Sunday, January 31, 2010

நட்சத்திரங்களும், நாமும்...

        `என்ன நேரத்தில் பெறந்து தொலைச்சேனோ’ என்று சில நேரங்களில் சலித்துக் கொள்கிறோம். அல்லது பிறர் சலித்துக் கொள்வதையாவது கேட்டிருப்போம். பிறக்கும் ஒவ்வொருவரின் நேரமும், குறிக்கப்பட்டு, அந்தநேரத்திற்கான நட்சத்திரமும், குறிக்கப்பட்டு தனித்னியாக பலன்களும் ஜோதிடக் கலையில் உள்ளன. அசுபதியில் ஆரம்பித்து ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் சிலவற்றுக்கு மோசமான பலன்கள் நம் மக்களிடையேக் கூறப் படுகின்றன. நானறிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு நகைச்சுவை பகிர்வு மட்டுமே. எனக்கு ஜோஸ்யமெல்லாம் தெரியாது.

        முதலில் என்னிடம் இருந்தே ஆரம்பிப்போம். நான் நாலாவதாக பிறந்த பெண். நாலாவதுபெண் நடைகல்லை {வீட்டின் நடைகல்லைத்தான்}பெயர்த்து விடுமாம். அதனால் நான் பிறந்ததுமே வீட்டில் இருந்த பெரியவங்க யாரோ, இவள் என்ன பெயர்ப்பது என்று, தொட்டிலில் கிடந்த என்னோடு போட்டி போட்டுக் கொண்டு, கடப்பாறையால் வீட்டின் நடைகல்லில் ஒரு மூலையை அவர்களே உடைத்து விட்டார்களாம். ஆனால் நான் நடக்க ஆரம்பித்தபின் அதே நடைகல்லில் விழுந்து நெற்றியை பெயர்த்துக் கொண்டது வேறு கதை. இன்னமும் இடது நெற்றியில் தழும்பு இருக்கிறது. கொஞ்சம் பெரிசான பிறகு சொன்னாங்க, `நாலாவது பொண்ணு நாய் படாத பாடு படும்’ என்று. ஆக மொத்தம் நாலாவது பெண் நல்லதில்லை என்பது மட்டும் புரிந்து விட்டது. உறவினர் ஒருவர் `அவிட்ட நட்சத்திரத்தில் பொண்ணு பொறந்தா தவிட்டு பானையல்லாம் தங்கம்’ என்று கூற, நானும் ஒரு பானையில் தவிடு போட்டு வைக்கச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். ஆனால் அம்மாவோ, `பானையில் தவிடு போட்டு வச்சா தங்கமெல்லாம் வராது. வண்டும் புழுக்கூடும் தான் வரும்’ என்று என் தங்கக் கனவை ஒரேயடியாக தகர்த்து விட்டார்கள்.

        மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் `முற்றத்து மாமியார் மூலையிலே’ என்பார்கள்.அதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமியார், அல்லது மாமனார் இல்லாத வீட்டில் தான் திருமணம் செய்ய வெண்டுமாம். என் கணவரின் நண்பர், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். காதல் திருமணம் செய்து கொண்டார். பெண்வீட்டினர் மிகுந்த ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் தன் நட்சத்திரத்தையே மாற்றிக் கூறி திருமணம் செய்து கொண்டார். 17 வருடங்கள் ஆகிறது. மாமனார் மாமியார் இருவருமே நன்றாகத்தான் உள்ளனர்.

         இன்னோருவர்க்கு, நட்சத்திரத்தில் ஆரம்பித்து பத்து பொருத்தங்கள் இருப்பதாக கூறி திருமணம் செய்வித்தனர். ஆனால் திருமணம் ஆன மறுநாளிலிருந்தே அவர்களுக்குள் `ஏழாம் பொருத்தம்’ தான். இப்போது டைவர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. `உத்திரத்து தாலி உறியிலே’, `பூராடம் கழுத்திலே நூலாடாது’ என்பனவும் சாதாரணமாய் கூறப் படுவன. ஆனால் தங்கம் விற்கும் விலையைப் பார்த்தால் இனி பலபேரின் கழுத்தில் நூல் தான் ஆடும் போல் தெரிகிறது.

