Sunday, June 27, 2010

பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?

.
நேற்று இணையத்தில் ஏதோ தேடிக் கொண்டிருந்த போது, கீழ்க்கண்ட

கட்டுரை என் கவனத்தை ஈர்த்தது. `பெண்கள் எதை விரும்புகிறார்கள்.?’

என்ற கேள்வியும் அதற்கான பதில்களும் தொகுக்கப் பட்டிருந்தன. பலதரப்

பட்ட பதில்கள்... நகைச்சுவையாய், எள்ளலாய், மனோதத்துவ ரீதியாய்.,

படிக்க மிக ரசனையாய் அமைந்திருந்தன. அதைப் படித்ததும், இதே கேள்வி

நம் பதிவுலக நண்பர்கள், நண்பிகள் முன் வைக்கப் பட்டால், அவர்கள் பதில்

என்னவாயிருக்கும் என்ற ஆர்வமும் எழுந்தது. இதோ கேள்வி உங்கள்

முன்.


பெண்கள் எதை விரும்புகிறார்கள்..?


யாரிடமிருந்து, எப்போது, என்பதெல்லாம் உங்கள் ஊகத்துக்கே விடப்

படுகிறது.

`பெண்ணோடு தோன்றி, பெண்ணோடு வாழ்ந்தும்;

பெண்மனது என்னவென்று புரிய வில்லையோ.?’

எனக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

`ஆழம் எது அய்யா - அந்த பொம்பள மனசு தாய்யா’

என புலம்புவர்களும் இருக்கிறார்கள்.

காலம் காலமாய் பெண் ஒரு புரியாத புதிர், என்றே வர்ணிக்கப் பட்டு

வருகிறாள். அந்தப் புதிரைப் பற்றிய உங்கள் புரிதல் என்னவென்று

தெரியப் படுத்துங்களேன்.
.
.

Friday, June 25, 2010

முழுமை பெற்ற காதலெல்லாம்....

.

மாமாவைத் தேடிக் கொண்டு அவர்களது நண்பர் வந்திருந்தார். சிறுவயது

முதலே அவர்களிருவரும் நெருங்கிய நண்பர்கள். மாமா ஊருக்கு வரும்

போதெல்லாம் தவறாமல் ஆஜராகி விடுவார்கள். மாமாவைப் போலவே

அம்மாவை அக்கா என்றும், அப்பாவை அத்தான் என்றும் அழைப்பார்கள்.

உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து `ரிட்டயர்ட்’ ஆனவர்கள்.அவர்கள் தேடி வரும்போது மாமா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். `நீயும்

கொஞ்சம் சாப்பிடு’ என மாமா உபசரித்தார்கள். முதலில் வேண்டாமென்ற

வர்கள், `கொஞ்சம் சாப்பிடுங்கள்’என நானும் கூற, சரியென மாமாவுடன்

அமார்ந்தார்கள். காலை டிபனுக்கு பொங்கல் செய்திருந்தேன். `கொஞ்சம்

வைமா, என்றவாறே சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்தபின்,

`பொங்கல் நல்லாயிருந்த்து மா,’ என்றவரின் குரல் தழுதழுத்தது. அவரே

தொடர்ந்து,` என் வீட்ல அவளுக்கு பொங்கல்னா ரொம்ப பிடிக்கும். உடம்பு

முடியாம படுத்த பிறகு, சாப்பிட எப்பவும் பொங்கல் தான் வாங்கி கேப்பா.

