Friday, February 25, 2011

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

பதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....

இதற்கான லிங்க் ஐ என் மகன் அனுப்பியிருந்தான்.


.

Wednesday, February 16, 2011

மனப்பிறழ்வு..

`தொரலிங்கத்துக்கு பைத்தியம் புடிச்சிட்டாம்’ தெரு முழுசும் ஒரே பேச்சாகக் கிடந் தது. தொரலிங்கம் சுபாவத்தில் ஒரு அப்பிராணி. குரலுயர்த்திப் பேசவோ, சண்டை யிடவோ தெரியாது. அப்படிப் பட்டவன் தான், இப்போது திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே யிருக்கிறான். ஒரே சொற்பொழிவுதான். அதுவும் எப்படி, பழைய தமிழ் படங்களில் பேசுவார்களே, அப்படி தூய தமிழில் பேசுகிறான். அவன் மனைவி ராஜம் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். `எந் தலவிதியா இது, நல்லா யிருந்த மனுஷன் இப்படி கோட்டி புடிச்சி பேசுராறே, நா என்ன பண்ணுவேன்’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள்.


தொரலிங்கத்துக்கு அம்மா கிடையாது. சின்ன வயசிலேயே இறந்து போயிட்டாங்க. மாற்றாந்தாயிடம் தான் வளர்ந்தான். கொடுமை என்றில்லாவிட்டாலும் பெரிய ஒட்டுறவோ நெருக்கமோ கிடையாது. இரண்டு தம்பிகள், தங்கையிடமும் அப்படியே. சென்னையில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். அப்போது தான் அவனுக்கு கல்யாணமும் முடிவாகியது. பொண்ணு அதே ஊர், அதே தெரு தான்; நாலைந்து வீடுகள் தள்ளி. சின்ன வயசுலப் பார்த்திருக்கிறான். ஆளு நல்ல அம்சமா தான் இருப்பாள். சந்தோஷத்தில் மிதந்தான்.


அவனுக்கு பேசிவைத்திருந்த ராஜமோ சுபாவத்தில் அவனுக்கு எதிர்மாறானவள். வாயாடி, மகா கர்வி. மாநிறம் தான் என்றாலும் `பளிச்’ ன்னு இருப்பாள். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி என பெரியக் குடும்பம் அவளுடையது. அப்போது இவளுக்கு 18 வயது தான் ஆகியிருந்தது. மாப்பிள்ளை தொரலிங்கத்தை அவளுக்கு அறவே பிடிக்க வில்லை. குள்ளமா இருப்பான். கொஞ்சம் கூன் வேற போடுவான். ரெண்டு கையும் கொஞ்சம் திருகினாப்புல இருக்கும். ஒரு கால் கொஞ்சம் கட்டை என்பதால் நடக்கும் போது ஒரு மாதிரி குதிச்சி குதிச்சி நடக்குற மாதிரி தெரியும். எரிச்சலா வந்தது. அம்மாவிடம் முணங்கிப் பார்த்தாள், மூஞ்சிய காட்டிப் பார்த்தாள். எதுவும் நடக்க வில்லை. வாய மூடிட்டு சும்மாக் கிட, நாம இருக்குற நெலமைல இதவிட நல்ல மாப்ள கெடைக்க மாட்டான். அவனுக்கு என்ன கொறச்சல் ’என மகளை ஒரேயடியாக அடக்கி விட்டாள்.


