.
மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி,
விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு
கொண்டாட்டங்கள்...; இவற்றோடு எனக்கு மார்கழி பஜனையும் சேர்ந்தே
நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இந்த பஜனை, பாடல்கள் இவற்றில்
அதிக ஆர்வமிருந்ததால் எங்களை பஜனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதிகாலை நான்குமணிக்கே கோயிலின் ஒலிப்பெருக்கிகள் எல்லோரையும்
எழுப்பி விட்டுவிடும். அம்மாவும் எழும்பி, எங்களுக்கு வெந்நீர் வைத்து,
குளிக்க செய்து, அனுப்பி வைப்பார்கள். அதன்பின் தெருவாசலில் கோலம்
போடுவார்கள். முற்றத்தையே அடைக்கும் பெரிய பெரிய கோலங்கள்.
இப்போது நானும் கோலம் போடுகிறேன், சின்னதா பேருக்கு ஒரு கோலம்..
பொங்கல், கோயில்கொடை என்றால் மட்டுமே பெரிய கோலம். அம்மா
வின் சுறுசுறுப்பு இப்போதும் ஆச்சர்யப் படுத்துகிறது.
மாதுஅண்ணன், நான், குட்டி மூன்று பேரும் பஜனைக்கு போவோம்.
விஜியண்ணன் கூட சில நாட்கள் வந்திருக்கிறான். எங்கள் தெருவின்
முனையில் தான் பஜனைக்கோயில் இருந்தது.எங்களைப் போல நிறைய
சிறுவர், சிறுமியர் வருவார்கள். பஜனையை வழிநடத்தி செல்வது
செல்லத்துரை என்பவர். எங்களனைவர்க்கும் செல்லத்துரையண்ணன்.
ஆரம்ப காலங்களில் பத்து, அதிகம் போனால் பதினைந்து பேர்கள்,
ஒருவர் கையில் ஹார்மோனிய பெட்டியுடனும், சிலர் ஜால்ரா வுடனும்
ஏதோ பாடிக் கொண்டு போவார்களாம். செல்லத்துரையண்ணன் தலைமை
ஏற்று நடத்த ஆரம்பித்த பின்தான் இவ்வளவு பேர் வர ஆரம்பித்தார்கள்.
அவர்களுக்கு நல்ல கம்பீரமான குரல். தொடங்கும் போது
தோடுடைய செவி யென் விடை யேறியோன்;
தூ வெண் மதி சூடி,
என்று தேவாரத்துடன் ஆரம்பிப்பார்கள். அதன் பின்,
போற்றி என் வாழ்முதல், ஆகியப் பொருளே;
புலர்ந்தது பூங்கழல்
என திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,
ஆதியும் அந்தமும் இல்லாத
அரும்பெரும் சோதியை யான் பாட
திருவெம்பாவை பாடல்கள்...
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
என சில திருப்பாவை பாடல்கள்..
இதற்குள் சிவன்கோயில் வந்து விடும். அவர்கள் முதலில் பாட, பின்
நாங்களனைவரும் சேர்ந்து பாடுவோம். ஆங்காங்கே கோலம் போட்டுக்
கொண்டிருக்கும் பெண்கள் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.
கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொள்வர்.
சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி வேறு சில
தெருக்கள் வழியாக மறுபடியும் பஜனைக் கோயிலுக்கே வந்து சேர்வோம்.
சில திருப்புகழ் பாடல்கள்... முடிக்கும் போது
ஆறிரு தடந்தோள் வாழ்க,
ஆறுமுகம் வாழ்க.
என்று முடிப்பார்கள்.
மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள்
ஒப்பிக்கும் போட்டி நடக்கும். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள்,
திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், மொத்தம்
60 பாடல்கள் ஒப்பிக்க வேண்டும். அறுபதையும் ஒப்பித்தால் பொன்னாடை
போர்த்தி, பரிசும் வழங்குவார்கள். பாடல்களின் எண்ணிக்கைக்கேற்ப
எல்லோருக்கும் பரிசுகள் உண்டு. ``எப்ப பாத்தாலும் ஆம்பள பசங்க தா
நெறய சொல்றாங்க, பொம்பள புள்ளைங்களால முடியாதா?’’ என்று
எங்களை சீண்டிவிட போட்டி போட்டு ரோஷத்தோடு படித்தோம். அந்த
வருடம், பெண்களில் நானும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும்
60 பாடல்கள் ஒப்பித்தோம். பையன்களில் மாதுஅண்ணனும், குட்டியும்
ஒப்பிச்சாங்க. பொங்கலன்று எல்லோர்க்கும் பரிசுகள், எங்களுக்கு சிறப்பு
பரிசுகள் வழங்கினார்கள்.