மொதல்ல ஆளுக்கொரு பொங்கல் வாங்கி சாப்பிடுவோம். பெறகு சாப்பிட

முடியாம, ஒரு பொங்கல் வாங்கி ரெண்டு பேரும் சாப்பிடுவோம்’ என்றார்

கண்களில் நீர் மல்க. அவர்கள் என்னிடம் ஒரு போதும், இப்படி மனம்

விட்டு பேசியதில்லை. மிகவும் அமைதியானவர்கள். அவர்கள் மனைவி

இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்திருந்தன. இழந்து விட்ட அருமை துணை

யின் நினைவுகளை, பொங்கல் கிளறி விட்டது போலும். நான் வியப்புட

னும், நெகிழ்வுடனும் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.என் அம்மாவின் கடைசி நாட்களிலும், அப்பா அம்மாவை மிகவும் அன்புட

னும், பரிவுடனும் கவனித்துக்கொண்டார்கள். `ஜோதிமா, என்று மிகவும்

மென்மையாக கூப்பிடுவார்கள். இளம்வயதில் தன்னை அப்பா சரியாக

கவனிக்கவில்லை, அனுசரணையாய் நடந்து கொள்ளவில்லை என்று

அம்மாவுக்கு நிறைய மனத்தாங்கல்கள் இருந்தன. ஆனால் அதையெல்லாம்

ஈடுகட்டுவது போல், அம்மாவே நெகிழ்ந்து போய்,`அப்பா பாவம். என்னால

ரொம்ப கஷ்ட படுறாங்க’ எனும் அளவுக்கு அப்பா, அம்மாவை கவனித்துக்

கொண்டார்கள்.இளம் வயதின் கோபதாபங்கள், ஆசை நிராசைகள், வாழ்வாதார தேடல்கள்,

ஏக்கங்கள், பிணக்குகள் எல்லாம் தீர்ந்து, அன்பும், அனுசரணையும், ஆதர

வும், தோழமையும் முதுமையில் தான் தோன்றும் போலும். `` முழுமை

பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்’’ என அழகான பாடல்

வரிகள் உண்டு. ஆனால் எனக்கென்னவோ காதல், முழுமை பெறுவதே

முதுமையில் தானோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
.

Saturday, June 19, 2010

கெட்டிக்காரி...!

.
.
ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங்

காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத

குரலும், குணமும். தெருவுக்கே, கிட்டதட்ட ஊருக்கே அவளைப் பற்றித்

தெரியும். கை சாமர்த்தியமும், வாய் சாமர்த்தியமும் ஒருங்கே வாய்க்கப்

பெற்றவள். `கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’ என்ற பழ

மொழிக்கு பெண்பால் உருவம் கொடுத்தால், மிகப் பொருத்தமானவள் நம்

ஜெயாம்மா.காய்கறி வாங்க கடைக்குப் போனால், கடைக்காரன் அசந்த நேரத்தில்

இரண்டு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி இவை, இழுத்து சொருகி

இருக்கும் அவளது முந்தானைக்குள் அடைக்கலமாகி விடும். கறிக்

கடைக்குப் போனால், `அந்த எலும்பப் போடுங்க, இது வெறும்சவ்வுதான,

சேத்துப் போடுங்க, இந்த மொரயீரலப் போடுங்க’ என கால் கிலோவுக்கு

காசுக் கொடுத்துவிட்டு முக்கால் கிலோ தேற்றி விடுவாள். தெருவுக்குள்

வியாபாரம் செய்யவரும் வண்டிக்காரன், கூடைக்காரி யாருமே இவள்

கூப்பிட்டால்,`அடப் போம்மா’ என ஓடிவிடுவார்கள். கொஞ்சமும் அச

ராமல், ஐம்பது ரூபாய் சாமானை அஞ்சு ரூபாய்க்கு கேட்பாள். வண்டிக்

காரன் அசிங்கமாய் திட்டினாலும், அலட்டிக் கொள்ளமாட்டாள். `முடிஞ்சா

குடு, இல்லன்னா போய்ட்டே இரு’ என அடாவடியாய் கத்துவாள்.இப்படித்தான் ஒரு தடவை, வயக்காட்டுக்கு புல்லறுக்கப் போயிருந்

தாள். பெரிய சாக்கு நிறைய புல்லை அறுத்துக் கொண்டுவந்து ஆடு,

மாடு வளர்ப்பவர்களிடம் விற்பது இங்குள்ள சில பெண்களுக்குத் தொழில்.

