Thursday, May 27, 2010

டி.வி. சீரியல்கள்.

.
.
போனமுறை அப்பா வந்தபோது

பார்த்தது ;

இப்போதும் புரிகிறது

முன்கதை சுருக்கம்

ஏதும் இல்லாமலே.




கெட்ட வார்த்தையால்

மாமியாரை திட்டும் மாமியாரிடம்

மருமகள் சொன்னாள்,

`மெதுவா அத்தை,

`மாமியார் கொடுமை’ னு

பக்கத்து வீட்ல நெனைக்க போறாங்க’.



நிழல் பார்த்து நிமிர்ந்ததற்கே

தலையை வெட்டிய பரசுராமன்,

இந்த சீரியல்களை

பார்க்க நேர்ந்தால்...?
.
.

Wednesday, May 19, 2010

விரும்பியதும்.., கிடைத்ததும்...

.
.
ஒருவாரமாக வீட்டில் உறவினர்கள், வேலை என ப்ளாக் பக்கம் வரமுடிய

வில்லை. இனிதான் எல்லோரது பதிவுகளையும் படிக்க வேண்டும்.



+2 முடிவுகள், மதிப்பெண்கள் வெளிவந்துள்ளன. எதிர்பார்த்த மதிப்பெண்,

கூடுதல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் உற்சாக மிகுதியிலும், எதிர்பார்ப்பில்

குறைந்தவர்கள் சற்று வருத்தத்திலும் இருக்கின்றனர். எதிர்காலத்தில் நாம்

என்னவாகப் போகிறோம் என்பதை முடிவு செய்வதில் பெரும்பங்கு +2

படிப்புக்கு இருப்பதால் அனைவரும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.

ஆனால் +2 மட்டுமே நம் தலைவிதியை நிர்ணயிப்பதில்லை. இன்னும் எத்

தனையோ வாய்ப்புகள் உள்ளன. நம் குழந்தைகள் துவண்டு விடாமல்

அவர்களை சரியான திசையில் வழிநடத்தி செல்வது நமது கடமை.



நானும் மாணவியாய் இருந்து இத்தகைய ஒரு சூழலை எதிர்கொண்டது

இன்னும் நினைவில் பசுமையாய் படிந்துள்ளது. நான் பள்ளியில் படிக்

கும் காலத்தில் கொஞ்சம் (கொஞ்சம் தான்; நிறைய இல்லை ) நல்லா

படித்ததால், என் வீட்டில் எல்லோருக்கும் என்னை டாக்டராக்கி பார்க்க

வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆசை அவர்களுக்கு இருந்தாலும்,

படிக்க வேண்டியது நான்தானே. நானும், ஓரளவு நன்றாகத்தான் படித்

தேன். ஆனாலும் இறுதிதேர்வு மதிப்பெண்கள் காலைவாரி விட்டன.

மாடல் தேர்வில் கூட கெமிஸ்டிரியில் 180 வாங்கிய நான் இறுதிதேர்வில்

வெறும் 126 மட்டுமே வாங்கினேன். இந்த லட்சணத்தில் கெமிஸ்டிரி

மிஸ்ஸை மிகவும் பிடிக்கும் என்பதால் கெமிஸ்டிரியை விழுந்துவிழுந்து

படிப்பேன். மார்க்கை பார்த்து விட்டு 2 நாள் அழுகை, உண்ணாவிரதம்,

ரீ வேல்யூஷன், என வழக்கமான எல்லா சம்பிரதாயங்களும் தொடர்ந்தன.

