Wednesday, March 31, 2010

உயிர்கொல்லிகளாகும் மருந்துகள்..?

விஞ்ஞானம் எத்துணை அசுர வளர்ச்சி அடைந்த போதிலும், மாண்டார்

மீண்டு வருவதில்லை. உயிரினும் அரிதான விஷயம் வேறில்லை. அரி

தான இந்த உயிரை காப்பாற்றத்தான் மருந்துகளும் மாத்திரைகளும்.

இன்றைய சூழலில் பலரது உயிர்களை மருந்து, மாத்திரைகளே தாங்கி

நிற்கின்றன. இவ்வாறிருக்க, மருந்துகளே மரணதேவனாய் மாறும் செய்தி

யறிந்து அதிர்ந்து போகிறோம். குப்பைமேட்டில் கொட்டப்பட்ட காலாவதி

யான மருந்துகளை லேபில் மாற்றி, ஒரு கொடூரகும்பல் விற்பனை செய்

திருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


காலாவதியான மருந்துகளை, உற்பத்திநிறுவனங்களே மருந்துகடைகளிட

மிருந்து திரும்ப பெற்று அழிக்க வேண்டும் என்பது, சுகாதாரதுறை விதித்

திருக்கும் நடைமுறை. ஆனால், சிலநிறுவனங்கள், இடைத்தரகர்களிடம்

இந்த பணியை ஒப்படைத்து விட்டதே, மோசடிக்குக் காரணமாய் கருதப்

படுகிறது. இதில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இம்மருந்துகள் சென்னையில் மட்டும் தான் விற்பனைக்கு விடப் பட்டதா,

அல்லது நாடு முழுமையுமா, என்பதெல்லாம் இனிதான் தெரிய வரும்.

மருந்துகள் அனைத்தும் ரசாயனங்கள் என்பதும், நாளாகிவிட்டால் ரசாயன

மாற்றம் ஏற்பட்டு நச்சுதன்மை கொண்டதாகி விடும் என்பதும், தெரிந்ததே.

இதற்கான தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும், காலாவதியான

மருந்துகளை அழிப்பதற்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட

வேண்டும் என்றெல்லாம் குரல்கள் வழக்கம் போல எழுகின்றன.`ரி நெர்வ் ப்ள்ஸ்’ எனும் நரம்புகளுக்கு பலம் சேர்க்கும் சத்துமாத்திரை

களே அதிக அளவில் மோசடி செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது. இவை

விலைஅதிகமுள்ளவை. சுகாதாரதுறை மக்களுக்கு சில அறிவுறுத்தல்கள்

வழங்கியுள்ளன.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் வாங்குதல் கூடாது.

மருத்துவரிடம் காட்டிய பின்னரே மருந்துகளை உபயோகித்தல் வேண்டும்.

ஏதேனும் மாறுதலோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் உடனடியாக மருத்து

வரை அணுக வேண்டும்.

போலிமருந்துகள் முற்றிலுமாக கண்டுபிடித்து அழிக்கப்படும் வரை இவை

களை பின்பற்றுவது நல்லது.என்மகன் சிறுவனாயிருந்த போது நடந்த சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்

அவனுக்கு `ப்ரைமரி காம்ப்ளக்ஸ்' இருந்ததால், அடிக்கடி சளி,தும்மலால்

அவதி படுவான். மாத்திரைகள் ஊசிகள் என மருந்துகளோடு, நானும்,

அவனும் ஐக்கியமாயிருந்தோம். ஒருமுறை நல்லகாய்ச்சலும், இருமலும்

இருந்ததால் மருத்துவரிடம் காண்பித்து, அவர் எழுதிக் கொடுத்த மருந்து

சீட்டுடன், அருகிலிருந்த மருந்துகடைக்கு வந்தோம். கடையில் ஓரளவு

கூட்டமிருந்தது. மருந்துகடைக்காரர் கொடுத்த மாத்திரைக்கும், சீட்டிலிருந்த

பெயருக்கும் சம்பந்தமே இல்லாததை பார்த்த நான்,` வேற மாத்திரை

மாதிரியிருக்கே, என்றேன் ஐயத்துடன். வாங்கிபார்த்த கடைக்காரர்,`அதே

தான், வேற பிராண்ட். ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றார். எனக்கு

சமாதானமாக வில்லை. இருமல் மாத்திரைகள் அடிக்கடி வாங்கி பழக்கமி

ருந்ததால், ஏதோ தவறு இருப்பதாகபட்டது. என் கணவரிடம், டாக்டரிடம்

கேட்டு விட்டு வருகிறேன்’ என்று மறுபடி மருத்துவமனை சென்றேன்.சீட்டையும்,மாத்திரையையும் வாங்கிப்பார்த்த டாக்டர்,சட்டென மேஜை

