Tuesday, January 25, 2011

தலைவர் சிலை திறப்புவிழாவும், தண்ணீர் பஞ்சமும்...

.

ஐந்து நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. எங்கேயாவது உடைப்பு ஏற்பட்டிருக்கும்; சரி செய்ததும் வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இரண்டு நாட்கள் காத்திருந்த மக்கள் மூன்றாவது நாளும் வராததால், வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துபோர்டு நிர்வாகிகளிடம் முறையிட்டனர். அதன்பின்னர் தான் விஷயமே தெரிய வந்தது.


அரசியல்தலைவரின் சிலை திறப்புவிழாவு்க்கு வருகை தரும் மத்தியமந்திரி ஜி.கே. வாசனை வரவேற்க கட்அவுட்கள், பேனர்கள் வைப்பதற்காக குழிதோண்டிய தொண்டர்களின் கைங்கர்யத்தால் குடிநீர் குழாய் உடைந்து விட்டதாம். சரிசெய்ய வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகமோ, அவர்கள் பேனரை அகற்றினால் தான் நாங்கள் சரி பண்ண முடியும் என மிகப் பொறுப்பாக பதிலளித்துள்ளனர். ஏனெனில் பஞ்சாயத்து நிர்வாகிகள் அ.தி.மு.க.வினர்.


நேற்றிரவே விழா முடிந்து விட்டது. தலைவர் வருகைக்காக நான்கு நாட்கள் முன்னரே சுறுசுறுப்பாக பேனர் வைக்க குழிதோண்டிய புண்ணியவான்கள், இன்னும் அதை அகற்றாததால், வெற்றிகரமான ஐந்தாவது நாளாக இன்றும் குடிதண்ணீர் வரவில்லை.

மக்கள் காலிக்குடங்களுடன் குடிதண்ணீருக்காக அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். ஐம்பதடி பேனரில் ``மணிமுத்தாறு அணை தந்த மாவீரராக’’ தலைவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

.

Saturday, January 15, 2011

.பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது

பொங்கல் திருநாள் உற்சாகமாக மலர்கின்றது., அழகழகான வண்ணக் கோலங்களுடன்...





`தேங்கா, கரும்பு, மஞ்சக்கொல, காயி எல்லாமே போன வருசத்துக்கு, இப்போ மூணுமடங்கு ஏறிப்போச்சி. ஹூம்ம்ம்.... என்ன செய்ய....’` வயிற்றெரிச்சலோடு புலம்பினாலும் தேவைகளை சுருக்கிக் கொண்டு, பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் மக்கள்.



`101 தேங்கா, 21 வாழத்தாரு, ஒருக்கட்டு கரும்பு, பித்தளப்பான, சாமான், அரிசி, காய்கறி ன்னு வாங்கி தல பொங்கப்படி குடுக்குறதுக்குள்ள மூச்சு முட்டிப் போச்சு,’ மகளை திருமணம் செய்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் கேட்ட தலைப் பொங்கல் சீர் கொடுக்கத் திணறிப் போன தாயின் அங்கலாய்ப்புகள்....



`அரசு வழங்கிய பச்சரிசி, வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் தமிழ் புத்தாண்டு, பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள்.’


என்ற தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு பொங்கல் திருநாள் உற்சாகமாய் மலர்கின்றது.


அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

.

Tuesday, January 11, 2011

75 + லும் சாம்பியன்

.
``இன்னும் தூங்கிட்டா இருக்கீங்க ? நேரமாச்சு.. சீக்கிரம் குளிச்சி கிளம்புங்க‘’ அதிகாலையில் எல்லோரையும் விரட்டும் இந்த சுறுசுறுப்பான குரலுக்கு சொந்தக்காரர், அம்மாவின் தம்பி... முழுப்பெயர் சித்தரஞ்சன். எங்களுக்கு `ரஞ்ச மாமா’. எங்கள் குடும்பத்து விசேஷம் என்றில்லை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும் மாமாவின் கலகலப்பான குரல் எல்லோரையும் அதட்டிக் கொண்டிருக்கும்.





ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் யுனிவெர்சிட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள விளையாட்டுபோட்டிகளில் 75 வயதினர்க்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பங்கேற்று மூன்று பதக்கங்களுடன் ( இரண்டு முதல் பரிசு, மூன்றாம் பரிசு ஒன்று ) வெற்றி வீரராக நேற்று மாமா வந்திருந்தார்கள். 60 வயது தாண்டிவிட்டாலே, ` அய்யோ வலிக்குதே’, என்று இடுப்பையும், முழங்கால்களையும் பிடித்துக் கொள்பவர்கள் மத்தியில் மாமா விதிவிலக்கானவர்கள். 76 வயதுக்கு அதிபயங்கர சுறுசுறுப்பு. காலையிலேயே குளித்து தவறாது கோயிலுக்கு போய்வருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட மாமா அனேகமாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டே தான் பேசுவார்கள்.







பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மாமா சிறந்த விளையாட்டு வீரர் என்று தெரியும். சிறுகிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர்கள் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆனது குறித்து அவர்களிடமே விசாரித்து தெரிந்து கொண்டது:-

ஆறுமுகனேரியில் நடுநிலைப்படிப்பை முடித்து, மெஞ்ஞானபுரம் csi ஹைஸ்கூலில் சேர்ந்தபின் தான் ஆர்வத்துடன் விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்கள். 400mts, 800mts ஓட்டபந்தயங்களில் கலந்து கொண்டார்கள். சுற்று வட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றும் விளையாடி வெற்றியும் பெற்றார்கள். இண்டர்மீடியட் (தற்போதைய +1, +2, அப்போது கல்லூரியில்) படிப்புக்காக பாளையங்கோட்டை செயிண்ட். ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்கள். இண்டர்காலேஜ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400mts, 800mts கலந்து கொண்டு வெற்றிபெறாவிட்டாலும் நிறைய அனுபவங்கள் பெறமுடிந்தது. போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மணவரிடம் அவரது பயிற்சி முறைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அந்தமாணவர் ஆற்று மணலில் ஓடி பயிற்சி எடுப்பேன் என்றாராம். அந்த வருடம், 2 மாத கோடை விடுமுறையில், காயல்பட்டினம், அடைக்கலாபுரம் (இரண்டும் பக்கத்து ஊர்கள் ) ரெயில்வேலைனை ஒட்டி இருந்த வழியில், (மணல்வெளியாக இருக்குமாம்), ஓடி பயிற்சி எடுத்தார்களாம். இரண்டாமாண்டு படிக்கும் போது 400 மீ, 800மீ, 400மீ தடை ஓட்டம், லாங்ஜம்ப் அனைத்திலும் கலந்து கொண்டதில் 400மீ ரன்னிங்கில் யுனிவெர்சிட்டி சாம்பியன். அப்போது ஏரியாக்கு ஒரு யுனிவெர்சிட்டியெல்லாம் கிடையாது. சதர்ன் யுனிவெர்சிட்டி என ஒரே யுனிவெர்சிட்டி தான். அதன்பின் கோச் மூலம் மாமாவுக்கு டிரெய்னிங் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுதான் முறைப்படி எடுத்துக் கொண்ட முதல் டிரெய்னிங். அந்த வருடம் கல்லூரியின் அனைத்து போட்டிகளிலும் மாமாதான் சாம்பியன்.


இவர்களுடைய விளையாட்டுத் திறமையால் சென்னை லயோலா கல்லூரியில் B.A; வில் இடம் கிடைத்தது. அதலெடிக்ஸ் பிரிவில் 400மீ, 800மீ, 400மீ தடையோட்டம், எல்லாவற்றிலும் மாமா தான் சாம்பியன். வாலிபாலில் யுனிவெர்சிட்டி ப்ளெயர் இரண்டாமாண்டு படிக்கும் போது வாலிபால் டீம் காப்டனாக இருந்திருக்கிறார்கள். அலிகார்யுனிவெர்சிட்டி, கல்கத்தா, அகமதாபாத் ல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.


கல்லூரி படிப்பு முடிந்து வேலை, குடும்பம் என்றான பின் விளையாட்டை தொடர முடியவில்லை. சமீபத்தில் முதியோருக்கான தடகளப் போட்டிகள் நடப்பதை கேள்விப் பட்டு 70+ பிரிவில் கலந்துகொண்டு ரன்னிங்கில் இரண்டாம் பரிசு பெற்றார்கள். சிறுவயதில் விளையாடும் போது இரண்டு முறை கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால், அந்தகாலில் வீக்கம் ஏற்பட்டு அடுத்த வருடம் விளையாட முடியாது போயிற்று. அதிகம் ஓடவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டதால், எறியும் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் முதலிரண்டில் முதல் பரிசும், மற்றதில் மூன்றாவது பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.


