Monday, December 28, 2009

அம்மாவின் கொலுசு


அம்மா...! பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும். அம்மாவுக்கு அழகான முடி, கருகருவென, சுருட்டை சுருட்டையாய், அடர்த்தியாய் ..., எண்ணெய் தேய்த்து அழுந்த வாரி இருப்பார்கள். காலை எழூந்ததுமே முகம்கழுவி, தலைசீவி, பொட்டு வைத்து, அம்மாவின் முதல்வேலையே இதுவாகத்தான் இருக்கும். அம்மாவுக்கு இந்த பழக்கம் அவர்கள் அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கும் என நினைக்கிறேன். அம்மா பிறந்தபின் தான் தாத்தாவுக்கு `தொட்டதெல்லாம் துலங்கியதாம்’. வீடு, வயல், ரைஸ்மில், என சொத்துக்கள் நிறைந்ததாம். ``வெள்ளிக்கிழமையுமா எனக்கு மஹாலஷ்மியே பிறந்திருக்கிறாள்’’ என்று சொல்வதோடு, தாத்தா வெளியே கிளம்பும்போதுஅம்மாவின் முகத்தை பார்த்துவிட்டு தான் போவார்களாம். ` அம்மா ஜோதி ’என் தாத்தா கூப்பிடும் போது அம்மா அழகாய் தலைசீவி பூ வைத்து முன்னால் நிற்கவேண்டுமாம். அம்மாவுக்கு நகைகள் அணிந்து கொள்வதிலும் நாட்டமுண்டு. நிறைய நகைகள் போட்டுக்கொள்வார்கள். காலில் பட்டையாக கொலுசு, இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அண்ந்திருப்பார்கள். ஊரில் சிறு பெண்கள் அம்மாவை `கொலுசு பாட்டி ‘ என்றே அழைப்பதுண்டு. அம்மாவுக்கும் அதில் பெருமையே! கீழே இருக்கும் அம்மாவின் இந்தபுகைப்படம் எடுக்கும்போது அம்மாவுக்கு
கிட்டதட்ட எழுபது வயதிருக்கும்.