யின் மேல் தூக்கிப் போட்டார். `மருந்தை கொடுத்தது யார்?’ என கோப

மாக கேட்கவும், நான் நடந்ததை சொன்னேன். அவர் கோபத்தின்உச்சிக்கே

போய்விட்டார். `மருந்தை தூக்கி அவன் மூஞ்சியிலே எறி மா, இவனுக்

கெல்லாம் யார் லைசென்ஸ் கொடுத்தாங்களோ தெரியல’ எனவும் தான்,

ஏதோ விபரீதம் என புரிந்தது. அதன்பின் என்னிடம், `இது, சர்க்கரை

நோயாளிக்கு, ரத்தத்தில், சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக

கொடுக்கப் படும் மாத்திரை. இதை சாதாரணமாயிருப்பவர்கள் சாப்பிட

கூடாது. அதுவும் குழந்தைகளுக்கு கொடுத்தால், `கோமா ’ஏற்பட்டு

உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்’ எனவும் நான் நடுங்கி போய்விட்டேன்.

என் கணவர் கடைக்காரனை நன்றாக திட்டிவிட்டு, `கம்ப்ளெயிண்ட்

கொடுத்தால், உன் லைசென்ஸ் கேன்சலாகி விடும் தெரியுமா, இனி

யாவது ஜாக்ரதையாக இரு’ என எச்சரித்து விட்டு வந்தார். யார் செய்த

புண்ணியமோ, அந்த கடைக்கு விரைவிலேயே `மூடுவிழா’ நடத்தப்

பட்டுவிட்டது.ஆண்டுகள் சில கடந்து விட்ட போதிலும், இந்த சம்பவத்தை நினைக்கும்

போதெல்லாம், ஒருவித நடுக்கமேற் படும். அன்றிலிருந்து, உறவினர்கள்,

தோழிகள் அனைவரிடமும் இச்சம்பவத்தைக் கூறி, எச்சரிக்கையாய் இருக்

குமாறு கேட்டுக் கொள்வேன். ஆனால், இப்படி காலாவதியான மருந்துகளை

லேபில் மாற்றி சப்ளை செய்தால் யார் தான் என்ன செய்ய முடியும்?

பணத்துக்காக, இப்படி உயிர்களோடு விளையாடும் இந்த இழிபிறவிகளை

என்ன செய்தாலும் தகும்.

Sunday, March 28, 2010

கதைகள்... கேட்டதும், வாசித்ததும்.

கதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து

கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு

வாரம் சென்னை சென்று விட்டதால், நேற்றுதான் வலைப்பக்கம்

வரவும், அழைப்பினை அறியவும் முடிந்தது.கதைகள் கேட்ட அனுபவம் பற்றி சொல்வதானால், மாதுஅண்ணன்

முன்பு எழுதியிருந்ததைப் போல் அப்பாவின் அம்மா, செங்குழிஆச்சி

பற்றிதான் முதலில் சொல்ல வேண்டும். மிக நேர்த்தியான விவரணை

யுடன், அவர்கள் கதை சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம்.

மகாபாரத கதையை அதன் கிளை கதைகளோடு அருமையாக சொல்

வார்கள். நாங்கள் ஐந்துபேர் என்பதால் எங்களையே பஞ்சபாண்டவர்

களாய் கற்பனை செய்துகொண்டு உரையாடுவோம். அடுத்து அவர்கள்

வரும் வரை முந்தின கதையே எங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

பின்னாட்களில், டிவியில் மகாபாரதம் பார்த்திருந்தாலும், `வியாசர்

விருந்து’ படித்திருந்தாலும், அத்தனையிலும் இனியதாய் இருந்தவை

ஆச்சியின் கதைகளே!ஆச்சிக்கு அடுத்தபடி, அம்மாவை சொல்லலாம். எங்களுக்கு அவர்கள்

அதிகம் கதை சொன்னதில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நிறைய கதை

சொல்வார்கள். தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள்,

இன்னும் நிறைய கற்பனை கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய

`பணியாரமழை’ கதை, பேரன் பேத்திகள் இடையே பிரபலம். கதை

சொல்வதை விட கேட்பது சுகமானது. கதை சொல்வதற்கு நிறைய

கற்பனை திறனும், பொறுமையும், அதுவும் சிறு குழந்தைகள் கேட்கும்

கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறையவே பொறுமை அவசியம். நானும்

குழந்தைகளோடு அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் கடைகுட்டி எங்கள் தம்பி. செல்லமாய் குட்டி. அவனைப்

போல, கதாபாதிரத்துக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி, அத்தனை பாவத்

துடன், வேறு யாராலாவது கதை சொல்ல முடியுமா, என்பது தெரியாது.