சென்றவருடம், லயோலாகல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, விளையாட்டுபோட்டிகளில் இவர்களது திறமை பற்றி தெரிந்து கொண்டதும், மேடையில் அமரவைத்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.ஸ்ரீபால், தற்போதைய ஜார்கண்ட்கவர்னர், தயாநிதி மாறன் போன்றோரும் கலந்து கொண்டனராம்.






அடுத்தமாதம் சண்டிகாரில் ஆல் இண்டியா போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதாக ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கூறும் மாமாவுக்கு ஷுகர், பிபி, கொலாஸ்டிரல் எதுவும் கிடையாது. உணவில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதீத ஆர்வத்துடன் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் மாமா, இப்பவும் பேரன்களுடன் சேர்ந்து ஆசையாக பட்டம் விடுவார்கள். தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்.

Monday, January 3, 2011

இலவச தொலைக்காட்சியை முதல்வர்க்கே அன்பளிப்பாக தந்த விவசாயி!!

.

.என் மகனுக்கு இ.மெயிலில் வந்த செய்தியை எனக்கு ஃபார்வர்ட்

செய்திருந்தான். அதை கீழே தந்திருக்கிறேன்.



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும்

விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவசதொலைக்காட்சிப்

பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி

கொடுத்திருக்கிறார்.



கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட

தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத்

தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது

பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்

பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார்

என்ற விவசாயி மேடையேறினார்.



அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியை வாங்கிக்

கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி. வி. யை பெரியண்ண

அரசுவிடமே கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.

ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக

வாங்கிப் படித்தார்.



அதில் ‘ மனிதனுக்கு டி . வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான்.

ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம்.

தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன . இவை

எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகுஅடைந்து விட்டனவா?

குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு

அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்தபின்

மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி . யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக

இருந்திருக்கும் . இதற்கு மட்டும்எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின்

முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள்.

டி . வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான

மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.



தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து

போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு

மாவாட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம் .

இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி,

மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே

போதும்.



அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி. வி.முதல் கார் வரை

அனைத்தையும்வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ

அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.




விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை,

லஞ்சம் ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு

நடமாடும் பிணமாக நான் எப்படி டி . வி. பார்க்க முடியும்? எனவே

எனக்கு இந்த டி.வி . வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு

மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது .



எனவே,இந்த டி.வி . யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்

கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும்

அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச செய்தாலே போதும்.

இந்தியா வல்லரசாகி விடும் ’ என்று நீண்டது அந்த மனு.



இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை. அருகில்

இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த

மனுவையும் டி. வி. யையும்வாங்கி வைத்துக் கொண்டு மேலும்

பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.



இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.



“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்

பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு

நகரத்துலபோய் கூலி வேலைக்கும், ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்

கிட்டிருக்கான் . இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும்

வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய்

இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது .



சாராயத்தை குடிச்சுட்டு , ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்

வர்க்கம் சோம்பேறியாகிக் கிட்டிருக்கு .ரொம்ப சீப்பா கணக்குப்

போட்டாலும் ஒரு டி. வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில்

ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்பஅட்டைக்கும்

டி. வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும் . இதை

வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.



கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு

டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி. வி. பாத்து

வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி . யை திருப்பிக்

கொடுத்தேன்’’ என்றார் .


டி.வி . யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு

கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில் ‘ கொத்தமங்கலத்துக்கு வந்த டி . வி. க்கள் 2519.

அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு

டி.வி. யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ’

என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார் .



மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்

படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார் . மக்களை சோம்பேறி

களாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை

பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!




செய்தி உண்மையா அல்லது பொய்யா என்று தெரிய வில்லை.

உண்மையெனில், விவசாயி விஜயகுமார் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் .

உரியவர். அவருக்கு வாழ்த்துக்கள்.


கற்பனையெனில், இந்த இலவசங்கள் மீதான வெறுப்பில்,

இப்படி நடந்து விடக் கூடாதா, என்ற ஆதங்கத்துடன், இவ்வாறு

கற்பனை செய்து ஒரு செய்தி அனுப்பிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.


செய்தி உண்மையென்று முத்துச்சரம் ராமலக்ஷ்மி உறுதி செய்திருக்கிறார்.

அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார்.


http://surveysan.blogspot.com/2010/12/blog-post_22.html
.

.