அம்மாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு `டயாலி்ஸிஸ்’ க்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார்கள். அப்போது நர்ஸ் அம்மாவின் நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்தார்கள். டயாலிஸிஸ் முடிந்து வந்தபின் அம்மா மற்ற நகைகளை எல்லாம் அணிந்து கொண்டார்கள். கொலுசை மட்டும் என்னிடம் கொடுத்து, `ரொம்ப அறுந்து போச்சுமா; இத மாத்தி நீ போட்ருக்கமாதிரி சின்னதா வாங்கித் தாரியா’ எனக்கேட்டார்கள். `உடம்பு சரியாகி வீட்டுக்கு வாங்கம்மா; வாங்குவோம்’ என்றேன். `காலப் பாரு, மொட்டையா அசிங்கமா இருக்கு. இப்பவே வாங்கித்தா’ என்றார்கள், குழந்தையாய். நாம் வளரும்வரை பெரியவர்களாய் நம்மை அதட்டிக் கொண்டிருப்பவர்கள், நாம் வளர்ந்தபின் குழந்தைகளாகி விடுகிறார்கள். நம் அன்பை எதிர்பார்த்தலில் இருந்து சின்னசின்ன கோபம், பிடிவாதம் என பல விஷயங்களில் சிறாராகி விடுகிறார்கள். குழந்தையாய் கெஞ்சிய அம்மாவிடம் சரியென்றேன். ஆனால் மறந்து விட்டேன்.மறுநாளும் கேட்டார்கள். சரியென்று வீட்டுக்குப் போனவள்; மருத்துவமனைக்கும்
வீட்டுக்கும் அலைந்ததில் மறுபடியும் மறந்துவிட்டேன். இரவு மருத்துவமனை வந்தபோது, அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாவை கவனித்துக் கொள்ளும் நர்ஸ்,`` அக்கா அம்மாவுக்கு கொலுசு வாங்கிட்டு வந்தீங்களா? அம்மா எங்க பாப்பா எனக்கு கொலுசு வாங்கிட்டு வருவான்னு சொல்லிகிட்டு இருந்தாங்களே’’ என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. விறுவிறுவென வெளியேப் போய், பக்கத்தில் இருந்த நகைக் கடையில் அம்மா ஆசை பட்டதுபோல் கொலுசு வாங்கி வ்ந்தேன்.
நான் வந்து போது அம்மா ந்ன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா வின் காலில் கொலுசை அணிவித்தேன். எங்களுக்காக இந்த கால்கள்தான் எவ்வளவு நடந்திருக்கும். நினைக்கும்போதே கண்ணீர் வந்தது.ஒருமுறை என் மகன சிறுவனாயிருந்த போது காய்ச்சல் வந்து ரொம்ப முடியாமல் போய் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.
விஷயம் அறிந்து அம்மா பதறியடித்து கிளம்ப, அந்நேரத்துக்கு செங்குழியிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் இல்லை. மொத்தமே ஒரு நாளைக்கு மூன்று முறை தான் பஸ் உண்டு. பக்கத்து ஊரான சோனகன்விளை சென்றால் பஸ் இருக்கும் என நடந்து வந்தவர்களுக்கு அங்கேயும் பஸ் கிடைக்கவில்லை. அப்படியே, நடந்தே அம்மன்புரம், மூலக்கரை என ஆறுமுகனேரி வரை, கிட்டதட்ட 14 கி.மீ நடந்தே வந்திருக்கிறார்கள். மத்தியானவேளை, மூச்சுவாங்க வந்தவர்களைப் பார்த்து அதிர்ந்துப் போய் ,` என்னம்மா’ என்றேன். `ஒண்ணுமில்ல, புள்ளைக்கு எப்படியிருக்கு? ‘ என்றார்கள். பிறகு விஷயம் தெரிந்து, வருத்ததுடன், `ஏம்மா இப்படி வந்தீங்க?’ என்றேன். `புள்ளைக்கு இப்டி இருக்கும்போது என்னால எப்டீமா அங்க இருக்க முடியும்?’ என்றார்கள். அம்மா... அம்மா...
இரவு நானும், மாது அண்ணாவும் ,அம்மா கூட மருத்துவமனையில் இருப்போம். அதிகாலை நான் வீடு வந்து விட்டேன். திரும்ப மருத்துவமனை வந்த போது அம்மா எழும்பி உட்கார்ந்துஇருந்தார்கள். எப்டீம்மா இருக்கீங்க? அருகில் அமர்ந்தேன். அம்மா பாதங்கள்தெரியும்படி சேலையைத் தூக்கி கால்களை அழகு பார்த்தபடி,`` கொலுசு நல்லாயிருக்கும்மா, எப்போ போட்டுவுட்டே’’ . அம்மாவின் முகமெல்லாம் அப்படி ஒரு சந்தோஷம்.. அன்று இரவே [வியாழகிழமை] அம்மாவுக்கு மறுபடி காய்ச்சல், குறையவே இல்லை. அடுத்தநாள் அம்மாவுக்கு அரைகுறையாக நினைவிருந்தது. மறுநாள் அம்மாவின் உடல்நிலை மிகமோசமாகி `கோமா’ வுக்கு சென்று விட்டார்கள். அதன்பின் வந்தவைக் கொடுமையான நாட்கள். அம்மா எந்த வலியும் தெரியாமல் படுத்திருக்க, அத்தனை வலிகளையும் தாங்கி நாங்கள் தவித்திருந்தோம். ஒரு நிரந்தர பிரிவுக்கு அம்மா எங்களை சிறிது சிறிதாக எங்களை ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தார்கள். சரியாக பதினைந்தே நாட்கள், அம்மா எங்களை நிரந்தரமாக பிரிந்துசென்றார்கள்.
அடுத்தநாள், அப்பா என்னிடம் அம்மாவின் நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். கண்ணீரோடு வாங்கினேன். அப்பாவே தொடர்ந்து,தங்கம் எதுவும் போடக்கூடாது என்பதால், கொலுசு, மெட்டியை மட்டும் விட்டுவிட்டார்கள்.’’ என்றார்கள்.
மெய் சிலிர்த்தது எனக்கு. நான் கடைசியாக வாங்கிக் கொடுத்த கொலுசை அம்மா தன்னுடன்
எடுத்துசென்றார்களா? இருக்கும்வரை தன் பெண்ணுக்கு சீர் கொடுத்த என் அன்புஅம்மா, தான் போகும்போது கொண்டு செல்ல கடைசிசீர் என்னிடம் வாங்கிச் சென்றார்களோ, எனத் தோன்றியது.
இன்று தெய்வமாகிவிட்ட என் அருமைஅம்மாவின் இரண்டாவது நினைவுநாள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் சொந்தஊர் செல்கிறோம்...