அந்த ஏழுநாட்கள், பார்த்து விட்டு வந்து, பாலக்காட்டு மாதவனாக, பாக்ய

ராஜ் குரலில் அதன் ஜோக்ஸை வரிவரியாய் விவரித்தது, `மணல்கயிறு’

கிஷ்மூ குரலில், `பொண்டாட்டியோட சினிமாக்கு போக 1\2 நாள் லீவு

வேணும்’ என்றது, எஸ். வி. சேகர் குரலில் ,` பொய்யை மூட்டை

மூட்டையா கட்டி வச்சிருக்காங்க’ என்றது, என எல்லாமே நினைவில்

இருக்கிறது; அவன் மட்டும் இல்லை.
வாசிப்பானுபவத்தை பொறுத்தமட்டில், சிறு வயதில் நிறைய படிப்பேன்,

பைத்தியமாக, அம்மாவிடம் திட்டு வாங்கும் அளவுக்கு. இது தான் என்ற

இலக்கின்றி, எது கிடைத்தாலும், படித்திருக்கிறேன். முத்து காமிக்ஸில்

தொடங்கி, தமிழ்வாணன், லக்ஷ்மி, அனுராதாரமணன், சிவசங்கரி,

இந்துமதி, வாசந்தி, சாவி, அதன்பின் சாண்டில்யன், கல்கி, சுஜாதா,

தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என எல்லோருடைய கதைகளையும்

படிப்பேன். தேர்ந்தெடுத்தெல்லாம் படிக்க அப்போது தெரியாது. கல்கி,

சுஜாதா, தி.ஜா. இந்துமதி இவர்களின் எழுத்துக்கள், பின்னாட்களில்

என்னை கவர்ந்தன. மோகமுள் என்னை பாதித்திருக்கிறது. `பொன்னியின்

செல்வனை’ வியந்திருக்கிறேன்; `சிவகாமியின் சபதத்தில்’ உருகி

யிருக்கிறேன். கல்லூரி நாட்களில் தோழி தந்த எண்டமூரிவீரேந்திரநாத்

எழுதிய `துளசிதளத்தை’ எங்களுக்குள் விவாதித்திருக்கிறோம். ருஷ்ய

மொழி பெயர்ப்பு நாவல்கள், அலெக்ஸாந்தர் பூஷ்கின் எழுதிய `காப்டன்

மகள்’ `போர்முனையில் ஒரு பத்திரிக்கை நிருபரின் அனுபவங்கள்’

என கிடைத்ததை எல்லாம் படித்திருக்கிறேன். திருமணமாகி முதல்

குழந்தை பிறக்கும் வரை இந்த வாசிப்பானுபவம் தொடர்ந்தது. அதன்

பின் சுத்தமாக நின்றே போயிற்று எனலாம். அவ்வப்போது கிடைக்கும்

வாராந்தரிகள் தவிர்த்து எதுவுமே வாசிக்கவில்லை. இப்போது, வலை

யுலகில் நுழைந்தபின் வாசிப்பில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இப்போதைய தலைமுறையினரிடம் வாசிக்கும் ஆர்வம் மிக

குறைந்த அளவே உள்ளது. ஹாரிபாட்டரில் லயிக்கும் அவர்களை, தமிழ்

எழுத்துக்கள் கவர்ந்ததாக தெரியவில்லை. தீபா எழுதியிருப்பதைப் போல்

அவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் உண்டாக்க வேண்டும்.என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. நான் அழைக்க

விரும்புவது,

சுந்தரா,

அமைதிச்சாரல்,

முகுந்த் அம்மா.

விரும்பினால் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து

கொள்ளுங்களேன்

Friday, March 19, 2010

தண்ணீர் தினம்; தொடர்பதிவு...

தண்ணீர்தினத்தையொட்டி, முத்துலெட்சுமி, முல்லை, தீபா, என பலரும்

அவரவர் பாணியில் அருமையாக நிறைய கருத்துக்களை தொகுத்து பதி

விட்டுள்ளனர். என்னையும் இந்த தொடர்பதிவுக்கு `அமைதிசாரல் ’

அழைத்து இருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். நானும் என் பங்குக்கு

நான் அறிந்தவற்றை இங்கே பதிவிடுகிறேன்.உலகின் இரண்டாவது, மக்கள் தொகை அதிகமான நாடு. ஆனால் இங்கே

200 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. இது அமெரிக்க

மக்கள்தொகையை விட 2 1/2 மடங்கு அதிகம். இந்தியாவில் பரவும்

தொற்றுநோய்களில் 21% தண்ணீர் மூலம் பரவுபவை. ஆண்டுதோறும்

டயோரியா நோயால் மட்டும் 7,00,000. இந்தியர்கள் இறக்கின்றனர்.

