Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Tuesday, December 21, 2010

மார்கழி நினைவுகள்.

.
மார்கழி மாதம் என்றதும் சட்டென நினைவுக்கு வருபவை, இதமான பனி,

விடிகாலை கோலங்கள், திருப்பாவை பாடல்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு

கொண்டாட்டங்கள்...; இவற்றோடு எனக்கு மார்கழி பஜனையும் சேர்ந்தே

நினைவுக்கு வரும். அம்மாவுக்கு இந்த பஜனை, பாடல்கள் இவற்றில்

அதிக ஆர்வமிருந்ததால் எங்களை பஜனைக்கு அனுப்பி வைத்தார்கள்.




அதிகாலை நான்குமணிக்கே கோயிலின் ஒலிப்பெருக்கிகள் எல்லோரையும்

எழுப்பி விட்டுவிடும். அம்மாவும் எழும்பி, எங்களுக்கு வெந்நீர் வைத்து,

குளிக்க செய்து, அனுப்பி வைப்பார்கள். அதன்பின் தெருவாசலில் கோலம்

போடுவார்கள். முற்றத்தையே அடைக்கும் பெரிய பெரிய கோலங்கள்.

இப்போது நானும் கோலம் போடுகிறேன், சின்னதா பேருக்கு ஒரு கோலம்..

பொங்கல், கோயில்கொடை என்றால் மட்டுமே பெரிய கோலம். அம்மா

வின் சுறுசுறுப்பு இப்போதும் ஆச்சர்யப் படுத்துகிறது.



மாதுஅண்ணன், நான், குட்டி மூன்று பேரும் பஜனைக்கு போவோம்.

விஜியண்ணன் கூட சில நாட்கள் வந்திருக்கிறான். எங்கள் தெருவின்

முனையில் தான் பஜனைக்கோயில் இருந்தது.எங்களைப் போல நிறைய

சிறுவர், சிறுமியர் வருவார்கள். பஜனையை வழிநடத்தி செல்வது

செல்லத்துரை என்பவர். எங்களனைவர்க்கும் செல்லத்துரையண்ணன்.

ஆரம்ப காலங்களில் பத்து, அதிகம் போனால் பதினைந்து பேர்கள்,

ஒருவர் கையில் ஹார்மோனிய பெட்டியுடனும், சிலர் ஜால்ரா வுடனும்

ஏதோ பாடிக் கொண்டு போவார்களாம். செல்லத்துரையண்ணன் தலைமை

ஏற்று நடத்த ஆரம்பித்த பின்தான் இவ்வளவு பேர் வர ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு நல்ல கம்பீரமான குரல். தொடங்கும் போது

தோடுடைய செவி யென் விடை யேறியோன்;

தூ வெண் மதி சூடி,


என்று தேவாரத்துடன் ஆரம்பிப்பார்கள். அதன் பின்,

போற்றி என் வாழ்முதல், ஆகியப் பொருளே;

புலர்ந்தது பூங்கழல்


என திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,

ஆதியும் அந்தமும் இல்லாத

அரும்பெரும் சோதியை யான் பாட


திருவெம்பாவை பாடல்கள்...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்

என சில திருப்பாவை பாடல்கள்..

இதற்குள் சிவன்கோயில் வந்து விடும். அவர்கள் முதலில் பாட, பின்

நாங்களனைவரும் சேர்ந்து பாடுவோம். ஆங்காங்கே கோலம் போட்டுக்

கொண்டிருக்கும் பெண்கள் எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பர்.

கொஞ்சம் லேட்டாக வருபவர்கள் இடையில் வந்து சேர்ந்து கொள்வர்.

சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி வேறு சில

தெருக்கள் வழியாக மறுபடியும் பஜனைக் கோயிலுக்கே வந்து சேர்வோம்.

சில திருப்புகழ் பாடல்கள்... முடிக்கும் போது

ஆறிரு தடந்தோள் வாழ்க,

ஆறுமுகம் வாழ்க.