அத்தோடு டாக்டர் கனவை மறந்து, `நாடு ஒரு நல்ல டாக்டரை இழந்து

விட்டது’ என்று நாட்டுக்கு என் ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்து விட்டு

B.Com.,ல் சேர்ந்தேன், பெரிய அண்ணனை போல் `சார்ட்டர்டு அக்கவுண்

டெண்ட்’ ஆகும் ஆசையோடு. அதுவும் கனவாகவே போய், டிகிரிமுடித்து

திருமணம் செய்துகொண்டு, கரண்டியை கையில் பிடித்தேன். அவ்வளவு

தான். பின்என்ன... குழந்தைகள், அவர்கள் கல்வி.. என காலம் உருண்

டோடியது. குழந்தைகள் இருவரும் பள்ளிசெல்ல தொடங்கியதும், ஏதாவது

கோர்ஸ் படிக்கும் ஆசையில், சென்னை வந்து, கணவரின் பெற்றோர்

வீட்டில் இருந்து, பியூட்டிஷியன் கோர்ஸ் படித்தேன். ஊரில், வீட்டிலேயே

ஒரு அறையை ஒதுக்கி பார்லர் ஆரம்பித்தேன். சென்ற வருடம், என்

இளைய மகனும் இஞ்சினியரிங் படிக்க சென்னை சென்ற பின், வெளியே

ஒரு சிறியபார்லரை தொடங்கி நடத்தி வருகிறேன். குழந்தைகள் இருவரும்

வெளியே படிக்க போன பின், அந்த வெறுமையில் இருந்து என்னை காப்

பாற்றிக் கொள்ள முடிகிறது. அம்மா இருக்கும் போது சில சமயங்களில்,

`நீ டாக்டராக வேணும் னு விதி இருந்திருக்கிறது. அதனால் தான் அதைப்

போன்ற ஒரு தொழிலுக்கு வந்து விட்டாய், என்று தன்னைத்தானே ஆறுதல்

படுத்திக் கொள்வார்கள்.



நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், கேட்பதெல்லாம் கிடைத்து விட்டால்

வாழ்வில் சுவாரஸ்யம் இருக்காது. கிடைக்காத ஒன்றுக்கான போராட்டமும்,

அதிலான வெற்றியுமே வாழ்வில் சுவைகூட்டுகிறது.



நம்மில் பலர், சிறுவயதில் நிறைய கனவுகளோடும், லட்சியங்களோடும்

இருந்திருப்போம். நாம் விரும்பியது கிடைத்ததா.., அல்லது கிடைத்ததை

விரும்பினோமா, என்பது நமக்குத் தான் தெரியும். நீங்கள் விரும்பியது

உங்களுக்கு கிடைத்ததா., என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.

தீபா,

முத்துலெட்சுமி,

ராமலக்ஷ்மி,

தேனம்மை லக்ஷ்மணன்.

விருப்பமும், நேரமும் அனுமதித்தால் தொடருங்களேன்.
.
.

Monday, May 10, 2010

அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை.

.
கடைத்தெருவில் இருக்கும் அத்தனை ஜவுளிக்கடைகளின் முகப்பிலும்

தொங்கிக் கொண்டிருக்கின்றன, பளிச் என அடிக்கும், சிவப்புவண்ண

சேலைகள். ஜிகினா, ஜம்க்கி, எம்ப்ராய்டரி, ஸ்டோன்வொர்க் என வித

விதமாய் தகதக வென மின்னும் சேலைகள். கட்டினால் கரகம் மட்டுமே

பாக்கியாயிருக்கும். ஒரே சிவப்பு மயமாயிருக்கிறதே என விசாரித்தால்

இந்த வருடம், அண்ணன் மனைவிக்கு சிவப்பு சேலை எடுத்துக் கொடுக்க

வேண்டுமாம். ஆஹா...! மறுபடி ஆரம்பிச்சிட்டாங்கப்பா. .



ஏழெட்டு வருடங்களுக்கு முன், இப்படித்தான் சகோதரிகளுக்கு பச்சை

சேலைஎடுத்துக் கொடுக்க வேண்டுமென ஒரு வதந்தி பரவி, எங்கும்பசுமை

பூத்தது. `நல்லதங்காள்குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட ஆண்டு

அதனால் அண்ணன்களுக்கு ஆபத்து என்று காரணமும் சொன்னார்கள்.