அத்தனைக் கோபத்தையும் தொரலிங்கத்து கிட்டே காட்டினாள். `உம்மேல ஒரே வீச்சமா வீசுது, கத்தாழ நாத்தம் அடிக்குது, தூரப் போ என விரட்டுவாள். ஒழுங்கா சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியப் பாத்து, `ஆட்டு தாடி மாதிரி இருக்கு. பட்டணத்தில் பூதம் ஜீ.பூம்பா’ என்பாள். அவன ஒரு மனுசனாவே மதிக்க மாட்டாள். பாடாப் படுத்தினாள். அவன் `என்ன ராஜம், கொழம்பு இப்படி யிருக்கு’ என்றால் போதும்; வேற வினையே வேண்டாம். பொழிஞ்சு தள்ளிருவாள். `உம்மூஞ்சிக்கு இது போதும், பேசாம தின்னுங்க’ என்பாள். ஆனாலும் கூட அவள் காலால் இட்ட வேலை களை இவன் தலையால் செய்து முடிப்பான். தண்ணி புடிச்சிக் குடுப்பான், துணி தொவச்சிக் குடுப்பான், சமயத்துல வாசல் பெருக்கி தெளிக்கவும் செய்வான். உள்ளூர்லயே ஒரு காண்ட்ராக்டர் கிட்ட வேலைக்குப் போனான. நல்ல உழைப்பாளி அவன். உடம்புக்கு சரியில்ல ன்னாலும் லீவு போட விட மாட்டாள். `உடம்புக்கு என்ன கொள்ளை, பேசாம ஒரு மாத்திரைய முழுங்கிட்டு வேலைக்கு போற வழியப் பாரு’ என்று விரட்டி விடுவாள். மனைவி அமைந்தது அவனுக்கு ஒரு சாபமாகவே ஆகிப் போனது..


எப்படியோ ரெண்டு பொண்ணுங்க பொறந்துச்சுங்க. மூத்தவ அப்படியே தாயைக் கொண்டிருந்தாள்; தோற்றத்திலும், குணத்திலும். சின்னவ அப்படியே தகப்பன எங்கேன்னு இருந்தாள். இதோ முப்பது வருச குடும்ப வாழ்க்கையும் கழிந்து விட்டது. போன வாரம் தான் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாவது நாளில் இருந்து தான் இவன் இப்படி பேச, சிரிக்க ஆரம்பித்தான்.


கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தவன், இப்போது கம்பீரமாக பேசலானான். முகத்தில் ஜீ.பூம்பா தாடியெல்லாம் இல்லை. மகள் கல்யாணத்திற்காக ஷேவ் செய்திருப்பான் போலும். `ஏய் , ராஜம், இங்கே வா’ கம்பீரமாக அதட்டும் அவனை முறைத்த படியே, `என்ன அதிகாரமெல்லாம் ஒரேயடியா இருக்கு’, என்றவளை மீண்டும் அதட்டினான். `மறு பேச்சு பேசாதே, வா என்றால் வா’ என்றான். எங்கேயோ தேடிப்புடிச்சி சமையல் குறிப்பு புத்தகங்கள் நான்கைந்து வாங்கி வந்தான். `உனக்கு சமையல் செய்யவே தெரிய வில்லை. இதைப் படித்து விட்டு ஒழுங்காக செய்’ என்றவனை பயத்துடன் பார்த்தாள். நடுராத்திரி 12 மணிக்கு எழும்பி உட்கார்ந்து சாமி படத்தை எல்லாம் எடுத்து வைத்து ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜை செய்தான். `ஏ ராஜம், உன்மேல் துர்நாற்றம் வீசுகிறது, போ, போய் குளித்து விட்டு வா’ என்றான். `ஆமா... எனக்கு வேற வேல இல்லை பாரு’ என மறுத்தவளை பளார் பளாரென நான்கைந்து அறைகள் விட்டான். `அய்யய்யோ.... இந்த பாவி என்ன கொல்றானே’ அலறியடித்து பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.


மறுநாள் கலையில் இளைய மகள் அப்பாவை பார்க்க வந்தாள். சர்வாங்கமும் நடுங்கி கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த அம்மாவை பார்க்க இப்போது பாவமா யிருந்தது. தொரலிங்கம் இப்போதும் விறைப்பாக நின்று பேசிக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாசலில் கார் வந்து நின்றது. `எனக்கா பைத்தியம், வாசல்நிலையில் ஓங்கி குத்தியவன், எனக்கொன்றும் பயமில்லை, நான் எங்கு வேண்டுமானாலும் வருவேன், பின்வாசல் வழியாக வர வேண்டுமா அல்லது முன்வாசல் வழியாக வர வேண்டுமா’ வீரவசனம் பேசியபடி காருக்குள் போய் அமர்ந்து கொண்டான். `பாத்தியா, இப்படித்தான் வசனமா பேசிக்கிட்டே இருக்காரு’, மகளிடம் சொன்னவள், `செத்த நேரம் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கெடங்களேன்’ பழக்க தோஷத்தில் மறுபடி அதட்டினாள். `அம்மா, நீங்க கொஞ்சநாள் அப்பாகிட்ட சண்ட போடாம, எதுத்து பேசாம, அன்பா இருங்க, அப்பாக்கு தன்னால சரியாயிரும்’ என்றாள் மகள் அழுதுகொண்டே!.

