Sunday, April 18, 2010

பெண்கள் வேலைக்கு செல்வது கேவலமா..?

.

இன்று பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லையெனலாம். ஆகாயத்

தில் பறப்பதாகட்டும், ஆபீஸ் நிர்வாகமாகட்டும், அரசியலாகட்டும், எதி

லும் சாதிக்கின்றனர். `அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு’ என்ற கால

மெல்லாம் மலையேறி விட்டது.எத்தனையோ மாற்றங்கள், வியத்தகு

முன்னேற்றங்கள்... சந்தோஷமாயிருக்கிறது.
ஆனால், பெண்கள் வேலைக்கு செல்வதைக் கேவலமாக கருதும் சிலர்

இன்னமும் இருக்கின்றனர் என்பது வருத்தம் தரும் உண்மை. எனக்கு

தெரிந்த பெண், பொறியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரி

பவர், நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வந்த ஒரு

பெண்மணி, விரிவுரையாளருக்கு தெரிந்தவர் போலும், அந்த பெண்மணி

யிடம் அவரது மகளின் படிப்பு குறித்து விசாரித்தார். அவர் பெருமையாக

மகள், சென்னையில் பொறியியற்கல்லூரியில் இறுதியாண்டு படிப்பதாக

கூறினார். இவர் `ப்ளேஸ்மென்ட் ’ பற்றி கேட்டார். அந்த பெண்மணி

கர்வத்தோடு, `சேச்சே, நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்க

வில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை’ எனவும், இவருக்கு கோபம்

வந்துவிட்டது. வேலைக்கு அனுப்பலேன்னா, ஏன் ப்ரபஷனல் கோர்ஸ்

படிக்க வைக்கிறீங்க.? சும்மா டிகிரி ஏதாவது படிக்க வைக்கவேண்டியது

தானே’ பொரிந்து தள்ளினார். அந்தம்மா போய்விடவும், நான் இவரிடம்

`ஏதோ படிக்கவாவது வைக்கிறாங்களே, அதை சொல்லுங்கள்’ என்றேன்.

ஆனால் அவர் கூறிய பதில் சிந்திக்க வைத்தது.
இப்படித்தான் சிலர், 100% வேலை வாய்ப்பு தரும், டாப் டென் எனும்

முண்ணனி கல்லூரிகளில் சேர்கின்றனர். ஆனால் படிப்பை பாதியில்விட்டு

விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அல்லது வேலைக்கு போகா

மலிருந்து விடுகின்றர். இதனால் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்

தில் இருக்கும், இந்த கல்லூரியில் படிக்க விழையும் மற்ற மாணவர்க

ளின் வாய்ப்புகளை இவர்கள் வீணாக்குகிறார்கள். இது கிராமங்களில்

தான் என்றில்லை, நகர்புறங்களிலும் தொடர்கிறது. என்மகன் சென்னை

யில் M.C.A படிக்கும் போது, உடன் படித்த மாணவிகளில் ஏழு பேர்,

படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு திருமண செய்து கொண்டனராம்.

வேலை, திருமணம் என்பதெல்லாம் அவரவர் சொந்த விஷயம் என்றா

லும் மற்றவர்களுக்கான வாய்ப்பு கெடுவது அவர்களுக்கு புரிவதில்லை.

ஆனால், இப்படி படிப்பை பாதியில் கைவிடும் பெண்கள், தங்கள்

குழந்தைகளுக்கு இந்த தவறை செய்ய மாட்டார்கள் என நிச்சயம்

.நம்பலாம்..

.

28 comments:

சங்கர் said...

வித்தியாசமான பார்வை...பெண்கள் மட்டும் அல்ல... முழு சமுதாயமே எண்ணி பார்க்கவேண்டும்...

காமராஜ் said...

