
எல்லா வளமும் பெற்று வாழ்க மணமக்கள். இது பதிவு போலவே படவில்லை. ஏதோ ஒரு நெருங்கிய உறவினர் எனக்கு எழுதிய கடிதம் போலவே படுகிறது.
அன்புடன்
கோபி ராமமூர்த்தி
//புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,
ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம்//
ஆமா அக்கா. உங்களை சந்தித்தபோது நானும் அப்படித்தான் உணர்ந்தேன். நம்மை ஒரேக் குடும்பமாக உணர வைத்த இந்தப் பதிவுலகத்திற்கும், என்னை இந்தப் பதிவுலகத்திற்கு இழுத்து வந்த தீபாவிற்கும் என் நன்றியை சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நாம் சந்தித்த சந்தோஷத் தருணங்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி அக்கா.
மகிழ்ச்சியான நிகழ்வு அம்பிகா..
ம்ம்...சந்தோஷமாயும் பொறாமையாயும் இருக்கு அம்பிகா !
அம்பிகா உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி .உங்கள் கைமணத்தை புகழ்ந்து சொல்லிக்கொண்டே இருந்தனர்.
"இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் ?இந்த அன்புக்கு எதை திருப்பி தர இயலும்" என உருகிக்கொண்டே இருக்கின்றனர், பேசும் சமயமெல்லாம் .மகிழ்ச்சி
இனிய சந்திப்புகள்.
மிக்க மகிழ்ச்சி அம்பிகா.
\\தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்
போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு
பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.//
super :)
வாழ்த்துக்கள் அம்பிகா.
மீன் குழம்பை பத்தி ஒன்னும் எழுதலையா ??
சந்தோஷமா இருக்கு அம்பிகா வாழ்த்துக்கள்..:))
மணிஜி பல்லில் மீன் மூள் சிக்கிய் அளவுக்கு போட்டு இருக்கிங்க.. ..குழப்பு செம டேஸ்ட்டாம்..... கேட்கும் போதே நாக்குல எச்சி ஊறுதே..
Vaazhthukkal....
பதிவர் ஜெட்லி' சரவணன் திருமணம் இருந்ததாலும், எனக்கும் கேபிளுக்கும் ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேண்டியிருந்தாலும் செல்வேந்திரன் திருமணத்துக்கு வர முடியவில்லை..
உங்கள் அன்பின் நெகிழ்ச்சி .. நாங்களும் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்தி உள்ளது...
அன்றையதினம்மாதிரியே,இன்றைக்கும் சந்தோஷமாயிருக்கிறது அம்பிகா :)
ம்ம்ம் அசத்துங்க...நானும் தூத்துக்குடி வரும் போது வீட்டுக்கு வந்து கலக்கப் போறேன் பாருங்க!
மகிழ்சியான இடுகை. வாழ்த்துகள்.
எனக்கும் மீன் குழம்பு வாசம் மணிஜி பேச்சில் மணத்தது :)
கேட்கவே சந்தோஷமா இருக்கு. முகம் தெரியாமல் பேசிக்கொள்கிறோம். நீங்கள் நேராகவே பேசியிருக்கிறீர்கள்.
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அம்பிகா. உங்கள் சந்திப்பு தருணங்களை உங்களின் வார்த்தைகள் மூலம் கேட்கும்போது சொல்லமுடியாத மகிழ்ச்சி அலைகள். நல்வாழ்த்துகள் அம்பிகா.
நெகிழ்ச்சியான பதிவு அக்கா. அன்று காலை முதல் மணிஜி, பா.ரா, மாது அண்ணன் என எல்லோரிடமிடம் பேசிக்கொண்டிருந்தேன். மதியம் மீன் குழம்பு சாப்பாடு பற்றித் தெரிந்திருந்தால் உங்களிடமும் பேசியிருப்பேனே..
பதிவை வாசிக்கும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. எப்போதும் நிலைத்திருக்கட்டும் இந்தப் பேரன்பு.
அன்பு அம்பிகா அவர்களுக்கு
நடப்பு சமூக வாழ்க்கையில் மிக நெருக்கமான உறவினர்களைக் கூட பொதுவான திருமணங்களில் அல்லது அதையொத்த நிகழ்வுகளில் சந்தித்து மிகக் குறைந்தபட்ச சொற்களும் தவிர்க்கப்பட்ட புன்னகையோடு பரஸ்பரம் உறவுமுறையை கடன் பத்திரத்தை மூன்றாண்டுகளுக்கொருமுறை புதுப்பித்துக் கொள்வதுபோல், உடன் பிரிய நேர்ந்து அவரவர் உலகிற்குள் மீண்டும் நுழைந்து கொள்வதாகவே இருக்கிறது.