Thursday, December 24, 2009

நானே...! நானா...!


சிறு வயதில்

கோலங்கள் போடும்போது,

மணிகளால் பர்ஸ் செய்யும்போது,

துணிகளில் எம்ப்ராய்டரி செய்யும்போது

அம்மா சொல்வாங்க பெருமையாக

``எம்பொண்ணு ரொம்ப புத்திசாலி’’

சந்தோஷமாக இருந்தது.

* * * * * *


கம்ப்யூட்டரில் சந்தேகம்,

மகனிடம் கேட்டேன்.

வேகமாய் விளக்கினான்.

விளங்காமல் விழித்தேன்.

மகன் சொன்னான், கேலியாக,

``நீங்க ரொம்ப மண்டூவா இருக்கீங்கம்மா’’

இதுவும் சந்தோஷமாகத் தானிருக்கிறது.

* * * * * * *

Monday, December 21, 2009

ஒரு முட்டையும், இரண்டு சிகரெட்டும்.


தட்டில் சோறு போட்டு குழம்பு ஊற்றி மகனிடம் கொடுத்து, ``சாப்டுட்டிரு, ஆம்லெட் போட்டு கொண்டாறேன்’’ என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள் ருக்கு. முட்டைக்கல்லை ஸ்டவ்வில் வைத்தவள், வெட்டிவைத்திருந்த வெங்காயத்தை கிண்ணத்தில் போட்டாள். முட்டையை எடுத்து, கையிலிருந்த கரண்டியின் நுனியால் இலேசாக தட்டினாள். உடையவில்லை. மறுபடியும் தட்டினாள். அப்போதும் உடையாமலிருக்கவே எரிச்சல் வந்தது. ``இதென்ன, சனியன்! ஏவல் கீவல் வச்சிட்டாங்களா?’’ அங்கலாய்த்தவாறே மறுபடியும் உடைத்து பார்த்தாள். கோபத்தில் மகனிடம் கத்தினாள்,`` என்ன முட்ட வாங்கிட்டு வந்த? ஒடஞ்சு தொலைய மாட்டேங்குது. கூமுட்டையா இருக்குமோ, ஒடஞ்சா வீடெல்லாம் நாறிப் போயிரும். கடைல குடுத்து மாத்திட்டு வா!’’ சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனை கடைக்கு விரட்டினாள். ``என்னம்மா, சாப்டவுடாம, ‘’ எரிச்சலுடன் முணங்கியவாறே கடைக்கு போனான்.
                           `` அண்ணே இந்த முட்ட சரியில்ல. ஒடைய மாட்டேங்குது. வேற முட்ட தாங்க,’’ முட்டையை கடைக்காரனிடம் நீட்டினான். கையில் வாங்கியவன் , ``நல்லாத்தான இருக்கு’’ என்றவாறே உடைத்துப் பார்த்தான். மறுபடியும் கொஞ்சம் வேகமாய்... முட்டையின் மேல் ஓடு மட்டும் இலேசாக நொறுங்கி வந்தது. உற்றுப் பார்த்தவன், `` அட, அவிச்ச முட்ட !!!.... அவிச்சமுட்ட எப்டி கடைக்கு வந்துச்சி?.....’’ யோசித்தான்.... திடீரென நினைவு வந்தவனாக பக்கத்தில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்த பையனின் கையை எட்டிப் பிடித்தான். ``ஏல ! கொஞ்சமுன்னால நீதான முட்டைய வேணாமுன்னு குடுத்துட்டு ரெண்டு சிகரெட்டு வாங்கிட்டுப் போன; அதுக்குள்ள திருப்பியும் சிகரெட்டு வாங்க வந்துட்டியா?. இரு, இரு, ஒங்கம்மாவக் கூப்டுறேன்... ஏ.......பாலாக்கா..... பாலாக்கா......’’ கத்தினான். பக்கத்து வீட்டில் இருந்த பாலாக்கா வெளியே எட்டி பார்த்தவள், `` எம்புள்ளய எதுக்கு புடிச்சு வச்சிருக்க’’ இவனிடமே சண்டைக்கு வந்தாள்.
                           ``ஒம் புள்ள செஞ்ச வேலயப்பாரு.... வீட்ல அவிச்சி வச்சிருந்த முட்டய எங்கிட்ட குடுத்து ரெண்டு சிகரெட்டு வாங்கிட்டுப் போயிட்டான்..’’ இதற்குள் பையன் கையை உதறி விட்டு ஓடிவிட்டான்.
                           ``அடப்பாவி..... திங்க வச்சிருந்த முட்டய குடுத்து சிகரெட்டு வாங்கி குடிச்சிருக்கியே....! நீ உருப்படுவியா.....? ஒன்னயவும் ஒருப் புள்ளனு பெத்தேம்பாரு.‘’ பாலாக்கா துரத்துகிறாள்....