//இப்படித்தான் சிலர், 100% வேலை வாய்ப்பு தரும், டாப் டென் எனும்

முண்ணனி கல்லூரிகளில் சேர்கின்றனர். ஆனால் படிப்பை பாதியில்விட்டு

விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர். அல்லது வேலைக்கு போகா

மலிருந்து விடுகின்றர். இதனால் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்

தில் இருக்கும், இந்த கல்லூரியில் படிக்க விழையும் மற்ற மாணவர்க

ளின் வாய்ப்புகளை இவர்கள் வீணாக்குகிறார்கள்//


மிகச்சரியான அவதானிப்பு அம்பிகா.பேருந்தில் ஒரே ஆளுக்கு மூன்றிடத்தில் துண்டு போடும் பழக்கம்.
நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ல் நடந்த ஒரு கௌன்சிலிங் போயிருந்தேன்.அப்போது அருகிருந்த
மாணவன் agri,EEE,தொல்லியல்,பல்மருத்துவம் ஆகிய நான்கு படிப்புக்குத்தேர்வாகி அப்போது பிரபலமாக இருந்த CS க்கும் கௌன்சிலிங் வந்திருந்தான்.போகட்டும். ஆனால் இட ஒதுக்கீடு குறித்த அவனது அழுகிய
கண்ணோட்டம் இதுபோல நிரைய்ய விவாதிக்கவேண்டியது.
நான்குபேரைக்கீழே தள்ளி விட்டுவிட்டு அவன் பேசிய பேச்சு மிகுந்த ஆணவம் அடங்கியது.சமம் என்பது
ரொம்ப விலை கொடுத்து வாங்கிய பொக்கிஷம்.

Chitra said...

அக்கறை உள்ளவர்கள், சுயநலத்துடன் நிச்சயமாக முடிவு எடுக்க கூடாது. கருத்துக்களை, தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

அமைதிச்சாரல் said...

என் தோழிகளுடன் நானும் இதுபற்றி விவாதிப்பதுண்டு.வேலைக்கு போக இஷ்டமில்லை என்றால் ஏதாவது ஒரு டிகிரி படிப்பதைவிட ஹோம் சயின்சில் டிகிரி வாங்கலாம்.கண்டிப்பா வாழ்க்கைக்கு உதவுகிறது.என் தோழி யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்து கோல்ட் மெடல் வாங்கியிருக்கா.

திருமணத்துக்கு முன்,பின் வேலையை விடுறவங்களையும்,டொனேஷன் கொடுத்து சீட் வாங்கி, வீணாக்குறவங்களையும் கூட இதில் சேத்துக்கலாம்.

ஈரோடு கதிர் said...

பெண்கள் மட்டும் இல்லை... பல ஆண்களும் இப்படித்தான்... எனக்குத் தெரிந்து சட்டம் படித்து விட்டு தங்கள் வியாபாரத்தை கவனிக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது இதுதான் தோன்றும்

VijayaRaj J.P said...

வேலைக்கு போகாவிட்டாலும் பரவாயில்லை,
என் மகன் டிகிரி வாங்கினால் போதும் என்று கூறி
பிள்ளைகளின் படிப்பை கெடுத்த பெற்றோரை
நானும் பார்த்து இருக்கிறேன்.

சிந்திக்க வேண்டிய பதிவு

கண்ணா.. said...

//இதனால் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும், இந்த கல்லூரியில் படிக்க விழையும் மற்ற மாணவர்களின் வாய்ப்புகளை இவர்கள் வீணாக்குகிறார்கள்//

ஆம் . மிகச்சரியாக சொல்லிருக்கீங்க... உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் சரிதான்

அமுதா கிருஷ்ணா said...

இப்பொழுதெல்லாம் பி.ஈ படிப்பது நல்ல வேலைக்கு போக அல்ல நல்ல மாப்பிள்ளை கிடைப்பதற்கு.பி.ஈ படிச்ச பெண் தான் வேண்டும் என்று நிறைய மாப்பிள்ளை வீட்டார் கேட்கிறார்கள்..

Anonymous said...

உங்கள் கேள்வி: பெண்கள் வேலைக்குச் சொல்வது கேவலமா...?

உங்கள் பதிவில் எவரும் கேவலம் என்று சொல்லவில்லை. படிக்கவைப்பது, பின்னர் படிக்கும்போதே நல்ல மாப்பிள்ளை அமையும்போது, மணம் செய்துவிடுவது.

வேலைக்குச்செல்வது முதல் priority இல்லை. மணமே முதல்.

இதில் எங்கே கேவலம் என்ற reference or implication இருக்கிறது?

நிறக.

professional course என்றால் கண்டிப்பாக வேலைக்குச்செல்லவேண்டும்; general course என்றால் சும்மா.

என்ற மனப்போக்கு உங்களிடமும் இருக்கிறது.

ஏன்? general course படிப்பது ஒரு அலங்காரத்துக்கா பெண்களுக்கு.