ஏதோ தூத்துக்குடி பக்கம் வசிக்கிற தெக்கத்திய வாசத்தில் விட்டுவிடாத உறவுமுறையும், அன்பின் வாசமும் (அல்லது மீன் குழம்பின் வாசமும்) இப்படி வலைப்பூ வழியாக காடு, மலை, நதி, கடல் கடந்து விரிகிறது ஒரு தோழமைச் சந்திப்பின் உற்சாகத் தெறிப்பு....
அந்தக் காலங்களில் திண்ணையில் வந்து உட்கார்ந்தால் விடிய விடிய பேசிக் கொண்டிருந்த மனிதர்கள், இப்போது காதில் அலைபேசி, கண்ணில் விடுதலை கோரும் கெஞ்சுதல், கால்களில் நிற்க மறுக்கும் வேலையின் வேகம்....என எப்படி மாறிப் போனோம்?
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்ப்பட்டியலில் உங்களை உங்கள் பதிவின் மூலம் மட்டுமே தெரியும், மாதவ் எனது உற்ற நீண்ட காலத் தோழர்களில் ஒருவர், வேறு யாரையும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டியிருக்கவில்லை. நெகிழ்ச்சி சங்கமம் ஒன்று எங்கோ நிகழ்ந்திருந்தால் அவ்விடத்தில் ஏதேனும் ஓர் அஃறிணைப் பொருளாகவேனும் நான் அருகிருந்து ரசித்ததாகவே உணர்வேன்.
அன்பின் வழியது உயிர்நிலை என்பதாக விரியும் உங்களது இடுகைக்கு நேயமிக்க வாழ்த்துக்கள்....
உங்களது பதிவுகள் அனைத்திலும் பொறுப்புணர்வும், விவேகமும், பக்குவமும் இழையோடுவதை மிகவும் ரசித்து வாசிப்பேன். மனித நேயத்தின் பிழிவை உங்களது ஒவ்வொரு இடுகையிலும் தரிசிக்கிறேன்.
டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் அன்று துவங்கிய உங்களது வலைப்பூ பயணத்தின் ஓராண்டு நிறைவிற்கு முன்னதாகவே வாழ்த்துக்கள். கொஞ்சம் வித்தியாசமான ஓர் இடுகையை அன்று நான் எதிர்நோக்கி இருப்பேன்.
எஸ் வி வேணுகோபாலன்
அம்மா,
பதிவு எழுதிதான் பிரபலம் ஆகனும். இப்படி மீன்குழம்பு மூலம் ஆகக் கூடாது.
அருமையான பகிர்வு.... வாழ்த்துக்கள். பதிவர் சந்திப்பு எப்போதும் ஒரு பழகிய உறவு போன்ற உணர்வு எற்படுத்தும்....
"KAVEESH M said...
அம்மா,
பதிவு எழுதிதான் பிரபலம் ஆகனும். இப்படி மீன்குழம்பு மூலம் ஆகக் கூடாது."
அடடா! பையன் பாருங்க!
அப்ப கவீஷ்! மாமாக்கு என்ன சொல்லப் போறீங்க! எல்லோரும் அவர் எழுத்துக்கும் உருவத்திற்கும் சம்பந்தமிள்ளகிறாங்க. அவர் உருவத்தில எப்பிடி முருக்கேற்றுவது. சொல்லுங்க பார்ப்போம்!
அருமையான சந்திப்பு அக்கா. அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் அம்பிகா. தங்களை சந்திக்க முடியாமல் போயிற்று. வயதான என் அம்மாவை யும் காரில் கூட்டி வந்ததால் எங்குமே சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் போயிற்று
மணிஜீ அண்ணன் இந்த கமெண்ட்டை சென்ற பதிவில் போட்டிருந்ததால் காப்பி செய்து இதில் வெளியிடுகிறேன்.
மணிஜீ......
தீர்ந்து போச்சு அம்பிகா குழம்பு...இன்னும் ஒரு டப்பா பார்சல்..இன்னும் மணந்து கொண்டிருக்கிறது குழம்பும், நினைவுகளும்.
உங்கள் எல்லோருடைய பிரியங்களையும் சுமக்க மாட்டாது, இன்னும் தள்ளாட்டமாகவே இருக்கிறது அம்பிகா, மோகன் அத்தான், அப்பா.
ஆமாம் அம்பிகா, மீன் குழம்பில் எவ்வளவு அன்பு சேர்ப்பது? உன் அண்ணிக்கு சொல்லத்தான்...
மணிஜி ராஸ்கல் மாதிரி, கூச்சப் படாமல் நானும் ஒரு டிஃபன் பாக்ஸ் கேட்டிருக்கலாம். உன் அண்ணிக்கு காட்டத்தான்.. :-)
தியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,
ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம்.
....How sweet!!!
Post a Comment