அய்வுகள் கூறும் உண்மைகள் இவை.நம் நீர்நிலைகளும், நிலத்தடிநீரும் மாசுபட்டு கொண்டிருக்கும்அவலங்கள்

நமக்கே தெரியும். இந்த50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள்,

இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல் , நேரிடையாக

கலப்பதால், நீர்நிலைகளும்,

வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால்

நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.இந்தியா... அழகான பல நதிகள் நிறைந்த நாடு. நதிகளை தாயாய்,

புனிதமாய், தெய்வமாய் போற்றுவோம். ஆனால் பாதுகாக்க மட்டும்

மாட்டோம். இந்தியாவின் அதிமுக்கிய நதியான கங்கையின் இன்றைய

நிலை என்ன? உலகின் மிக அழுக்கானநதிகளில் ஒன்றாக மாறிவிட்டது.

`கங்காஜலம் ’ என்றாலே புனிதம் என்பது போய், குளித்தால் தோல்

நோய்கள் வரும், குடிநீராக பயன்படுத்த தகுதியற்றது என்றெல்லாம் கூற

படுகின்றன. இரசாயன கழிவுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள், அதிக அளவு

சுற்றுலா பயணிகள் உபயோகித்தல், இவை போதாதென்று, இற்ந்தவர்

களின் சடலங்களை `ஜலசமாதி’ செய்யும் மூடநம்பிக்கைகள், இவை

அனைத்தும் சேர்ந்து ஒரு அழகான நதியை அழுக்காக்கி விட்டது.

யமுனை உள்ளிட்ட பல நதிகளுக்கும் இதே கதிதான். இங்கே ,

தமிழ்நாட்டில் பவானியாறு, திருப்பூர் சாயபட்டறை கழிவுகளால் மாசு

படுத்த படுகிறது.
அடுத்து நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம்,

நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம். அதிக

பயன்பாடு, போதிய மழையின்மை, இவற்றோடு` கோகோ கோலா ’

கம்பெனிகளும் நிலத்தடி நீர்வறட்சிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக

கருத படுகிறது. இக்கம்பெனிக்கு இந்தியா முழுமையும், 52 பாட்டிலிங்

மையங்கள் உள்ளன. கேரளாவில் இதன் காரணமாகவே,`பிளாச்சிமேடு’

என்னும் கிராமம் நிலத்தடி நீரையிழந்து விட்டதும், அங்கு டிரக்குகள்

மூலம் குடிநீர் விநியோகிக்க படும் அவலமும் தெரிய வந்துள்ளது.


`கோக் குடிப்பது ஒரு இந்திய விவசாயியின் இரத்தத்தை குடிப்பதற்கு

ஒப்பானது’ என்றெல்லாம் கூறப்பட்டாலும், விற்பனை அமோகமாக

தான் உள்ளது.

இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் அறிவியல் மையம், கோக், பெப்சி

முதலான மென் பானங்களை பரிசோதித்த பின் வெளியிட்ட தகவல்,

`இவை மூன்று அல்லது ஐந்து வகை பூச்சிகொல்லிகள் கலந்த

காக்டெய்ல்’’ என்பது தான்.

அவ்வப்போது கரப்பான், பல்லி இவற்றின் உடல்களை பாதுகாக்கும்

ஃபார்மலின் திரவமாகவும் செயல் படுகிறது. பத்து நாட்கள் சர்ச்சைகள்,

அடங்கியபின், மறுபடி விற்பனை முன்னைப் போலவே...


கேடு பயக்கும் என தெரிந்தும், இதன் கவர்ச்சி விளம்பரங்களில் மயங்கி

நாமும் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம். இதற்கு இணையான,

இதை விடவும் சுவை மிகுந்த `பொவண்ட்டோ’ காளிமார்க் தயாரிப்புகள்

பிற இந்திய தயாரிப்புகளை உபயோகிக்க நம் குழந்தைகளை நாம்

பழக்கலாமே.!


என் உறவினர் ஒருவர் தெரிவித்த தகவல் இது. அவர் வேலை செய்யும்

அலுவலகத்தில், அவரது நண்பரொருவர், கோகோ கோலா’ வை நன்றாக

வாஷ்பேசின் முழுவதும் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்ய

வாஷ்பேசின் பளீச்சோ பளீச் என மின்னியதாம். நீங்களும் உபயோகித்து

பார்க்கலாமே.!


நீர்நிலைகள் மாசுபடுதல் குறித்து நிறைய , நிறைய பேசுகிறோம்; நிறைய

எழுதுகிறோம். ஆனால் தீர்வு....?

Monday, March 15, 2010

பாடாத பாட்டெல்லாம்...

2009 ம் ஆண்டின் சிறந்த பாடகிக்கான விருதுக்கு, எதிர்பார்த்தபடி அவள்

பெயரே அறிவிக்க பட்டது. பாராட்டுக்கள் குவிகின்றன. தமிழ்நாட்டுக்கு

மீண்டும் ஒரு பி.சுசீலா கிடைத்துவிட்டார், தென்னகத்தின் லதாமங்கேஷ்கர்

என பாராட்டு மழையில் நனைகிறாள். சட்டென அனைத்தும் கலைந்துபோக,

அட... சே.... அத்தனையும் கனவா..? எரிச்சலுடன் மணியை பார்த்தேன்.