ஹைஸ்கூல் வந்ததும் இவையெல்லாம் நின்று போயின. நாங்கள் தாம்
நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,
எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்
பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.
செல்லத்துரையண்ணன் நல்ல கணீரென்ற குரலில் டி.எம்.எஸ் பாடல்
களை அப்படியே பாடுவார்கள். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்
பிடித்தேன்‘ `மண்ணானாலும் திருச்செந்தூரின் மண்ணாவேன்’ இன்னும்
எத்தனையோ பாடல்கள்... மிக அருமையாக பாடுவார்கள். ஆன்மீகத்தில்
மிகுந்த நாட்டமுடன், திருமணமே வேண்டாமென்றிருந்த அவர்கள்,
வீட்டாரின் வற்புறுத்தலால் மிகதாமதாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இதைப் போல ஒரு மார்கழிமாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென
இறந்து விட்டார்கள்.
மார்கழிமாத பஜனை, தேவாரம், திருப்பாவை இவற்றோடு, எங்களுக்கு
செல்லத்துரையண்ணனின் பாடல்களும் சேர்ந்தே நிறைந்திருக்கின்றன.
.
27 comments:
நல்ல நினைவுகள்
மார்கழிக்கென்று பல விசேஷங்கள் உண்டு. விசேஷங்களுடன் ஒரு சோக நினைவும்.
மறக்கமுடியாத மார்கழிதான்..
மார்கழி மாச பஜனை வாழ்வில் மறக்க முடியாதுங்க. நிறையப் பாடல் கத்து கிட்டேன், இப்ப எல்லாம் மறந்து போச்சு. பையன் அடிக்கடி பாடி காமிங்கும் போது பழையப் பாடல்கள் நினைவுக்கு வருது. ஆனால் முழசா வருவது இல்லை. பஜனை கடைசியில் கிடைக்கும் சூடான பொங்கலும், மாத கடைச நாளில் கிடைக்கும் பரிசு (பாத்திரம் தான்), எல்லாம் மலரும் நினைவுகள். நன்றிங்க.
பனிக்குளிர்ல நடுங்க நடுங்கக் குளிச்சதெல்லாம் ஞாபகம் வருது அம்பிகா !
சகோ அழகிய கோலங்களும், பாடல்களும் தான் நினைவுக்கு வருகிறது...
சில நினைவுகள் மறக்கயியலா
மார்கழித்திங்கள் மதி நிறைந்தநன்னாளாம் பாட்டு நினைவு வருவது போல இனி மார்கழி என்றால் இந்த பதிவும் ஞாபகம் வரும்
சிறுவயது நினைவுகள் என்றும் இனிமைதான். மார்கழி நினைவுகள் அழகு. நல்ல பகிர்வு அம்பிகா.
அழகான நினைவுகள்...
\\ நாங்கள் தாம்
நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,
எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்
பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.//
ஆமாம்..
60 பாடல்களா ஒப்பித்தீர்கள் !!!
இங்கயும் திருப்பாவை திருவெம்பாவை போட்டிகள் நடக்கிறது.. அந்த சமயம் மகள் டூர் போக ஏற்பாடாகி இருந்ததால்.. தயார் செய்யவில்லை..
ஒரு பாடல் மட்டும் பேருக்கு இம்முறை மனப்பாடம் செய்தாள்..தமிழ் வாசிக்க ..நாவில் பழக்கப்படவும் , இறைவணக்கத்தில் பயிற்சியும் என அவ்வப்போது முயற்சி தொடர்கிறது..
அன்பு அம்பிகா,
நலமா? விட்டில் பூச்சிகள் நல்லாயிருந்தது... பின்னூட்டமிட விட்டுப்போச்சு...
மார்கழி நினைவுகள் எனக்கும் அனேகம்... ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூர் என்னால் மறக்கவே முடியாத விஷயங்களை பதுக்கி வைத்திருக்கிறது... பனியை துடைக்க துடைக்க இன்னும் தெளிவாக தெரிகிறது...
புள்ளியோடு முடியாத கோலங்கள்... நிறைய கிளறி விடுகிறது இந்த மார்கழி மாதமும், ஆடி மாதமும்...
அன்புடன்
ராகவன்
மார்கழி நினைவுகள் ஒரு வித்தியாசமான கடந்தகாலத்தின் பதிவு. இப்போது இதெல்லாம் நடக்கிறதா தெரியாது.