Tuesday, December 15, 2009

ஒரு முடிவிருந்தால், அதில் தெளிவிருந்தால்......


குபேரேந்திரராஜ். இது அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர். ஆனால் அது நாளடைவில் மருவி, திரிந்து கோவிந்தராஜ் ஆகிவிட்டது. பெயரில் இருந்த குபேரனும், இந்திரனும் காணாமல் போய்விட்டதாலோ என்னவோ அவர் `கோவிந்தா’ராஜ் , மன்னிக்கவும், கோவிந்தராஜ் ஆகி விட்டார். ஒரு சிறு ஓட்டுவீடும், கொஞ்சம் வயலும், ஒரு சிறிய பனந்திரடும் அவரது பூர்வீக சொத்துக்கள்.

                            `ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’, என்பார்கள். ஆனால் இவரோ தனது ஆஸ்தியை ஆள ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக வரிசையாக ஐந்து பெண்களை பெற்றார். ` ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ’, என்பார்கள். இவருக்குத்தான் அந்த கவலையில்லையே. ஆனால் இவரது மனைவிதான் ஐந்தாவதும் பெண்ணாக பிறந்துவிட்டதே என்று மருத்துவமனையில் வைத்து மிகவும் அழுததாக சொன்னார்கள். ஆனால் அதுவும் பிரசவவைராக்கியம் தான் என்பது அடுத்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது. ஆறாதாக ஒரு ஆண்குழந்தை பிறந்து அவரது வாரிசு ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தது.

                           இவரது ஐந்தாவது மகள் வசந்தி. இவள் தான் நமது கதாநாயகி. இவள் எட்டாவது படிக்கும் போதே மூத்த அக்காவுக்கு திருமணமாகி விட்டது. +2 படிக்கும்போது, இரண்டாவது அக்கா. மற்ற இருவரும் ஒரு ஜவுளிக்கடையில் 800 ரூ சம்பளத்துக்கு வேலை செய்தார்கள். நம் வசந்திக்கு மட்டும் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. பக்கத்தில் இருந்த தமிழ்மீடியம் பள்ளியில் தான் படித்தாள். +2 வில் 1043 மதிப்பெண்கள் எடுத்தும் அவளை, பெற்றோர் மேலே படிக்க அனுமதிக்கவில்லை. விஷயம் அறிந்த நான் அவள் அம்மாவிடம் பேசினேன். ``அவளுக்கு கண்டிப்பா இன்ஜினியங் கிடைக்கும். படிப்பு செலவுக்கு பேங்க் ல லோன் கொடுக்குறாங்க. உங்களுக்கு அதிக செலவு இருக்காது, படிக்கவைங்க, அக்கா’’ என்றேன். அவங்களோ,`` எப்பூ, சுசி ( இரண்டாவது மகள் ) கல்யாணகடனே இன்னும் அடைக்கல. அதுக்குள்ள அவ பேறுகாலத்துக்கு வந்துருக்கா. அதையும் பாக்கணும். லோன் கெடச்சாலும் போகவர செலவு, துணிமணி இன்னும் எவ்ளோ இருக்கு. ஆம்புள புள்ளயவே படிக்க வைக்கல. இவளுக்கு ஆச வேறா. வெரலுக்கு தக்க தா வீங்கனும்’’ னு ஒரேயடியாக இரண்டு பேர் வாயையும் அடைத்து விட்டார்கள். நீர் நிறைந்த கண்களோடு தலைகுனிந்து நின்ற அவளைப் பார்க்கவே பாவமாயிருந்தது.

                            சில மாதங்கள் கழித்து அவள் அம்மா என்னிடம்,`` பக்கத்துல இருக்க கடைக்கு வேலைக்கு போகமாட்டேங்குறா. கொஞ்சம் சொல்லுப்பூ’’ என்றார்கள். அவளிடம் கேட்டேன். அவள், `` இப்போ வேலைக்கு போயிட்டா பெறவு படிக்கவே வைக்கமாட்டாங்க. நா கண்டிப்பா படிப்பேன்’’ என்றாள் உறுதியாக. அந்த சின்னப் பெண்ணின் உறுதி ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சந்தோஷமாக ஓடி வந்தாள்.அக்கா, கவர்ன்மெண்ட் நர்சிங் ட்ரைனிங் கோர்ஸ் ல சேர எழுதிப்போட்டிருந்தேன், அப்ளிகேஷன் வந்திருக்கு’’ என்றாள். ``ஃபில் அப் பண்ணி அனுப்புமா, உனக்கு கண்டிப்பா கிடைக்கும் ‘’ , என்றேன்.