என்று முடிப்பார்கள்.



மார்கழிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இரவு, கோயிலில் பாடல்கள்

ஒப்பிக்கும் போட்டி நடக்கும். திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள்,

திருவெம்பாவை 20 பாடல்கள், திருப்பாவை 30 பாடல்கள், மொத்தம்

60 பாடல்கள் ஒப்பிக்க வேண்டும். அறுபதையும் ஒப்பித்தால் பொன்னாடை

போர்த்தி, பரிசும் வழங்குவார்கள். பாடல்களின் எண்ணிக்கைக்கேற்ப

எல்லோருக்கும் பரிசுகள் உண்டு. ``எப்ப பாத்தாலும் ஆம்பள பசங்க தா

நெறய சொல்றாங்க, பொம்பள புள்ளைங்களால முடியாதா?’’ என்று

எங்களை சீண்டிவிட போட்டி போட்டு ரோஷத்தோடு படித்தோம். அந்த

வருடம், பெண்களில் நானும், கிருஷ்ணவேணி என்ற பெண்ணும்

60 பாடல்கள் ஒப்பித்தோம். பையன்களில் மாதுஅண்ணனும், குட்டியும்

ஒப்பிச்சாங்க. பொங்கலன்று எல்லோர்க்கும் பரிசுகள், எங்களுக்கு சிறப்பு

பரிசுகள் வழங்கினார்கள்.



ஹைஸ்கூல் வந்ததும் இவையெல்லாம் நின்று போயின. நாங்கள் தாம்

நின்று விட்டோமே தவிர, செல்லத்துரையண்ணனின் பாட்டு, பஜனை,

எல்லாம் தொடர்ந்தன. இதைப்போலவே போட்டிகளும்... நிறைய பேர்

பரிசுகளும் வாங்கியிருப்பார்கள்.



செல்லத்துரையண்ணன் நல்ல கணீரென்ற குரலில் டி.எம்.எஸ் பாடல்

களை அப்படியே பாடுவார்கள். `கற்பகவல்லி நின் பொற்பதங்கள்

பிடித்தேன்‘ `மண்ணானாலும் திருச்செந்தூரின் மண்ணாவேன்’ இன்னும்

எத்தனையோ பாடல்கள்... மிக அருமையாக பாடுவார்கள். ஆன்மீகத்தில்

மிகுந்த நாட்டமுடன், திருமணமே வேண்டாமென்றிருந்த அவர்கள்,

வீட்டாரின் வற்புறுத்தலால் மிகதாமதாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதைப் போல ஒரு மார்கழிமாதத்தில் மாரடைப்பு ஏற்பட்டு, திடீரென

இறந்து விட்டார்கள்.



மார்கழிமாத பஜனை, தேவாரம், திருப்பாவை இவற்றோடு, எங்களுக்கு

செல்லத்துரையண்ணனின் பாடல்களும் சேர்ந்தே நிறைந்திருக்கின்றன.


.

Monday, March 15, 2010

பாடாத பாட்டெல்லாம்...

2009 ம் ஆண்டின் சிறந்த பாடகிக்கான விருதுக்கு, எதிர்பார்த்தபடி அவள்

பெயரே அறிவிக்க பட்டது. பாராட்டுக்கள் குவிகின்றன. தமிழ்நாட்டுக்கு

மீண்டும் ஒரு பி.சுசீலா கிடைத்துவிட்டார், தென்னகத்தின் லதாமங்கேஷ்கர்

என பாராட்டு மழையில் நனைகிறாள். சட்டென அனைத்தும் கலைந்துபோக,

அட... சே.... அத்தனையும் கனவா..? எரிச்சலுடன் மணியை பார்த்தேன்.

விடியற்காலை நான்கு மணி. இந்த விடிகாலை கனவு நிச்சயம் பலிக்கப்

போவதில்லை. நேற்று தூங்க போகும்முன், பழைய பாடல்களை கேட்டுக்

கொண்டிருந்ததன் விளைவு என புரிந்தது.