ஒரு கி.மீ நடந்துபோய் வரப்பில் வளர்திருக்கும் புல்லை அறுத்து வரு

வார்கள். தக்காளி, கத்தரித்தோட்டத்தில், காவல்காரன் அசந்த நேரத்தில்

`கொள்ளை’ வைப்பதும் சிலபெண்கள் செய்வதுண்டு. இதற்கு தலைமை

அனேகமாய் நம் ஜெயாம்மாவாய் தானிருக்கும். காவல்காரனிடம் மாட்டி

னால், சாக்கு, அரிவாள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு விரட்டி

விடுவான். பிறகு காவல்காரன் வீட்டுக்கு நடையாய் நடந்து, கெஞ்சிக்

கூத்தாடி அரிவாளை வாங்கி வருவார்கள். சிலபேருக்கு திரும்ப கிடைக்

கவே கிடைக்காது. கத்தரித்தோட்டத்தில் ஜெயாம்மாவை கையும்களவுமாய்

பிடித்த காவல்காரன், இவள் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்க, இவள்

விடாமல் பதிலுக்கு இழுக்க, காவல்காரன் கையை அரிவாள் பதம்பார்த்து

இரத்தம் கொட்டியது. பயந்துபோன ஜெயாம்மா, பக்கத்தில் கிடந்த பழைய

துணியை வாய்க்கால் தண்ணீரில் நனைத்து, கையில் இறுக கட்டுபோட்டு

விட்டாள். இவள் காவல்கரனின் கையை வெட்டிய வீரப்பிரதாபம், கூடப்

போயிருந்த பெண்கள் மூலம் தெருவுக்குள் பரவியது. அடுத்த நாள் காலை

காவல்காரன், இவள் வாசலில் நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்.

`என்ன பொம்பள இவ, இவளால கைல ஏழு தையல் போட்டிருக்கு. மரி

யாதையா டாக்டர் செலவக் கொடுத்துரு’ எனக் கத்திக் கொண்டிருந்தான்.

இவள் பதிலுக்கு, நீயே வந்து வெட்டிக்கிட்டா நா என்ன செய்வேன், நாந்

தா பாவமுன்னு கட்டுப் போட்டு வுட்டேன். இல்லன்னா அங்கேய வுழுந்து

கெடந்திருப்ப’ எனக் கத்தவும், அவன் பேச முடியாமல் திரும்பி போய்

விட்டான். பக்கத்திலிருந்த பொடியன்,`ஏங்க்கா, சினிமால எல்லாம்

சேலய தான கிழிச்சி கட்டுவாங்க. நீயும் அப்பிடி கட்டியிருந்தா, இவன்

சண்டைக்கு வந்திருக்க மாட்டான்ல’ என்றதும் அவள் கோபமாகி, போல..

போக்கத்த பயலே’ என்று துரத்தி விட்டாள்.