.

Tuesday, February 8, 2011

ஹீரோக்களின் சாகசங்கள்; பாதிக்கப்படும் பிஞ்சுகள்.

.

திருச்சியிலிருந்து நெல்லைக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தோம். ரெயிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவன், எட்டுஅல்லது ஒன்பது வயதிருக்கும், `துறுதுறு’ வெனஅதீத சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்தான். அடிக்கடி வாசலை நோக்கி செல்ல முற்பட்ட அவனைக் கட்டுப் படுத்த அவன் அன்ன பெரும் பிரயத்தனம் பட வேண்டியிருந்தது. ``ஏம்மா வெளிய எட்டி பாக்க வுட மாட்டேங்குறீங்க?’’ கோபமாக கேட்ட அவனிடம், ``வேண்டாம்ப்பா, வெளிய வுழுந்துருவ’’ என்றாள் அன்னை. ``வுழுந்தா என்ன... ட்ரெய்ன மிஸ் பண்ணுவேன், பின்னாலேயே ஓடி வந்து கடைசிப் பெட்டிய ஜம்ப் பண்ணி புடிச்சி, டாப் ல ஏறி வந்துருவேன்’’ என்றான் வீரமாக. பதறிப் போன அன்னை, அவனுக்கு யதார்தத்தை புரிய வைக்க திணறிப் போகிறாள்.


சிறுவனின் உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போன நான், அதைப் பற்றி என் சகோதரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவள் கூறிய இன்னொரு சம்பவம் மனதை அப்படியே உறைந்துப் போகச் செய்தது. அவள் மகன் படிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காவது படிக்கும் சிறுவன் ஒருவன், தன்னை சினிமா ஹீரோவாக பாவித்துக் கொண்டு அந்த விபரீத செயலில் இறங்கி யிருக்கிறான். மண்ணெண்ணெயை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, கையில் தீக்குச்சியை பற்ற வைத்து, அதில் வாயிலிருந்த எண்ணெயை ஊத முற்பட்டிருக்கிறான். குபீர் குபீரென நெருப்பு பறந்து போகும் என நினைத்தவனின் முகமெங்கும் நெருப்பு பிடித்துக்கொள்ள, இரண்டொரு நாட்கள் உயிருக்கு போராடியவன் பரிதாபமாக இறந்து போனானாம்.


என்னக் கொடுமை இது... இந்த அளவுக்கா குழந்தைகள் மனம், ஹீரோக்களின் சாகசங்களுக்கு அடிமை பட்டுக் கிடக்கிறது? இப்படித்தான், முன்பு `சக்திமான்’ என்ற சீரியல் ஒளிபரப்பான போது இரண்டு குழந்தைகள் `சக்திமான் எங்களை காப்பாற்று’ எனக் கூறியபடி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்ததாக செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து, அந்த சீரியலை தடை செய்ய வேண்டுமெனக் கண்டனங்கள் எழுந்ததும் நினைவிருக்கலாம்.


கட் அவுட், பாலாபிஷேகம் என இளைஞர்கள் தான் இந்த `ஹீரோ வொர்ஷிப்’ புக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள் என நினைத்தால், இப்படி பிஞ்சு நெஞ்சிலும் நஞ்சு கலந்து விட்டிருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஈன்று புறந்தருவதோடு கடன் முடிந்து விடுவதில்லை. பேணிக்காப்பதும், இத்தகைய மாயைகளை புரிய வைப்பதும் பெற்றோரின் கடமை தான்.

.