விடியற்காலை நான்கு மணி. இந்த விடிகாலை கனவு நிச்சயம் பலிக்கப்

போவதில்லை. நேற்று தூங்க போகும்முன், பழைய பாடல்களை கேட்டுக்

கொண்டிருந்ததன் விளைவு என புரிந்தது.என் அம்மா முறைப்படி சங்கீதம் கற்றவர்கள். சாரீரமும் இனிமையாக

இருக்கும். நன்றாக பாடுவார்கள். அந்த சங்கீத ரத்தம் என்னையும் பாட

தூண்டியது. ஆனால் நான் பாட வாயை திறந்தாலே, என் உடன்பிறப்புகள்

சும்மாயிருக்க மாட்டார்கள். என் இரண்டாவது அண்ணன்,` அம்மா, கதவு

இடுக்கில் எங்கேயோ ஒரு எலி மாட்டிக் கொண்டது' என்பான். என் இளைய

சகோதரன் எனக்கு `பஞ்சகல்யாணி' என நாமோதயம் சூட்டியிருந்தான்.

இது ஒரு தடவை என்றில்லை, நான் வாயைத் திறந்தாலே தொடரும்.

ஆனாலும் நான் சளைக்க மாட்டேன். ஒரு இளம் குயிலின் சிறகுகள்

முடக்க படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.


கல்லூரிபடிப்புக்காக ஹாஸ்டல் சென்றிருந்தபோது, இந்த நையாண்டிகளில்

இருந்து, விட்டுவிடுதலையாகி நின்றேன். கேட்பாரில்லாமல் பாடிதிரிந்தேன்.

ஆனால், என்அறைத் தோழிகளும், மற்றவர்களும், நான்நன்றாக பாடுவதாக

சொன்னார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எப்படி என தெரியாது,

அந்த நேரம் பிரபலமான பாடல்கள், பழைய பி.சுசீலா பாடல்கள் எல்லாம்

முழுவதுமாக தெரியும். ஓரிருமுறை கேட்டாலே மனனம் ஆகிவிடும்.

அதனால் தைரியமாக பாடுவேன்.விடுதிவிழாக்கள், எங்கள் துறைசார்ந்த

விழாக்களில் பாடியிருக்கிறேன். அதை வீட்டில் சொன்னபோது, இரங்கல்

தீர்மானம் நிறைவேற்றினார்கள்.இங்கே வீட்டிலும் நல்ல மூடில் இருந்தால் பாடஆரம்பித்து விடுவேன்.

என் கணவரும், பையன்களும், நான் நல்ல மூடில் இருக்கக் கூடாது என

வேண்டிக் கொள்வார்கள். என் பையன்களும் நான் பாடினால் கத்துவார்கள்.

ஆனால் நான், `உங்க மாமா நாலு பேர் கேலி பண்ணியே பயப் படல,

நீங்க சொல்லியா கேட்க போறேன். போங்க, போய் தண்ணிய குடிங்க’ன்னு

விரட்டி விடுவேன். என் இளைய மகன் கொஞ்சம் இறங்கி வந்து, `பழைய

பாட்டு பாடாதீங்க, புது பாட்டு ஏதாவது பாடுங்க.’ என்பான், சத்புத்திரன்.ஏதாவது விசேஷம், கோயில்கொடை என கூடும் போது அரட்டைகச்சேரி,

பாட்டுகச்சேரி எல்லாம் நடக்கும். எங்கள் பெரிய அண்ணி, மிகவும் இனிமை

யாக பாடுவார்கள். அற்புதமான குரல் வளம் அவர்களுக்கு உண்டு. பழைய

பாடல்களை, பாடச் சொல்லி கேட்டு ரசிப்போம். அப்போது தான் நம்மை

ஏன் இப்படி கேலி செய்கிறார்கள் என்பது புரியும். ஆனால் வெளிப் படுத்திக்

கொள்ள மாட்டேன். நானும் கூட சேர்ந்து கோரஸ் பாடுவேன்.எப்படியோ, நேற்றைய கனவு, ஒரு பதிவுக்கு வழிவகுத்தது.

கனவுகள் + கற்பனைகள் = பதிவுகள்.

அட ; இது கூட நல்லாயிருக்குதே..!

Wednesday, March 10, 2010

மக்களை பெற்ற மகராசி..!

                                        
                      அசப்பில் பாக்கியம்ராமசாமியின், சீதாப்பாட்டி

போலிருக்கும் அந்தபாட்டியின் பெயர் செல்லம்மா. ஆனால்சீதாபாட்டியின்

மிடுக்கோ, கம்பீரமோ நம் பாட்டியிடம் துளிக்கூட கிடையாது. பரமசாது.