இவள் வீட்டுக்கு பின் வீட்டிலிருந்த `பார்வதியக்கா‘ என்பவரின் கணவர்க்கு

இன்னொரு மனைவியும் இருந்தாள். பார்வதியக்காவின் புருஷன், அந்த

இன்னொருமனைவிக்கு கொடுக்கவென்று 1500ரூபாய் பார்வதிக்காவுக்கு

தெரியாமல் தோட்டத்தில் ஒளித்து வைத்திருந்தார். அது நம் ஜெயாம்மா

வின் கொள்ளிகண்ணில் தானா படவேண்டும். ரெண்டு சொத்தை கத்தரிக்

காவுக்கே கையை நீட்டுபவள், முள்ளங்கி பத்தை போல ரூபாய் நோட்டு

கள்... விடுவாளா..? பணத்தை பறிகொடுத்தவன், மனைவியிடம் கூற,

பார்வதியக்காவுக்கு புரிந்து விட்டது, இது ஜெயம்மாவின் வேலை தான்

என்று. அவள் ஜெயாம்மாவின் வீட்டுபக்கத்தில் நின்று,` எடுத்தவ நாசமா

போவா, வெளங்க மாட்டா’ என வாயில் வந்தபடி சாபம் விட்டுப்

பார்த்தாள். இரண்டு நாள் திட்டி தீர்த்தபின், மூன்றாவதுநாள், இவள்

காதுபட, `எடுத்தவள சும்மா வுடமாட்டேன். இன்னைக்கு ஏரலுக்கு

போறேன், முட்டைய ஓதி வைக்க போறேன். அதுக்குபெறவு இருக்கு,

என மிரட்டுகிற தொனியில் சொல்லிக் கொண்டிருந்தாள். கேட்டுக் கொண்

டிருந்தவள், நடுங்கிபோய், பார்வதியக்காவின் மகளை கூப்பிட்டு,`எதுக்

கும் போறதுக்கு முன்னால அடுப்பாங்கரைல தேடி பாக்கச் சொல்லு, கை

மறதியா வச்சிருப்பா’ என்று சொல்லியனுப்பியிருக்கிறாள். மகள் தாயிடம்

விஷ்யத்தைக் கூற, அவளும் அடுப்பாங்கரையில் பார்க்க, அறையெங்கும்

ரூபாய் நோட்டுக்கள் இறைந்து கிடந்தன. யாரோ ஜன்னல் வழியாக வீசி

எறிந்திருக்கிறார்கள். இது ஜெயம்மாவின் வேலைதானென்பது புரிந்துபோக,

விஷயம் தெருமுழுக்க பரவியது. ஜெயம்மாவின் தலையைப் பார்த்ததும்,

பெண்கள் கூடிக்கூடி கிசுகிசுக்க, அவமானம் தாங்காமல் வீட்டுக்குள்ளேயே

அடைந்து கிடந்தாள்.


பார்வதியக்காவைக் கூப்பிட்டு, `முட்டை ஓதி வைக்கிறதுன்னா என்ன’

என்று கேட்டேன். `அதெல்லாம் ஒண்ணுந் தெரியாது. மனசாட்சிக்கு தா

பயப்பட மாட்டேங்குறா. மந்திரத்துக்காவது பயப் படுறாளான்னு பாத்தேன்,

மந்திரம் பலிச்சிட்டு’ என்றாள் நமுட்டு சிரிப்புடன். நானும் சேர்ந்து

சிரித்தேன்...
.
.

Monday, June 14, 2010

வியப்பூட்டும் விந்தைகள்...!

.
1. நம் கண்கள் பிறந்ததிலிருந்து ஒரேஅளவில் தான் இருக்கின்றன. ஆனால்,

நம் காதுகள், மூக்கு, இவைகள் வளர்வதை நிறுத்துவதே இல்லை.

2. வெங்காயம் உரிக்கும் போது கண்களில் நீர் வழிவது இயற்கை. ஆனால்,

சூயிங்கம் மென்றுகொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் நீர்

வழியாதாம். அழுமூஞ்சி பெண்கள் முயற்சித்து பார்க்கலாம்.

3. உலகின் 97% பேர் புதுப் பேனா வாங்கியவுடன் எழுதிப் பார்ப்பது தம்

பெயரைத்தான்.

4. பூனை, ஒட்டகம், ஒட்டகசிவிங்கி ஆகியவை நடக்குமபோது வலதுபாதம்

வலதுபாதம், இடது பாதம், இடது பாதம் என்றே நடக்கும். லெஃப்ட்,

ரைட் என்ற `மார்ச்பாஸ்ட்’ கிடையாது.

5. ஹெட்ஃபோன் உபயோகிப்பவர் கவனத்துக்கு;- ஒருமணி நேரத்துக்கு

மேலாக ஹெட்ஃபோன் அணிந்து கொண்டிருந்தால் காதுகளில்

உண்டாகும் பாக்டீரீயா 700 மடங்கு அதிகரிக்குமாம்.