பாடல்களை மனனம் செய்யும் பயிற்சி எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. பள்ளிக்கூடத்தில், மனப்பாடப் பகுதி என்பதைத் தவிர்த்து வரும் எல்லாச் செய்யுள்களும், கவிதைகளும், காப்பிய வரிகளும், காவியப் பொழிவுகளும் நினைவில் நிறைந்திருக்க, இளம் வயதிலேயே எனது புரிதலில் இருந்து செய்யுள்களுக்கு விளக்கமும், உட்பொருள்களும் எழுதத் துவங்கியிருந்தேன்.
இவற்றில் இந்த மார்கழி மாதத்திற்கு நிறைய பங்கிருந்தது.
எட்டாம் வகுப்பில் காஞ்சி மாநகர் போய்ச் சேர்ந்தேன், பாட்டி வீட்டில் தங்கிப் படிக்க. எனது அன்றாட நேரங்களில் பல மணி நேரம் வரதராஜப் பெருமாள் கோவில் சன்னதிகளில், பதினாறு கால் மண்டபத்தில், நூற்றுக்கால் மண்டபத்தில், மீன்கள் வதியும் குளக்கரையில், மகிழம்பூ கொட்டி அழைக்கும் மரத்தடியில், நெய் வழியும் பிரசாதம் கிடைக்கும் மடப்பள்ளியில், மூலவர் உயர்ந்து நின்று காட்சி தரும் மலையில் (அது உண்மையில் மலை அல்ல, 24 படிக்கட்டுகள் ஏறிச் சென்றடையும் முதல் தளத்தை தான் அப்படி அழைப்பார்கள்) எல்லாம் மணிக் கணக்கில் கழிந்த நேரங்களை விடவும், சாமி புறப்பாடு நேரத்தில் சந்தத்தோடு உச்சரிக்கப் படும் திவ்விய பிரபந்தத்தின் ஓசை நயம், சொல் நயம், அதன் லயத்தில் மிகவும் உள்ளம் பறிகொடுத்து அந்த நூலைத் தேடித் பெற்று வாசிக்கத் தொடங்கியபோது, பாடல்களை மனத்தில் இருத்துவது எத்தனை இன்பமான விஷயம் என்று பயின்ற அனுபவம் அற்புதமானது.
மார்கழியில், வைணவத் தளங்களில், பகல் பத்து, இராப்பத்து எனப்படும் பெரிய திருநாள் கொண்டாட்டங்களின்போது முழுக்க முழுக்க தமிழின் ஆட்சி தான் இருக்கும்.
செல்லத் துரையண்ணன் தமிழில் தனது உயிரை வைத்ததும், அந்த நினைவுகளூடே உயிரைத் துறந்ததும் ஆன்மிகவாதிகள் சிலாகிக்க மட்டுமல்ல, ரசனை மிக்க சுவாரசியமான வாழ்வை நாட்ட விரும்பும் முற்போக்காளர்களுக்கும் வியக்கத் தக்க விஷயமாகவே இருக்கும்.
ஆண் பெண் சமத்துவப் போராட்டங்களின் வேர்கள், ஆன்மிக வைபவத்திலும் இடம் பெற்றிருப்பது உங்களது பெருமிதத்திற்குரிய பங்களிப்பு. வாழ்த்துக்கள்.
எஸ் வி வேணுகோபாலன்
உங்கள் நினைவுகள் அருமை இறுதியில் இழையோடும் சோகம். எனக்கும் நினைவுகள் உண்டு இங்கு செல்லவும்.
mathinilaa.blogspot.com
எல்லோருக்கும் மார்கழி இனிதாகத்தான் இருந்திருக்கிறது.
இந்த அனுபவங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை என்பதே என் வருத்தம். சென்னையில் பழைய நாளையக் குளிர் இப்போது. ஆனால் இன்னும் தெற்கு தேசத்து ஊர்களில் நடைமுறையில் இருக்கும் கோவில் காட்சிகள் இங்கே நடந்தேறுகிறதா என்றால் அவ்வளவாக இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
பலசத்சங்கங்களின் உறவு கிடைப்பதற்கும் ஒரு புண்ணியம் இருந்திருக்கணும். உங்கள் பதிவைப் படிக்க நேர்ந்ததும் அந்த வகையிலியே என்றுநம்புகிறேன்.
