Tuesday, March 22, 2011

விளையாட்டு அம்மன்...

.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது? குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா?’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி? மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா? என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.


L மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.


டாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே! பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.


மறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா? பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.நாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.


`நான் தந்த சிரப்பக் குடுத்தியா ? கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது? இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.


பார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?’ கத்தினாள் இவள்.


ஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவது மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.

.

13 comments:

தமிழ் உதயம் said...

கடவுள் நம்பிக்கை வேறு. குழந்தைகளுக்கான வைத்தியங்கள் வேறு. குழப்பி கொள்ளக்கூடாது

ஹுஸைனம்மா said...

குழந்தைகளுக்கென்று வரும்போது, யார் சொல்வதைக் கேட்பது, எதை விடுவது என்று பயங்கரமாகக் குழம்பும். குழந்தை நல்ல படி ஆனது சந்தோஷம். உண்மைக் கதையா இது?

ஹேமா said...

எவ்வளவு கஸ்டமான விஷயம்.இன்னும் புரியாமலே இருக்காங்க !

Rathnavel said...

இப்போது ஊசி போடுகிறார்கள்.
காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும்.
வாழ்த்துக்கள்.

ஓலை said...

Nalla pathivunga.

சுந்தரா said...

அவசியமான பதிவு அம்பிகா.

ஆளுக்கொரு வைத்தியம் சொல்லி, கடைசியில் கஷ்டப்படுவது குழந்தையும் பெற்றோரும்தான்.

சே.குமார் said...

அவசியமான பதிவு.

சங்கவி said...

அனைவரும் அறிய வேண்டிய பதிவு...

சந்தனமுல்லை said...

என்ன சொல்வது!!! :-/

ராமலக்ஷ்மி said...

மிக அவசியமான பகிர்வு அம்பிகா.

Geetha6 said...

good post

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல விழிப்புணர்வுப்பதிவு

போளூர் தயாநிதி said...

அனைவரும் அறிய வேண்டிய பதிவு...