         ``மழ மேகத்துக்கும், மடிப் புள்ளைக்கும் நேரங் காலம் கெடையாது’’ என்று கிராமத்தில் சொல்வதுண்டு. ஆனால் இப்போது நல்லநேரம், நட்சத்திரம், எல்லாம் ஜோஸ்யரிடம் குறித்து வாங்கி அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்க வைத்து விடுகின்றனர். இப்படித்தான் எனக்கு தெரிந்த பெண்ணோருத்திக்கு, மே மாதம் மூன்றாம் வாரத்தில் பிரசவம் இருக்கும் என மருத்துவர் கூறியிருந்தார். சித்திரை மாதம் குழந்தை பிறந்துவிடக்கூடாதே என்று, {ஏனென்றால் சித்திரை அப்பன் தெருவிலேயாம் } மே மாதம் 18 எனக் குறித்து, அறுவை சிகிச்சை செய்யவும் தீர்மானித்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு மே 16 ந்தேதி இரவே வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. பெண்ணின் அம்மாவோ இன்னும் ஒரு நாள் தானே என்று வயிற்று வலிக்கென ஏதோ மாத்திரை கொடுத்துள்ளார். நேரமாக நேரமாக பெண்ணுக்கு கடும் உதிரப்போக்கு ஏற்பட்டு, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய சிஸேரியன், சிக்கலாகி, அந்தப் பெண்ணுக்கு இரண்டு யூனிட் இரத்தம் ஏற்றப் பட்டு மிகவும் சிரமமாகி விட்டது.

         அடுத்த நாள் அந்த பெண்ணின் தாயார் மிகவும் கவலையோடு, `சித்திரைல பெறக்கக் கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சோம். பெறந்ததென்னமோ வைகாசி தான். ஆனா நட்சத்திரம் சித்திரையாப் போச்சே. என்ன பாடு படுத்தப் போவுதோ? நாம என்னதான் மாத்தணும்னு நெனச்சாலும் சித்திரைல பெறக்கணுனு விதி இருந்தா அத யாரால மாத்த முடியும்’ என்றார்கள் மிகத் தெளிவாக. கேட்டுக் கொண்டிருந்த நான் தான் இப்போது குழம்பிப் போனேன்.

Thursday, January 28, 2010

சித்திரமும் கை பழக்கம் ?????...

        அழகாக வரைய பெற்ற பென்சில் சித்திரங்கள் சில கீழே இடம் பெற்றுள்ளன.         ஓவியங்கள் அனைத்தும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.வியப்போ, அதிர்ச்சியோ, உண்மை என்னவெனில் இந்த அருமையான கலைஞருக்கு இரு கைகளும் கிடையாது.        இப்படித்தான் இந்த அற்புதமான கலைஞர் தம் படைப்புக்களை செதுக்குகிறார். `Physicaiiy unabled’ என்பதை `Differently abled' என குறிப்பிடலாம் என்று எங்கோ படித்த நினைவு. அதை மெய்ப்பிக்கிறார் இந்த படைப்பாளி.

Monday, January 25, 2010

முதல், முதலாக...

வலைப் பக்கங்களில் நான் எழுதிய`அழகம்மா’என்ற சொற்சித்திரம்,
24.01.10அன்றுவெளியான தீக்கதிர் இதழின் ஞாயிறு இணைப்பான
வண்ணக்கதிர் இதழில் வெளியாகியுள்ளது. என் எழுத்துக்கள் முதன்
முறையாக அச்சேறி உள்ளது. இச்சிறு வெற்றியை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இதற்கு உறுதுணையாக
இருந்த திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்கும், தீக்கதிர்
அசிரியருக்கும் என் நன்றியும், வந்தனமும்.


விடுமுறை...


அப்பாடா,

நாளை விடுமுறை.

நிம்மதியா ஓய்வு எடுக்கலாம்;

உனக்கென்ன

தினமும் விடுமுறைதான்,

கேலியாக கணவன்;

வருடமுழுவதும்

ஆன் ட்யூட்டி தான்,

விடுமுறை நாட்கள்,

ஓவர் டைம் தான்;

மெளனமாய் புன்னகைக்கும்

மனைவி...

Friday, January 22, 2010

இவர்களும் பெளர்ணமி தான்!.

       வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை
கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக
நடக்கத் தொடங்கினேன். `அக்கா, நீங்க தானே பார்லர் வச்சிருக்கீங்க’ என்னை வழிமறித்த அந்த பெண்ணுக்கு முப்பது வயதுக்குள் இருக்கும். சாதாரண நடுத்தர குடும்பத் தோற்றம். ஆமாம் என்பதாய் தலையசைத்தபடியே அவளை ஏறிட்டேன்.`அக்கா எம்பொன்ணு கருப்பா இருக்கா, கொஞ்சம் கலராக்க முடியுமா?’ என்றாள். `ப்ளீச்சிங்,பேஷியல் ஏதாவது செய்யலாம். பார்லருக்கு கூட்டிட்டு வாங்க’ என்றேன்.சட்டென ஏதோ தோன்ற உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்?எனக் கேட்டேன்.` எட்டு வயசாச்சு’ என்றாள் அவள். தலையிலடித்துக் கொள்ளலாம்போலிருந்தது. நிதானத்தை வரவழைத்துக் கொண்டு,`இந்த வயசுல எதுவும் செய்ய கூடாது. தோல் ரொம்ப மென்மையா இருக்கும். +2 முடிச்சு காலேஜ் போறவயசுல கூட்டிட்டு வாங்க, பாக்கலாம்’. சிந்தனையுடன் நடக்கத் தொடங்கினேன்.

       மேலேகுறிப்பிட்ட சம்பவம்ஒருஉதாரணம்தான்.பெண்குழந்தை
கருப்பாய் பிறந்து விட்டாலே, கவலையும் சேர்ந்தே பிறந்து விடுகிறது
என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பெண்குழந்தை என்று பதில் வந்தால், அவர்களின் அடுத்த கேள்வி குழந்தை என்ன கலர் என்பதாகத்தான் இருக்கிறது. என் தோழியின் மகள் ஏழாவது வகுப்பு தான் படிக்கிறாள்.கொஞ்சம் கருப்பாக
இருப்பாள். அவள் நிறத்தை சுட்டிக்காட்டி பேசி ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி அதீத அல்ங்காரம் செய்யவும் பழக்கிவிட்டனர். விளைவு படிப்பில் நாட்டமின்றி முழுநேரமும் `மேக்கப்செட்’ டும் கையுமாய் அலைகிறாள். இன்னொரு சம்பவம்; B.E. முடித்து ஒரு நிறுவனத்தில வேலை செய்யும் பெண் `மூக்கும் முழியுமாக’ அழகாக இருப்பாள். ஆனால் நிறம் குறைவாக இருப்பாள். அவளுக்கு திருமணம். நிறையநகைகள்
போட்டு, ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர் ஆனாலும் பெண், முகத்தில் மலர்ச்சியில்லை. விசாரித்த போது தெரிந்தது. மாப்பிள்ளை கொஞ்சம் கலராகஇருப்பாராம்.நிச்சயதார்த்தத்தின் போதே பிள்ளைவீட்டார் இவள் நிறத்தைக் குறித்து
ஏதேதோ பேசி அவளை நோகடித்திருக்கின்றனர். கேட்பதற்கே வருத்தமாயிருந்தது.கோபமும் வந்தது. நிச்சயம் இவள் நிறத்தை காரண்ம் காட்டி கூடுதல் வரதட்சணை வாங்கியிருப்பார்கள் என எரிச்சலும் வந்தது


       இந்த வெள்ளை கலர் மோகம் பெரும்பாலான பெண்களை
ஆட்டி படைக்கிறது எனலாம்.கறுப்பாய் இருப்பவர்கள் கொஞ்சம் மாநிறம்
ஆகிவிடமாட்டோமா எனவும், மாநிறமாய் இருப்பவர்கள், கொஞ்சம் வெளுத்து விடவும்,வெளுப்பாய் இருப்பவர்கள் அதை தக்கவைத்துக்
கொள்ளவும் விழைகின்றனர்.கருப்பாய் இருப்பதென்பது
ஒரு குறைபாடில்லை. இயற்கையான விஷயம். அதுவும் இந்த நவீனயுகத்தில் ஓரளவு நிறத்தை மேம்படுத்த எத்தனையோ வழிமுறைகள்
உள்ளன. மேலும் அழகு என்பதொன்றும் நிரந்தரமில்லையே!.