தன் சொத்தாக, ஒரு பழைய வீட்டையும், வாரிசுகளாக நான்கு குழந்தை

குழந்தைகளையும் பாட்டியிடம் விட்டுவிட்டு, பாட்டியின் கணவர் போய்

சேர்ந்துவிட்டார். பன்னிரெண்டிலிருந்து ஆறு வயதுக்குள்ளாக மூன்று

பையன்களும், ஒருபெண்ணும் வரிசையாக நின்றனர். கலங்கிபோனாலும்

பாட்டி சோர்ந்து போய்விடவில்லை. தன்னையும் சேர்த்து ஐந்து ஜீவன்

களின் வயிற்றை நிரப்ப பாட்டி போராட தொடங்கினார். என்னென்ன

வேலை கிடைத்ததோ, அத்தனையும் செய்தார். உப்பளத்தில் பாத்தி

மிதிப்பது, சித்தாள் வேலை, வயல்காடுகளில், களை எடுக்க, நடுவை,

அறுப்பு, எனஎதையும் விட்டு வைக்கவில்லை. பையன்கள் தச்சுவேலை

கற்று கொண்டனர். ஆயிற்று, ஒரு வழியாக வாழ்க்கை போராட்டத்தில்

பாட்டியும் கரை சேர்ந்தார். மகளை தன் உறவுக்கார பையனுக்கு மண்ம்

செய்து அவளும் மும்பை போய் சேர்ந்தாள். பையன்கள் குணத்தில் தன்

தாயைக் கொண்டிருந்தனர். மூன்று மகன்களுக்கும் திருமண்ம் முடிந்து

மருமகள்களும் வந்து சேர்ந்தனர்.


           பாட்டி இப்போது வெளி வேலைக்கு போவதில்லை.

கைக்குழந்தைகளை பார்த்துக்கொள்ள, பாத்திரம்தேய்க்க, கடைகண்ணிக்கு

போகவர, தண்ணீர் பிடித்து கொடுக்க என மூன்று மருமகளுக்கும் பார

பட்சமில்லாமல் வேலை செய்து கொடுத்தார். பாட்டியின் பழைய வீடு

சிதிலமாகி, இடியும் நிலையில் இருந்ததால், மகன்கள் வீட்டை விற்று

எண்ணினர்.பாட்டியும் சரியெனவே வீடுவிற்க பட்டது. பாட்டி தன்மகள்

திருமணத்தின் போது நகை, ரொக்கம் என எதுவும் கொடுக்க வில்லை.

வீடு விற்கும் போது தருவதாக பேச்சு. விற்றபணத்தில் மகளுக்கு சேர

வேண்டியதை கொ்டுத்துவிட்டு, மீதியை மூன்று்மகன்களுக்கும் பகிர்ந்து

கொடுத்தார். அங்கே பிடித்தது பாட்டிக்கு ஏழரை. மருமகள்கள் மூன்று

பேருமே மகாவாயாடிகள். `எப்படி பணத்தை உன்மகளுக்கு கொடுப்பாய்,

நாங்கதான ஒனக்கு சோறுபோடுறோம். போ, ஒன் மகா கிட்டயே போ’

என பாட்டிக்கு ஒரே ஏச்சும் பேச்சும் தான். இத்தனைக்கும் கடைசி

மருமகள் பாட்டியின் சொந்த தம்பி மகள்.


      பாட்டியின் மகன்கள் மூன்று பேருமே நல்ல

உழைப்பாளிகள். தச்சுவேலையில் தினம் 300, 350 ரூ சம்பாதித்தனர்.

தனித்தனியே சின்னதாய் இடம் வாங்கி, ஒருகுச்சியோ, ஓட்டுவீடோ

கட்டிக் கொண்டு தனித் தனியே போய் விட்டனர். குழந்தைகளும்

வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டனர். பாட்டியால் முன்போல்

வீட்டு வேலை செய்ய முடியவில்லை. பணக்காரர்களுக்கே உரித்தானது

என கருத படும் சர்க்கரை நோயும் தப்பாக வந்து சேர்ந்து கொண்டது.

அந்தநோய்க்கே உரித்தான கால்காந்தலும் சேர்ந்து கொள்ள, முதுமைக்கு

உரிய உடல்உபாதைகளால் அவஸ்தை பட ஆரம்பித்தார். கவர்ன்மெண்ட்

ஆஸ்பத்திரியில் காட்டி மருந்து மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வார்.