என் அம்மா முறைப்படி சங்கீதம் கற்றவர்கள். சாரீரமும் இனிமையாக

இருக்கும். நன்றாக பாடுவார்கள். அந்த சங்கீத ரத்தம் என்னையும் பாட

தூண்டியது. ஆனால் நான் பாட வாயை திறந்தாலே, என் உடன்பிறப்புகள்

சும்மாயிருக்க மாட்டார்கள். என் இரண்டாவது அண்ணன்,` அம்மா, கதவு

இடுக்கில் எங்கேயோ ஒரு எலி மாட்டிக் கொண்டது' என்பான். என் இளைய

சகோதரன் எனக்கு `பஞ்சகல்யாணி' என நாமோதயம் சூட்டியிருந்தான்.

இது ஒரு தடவை என்றில்லை, நான் வாயைத் திறந்தாலே தொடரும்.

ஆனாலும் நான் சளைக்க மாட்டேன். ஒரு இளம் குயிலின் சிறகுகள்

முடக்க படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.


கல்லூரிபடிப்புக்காக ஹாஸ்டல் சென்றிருந்தபோது, இந்த நையாண்டிகளில்

இருந்து, விட்டுவிடுதலையாகி நின்றேன். கேட்பாரில்லாமல் பாடிதிரிந்தேன்.

ஆனால், என்அறைத் தோழிகளும், மற்றவர்களும், நான்நன்றாக பாடுவதாக

சொன்னார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எப்படி என தெரியாது,

அந்த நேரம் பிரபலமான பாடல்கள், பழைய பி.சுசீலா பாடல்கள் எல்லாம்

முழுவதுமாக தெரியும். ஓரிருமுறை கேட்டாலே மனனம் ஆகிவிடும்.

அதனால் தைரியமாக பாடுவேன்.விடுதிவிழாக்கள், எங்கள் துறைசார்ந்த

விழாக்களில் பாடியிருக்கிறேன். அதை வீட்டில் சொன்னபோது, இரங்கல்

தீர்மானம் நிறைவேற்றினார்கள்.



இங்கே வீட்டிலும் நல்ல மூடில் இருந்தால் பாடஆரம்பித்து விடுவேன்.

என் கணவரும், பையன்களும், நான் நல்ல மூடில் இருக்கக் கூடாது என

வேண்டிக் கொள்வார்கள். என் பையன்களும் நான் பாடினால் கத்துவார்கள்.

ஆனால் நான், `உங்க மாமா நாலு பேர் கேலி பண்ணியே பயப் படல,

நீங்க சொல்லியா கேட்க போறேன். போங்க, போய் தண்ணிய குடிங்க’ன்னு

விரட்டி விடுவேன். என் இளைய மகன் கொஞ்சம் இறங்கி வந்து, `பழைய

பாட்டு பாடாதீங்க, புது பாட்டு ஏதாவது பாடுங்க.’ என்பான், சத்புத்திரன்.



ஏதாவது விசேஷம், கோயில்கொடை என கூடும் போது அரட்டைகச்சேரி,

பாட்டுகச்சேரி எல்லாம் நடக்கும். எங்கள் பெரிய அண்ணி, மிகவும் இனிமை

யாக பாடுவார்கள். அற்புதமான குரல் வளம் அவர்களுக்கு உண்டு. பழைய

பாடல்களை, பாடச் சொல்லி கேட்டு ரசிப்போம். அப்போது தான் நம்மை

ஏன் இப்படி கேலி செய்கிறார்கள் என்பது புரியும். ஆனால் வெளிப் படுத்திக்

கொள்ள மாட்டேன். நானும் கூட சேர்ந்து கோரஸ் பாடுவேன்.



எப்படியோ, நேற்றைய கனவு, ஒரு பதிவுக்கு வழிவகுத்தது.

கனவுகள் + கற்பனைகள் = பதிவுகள்.

அட ; இது கூட நல்லாயிருக்குதே..!