பின்னர், மாமியார் மருமகளுக்கு மஞ்சள்சேலை எடுத்துக் கொடுக்க வேண்

டுமென்றதால் எங்கும் மங்களகரமான மஞ்சள் நிறைந்தது. சென்னையிலி

ருந்து வந்த என் நாத்தனார், `அண்ணீ, உங்களூக்கு சிவப்புசேலை எடுத்து

தர வேண்டுமாமே’ என ஆரம்பித்தாள். அடடா..! தலைநகரையும் வதந்தி

விட்டு வைக்கவில்லையா..?




பெண்களின் படிப்பறிவும், பகுத்தறிவும்...? முன்னேறி வரும் சூழலில்,

இத்தகைய மூடநம்பிக்கைகளும் அதிகரித்து வருவது வியப்பையும், எரிச்

சலையும் தருகிறது. ஜவுளித்துறையினரே இத்தகைய வதந்திகளை பரப்

புவதாகவும் சொல்லப் படுகிறது. எனக்கு என்ன கவலையென்றால்,

சொல்வதுதான் சொல்கிறார்கள், அழகான கத்தரிப்பூ நிறம், ஆகாய நீலம்,

சந்தனநிறம் என சொல்லக் கூடாதா? இப்படி சிவப்பு கலரு ஜிங்குச்சான்

பச்சைகலரு ஜிங்குச்சான்னு பாடுறாங்களே...



நான்கு நாட்களுக்கு முன் என் அண்ணி போன் செய்து, உங்களுக்கு சிவப்பு

சேலை எடுத்து தரனுமாமே’ என ஆரம்பிக்கவும், உண்மைவிளம்பியான

நான், `நீங்கள் எடுத்து தரவேண்டியதில்லை, நான்தான் உங்களுக்கு எடுத்து

தரணும். ஆனா நம்ம வீட்ல தான் யாருக்கும் அந்த நம்பிக்கை இல்லையே’

என்றேன். `அதெல்லாம் நம்பிக்கை இருக்கு. ஒழுங்கா சேலை எடுத்து தர்ற

வழியப் பாருங்க’ மிரட்டலோடு போனை வைத்தார்கள். `தவளை, தவளை’

என்று என்னை நானே கடிந்து கொண்டேன்...
.
.

Friday, May 7, 2010

விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போதலும்... எதுவரை...?

.
.
இரண்டு நாட்களுக்கு முன், தெருவில் ஒரு துக்ககரமான நிகழ்வு. எதிர்

வீட்டுப்பெண், திருமணமாகி இரண்டரை வருடங்களே ஆகியிருந்த நிலை

யில், தன் ஒன்றரை வயது பெண்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு தற்

கொலை செய்து கொண்டாள். திருமணமாகி, தன் கணவனுடன் திருப்

பூருக்கு வாழச் சென்றவள், வாழ்க்கையையே முடித்து கொண்ட செய்தி

போன் மூலம் வந்திருக்கிறது.



குடிகார கணவன் கொடுமைப்படுத்தினான் என்பதற்காக, அப்பகுதியில்

கிடைக்கும் சாணிபவுடர் என்பதனை உட்கொண்டு தற்கொலை செய்து

கொண்டிருக்கிறாள். ஒழுங்காக வேலைக்கு செல்வதில்லையாம், வெளியே

யாருடனும் பேசவோ பழகவோ விடுவதில்லையாம், குடித்துவிட்டுஅடிப்பது

கருப்பு என்பதை காரணம் காட்டி வேறு கல்யாணம் செய்து கொள்வேன்

என்ற மிரட்டல் வேறு. இவையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன் தாய்வீடு

வந்தவள் கூறிய காரணங்கள். போகமாட்டேன் என்று அழுதவளை சமா

தானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.