       மிகப் பழைய படம், நானும் ஒரு பெண் என நினைக்கிறேன், விஜயகுமாரி , `கண்ணா கருமை நிற கண்ணா’ என அழுதழுது
பாடுவார். ஆண்டுகள் பல கழிந்துவிட்டாலும் இன்னும் பல விஜயகுமாரிகள் ஆங்காங்கே அபஸ்வரத்தில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

Sunday, January 17, 2010

ஏன் மிதித்தான்...?

கழுவி, சுத்தப்படுத்தி,

மாலைகள் போட்டு,

மலர்கள் தூவி,

அலங்கரித்தனர் கல்லறையை...ஆச்சி இங்கேதான்

தூங்குறாங்க,

கடைக்குட்டி பேரனிடம்,

அவன் அன்னை...


எட்டி மிதிக்கிறான்

கல்லறையை,

எனக்கு கதை சொல்லாம,

இங்க தூங்குறது

புடிக்கல...


கல்லடியும், சொல்லடியும்,

பரமனே தாங்கும்போது

அன்பு பேரனின்

கால் அடி

ஆச்சி தாங்கமாட்டாங்களா...???.

ஆச்சியின் ஆன்மா

அன்று சந்தோஷப் பட்டிருக்கும்...

Wednesday, January 13, 2010

`பொங்கலோ பொங்கல்’

` பொங்கலும் பொங்குது, பாலும் பொங்குது’

மகாநதி படத்தின் இனிய பாடல் காதுகளை நிறைக்கிறது.

அம்மா இருக்கும்போது,

` தை பொறந்தா வழி பொறக்கும்; தங்கமே தங்கம்,

தங்கசம்பா நெல் வெளையும்; தங்கமே தங்கம்.’

என்ற இந்த பழையபாடலை மிக இனிமையாகப் பாடுவாங்க.

வீடெங்கும் மஞ்சள் குலை, காய்கறிகள், வாழைத்தார்,
பொங்கல்பூ, கரும்பு வாசனை, ஒரு மங்களகரமான வாசனை.
பொங்கல வந்தால் வீடு மட்டுமல்ல, ஊரே களை கட்டி
விடுகிறது. வெள்ளையடித்து சுத்தமாக்கப் பட்ட வீடுகள்,
முற்றத்தை நிறைக்கும், மாக்கோலங்கள், ரங்கோலிகள்...
பொங்கல்விழா கிராமங்களில் தான் உற்சாகமாய்க் கொண்டாடப்
படுகிறது.

வெளிமுற்றத்தில் வைத்து பொங்குவதுதான் இங்கே
வழக்கம். பொங்கல் பொங்கும் போது பெண்கள் இடும் மங்கல
குரவையொலி அதிகாலையில் இருந்து இனிமையாக ஒலித்துக்
கொண்டேயிருக்கிறது.


எங்கள் வீட்டுவாசலில் இருக்கும் பிள்ளையார்.அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Sunday, January 10, 2010

``அழகம்மா’’

நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது. ` ஸ்டடி லீவு’ க்காக வீட்டுக்கு வந்திருந்தேன். என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பெண், நிறைமாத கர்ப்பிணியாயிருந்தாள். புதுமுகமாகத் தோன்றியதால், யாரென்று அம்மாவிடம் விசாரித்தேன். `நம்ம வீட்டுக்கு பின்னால புதுசா குடி வந்திருக்காங்கம்மா’ என்றார்கள். `இந்தக்கா தான் உங்க பொண்ணாம்மா’ என்றபடி என்னைப் பார்த்து சோகையாய் சிரித்தாள், அழகம்மா எனற அந்தப்பெண். அவள் போனதும்,` ரொம்ப சின்னப் பெண்ணாயிருக்காளேம்மா’ என்றேன் அம்மாவிடம். `ஆமாம்மா, இப்பத்தா பதினெழு வயசாவுதாம், ரொம்ப பயந்துப் போயிருக்கா. அதான் தைரியம் சொல்லிட்டிருக்கேன்’ என்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து அம்மா அழகம்மாவுக்கு, பக்கத்துஊர் அரசினர்மருத்துவமனையில், பெண்குழந்தை பிறந்துஇருப்பதாக கூறினார்கள். சந்தோஷமாயிருந்தது.