6. சூயிங்கம்மை விழுங்கினால் குடலுக்குள் ஒட்டிக் கொண்டுவிடும் என்பது

பொதுவான நம்பிக்கை. ஆனால் உண்மையில் அது கழிவு மூலம் வெளி

யேறிவிடும்.

7. லியர்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதிக் கொண்டே, மற்றொரு

கையால் வரையும் வல்லமை படைத்தவர்.

8. கிளி, முயல் ஆகியவை தலையை திருப்பாமலே பின்புறம் பார்க்கும்

வல்லமை படைத்தவை.

9. month, silver, purple இந்த மூன்று வார்த்தைகளுக்கும் rhyming ஆன

அங்கில வார்த்தைகள் கிடையாது.

10. சஹாரா பாலைவனத்தில் 1979 ல் பனிப்பொழிவு ஏற்பட்டதாம்.
.
.

Tuesday, June 8, 2010

பதின்மத்தின் வாயிலில்...

.
அந்த வீட்டின் மாடியில் இருந்த சிட்அவுட்டில், மூன்று, நான்கு சிறுமிகள்

12, 13 வயது நிரம்பியவர்கள், கோடைவிடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு

வந்திருந்தனர். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும், அந்த இடத்தையே கல

கலப்பாக்கிக் கொண்டிருந்தனர். நகரத்தில் இருந்து வந்த அவர்களுக்கு இந்த

சூழல் பிடித்து விட்டது போலும், மிக உற்சாகமாய் விளையாடிக் கொண்டி

ருந்தன, அந்த பதின்ம அரும்புகள்.நான்கைந்து நாட்கள் ஆகியிருக்கும், அந்த சிட்அவுட் மறுபடி அமைதியாகி

விட்டது. ஊருக்கு போய் விட்டிருப்பார்கள் என நினைத்தோம். ஆனால்

விஷயம் வேறாக இருந்தது.


இவர்களது உற்சாகமான விளையாடல்கள், அங்கிருந்த நான்கைந்துவிடலை

சிறுவர்களை, ( அவர்களுக்கும் 15 வயதுக்குள் தான் இருக்கும் ) ஈர்த்திருக்

கிறது. வழக்கமான கேலி, சீண்டலில் தொடங்கி, பின்னர் அதுவேஅதிகமாகி

ஜாடையில் பேச ஆரம்பித்து இருக்கின்றனர். அதில் ஒருவன் தன்மொபைல்

போனை, அவர்கள் வீட்டு சன்ஷேடில், தூக்கி போட, இவர்கள் சன்ஷேடில்

இறங்கி போனை எடுத்து பேசியிருக்கின்றனர். அவர்கள் வீட்டு போன் நம்பர்

அட்ரஸ், எல்லாம், அந்த பையன்கள் விசாரித்து இருக்கின்றனர். அதற்குள்

வீட்டிலிருந்த உறவினர், சந்தேகப் பட்டு கவனித்ததில் இவர்களது விளயாட்

டுகள் தெரியவர, கண்டித்து, அவரவர் ஊருக்கு அனுப்பியுள்ளார். அந்தம்மா

தாங்கமுடியாமல், `பச்சபுள்ளைகன் னு நெனச்சோம், இப்பிடி பண்ணிடிச்சு

களே‘ என அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.பதின்மங்களில் எதிர்பாலின ஈர்ப்பு சகஜம் தானென்றாலும், 12, 13 வயதில்

செல்போன் பரிமாறிக் கொள்வது, அதுவும் நான்கேநாள் பழக்கத்தில் என்பது

மிக அதிகமாகத் தான் பட்டது. படிக்க வேண்டிய வயதில், இப்படி கவனம்

சிதறும் போது, இவர்களது எதிகாலம் எப்படியிருக்கும் என்ற கவலையும்

எழுகிறது.
.
.