மாதவ்ஜி யின் தங்கையா அம்மா! நிரம்ப மகிழ்ச்சி.60 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் பஜனை நடக்கும். சேட்டைக்காரப் பயல் கள் நாங்கள் நாங்கைந்துபேர் செய்த சேட்டைகள் நினைவுக்கு வருகின்றன. பஜனை பாடும் பெரியவர்கள் சிலருக்கு எங்களைக்கண்டாலே ஆகாது.நாங்களும் அவர்களைப் பாடமல் செய்ய மல்லுக்கு நீற்போம்.அவர்களை பாடவிடாமல் செய்வதில் எங்களுக்கு திருப்தி.அவர்கள்பாட தயாராகும்பஓது எங்களில் ஒருவன் உரத்த குரலில் ஏதாவது எடுத்து விடுவான்.அவர் நிறுத்திக் கொள்வார். அடுதத முறையும் இது நடக்கும்.இப்படியே அவர்களை பாடவிடமாட்டோம். பின்னாளில் எங்களில் ஒருவன் TTVS இசைக்குழுவின் இயக்குனரானான். M.S.V இசைக்குழுவில் பணியாற்றினான். ---காஸ்யபன்
நல்ல நினைவுகள்.
உங்களின் மார்கழி மாத நினைவுகளும் அருமை.
//மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள் ஒப்பிக்கும் போட்டி நடக்கும்//.
இந்த தலைமுறையினரிடம் தமிழை வளர்க்க இது போல் பொது சங்கங்கள் செய்யலாமே.
மார்கழி மாதமென்றாலே ஒரு தனிச்சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. எனக்கும் நினைவுகளை எழுதனும்போல்தான் உள்ளது.... காய்ந்த உடலில் மார்கழி பனித்தூவினாற்போல் இந்த நினைவுகள் சில்லிடச்செய்கிறது.. நன்றிங்க..
டிசம்பர், மார்கழி, பனி, கிளைமேட் ரொம்பவே நல்லாருக்கும். அருமையான நினைவுகள்.
நன்றி எல்.கே.
உண்மைதான் தமிழ் உதயம். நன்றி.
நன்றி.அமைதிசாரல்.
வாங்க சேது. நீங்களும் பஜனைக்கு போயிருக்கிறீர்கள? பகிர்வுக்கு நன்றி சேது.
ஹேமா,
நடுங்கும் குளிர்ல அப்போ குளிக்க முடிஞ்சுது.. இப்போ நெனச்சாலே பயமாயிருக்கு. நன்றி. ஹேமா.
வினோ, உண்மைதான். மறக்க முடியாத நினைவுகள் தான். நன்றி.
செந்தில்குமார்,
மிகவும் மகிழ்ச்சி.
நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி வெறும்பய.
நன்றி முத்துலெட்சுமி., மகளுக்கு பழக்கப் படுத்துங்கள்.முடிந்தவரை படிக்கட்டும். என் வாழ்த்துக்கள்.
ராகவன்,
நிச்சயம் எழுதுங்கள். உங்கள் கைவண்ணத்தில் மார்கழிபனி நினைவுகள் மிளிரட்டும்.
எஸ் .வி. வேணுகோபாலன்,
தொடரும் உங்கள் அன்பு, மிகுந்த ஊக்கமளிக்கிறது. நன்றி.
பகிர்வுக்கு நன்றி. நிலாமதி.
வாங்க வல்லிசிம்ஹன், உங்கள் பகிர்வுக்கு நன்றி.
வாங்க திரு.காஸ்யப்பன்,
மாதுஅண்ணன் பதிவுகளில் பலமுறை உங்கள் பின்னூட்டங்களை படித்திருக்கிறேன். உங்கள் முதல்வருகைக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றி குமார்.
உங்கள் முதல்வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. உங்கள் மார்கழி பதிவும் அருமையாயிருந்தது.
வாங்க மின்மினி RS
உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
நன்றி பாலாசி, நிச்சயம் எழுதுங்கள்.
அருமை. அதுவும் அதிகாலை நிகழ்வுக்ள் ஒரு புது அனுபவத்தை தரும்.
மார்கழியின் மலரும் நினைவுகள் அருமை.
"maarkali ninaivugal"
En ariyatha vayathil nanum early morning la veneeril kulitthu eduppil ouru pattu thundu katti nettriel veboothi pattai pottu mun varusaiel nindru kaiyai thattikkondu araikurai thookkathoda
kaluthil chinna malai aninthu kondu bajanai padalkalai padivantha ninaivugal endrum nenjil aliyathavai ninaivugal
மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என கீதையில் கண்ணன் சொன்னான்.
பகிர்வுக்கு நன்றி.
அட... விருந்துக்கு போன இடத்தில நம்ம காஷ்யபன் அய்யா. வணக்கம் அய்யா.
உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
மார்கழி இனிய நினைவலைகள்.... சிறுவயதை நினைத்துக்கொண்டேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Post a Comment