பொங்கலுக்கு வழங்கபடும் இலவச ரேஷன்சேலைகளே பாட்டிக்கு உடுத்தி

கொள்ள வாய்த்தன. மருமகள்களுக்கு பாட்டி இப்போது பாரமாய்

தெரிந்தார். `இங்கேயே கெடக்கியே, அந்த மகன் வீட்டுக்கு போயேன்’

என மூத்தவளும், `ஒந்தம்பிமக வீட்டுக்கு போயேன்’ என அடுத்தவளும்

அவர்களுக்கு தான் சளைத்தவளில்லை என தம்பி மகளும் மாறி மாறி

பந்தாட ஆரம்பித்தனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமென்றால் பாட்டிக்கு

மூன்று பக்கமும் இடி.          ` ஊர்ல ஒலகத்துல மாதிரியா எம்புள்ளைங்க இருக்கானுவ,

ஒவ்வொருத்தன், சம்பாதிக்கதுல பாதிய சாராய கடைல வுட்டுட்டு,

பொண்டாட்டிய போட்டு அடிக்கானுவ. எம்புள்ளைக அப்டியா?

குடிக்கானுவளா?; இல்ல, அங்க, இங்க ன்னு அலைரானுவளா?

சம்பாத்தியத்த அவளுவ கைல குடுத்துட்டு, போட்டத தின்னுட்டு

கெடக்கானுவ. ஆம்புள இப்படி அப்புராணியாவும் இருக்கக்கூடாது, அதான்

அவளுவ, இந்த ஆட்டம் போடுறாளுவ. இருக்கட்டும், நாளைக்கி

அவளுவ புள்ளைங்க அவளுவள தொரத்தாமல போயிருவானுவ?’

வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டிருப்பார். ` ராசா மாதிரி மூணு

புள்ளைங்க இருந்தும், இந்த பாடுபடுறேன், இருப்பு இருக்கவரைக்கும்

இவளுக கிட்ட இந்த `இடிசோறு’ தான் திங்கனும் போல.’ அழும்

போது பாவமாயிருக்கும்.          செல்லம்மாபாட்டி, இங்கே தான் என்றில்லை.

வேறு வேறு பெயர்களில், அநேகமாக எல்லா ஊர்களிலும், அல்லது

முதியோர் இல்லங்களில், விதியை சபித்தபடி வாழ்ந்து கொண்டு

இருக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும்

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு புறக்கணிக்கப் பட்ட சோகம்

நிச்சயம் இருக்கும். இன்று செல்லம்மாபாட்டி..., நாளை..., அதே

இடத்தில் நாம்... காலச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

நாம் மட்டும் மார்க்கண்டேயனை போல் வரம் வாங்கி

வந்திருக்கிறோமா என்ன..?

Monday, March 8, 2010

ஏன் இப்படி...?
எட்டி பார்த்தேன், எதிர்வீடு,


பக்கத்துவீடு, அடுத்த வீடு; என


எல்லா வீடுகளிலும் தலைநிறைய பூ;


அழகான சிரிப்பு.


எனக்கு மட்டும் ஏன் இப்படி.?


கோபம், எரிச்சல், பொறாமை;


தேடி தேடி எடுத்தேன்,


கை நிறைய மாத்திரைகள்.


அள்ளிப் போட்டேன்;


தண்ணீர் ஊற்றினேன்.


அப்பாடா......


இனி என்வீட்டு ரோஜாச் செடியும்


நிறைய பூ பூக்கும்.....(குறிப்பு:- ரோஜாசெடிக்கு பழைய

மாத்திரைகளைப் போட்டால் நிறைய

பூ பூக்கும் என ஒரு துணுக்கு

படித்ததின் விளைவு.)

Wednesday, March 3, 2010

குழந்தை உள்ளமே !.

` அம்மா, நீ தம்பி பாப்பா வச்சிருக்கியா, இல்ல தங்கச்சி பாப்பா

வச்சிருக்கியா?’ கேட்ட நான்கு வயது மகனின் தலையை வாஞ்சையோடு

கோதிய வாறே அம்மா திருப்பி கேட்கிறாள், ` உனக்கு என்ன பாப்பா

வேணும்?’ . `எனக்கு பக்கத்து வீட்டு அகிலா மாதிரி அழகா தங்கச்சி

பாப்பா தான் வேணும்.’ ஆசையுடன் கூறிய மகனைப் பார்த்து சிரித்தாள்

அம்மா. ஒருசில நாட்கள் கழித்து, அம்மா மருத்துவமனையில்

அனுமதிக்கப் பட்டாள். இரவு அவனிடம் அப்பா, ` உனக்கு தம்பி

பிறந்திருக்கிறான், பார்க்க போகலாமா?’ என்று அவனை

மருத்துவமனை அழைத்து வந்தார். தம்பி அம்மா பக்கத்தில்

தூங்கிக் கொண்டிருந்தான். ஆசையாய் போய் பார்க்கிறான்.

