Thursday, March 8, 2012

மகளிர்தின வாழ்த்துக்கள், சாந்தாக்கா...!

. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (அ)சாதாரண பெண்ணைப் பற்றிய பதிவு இது. தெருக்கோடியில் இருந்தது சாந்தாக்காவின் வீடு. எப்போதாவது எதிரெதிரேப் பார்த்தால் புன்னகைத்துக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பரிச்சயம். பக்கத்து ஊருக்கு குடி போன பின், அதிகம் இங்கு வருவதில்லை. ரொம்ப நாளைக்கப்புறம் நேற்று அவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்ததும் அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.


நன்றாக நினைவிருக்கிறது அந்த நாள்.... வருஷந்தோறும், சித்திரைமாதம், கோலாகலமாய் நடக்கும் நடக்கும் கோயில்கொடையின் கடைசிநாள். வியாழக்கிழமை உணவெடுக்கும் நாள். மதியம் கறிச்சாப்பாட்டுக்குப் பின் தெருவில் விளையாட்டு போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, மியுசிக்கல் சேர், நடந்து கொண்டிருந்தன. ஒரே ஆரவாரமும், கூச்சலும் களிப்புமாயிருந்தது. திடீரென யாரோ, ஏதோக் கூச்சலிட, சட்டென அத்தனையும் அடங்கி போனது. ``இசக்கிமுத்து மருந்தக் குடிச்சிட்டானாம், கடற்கரைல பெண்மாக் கெடக்கானாம்’. உடைப்பதற்காக கட்டப் பட்டிருந்த பானை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. `பாவிப்பய, எதுக்கு இப்பிடி செஞ்சான்னு அரற்றிய படியே கடற்கரைக்கு ஓடினர். இசக்கிமுத்து சாந்தாக்காவின் கணவர். 35 வயதுக்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியானவன், சங்கோஜி, யாரிடமும் அதிகம் பேசமாட்டான், பழகமாட்டான். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பான். அப்படிப்பாட்டவன் திடீரென த்ற்கொலை செய்து கொண்டது அதிச்சியாயிருந்தது. காரணம் தெரிந்தபோது,` சீ... இவெனெல்லாம் ஒரு மனுஷனா? இதுக்குப் போயி எவனாவது சாவானா?’ திட்டி தீர்த்தனர். 



இசக்கிமுத்து பக்கத்து ஊரில் சிறிய கடை நடத்தி வந்தான். பெட்டிக்கடையாயுமில்லாத, மளிகைகடையாயுமில்லாத கடை அது .கணவன், மனைவி இருவருமே சேர்ந்து தான் கடையை பார்த்துக் கொண்டனர். கோடைக்காலமாதலால் சர்பத் போன்ற ஒரு குளிர்பானம் தயாரித்து விற்பார்களாம். கலர் பொடி, சீனி, ஐஸ் ஆகியவற்றை கலக்கும் போது அந்த பொடியில் உள்ள ஏதோ ரசாயனம் கைகளுக்கு ஒத்துக் கொள்ளமல், அலர்ஜி ஏற்பட்டு, நாளடைவில் கைவிரல் நகங்கள் எல்லாம் சுருங்கி, விரல்முனைகள் முடங்கி ஒருமாதிரி மொக்கயாய் மாற ஆரம்பத்திருக்கிறது. தனக்கு `பெருவியாதி’ தான் வந்துவிட்டது என பயந்து புலம்பிக்கொண்டிருந்தானாம். இந்த பயத்தில் தான், கட்டிய மனைவியையும், இரண்டு மகன்களையும் நிர்கதியாய் தவிக்க விட்டு போய்விட்டான். ``ஐயோ.. இனி நா என்ன பண்ணுவேன், ரெண்டுபுள்ளைங்களையும் எப்படி காப்பாத்துவேன்..’ கடற்கரை மணலில் கிடந்து புரண்டு சாந்தாக்கா அழுததை தெருவே சொல்லிச் சொல்லி மாய்ந்து போயிற்று.


 சாந்தாக்காவை வைத்து ஆதரிக்கும் அளவுக்கு அவளுடைய அக்காவோ, கணவரது தம்பி, தங்கை குடும்பத்தினரோ வசதியானவர்கள் இல்லை. பெரிய பையனுக்கு 12, 13 வயதிருக்கலாம். அவனை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திக் கொண்டிருந்த கடையை தொடர்ந்து நடத்தலானார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சாந்தாக்காவுக்கும் விரல்களில் அதே நோய் இருந்து தோல் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், அந்த சர்பத் கலப்பதை விட்டு விட்டார்கள்.. கடையையும் பார்த்துக் கொண்டு, லோனுக்கு கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு, வீடுகளுக்கு மாவு அரைத்துக் கொடுக்கவும் தொடங்கினார்கள். பின்னர் அதுவே மாவு பாக்கெட்டுகளாக மாறின. சில வருடங்களில் படித்துக் கொண்டிருந்த சின்ன பையனும், உறவினர் கடை ஒன்றுக்கு வேலைக்குப் போய்விட்டான்.


 பதினைந்து வருட உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றின் பலன், தெருமுனையில் சிதிலமாகும் நிலையிலிருந்த ஓட்டுவீடு, சிறிய காங்கிரீட் வீடாகி, வாடகைக்கு விடப் பட்டிருக்கிறது. கடை நடத்திக்கொண்டிருந்த ஊரிலேயே சொந்தமாக இடம் வாங்கி, அங்கேயும் சொந்தமாக சிறிய வீடு, சொந்த கடை, போக இரண்டு கடைகள் வாடகைக்கும் விட்டுருக்கிறார்கள். வெளிர்நிறத்தில் சாதாரணசேலை, வெறுமையான நெற்றியில் உழைப்பின், அனுபவத்தின் ரேகைகள் பளிச்சிட நடமாடும் சாந்தாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பிரமித்துப் போகிறேன்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருந்தது என்ன...? .