                           பக்கத்தில் பாளையங்கோட்டையிலேயே கிடைத்தது. கவர்ன்மெண்ட் கோர்ஸ் என்பதாலும், பக்கத்தில் என்பதாலும் அதிக செலவில்லை. அக்காவும் பிரசவம் முடிந்து ஊருக்கு போய்விட்டாள். இவள் பிடிவாதத்தின் காரணமாக, வேறு வழியின்றி அனுமதித்தார்கள். சந்தோஷமாக படித்தாள். மூன்று வருட கோர்ஸ் போன வருடம் முடிந்தது. ஒரு வருடம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் 4000ரூ சம்பளத்தில் வேலை செய்தாள். இரண்டு மாதங்களுக்கு முன் அரசாங்கவேலை கிடைத்தது., அதுவும் பக்கத்து ஊரிலேயே போஸ்டிங்.

                           அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவரிடம் பேசும்போது கூறினார்கள்,`` எங்களுக்கெல்லாம் தலை நரைத்த பிறகு அரசாங்க வேலை கிடைத்தது. இந்த பொண்ணுக எல்லாம் குடுத்து வச்சதுக. 21, 22 வயசுல அரசாங்க வேலை. ட்ரைனிங் முடிச்சதும் 18000 ரூ க்கு மேல சம்பளம். 38 வருஷம் சர்வீஸ் வேற’’ , என்றார் சற்று பொறாமையோடு. எனக்கோ வசந்தியை நினைத்து பெருமையாக இருந்தது.

Friday, December 11, 2009

தலைப்பைத்தேடி...

நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதப் போகிறேன் என்றதும் என் மகன்கள் இருவருக்கும் நான் காமடிபீஸ் ஆகிவிட்டேன். என் புத்திரசிகாமணிகள் செய்த அலம்பல்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இதற்கெல்லாம் அசந்து விடுவோமா என்ன?. சிறுவயதில் அண்ணன்கள், தம்பியோடு சரிக்கு சரியாக சண்டை போட்டது இப்போது பையன்களோடு தொடர்கிறது.

கண்டிப்பாக எழுதியே தீர்வதென்று முடிவானதும், தலைப்பு தேடும் படலம் ஆரம்பமானது. ‘அம்பிகாவின் அவலங்கள்’, `ஆந்தையார் அலறுகிறார்’, இவை என் பெரிய மகன் முன்மொழிந்த தலைப்புகள். `ஆண்டிபண்டாரம் பாடுகிறார்’ னு வைங்கம்மா, சூப்பரா இருக்கும் இது சின்னவர். நம்ம அம்மா ரொம்ப நல்லவங்க, எவ்வளவு கேலி பண்ணாலும் தாங்குவாங்க என்று பாராட்டு வேறு. நானே யோசித்து வைத்துக் கொள்கிறேன். உங்க வேலைய பாருங்க என்று இருவரையும் விரட்டிவிட்டேன்.

நானே யோசித்து, `சொல்லத்தான் நினைக்கிறேன்’, னு வைக்கப் போகிறேன் என்றேன். நினைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எதையும் சொல்லிவிடாதீர்கள், என்று மறுபடியும் ஆரம்பித்தனர். அதென்னவோ தெரியவில்லை, எதற்கெடுத்தலும் அடித்துக் கொள்ளும் இவர்கள் இருவரும் என்னை கேலி செய்யும்போது மட்டும் உலக மகா ஒற்றுமையாகி விடுவார்கள். ஒரு வழியாக, `சரி ஏதோ எழுதிக்கோங்க, ஆனா மாமா பேர கெடுத்திராதீங்க’என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினர்.

இங்கே பலரது எழுத்துக்களை படிக்கும் போது, நாம் புதுசா என்ன எழுதிவிடப் போகிறோம் என்ற பயம் வருகிறது. ஆனால் இந்த அழகான வலையுலகில் நானும் ஓர் அங்கமாகும் ஆசையுடன் தொடர்கிறேன்.........