எம்பெண்கள் முன்னேறுகிறார்கள் என சந்தோஷமாக நினைக்கும் நேரம்,

இதைப்போன்ற கோழைத்தனமான நிகழ்வுகள், அதிர்ச்சியையும், ஆயாசத்

தையும் தருகின்றன. இத்தகைய நிகழ்வுகளில் பெற்றோருக்கும் பெரும்

பங்கு இருக்கின்றது. குழந்தைகளுக்கு தைரியத்தையும், போராடும் குணத்

தையும் பெற்றோர் தான் உருவாக்கித் தரவேண்டும். தொட்டாற்சுருங்கியாக

சாதுவாக இருப்பதுவும் கூட தவறுதான். அந்த பெண்ணும் அத்தகையவள்

தான். சதா சிரித்த முகமாக மிகவும் அமைதியாக இருப்பாள். அதிர்ந்து

கூட பேச மாட்டாள். திருமணம் செய்து கொடுப்பதோடு கடமை முடிந்து

விடுவதில்லை. கட்டியகணவனும், வாய்த்தவாழ்க்கையும் சரியில்லையா,

`உனக்கு எல்லாமுமாக நாங்கள் இருக்கிறோம்’ எனும் தைரியத்தை

பெற்றோரும், உடன் பிறந்தோரும் கண்டிப்பாக தரவேண்டும். இத்துணைக்

கும், அந்தபெண் +2 படித்துவிட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில்

மூன்றுவருடம் நர்சாக பணியாற்றிய அனுபவம் கொண்டவள். கணவனைப்

பிரிந்து வந்தாலும், நிச்சயம் அவள் சொந்த காலில் நின்றிருக்க முடியும்.



விட்டுக் கொடுத்துப் போ..., அனுசரித்துப் போ... என்று அனுப்பி வைக்க

கிறார்கள். அது நம் ஜீன்களிலேயே இருக்கிறது. வாழ்வதற்காக விட்டுக்

கொடுக்கலாம். அதில் தவறே இல்லை. ஆனால் விலைமதிக்க முடியாத

உயிரையே விட்டு தர வேண்டியதில்லை.
.
.

Monday, May 3, 2010

ஆப்ரஹாம் மாமா.

.
.
ஊர்க்கோயிலில் கொடை திருவிழா. இந்த மாரியம்மன் திருவிழா இங்கு

மிக பிரசித்தம். ஏழுநாட்கள் நடைபெறும். ஊரேகளை கட்டியிருக்கிறது.

தெருதோறும் `லவுட்ஸ்பீக்கர்’ அலறிக் கொண்டிருக்கிறது. வெளியூரில்

இருக்கும் அத்தனை உறவினர்களும் இந்த திருவிழாவிற்கு ஆஜராகி

விடுவர். எங்கள் வீட்டிலும் அப்படியே!. நேற்று பேசிக்கொண்டிருக்கும்

போது இடையில் ஆப்ரஹாம் மாமாவின் பேச்சு வந்தது.



ஆப்ரஹாம் மாமா என்பது அம்மாவின் பெரியம்மா மகன். அவர்கள் இருக்

கும் இடமே கலகலக்கும். சிரிக்க சிரிக்கப் பேசி எல்லோரையும் சந்தோஷ

மாக வைத்திருக்கும் மாமாவுக்கு எட்டு குழந்தைகள். குழந்தைகளை பேர்

சொல்லி கூப்பிடாமல், நம்பர் 1, 2 என்றே கூப்பிடுவாரகள். பேர ஞாபகம்

வைக்க முடியல என்று ஜாலியாக சொல்வார்கள். நாங்கள் சிறுவர்களாய்

இருந்த போது அவர்கள் உள்ளூரில் தான் இருந்தார்கள். எங்களிடம் மிகவும்

அன்பாயிருப்பார்கள். அசராமல் ஜோக் அடிக்கும் வித்தையை அவர்களிடம்

தான் கற்று கொள்ள வேண்டும். திருக்குறளை மாற்றி புதுக்குறள் நிறைய

சொல்வார்கள். அதில் ஒன்று இன்னும் நினைவிருக்கிறது.


`கடலை வறுக்க, வறுத்ததை, வறுத்தவன்,

வறுத்த உடனே உண்க.’


