கதைகள் கேட்ட அனுபவத்தையும், வாசிப்பானுபவத்தையும் பகிர்ந்து
கொள்ளும் தொடர்பதிவுக்கு `சிதறல்கள்’ தீபா அழைத்திருந்தார். ஒரு
வாரம் சென்னை சென்று விட்டதால், நேற்றுதான் வலைப்பக்கம்
வரவும், அழைப்பினை அறியவும் முடிந்தது.
கதைகள் கேட்ட அனுபவம் பற்றி சொல்வதானால், மாதுஅண்ணன்
முன்பு எழுதியிருந்ததைப் போல் அப்பாவின் அம்மா, செங்குழிஆச்சி
பற்றிதான் முதலில் சொல்ல வேண்டும். மிக நேர்த்தியான விவரணை
யுடன், அவர்கள் கதை சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம்.
மகாபாரத கதையை அதன் கிளை கதைகளோடு அருமையாக சொல்
வார்கள். நாங்கள் ஐந்துபேர் என்பதால் எங்களையே பஞ்சபாண்டவர்
களாய் கற்பனை செய்துகொண்டு உரையாடுவோம். அடுத்து அவர்கள்
வரும் வரை முந்தின கதையே எங்களுக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.
பின்னாட்களில், டிவியில் மகாபாரதம் பார்த்திருந்தாலும், `வியாசர்
விருந்து’ படித்திருந்தாலும், அத்தனையிலும் இனியதாய் இருந்தவை
ஆச்சியின் கதைகளே!
ஆச்சிக்கு அடுத்தபடி, அம்மாவை சொல்லலாம். எங்களுக்கு அவர்கள்
அதிகம் கதை சொன்னதில்லை. எங்கள் குழந்தைகளுக்கு நிறைய கதை
சொல்வார்கள். தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள்,
இன்னும் நிறைய கற்பனை கதைகள் சொல்வார்கள். அவர்களுடைய
`பணியாரமழை’ கதை, பேரன் பேத்திகள் இடையே பிரபலம். கதை
சொல்வதை விட கேட்பது சுகமானது. கதை சொல்வதற்கு நிறைய
கற்பனை திறனும், பொறுமையும், அதுவும் சிறு குழந்தைகள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் சொல்ல நிறையவே பொறுமை அவசியம். நானும்
குழந்தைகளோடு அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் கடைகுட்டி எங்கள் தம்பி. செல்லமாய் குட்டி. அவனைப்
போல, கதாபாதிரத்துக்கு ஏற்றார் போல் குரல் மாற்றி, அத்தனை பாவத்
துடன், வேறு யாராலாவது கதை சொல்ல முடியுமா, என்பது தெரியாது.
அந்த ஏழுநாட்கள், பார்த்து விட்டு வந்து, பாலக்காட்டு மாதவனாக, பாக்ய
ராஜ் குரலில் அதன் ஜோக்ஸை வரிவரியாய் விவரித்தது, `மணல்கயிறு’
கிஷ்மூ குரலில், `பொண்டாட்டியோட சினிமாக்கு போக 1\2 நாள் லீவு
வேணும்’ என்றது, எஸ். வி. சேகர் குரலில் ,` பொய்யை மூட்டை
மூட்டையா கட்டி வச்சிருக்காங்க’ என்றது, என எல்லாமே நினைவில்
இருக்கிறது; அவன் மட்டும் இல்லை.
வாசிப்பானுபவத்தை பொறுத்தமட்டில், சிறு வயதில் நிறைய படிப்பேன்,
பைத்தியமாக, அம்மாவிடம் திட்டு வாங்கும் அளவுக்கு. இது தான் என்ற
இலக்கின்றி, எது கிடைத்தாலும், படித்திருக்கிறேன். முத்து காமிக்ஸில்
தொடங்கி, தமிழ்வாணன், லக்ஷ்மி, அனுராதாரமணன், சிவசங்கரி,
இந்துமதி, வாசந்தி, சாவி, அதன்பின் சாண்டில்யன், கல்கி, சுஜாதா,
தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் என எல்லோருடைய கதைகளையும்
படிப்பேன். தேர்ந்தெடுத்தெல்லாம் படிக்க அப்போது தெரியாது. கல்கி,
சுஜாதா, தி.ஜா. இந்துமதி இவர்களின் எழுத்துக்கள், பின்னாட்களில்
என்னை கவர்ந்தன. மோகமுள் என்னை பாதித்திருக்கிறது. `பொன்னியின்
செல்வனை’ வியந்திருக்கிறேன்; `சிவகாமியின் சபதத்தில்’ உருகி
யிருக்கிறேன். கல்லூரி நாட்களில் தோழி தந்த எண்டமூரிவீரேந்திரநாத்
எழுதிய `துளசிதளத்தை’ எங்களுக்குள் விவாதித்திருக்கிறோம். ருஷ்ய
மொழி பெயர்ப்பு நாவல்கள், அலெக்ஸாந்தர் பூஷ்கின் எழுதிய `காப்டன்
மகள்’ `போர்முனையில் ஒரு பத்திரிக்கை நிருபரின் அனுபவங்கள்’
என கிடைத்ததை எல்லாம் படித்திருக்கிறேன். திருமணமாகி முதல்
குழந்தை பிறக்கும் வரை இந்த வாசிப்பானுபவம் தொடர்ந்தது. அதன்
பின் சுத்தமாக நின்றே போயிற்று எனலாம். அவ்வப்போது கிடைக்கும்
வாராந்தரிகள் தவிர்த்து எதுவுமே வாசிக்கவில்லை. இப்போது, வலை
யுலகில் நுழைந்தபின் வாசிப்பில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
ஆனால் இப்போதைய தலைமுறையினரிடம் வாசிக்கும் ஆர்வம் மிக
குறைந்த அளவே உள்ளது. ஹாரிபாட்டரில் லயிக்கும் அவர்களை, தமிழ்
எழுத்துக்கள் கவர்ந்ததாக தெரியவில்லை. தீபா எழுதியிருப்பதைப் போல்
அவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை நாம் தான் உண்டாக்க வேண்டும்.
என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. நான் அழைக்க
விரும்புவது,
சுந்தரா,
அமைதிச்சாரல்,
முகுந்த் அம்மா.
விரும்பினால் உங்கள் அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து
கொள்ளுங்களேன்