இரண்டொருநாட்கள் கழிந்திருக்கும். அம்மா வேகவேகமாய் வந்து என்னிடம்,
`எப்பூ, விஷயம் தெரியுமா, அழகம்மாக்கு பேய் புடிச்சிருக்காம். திடீர்திடீர் னு எழும்பி
உக்காந்து கண்ண உருட்டுறாளாம், பல்ல `நறநற’ னு கடிக்கிறாளாம்’ என்றார்கள்.
`அவா இன்னும் ஆஸ்பத்திரியில தான இருக்கா, யாரு இப்படி முட்டாள்தனமா உளறி
கிட்டு இருக்காங்க’ என்றேன் எரிச்சலுடன். `பின்னால ஒரே பேச்சாகெடக்கு, என்னனு
தெரியல’ என்றார்கள் அம்மா. கொஞ்சநேரத்தில் அழகம்மாவை வீட்டுக்கு அழைத்து
வந்துவிட்டார்கள். விசாரித்ததில் மருத்துவர் யாரிடமும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு
வந்துவிட்டது தெரிந்தது. பின்வீட்டில் `கசகச’ னு ஒரே சத்தம். அம்மா என்னிடம்,
`அவளுக்கு பேயோட்ட ஆள் கூட்டிட்டு வந்திருக்காங்களாம், நீ அந்தப்பக்கம் லா போகாதே’ என்றார்கள். அந்தப்பெண்ணை ஒரு அறையில் போட்டு, ஏதேதோ வேண்டாத பொருட்களை வைத்து புகைமூட்டம் போட்டு, வேப்பிலை அடித்து இருக்கிறார்கள். மனசு தாங்காத அம்மா, அவள் கணவனைத் தனியே அழைத்து, முட்டாள்
தனமா இருக்காதே, பாவம், பச்ச உடம்புக்காரி. இதெல்லாம் தாங்கமாட்டா.
``நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரு’’ன்னு சொல்வாங்க, நீ நம்ம லதாம்மாவையாவது
கூட்டிட்டு வந்து காட்டு’ என்று சத்தம் போட்டார்கள். ஏற்கனவெ பயந்திருந்த அவள்
கணவன் லதாம்மாவை அழைத்து வந்தான்.

லதாம்மா என்பவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர். கைனகாலஜிஸ்ட் இல்லாத அந்த நேரத்தில் அவர்கள் தான் அந்த சுற்றுவட்டார பெண்கள் அனைவர்க்கும்
கண்கண்ட தெய்வம். மிகுந்த அனுபவசாலி. அந்த தொழிலுக்கென்றே அவதரித்தவர்கள்
போல் சாந்தம் தவழும் முகம். ஊர்மக்கள் அவரை `லதாம்மா’ என்றே அன்போடு அழைத்தனர். அந்தம்மா வந்துப் பார்த்துவிட்டு, `நீங்கெல்லாம் மனுஷங்க தானா இல்ல
காட்டுமிராண்டியா, அந்தப் பொண்ணுக்கு புண்ணு ஆறாம செப்டிக் ஆகி ஜன்னி கண்டிருக்கு. தடுப்பூசி ல்லாம் போட்டீங்களா, இல்லையா, கிறுக்குக்கார ஜென்மங்களா,
உடனே ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுங்க’’ என்று பேய்பிடித்தது போல் கத்தவும்
மிரண்டு போனார்கள் உறவினர்கள். அவள் கணவன் அவளை அவசர அவசரமாக மருத்துவமனை அழைத்து சென்றான். இவர்கள் சொல்லிக் கொள்ளாமல் அழைத்துப் போய்விட்டதால் மருத்துவர் அனுமதிக்க ம்றுக்க, அவன் காலில் விழுந்து கெஞ்சியபின்
அனுமதித்து இருக்கின்றனர். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

மறுநாள் காலைவிழிக்கும்போதே ஒரே சத்தம். அம்மா, மிகுந்த சோகத்துடன்
``விடியக்காலைலேயே அழகம்மா செத்துப் போயிட்டாளாம்’’ என்றார்கள். அதிர்ச்சியில்
உறைந்து போனேன். சோகையாய் என்னிடம் சிரித்த முகம் நினைவு வர, பின் வீட்டில் கேட்ட ஒப்பாரி சத்தம் அடிவயிற்றை பிசைந்தது... அந்த சத்தம் காதில் கேளாதபடி கதவுகளை சாத்திவிட்டு அழலானேன். மறுநாள் நான் கல்லூரி சென்று விட்டேன். தேர்வுகள் முடிந்து வந்தபோது பின்வீடு பூட்டியிருந்தது. ` வீடு ராசி இல்லேன்னு காலி பண்ணிட்டுப் போயிட்டாங்கம்மா’ என்றார்கள் அம்மா.