எல்லோரையும் சிரிக்கவைத்த அவர்கள் வாழ்வில் அத்தனை சிரிப்பு

மில்லை; சிறப்புமில்லை. வெகுளியாய், அன்பாய் மனங்களை சம்

பாதித்த அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எளிதாயில்லை. குடும்பத்தின்

அன்றாட தேவைகளுக்கே போராட வேண்டியிருந்தது. குடும்பத்தோடு

சென்னைக்கு புலம் பெயர்ந்தனர். ஏதேதோ தொழில் செய்தார்கள். ஒரு

பல்பொடி கம்பெனியின் விற்பனை பிரதிநிதியாய் ஒருமுறை வேனில்

வந்தார்கள். கோபால் பல்பொடி போல் ஏதோ ஒரு பல்பொடி. அம்மாவி

டம் கட்டு கட்டாக அள்ளி கொடுக்கவும், அம்மா,` குழந்தைகள் இதில்

பல் துலக்க மாட்டார்கள்’ என மறுத்தார்கள். `உங்களை யார் பல் துலக்க

சொன்னது, பாத்திரம் துலக்க வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள், சாதா

ரணமாக.



நாளடைவில் அவர்கள் ஊருக்கு வருவது குறைந்து போயிற்று. ஆனால்,

திருமணம் போன்ற முக்கியமான வைபவங்களுக்கு தவறாமல் வந்து விடு

வார்கள். ஒருமுறை வரும் போது, `மாமா இப்போ நல்லா யிருக்கேன்.

சொந்த வீடெல்லாம் வாங்கி விட்டேன். அடுத்த முறை சென்னை வரும்

போது கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும் என கூறிச் சென்றார்கள்.



இரண்டு வருடங்களுக்கு முன், இதே கோயில் திருவிழாவுக்கு வந்திருந்

தார்கள். மாது அண்ணனும் அந்த வருடம் வந்திருந்தான். சந்தோஷமாக,

உற்சாகமாக, எல்லோருடனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்க

ளுக்கு எப்பவும் `தீர்த்தமாடும்’ பழக்கம் உண்டு. நன்றாக ஏற்றிவிட்டு,

எங்களிடம், `அத்தையை தவிர யாரையும் பார்த்ததே இல்லை, நாளை

போகும் போது யாரையாவது கூட்டிட்டு தான் போவேன், இந்த நரைமுடி

ஒண்ணு தான் பிரச்சனை. எனக்கு டை அடிச்சு வுட்டுறு’ என உற்சாக

மிகுதியில் புலம்ப எல்லோரும் சிரித்தோம். காலையில், `என்ன மாமா,

டை அடிச்சுறுவோமா’ எனவும், `அய்யய்யோ, அத்தை கொன்னே

போட்டுறுவா’ என்றார்கள். மாலை கிளம்பும் போது, மாது அண்ணனின்

கைகளை பிடித்து கொண்டு, `ரொம்ப சந்தோஷமாய் இருந்தேன் ப்பூ,

இனி ஒவ்வொரு வருஷமும் கோயில் கொடைக்கு வந்துருவேன்’ என்று

விடை பெற்று சென்றார்கள்.



சரியாக இரண்டே மாதங்கள். சென்னையில் இருந்த இன்னொரு மாமா

விடம் இருந்து போன், ` ஆப்ரஹாம் மாமாவுக்கு ரத்தகொதிப்பு அதிக

மாகி, சீரியஸ் கன்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்ப

தாக’. அன்று இரவே மாமா இறந்து போனார்கள். அதிர்ந்து போனோம்

அனைவரும். என்அம்மா, `காலனை தோளில் வைத்து கொண்டு தான்

வந்தான் போல’ என அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஒருவருடமும் வராத

மாமா கடைசி விடை பெறுவதற்காக, அவர்கள் அன்பை நாங்கள்

நினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் வந்தார்களோ

என நினைக்க தோன்றுகிறது. இனி வரும் அத்தனை கோயில்கொடை

யிலும் மாமாவின் நினைவுகள், எங்களிடையே மலர்ந்து மணம் வீசும்...
.
.