நண்பரே. geneal course படித்த பெண்கள், கால்கடுக்க employment exchange ல் நின்று பதிவு காத்திருக்கிறார்கள். மேற்கொண்டு teacher training, computer applications என்று add-on courses களைப்படித்துகொண்டு வேலை வேலை என அலைகிறார்க்ள். அவர்க்ள் எண்ணிக்கை கோடி.

With general course degree, girls can apply for more jobs than with professional degree. In fact, that is happening.

பெண்ணை வேலைக்கு அனுப்பாமல் அலங்காரத்துக்குப் படிக்கவைப்ப்து மேட்டுக்குடி சமாச்சாரம்.

பாமரப்பெற்றோர்கள் எதற்கும் தயார். They dont sit on sophistries.

Home science degree என்றாலும் ஒரு மட்டமான நினைப்பே இருக்கிறது. Please go thorugh it syllabus. It is useful more for jobs than for running a home.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அருமையா சொல்லிருக்கீங்க அம்பிகா.. இப்படித்தான் எத்தனபேரு வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடுறாங்க.. எல்லாம் இவங்க சுயநலத்துக்காக மத்தவங்க படிப்புல மண்ணை அள்ளிபோடுறாங்க..

ஹேமா said...

ஆழமாய் நீங்களும் சிந்தித்து மற்றவர்களையும் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் அம்பிகா.நிச்சயம் யோசிக்கவேண்டியதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிறுத்த வேண்டியதுமான விஷயம்தான்.

அம்பிகா said...

நண்பரே!

\\`
கர்வத்தோடு, `சேச்சே, நான் வேலைக்கு அனுப்புறதுக்காக படிக்க வைக்க

வில்லை. எங்களுக்கு தேவையும் இல்லை’\\

அந்த பெண்மணி கூறிய தொனி, வேலைக்கு செல்வது கேவலமெனத்தான் ஒலித்தது.

வேலைக்கு செல்வதை கேவலமெனக் கருதுபவர்கள், 100% வேலை வாய்ப்பு எனும் முண்ணனி நிற்வனங்களில் படிக்க வைத்து மற்றவர்களுக்கான வாய்ப்பை கெடுக்க வேண்டாமெனெ
தான் கூறினேன்.

படிப்பில் மட்டமென எதுவும் இல்லை.
எல்லாமே அறிவை வளர்ப்பவைதான்.அலங்கார படிப்பென்றாலும், வேலைக்கே செல்லாவிட்டாலும், படிப்பு தேவைதான். குழந்தைகளை படிக்க்க வைக்கவும், கல்வி அவசியமானது.

படிப்பு என்பது சும்மா என்று நான் எங்கேயும் சொல்லவில்லையே!

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் பதிவு.

Barari said...

வேலை பார்க்கத்தான் படிக்க வேண்டும் என்று நினைப்பதே முட்டாள் தனமாணது

ஹுஸைனம்மா said...

அந்தப் பெண்ணின் கோணம் தவறுதான்.

ஆனால், இன்று பெண்கள் வேலை பார்ப்பது என்பது முழுவதும் பெண்களின் கையிலேயே இல்லையே!! பெற்றோர், கணவன், மாமியார், குழந்தைகள், சூழ்நிலைகள் என்று அவளைத் தவிர எல்லாரையும் வேலைகுறித்த முடிவெடுப்பதில் அவள் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற நிச்சயமில்லாத நிலையில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்வதில் தவறில்லையே?

வேலைக்கேச் செல்ல மாட்டேன் என்றவர்கள், சூழ்நிலை காரணமாக வேலைக்குப் போக வேண்டி வந்துவிடுகின்றதுபோல, நிச்சயம் வேலைக்குச் செல்வேன் என்றவளும் வீட்டிலிருக்கிறாள்!!

எனினும், திருமணத்திற்காக படிப்பைப் பாதியில் விடுவதென்பது அநீதியே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இத்தகையவர்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும்.

மாதவராஜ் said...

அம்பிகா, மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட பதிவாயிருந்தாலும், விவாதத்துக்கு உரிய பொருளும் கொண்ட பதிவு இது என்று நினைக்கிறேன்.

உன் பார்வை ஒன்றாக இருக்கிறது. அந்த விரிவுரையாளரின் பார்வை ஒன்றாக இருக்கிறது.