நான்கைந்து வருடங்கள் கழிந்தன. படிப்பு முடிந்து, திருமணமாகி, என் பெரியபையன் கவீஷூம் பிறந்திருந்தான். என்னைப் பார்க்கவந்த அம்மா, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம், `நீ தான் எங்க பாப்பா வீட்ல வேலை செயறியா, இது உன் குழந்தையா’ என்றவர்கள் என்னிடம், ‘இது யாரு தெரியுமா, பேறுகாலத்தில செத்துப் போனாளே... அழகம்மா, அவ புருசனுக்குத் தான் இவளை
ரெண்டாந்தாரமா கட்டியிருக்கு’ என்றார்கள். அவள் குழந்தையிடம்,` பாப்பா உன் பேரு என்ன? என்றேன். அது `அளகு’ என்றது அழகாக. `எங்க மூத்தாள் பேரைத்
தான் வச்சிருக்கோம்’ என்றாள் அந்தப் பெண். சோகையாய் என்னைப் பார்த்து சிரித்த அழகம்மாவின் முகம் நினைவில் வந்தது.

Thursday, January 7, 2010

``ப்ளாக் படும் பாடு’’

குழம்பில் உப்பில்லை,

எல்லாம் இந்த

`ப்ளாக்’ ஆல் வந்தவினை

`நெட் கனெக்‌ஷன கட்’ பண்ணிரலாமா?

கோபத்தில் கணவர்....


இல்லப்பா,

`ப்ளாக டெலீட்’ பண்ணிரலாம்,

ஒத்து ஊதும் மகன்....


ஆழ்ந்த சிந்தனையில்

நான்........

அடுத்து

என்ன பதிவு போடலாம்?????.

Sunday, January 3, 2010

எம் பெண்கள் முன்னேறுகின்றனர்.!!!

என்னிடம் புருவம் சரிசெய்து கொள்ள வந்திருந்தனர் இரண்டு பெண்கள். சாதாரண காட்டன் சுடிதாரில் மிக எளிமையாக தோற்றமளித்த அவ்விரு இளம்பெண்களும் பக்கத்து
ஊரான அம்மன்புரத்தில் இருந்து வந்திருப்பதாகக் கூறினர். `படிச்சுக்கிட்டு இருக்கீங்களாம்மா’
பேச்சுக் கொடுத்தேன் நான். அவர்கள் கூறிய பதில் ஆச்சரியப் படுத்தியது. அதில் ஒருப்
பெண் திருநெல்வேலியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி
புரிவதாகக் கூறினாள். இன்னொருப் பெண் M.Phil படித்துக் கொண்டிருப்பதாகக் கூறினாள்.
அம்மன்புரம் என்பது மூன்று அல்லது நான்கு தெருக்கள் மட்டுமேக் கொண்ட சிற்றூர்.
அந்தக் குக்கிராமத்துப் பெண்கள் இந்த அளவு கல்வியில் முன்னேறியிருப்பது வியப்பாய் இருந்தது. இதேப் போல் ஒருமுறை, இங்குள்ள ஒருப் பெண் மேகாலயா அருகில் டெலிபோன் டிபார்ட்ண்ட்டில் A.E. யாக இருப்பதாகக் கூறவும், அருகில் இருந்த என் அண்ணன் மகள் என்னிடம், `என்ன அத்தை, உங்க ஊர் இவ்வளவு முன்னேறி விட்டதா?’ என்றாள் ஆச்சரியமாய். எனக்கும் அதே அச்சரியம் தான்.

நினைவுகள் பின்னோக்கி செல்ல நான் படித்துக் கொண்டிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். நடு்நிலைப் பள்ளி வரை நாற்பது இருக்கும் மாணவியரின் எண்ணிக்கை, உயர்நிலைப் பள்ளியை அடையும் போது இருபத்தைந்து ஆகிவிடும். அதுவும் வயதுக்கு வந்தபின் பெண்கள் கல்வியை தொடர்வது மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான். என்னுடன் படித்தவர்களில் கல்லூரி சென்று படிப்பை தொடர்ந்தவர்கள் ஏழு பேர் மட்டுமே. அப்போதெல்லாம் கல்லூரி செல்வதென்றால் தூத்தூகுடி அல்லது திருநெல்வேலி செல்ல வேண்டும். நான் தூத்தூகுடி செயிண்ட் மேரீஸ் கல்லூரியில் படித்தேன். எங்கள் தெருவில் இருந்து கல்லூரி சென்றது நான் ஒருவள் மட்டுமே. என்னையே ஒரு மாதிரி வினோதமாகத் தான் அப்போதுப் பார்த்தனர்.

