.
பதிவர் செல்வேந்திரனின் திருமணத்தில் கலந்து கொள்ள மறுநாள் காலை
திருச்செந்தூர் வரப்போவதாக, புதன்இரவு மாதுஅண்ணனிடம் இருந்து
போன் வந்தது. பதிவுலக நண்பர்கள் சிலரும் வந்திருப்பதாகவும்,
திருமணம் முடிந்து திரும்பும் போது என்னை பார்க்க வருவதாகவும்
மாதுஅண்ணன் கூறியதும் சந்தோஷத்துடன், ``அப்போ நம்ம வீட்டுக்கு
மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள்’ என்றேன். நண்பர்களிடம்
கேட்டு, அண்ணன் சரியன்றதும், மிக உற்சாகமாக, சந்தோஷமாக
காத்திருந்தேன். ஸாரி, காத்திருந்தோம். ஆம், என் கணவரும் லீவு
போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.
இந்த டிசம்பர் வந்தால், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பீடிகை
யுடன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. எழுத
ஆரம்பித்த சில நாட்களில், `நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரி, தற்சமயம்
துபாயில் இருக்கிறேன்’என்று் இமெயிலில் அறிமுகமானவர் அன்புத்தோழி
சுந்தரா. பின்னர் chat ல் தொடர்ந்த அன்பு, சென்ற ஆகஸ்ட் மாதம்,
லீவில் ஊர் வந்திருந்த போது, ஆறுமுகனேரி வந்து, என் வீட்டை
விசாரித்து, திடீரென என்முன் வந்து நின்றபோது சந்தோஷத்தில் திக்கு
முக்காடிப் போனேன். மிகக் குறைந்த நேரமே பேசிக் கொண்டிருந்தோம்.
அவரும் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. நானும் வெளியே
கிளம்பிக்கொண்டிருந்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச் சென்றார்.
மறுநாள் செல்லில் அழைதுப் பேசினேன். இரண்டொரு நாளில் ஊர்
திரும்புவதாகவும், அடுத்தமுறை வரும்போதும் கட்டாயம் வருவேன் என்று
விடைபெற்றார். நான் சந்தித்த முதல் வலையுலக சொந்தம் இவர் தான்.
சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பதிவர் தீபாவின் வீட்டில் வைத்து,
அகிலா ஸ்ரீ அகிலாவை தீபா அறிமுகப் படுத்தினார். `அக்கா’ என வாய்
நிறைய அழைத்து அன்போடு பேசிய அகிலாவை சந்த்தித்தது அதுதான்
முதல்முறை என என்னாலேயே நம்ப முடியவில்லை.
நேற்று (வியாழன்) மதியம் பன்னிரண்டு மணியளவில், மாதுஅண்ணன்
பாரா அண்ணன், அண்ணன் மணிஜீ, வடகரைவேலன் ஆகியோர் வந்தனர்.
பின்னூட்டங்கள் மூலம் அன்பை பொழியும் பாரா அண்ணன், எங்கேயோ
கண்காணாத தேசத்தில் இருந்து அன்பால் அறிமுகமான பாரா அண்ணன்,
என்முன் எளிமையான சிரிப்புடன் அமர்ந்திருந்தார். என்னை கட்டாயம்
பார்க்க வேண்டும் என்றதாக மாதுஅண்ணன் கூறிய போது நெகிழ்ந்து
போனேன். அண்ணன் மணிஜீ, வேலன் ஆகியோர் எழுத்துக்களை ஓரளவு
வாசித்திருக்கிறேன். சிறிது நேரம் குடும்பம், குழந்தைகள் என பரஸ்பர
அறிமுகங்கள், விசாரிப்புகளை தொடர்ந்து கலகலப்புக்கு பஞ்சமில்லாத
அரட்டை, சிரிப்பு, பேச்சு, பின் மதிய உணவு என நேரம் போனேதே
தெரியவில்லை. தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்
போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு
பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.
மணிஜீஅண்ணன் பிறந்தநாள் என்றறிந்து சந்தோஷத்துடன் வாழ்த்தினோம்
அப்பாவை வணங்கி பிறந்தநாள் ஆசீர்வாதங்கள் பெற்றபின்னர், அனைவ
ரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றனர். வீடு வெறுமையாய் ஆனாலும்
மனம் நிறைந்திருந்தது.
புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,
ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம். எங்கோ ஒரு
கிராமத்தில் வாழும் என்னையும், இணைய குடும்பத்தில் இணைத்து
வைத்த பதிவுலகை, சந்தோஷமாய், பெருமையாய், நன்றியுடன்
நினைக்கிறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணமான செல்வேந்திரன்
தம்பதியினர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.
.