ஹூஸைனம்மா சொல்வது போல, பெண்கள் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறவர்களாக இல்லை என்பதும் மிக முக்கியமானது. மேலே படி என்றால், படிக்கிறார்கள். திருமணம் செய்து கொள் என்றால் செய்து கொள்கிறார்கள். வேலைக்குப் போ என்றல் போகிறார்கள். இப்போது, இவ்விஷயத்தில் விதிவிலக்குகள் அதிகமாயிருக்கின்றன என்ற போதிலும் , இதுதானே இன்னும் பெரும்பான்மையான அல்லது பொதுவான அம்சமாயிருக்கிறது? தங்களைத் தாங்களே தீர்மானிக்கிறவர்களாகவும் பெண்கள் எழ வேண்டும்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் சிறப்பான பதிவு . ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் . பகிர்வுக்கு நன்றி !

அன்புடன் அருணா said...

இதில் நிறைய கருத்துக்கள் ..நிறைய பார்வைகள்.படிப்பை முடித்து விடுவது பிரதானமாக இருக்க வேண்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவும் பின்னூட்டங்களும் சிறப்பாக விவாதிக்கிறீங்க..

பாதியில் படிப்பை விடுவது தவிர்த்து மற்றவை தவறில்லை என்று ஹுசனைம்மா சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது. பின்னால் அந்த படிப்பு அவளுக்கு தேவைப்படலாம். ஆனால் அவசரமாக அந்த படிப்பும் வேலையும் தேவையா இருக்கிற ஒரு பெண்ணும் இருக்கிற நிலைமை மட்டும் இல்லாம ல் இருந்தால் அது கேள்விக்குறியதாகாது. நம் நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பின் இன்றைய நிலைதான் அவள் படித்துவிட்டு வேலைக்கு செல்லாததை தவறு என்று நினைக்க வைக்கிறது.

அமைதி அப்பா said...

//மற்ற மாணவர்களின் வாய்ப்புகளை இவர்கள் வீணாக்குகிறார்கள்//

சமூக அக்கறையுடன் எழுதிவுள்ளீர்கள்,
வரவேற்கிறேன்.
நன்றி.

ponraj said...

அருமையான பதிவு!!
யோசிக்க வைத்தது

மீண்டும் இதேப்போல் பதிவை எதிர் பார்கின்றோம்!!

Deepa said...

மிக அவசியமான பதிவு அக்கா.

இப்படித் தான் மகளை வேலைக்கு அனுப்புவது கேவலமென்று நினைத்து விட்டுப் பிறகு புகுந்த வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்பி வைத்துக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
எத்தனை கதைகளை அறிவோம் இப்படி? "கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகும்னு நினைச்சோம். இப்ப புருஷன் வீட்ல விடமாட்டேங்கறாஙக‌..."

நகை போடுவதோ, ரொக்கம் சேர்த்து வரதட்சணை கொடுப்பதோ அல்ல, நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிப் பொருளாதாரம் மற்றும் சொந்தக்காலில் நிற்கும் சுதந்திரத்தை அளிப்பதே பெற்றோரின் கடமையாகும்.

V.Radhakrishnan said...

நல்லதொரு சிந்தனை, அப்படி பார்த்தால் எவரும் வேலை பார்க்க இயலாது? ஏனெனில் பலர் ஒரே வேலையில் வாழ்க்கை முழுதும் இருப்பதில்லை.

Sangkavi said...

அழகான ஆழமான கருத்து.... நீங்கள் சொல்லிய விதம் அருமை...

மாதவராஜ் said...

//இப்படித் தான் மகளை வேலைக்கு அனுப்புவது கேவலமென்று நினைத்து விட்டுப் பிறகு புகுந்த வீட்டுக்கு வேலைக்காரியாக அனுப்பி வைத்துக் கண்ணீர் வடிக்கிறார்கள்.//

ஆஹா....!
கை தட்டி ஆமோதிக்கிறேன்!

சந்தனமுல்லை said...

பதிவும் பின்னூட்டங்களும் சுவாரசியம் - அம்பிகா அக்கா! தொடர்ந்து எழுதுங்கள்!

சே.குமார் said...

சிந்திக்க வேண்டிய பதிவு

ராமலக்ஷ்மி said...

மகளிர்தின வாழ்த்துக்கள்! இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.., நன்றி.