இப்போது நிலைமையே வேறு. பக்கத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், நாசரேத் என சுற்றி சுற்றி மகளிர் கல்லூரிகள். அதனால் படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகி உள்ளது. பஜாரில் உள்ள கடைகளில் தொண்ணூறு சதவிகிதம் வேலை செய்கின்றனர். ப்ளஸ் டூ வரை படித்த பெண்கள் எஸ்.டி. டி. பூத், டிராவல்ஸ், மருத்துவமனை, எனவும், டிகிரி வரை படித்தவர்கள் மெட்ரிக்குலேஷன், மனேஜ்மண்ட் பள்ளிகள் எனவும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று பெற்றவர்களின் சு்மையை குறைப்பதால் அவர்களும் தைரியமாக அனுப்புகின்றனர்.

இன்ஜினியரிங் படிக்கும் போது `கம்ப்பஸில் ப்ளேஸ் ’ ஆன ஒருப் பெண், ஐ.டி. ஃபீல்ட் டல் என்பதால் பாங்க் எக்ஸாம் எழுதி செலக்ட் ஆகி ஐ.ஒ .பி யில் சேர்ந்தும் விட்டாள். அதன் பின் டி. சி.எஸ் சில் ஆர்டரும் வந்து சேர்ந்தது. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் பெண்களின் தன்னம்பிக்கையும் மனதைரியமும் நிறைவளிக்கிறது. பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெறும் போது அவர்களை அடிமைப் படுத்தும் வரதட்சணை போன்ற கொடிய விலங்குகள் தானே அகன்று விடும். அந்தநாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

Friday, January 1, 2010

மனோரஞ்சிதத்தின் மணமாக....

சுவர்களை புதிது புதிதாக பூக்கள், படங்கள் அலங்கரிக்கின்றன. பழைய காலண்டர்கள் குப்பையில் எறியப் படுகின்றன. கடந்த வருடத்தின் நனவாகாத கனவுகளும், கவலைகளும் கூட. தொலைவில் வெடிச்சத்தங்கள், புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அனைத்து ஆலயங்களிலும் விசேஷ பூஜைகள், அனைத்து பத்திரிகைகளிலும் புதுவருட ராசிபலன்கள், அனைத்து டிவி சேனல்களிலும் இனிய புத்தாண்டே, என சிறப்பு ஒளிபரப்புகள், பெருநகர்களில் பார்ட்டிகள், விருந்துகள் என வழக்கமான ஆரவாரங்களுடன் புத்தாண்டு மலர்கிறது.

கடந்து வந்த பாதையின் சுவடுகள் மறையத் தொடங்குகின்றன. நிறை, குறைகள் சிந்திக்கவைக்கின்றன. நிறைகள் கண்களுக்கு புலப்படுகின்றன. குறைகள் கருத்துக்கு மட்டுமே தெரிகின்றன. களைய முயல்வோம்.

இதோ முடியும் இவ்வாண்டின் இறுதியில் தான் வலையுலகில் பிரவேசித்தேன்.
தளர்நடை பழகி ஐந்து எட்டுகள் தான் வைத்திருக்கிறேன். அதற்குள், எத்தனை வரவேற்புகள்
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.... இத்தனைக்கும் தகுதியானவள்தானா தெரியவில்லை. ஆனால் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என ந்ம்பிக்கை இருக்கிறது. அன்பின் எல்லை விரிந்து கொண்டேப் போகிறது.
கண்ணுக்கு தென்படாமல், மனதை மயக்கும் மனோரஞ்சித மலரின் நறுமணமாக, முகமறியா, தொலைதூரங்களிலிருந்து வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களின் நேசம் நெகிழச் செய்கிறது. இந்த புத்தாண்டு அனைத்து மனதின் ஆசைமலர்களையும் மலர செய்வதாக அமையட்டும். அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.