அவனது ஆச்சி அவனிடம், ` தம்பி நல்லா குண்டா,

அழகா இருக்கான் பாரு ‘ என்றார்கள். உண்மையிலேயே

தம்பி அழகாய் தானிருந்தான். பாத்ங்களும், கைகளும்,

அடர் ரோஜாப்பூ நிறத்தில். மெதுவாக கையை தொட்டுப்

பார்த்துவிட்டு`எவ்ளோ ஸாப்டா இருக்குமா’ என்றான்

ஆச்சரியமாய்.` நா தூக்கலாமா?’ கேட்டவனிடம் கொஞ்ச

நாள் ஆகட்டும் என்கிறார்கள். அடுத்தநாள், அதற்கடுத்த நாள்,

குழந்தையை பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை மட்டுமே

கொஞ்ச அவனுக்கு கோபம், கோபமாய் வந்தது. தம்பி

எப்போதும் அம்மா மடியிலேயே இருந்தான். இவனால் அம்மா

பக்கத்தில் உட்கார முடிய வில்லை, அம்மா கூட படுக்க முடிய

வில்லை. ஏக்கத்தோடு நின்றான்`ஒரு வழியாக அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள். ஆனால்

இங்கேயும் அதே நிலை தொடர்ந்தது. தம்பியை குளிக்க

வைக்க, கவனித்துக் கொள்ள என அம்மாவின்

பெரும்பான்மை நேரங்கள் தம்பியுடன் கழிய, இவன்

ஆச்சியுடன் இருக்க வேண்டியதாயிற்று. ஆச்சி வேறு,

`இனிமே நீ தா யூனிபார்ம் போட்டுக்கணும், ஷூ

போட்டுக்கணும்’ என, இவனுக்கு எதுவுமே பிடிக்கவில்லை.

கோபமும், ஏக்கமுமாய் விலகிப் போகிறான்.
பக்கத்தும் அறையில் ஏதோ வேலையாய் இருந்த

போது , குழந்தை வீறிட்டழும் சத்தம் கேட்கவே, பத்றி

ஓடி வருகிறாள். அழும் குழந்தையை சமாதானப் படுத்தும்

போது தான் கவனிக்கிறாள். இதென்ன, குழந்தை கையில்

ரத்தம். இடது கையில் சுண்டு விரலுக்கு மேலே மூன்று

கோடுகள், ஒரு கோடு மட்டும் இலேசாக பதிந்து ரத்தம் கசிந்தது.

ரத்தத்தை துடைக்கும் போது தான் கவனிக்கிறாள், அவனை.

கையில் ப்ளேடுடன், கண்களில் பயத்துடன். புரிந்து விட்டது

அவளுக்கு. ` இங்கே வா ‘ அழைத்து பக்கத்தில் உட்கார

வைத்து, முதுகை தடவியவாறே, ` ஏம்மா இப்படி செஞ்சே,

தம்பி பாவம் இல்லையா, எப்படி அழறான் பாரு,

தம்பிய உனக்கு புடிக்கலியா?’. தலை குனிந்தவாறே நிற்கும்

குழந்தையின் ஏக்கம் புரிந்தவளாய், ` தம்பி இன்னும்

கொஞ்ச நாள்ல உங்கூட விளையாட வந்திருவான், நா

வேலை செய்யும் போது நீ தான் தம்பிய பாத்துக்கணும்.

அவன் ஸ்கூலுக்கு போகும் போது நீ தான் ஹோம்வொர்க்

சொல்லித் தரணும், நீ தான பெரிய பையன்.’

என்று சமாதானப் படுத்துகிறாள். அவனும் பெரியவனாய்

சந்தோஷமாய் சிரிக்கிறான்.


ஏழெட்டு மாதங்கள் கழிந்தன. தம்பி உட்கார, தவழ

ஆரம்பித்து விட்டான். தம்பியை தன் மூன்று சக்கர சைக்கிளில்

வைத்து ஓட்டுகிறான், விளையாடுகிறான். ஒருநாள்

தம்பியின் கை சக்கரத்தில் சிக்கி..., நல்லவேளையாய் காயம்

அதிகமில்லை. இடதுகையில் இரண்டு விரல்கள் இலேசாக நசுங்கி,

தோல் சிராய்த்திருந்தது. டாக்டரிடம் அழைத்து போய் மருந்து

போட்டு, மாத்திரையும் கொடுத்து , தம்பி தூங்கி விட்டான்

தம்பியின் கை பிடித்தபடியே, இவன், தம்பி பாவம்மா...
.
`தம்பிக்கு எப்டி வலிக்கும், பாருங்கம்மா! , கை வீங்கி

போச்சு, சரியாயிருமாம்மா’ , கண்களில் கண்ணீரோடு

கேட்ட மகனிடம் ,ஒண்ணுமில்லடா, ரெண்டு நாள்ல `

சரியாயிரும்,என்றாள் ஆறுதலாக. குழந்தைகளின் உலகமே

கள்ளமில்லாத அன்பாலானது என்பது புரிந்து

சந்தோஷமாய் மகனை அணைத்துக் கொள்கிறாள்.