Thursday, August 26, 2010

நம்பிக்கையின் கரம் ; நம்பமுடியாத நிஜம் !!!

.

.ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி

யாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில

உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை

`ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக்

பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை

யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து

21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து

அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க

தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும்.



இந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர்

என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள்.

சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை

செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி

வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற்

கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு

மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி

கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம்

நிகழ்ந்தது.



21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம்,

அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக

நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது.

அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்ப

வத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி

நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’,

என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான்

போகிறோம்.







தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப்

படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)' என்ற பெயரோடு, அந்த

படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19,

1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத்

துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ்

என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம்

தான், கீழே நீங்கள் காண்பது. 25 yard backstroke நீச்சல் போட்டியில்

முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது

முதல் புகைப்படம் ( 21 வார) பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு

டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’

இருப்பதாக கூறுகிறான்.






`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்

களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!

.

Wednesday, August 25, 2010

அகத்தின் அழகு, முகத்தில்.....

.

`.என்ன வலி அழகே’ என சகோதரி முல்லை, ஒரு வாடிக்கையாளராக

தன் அழகுநிலைய அனுபவங்களை நகைச்சுவையாக எழுதி இருந்தார்.

அவரது கருத்தில், ஒரு அழகுக் கலை நிபுணராக நான் முரண் படுவதால்,

இந்த பதிவு.



அழகாகத் தோன்ற வேண்டும் என்ற எண்ணம், ஆண், பெண் இருவருக்

குமே பொதுவானது. வேண்டுமானால் பெண்களிடம் கொஞ்சம் கூடுதலாக

இருக்கலாம். புறஅழகுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் எனும்

கேள்வி எழலாம். அக அழகை வெளிப்படுத்தவும் புறஅழகு தேவையே.

பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிவது புறத் தோற்றமே! எனக்கு புறஅழகு

முக்கியமில்லை, இயல்பாக இருப்பதையே விரும்புவேன் என்பவர்கள் கூட

ஏதோ ஒரு வகையில் புறத்தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளத்தான்

செய்கின்றனர்.



அழகுப்படுத்திக் கொள்ளுதல் என்பது இப்போதில்லை, பழங்காலத்திலே

இருந்திருக்கிறது. சருமம் பளபளக்க கழுதைப்பாலில் ஒரு அரசி குளித்

தாளாம். ஆயக்கலைகள் 64ல் ஒப்பனைக் கலையும் உண்டு என படித்த

நினைவில் பார்த்தால், ` முகஒப்பனை, முடிக்கு சாயம் தடவுதல், உடை

களுக்கேற்ப நகைஅலங்காரம் என தனித்தனியாக நான்கு வகைக்கலைகள்

இடம் பெற்றிருந்தது ஆச்சர்யப் படுத்தியது.



அழகுநிலையம் செல்வதென்பது வெறுமனே அலங்காரம் செய்து கொள்ள

என தவறாக எண்ணுகின்றனர். நம்மிடம் இருக்கும் சிற்சில குறைகளை

நிவர்த்தி செய்து கொள்ளவும் தான். மேல்நாட்டு பெண்கள் போல முடிக்கு

சாயம் தடவிக்கொள்ளுதல் போன்ற சிலவற்றை வேண்டுமெனில் ஆடம்பர

மாக கருதலாம். ஆனால் சில அடிப்படை தேவைகளுக்காக செல்வோரின்

எண்ணிக்கை மிக அதிகம்.



முதலில் `வாக்ஸிங்’ பற்றி பார்ப்போம். கை கால்கள், முகம் போன்ற

வற்றில் வளரும் முடிகளை நீக்க வாக்ஸிங் செய்யப் படுகின்றது. ஹேர்

ரிமூவர் க்ரீம்கள் பயன் படுத்தினால் ஒரே வாரத்தில் வளர்ந்து விடும்

என்பதாலும், அதில் உள்ள ரசாயனங்கள் பலருக்கு `அலர்ஜி’ ஏற்படுத்து

கின்றன என்பதாலும் இதை நாடுகின்றனர். கைகால்களில் நீக்குவ

தென்பது வேண்டுமெனில் அவரவர் விருப்பத்தை பொறுத்து அமையலாம்.

ஆனால் மேலுதட்டில், நாடியில், இலேசாக அல்ல, பளிச்சென்று தெரியும்

அளவுக்கு சிலருக்கு முடி வளர்கின்றது. மரபு ரீதியாகவோ, அல்லது

ஹார்மோன் குறைபாட்டினாலோ இப்போது பல பெண்களிடம் இந்த

குறைபாடு காணப் படுகின்றது. பொதுவிடங்களில் பிறரின் கேலிப்

பார்வைக்கும், குத்தல் பேச்சுக்கும் ஆளாகும் இவர்கள் மிக மோசமாக

தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள். இவர்களூக்கு வாக்ஸிங் அவசிய

மானதாகி விடுகிறது. நான் இயல்பாகத் தான் இருப்பேன் என நிச்சயம்

இந்த பரிதாபத்துக்குரியவர்களால் வாதம் செய்ய முடியாது.




சாதாரணமான சருமம் கொண்டவர்களுக்கு ஃபேஷியல் தேவையில்லாமல்

இருக்கலாம். ஆனால் எண்ணெய் வழியும் முகமும், சொரசொரப்பாக

வொயிட் ஹெட்ஸ், ப்ளாக் ஹெட்ஸ் போன்றவையும், பெரிய பெரிய

பருக்களும் நிறைந்த முகம் பெற்றவர்களுக்கு `அரோமா ஃபேஷியலோ,

ஹெர்பல் ஃபேஷியலோ, ஒரு மருத்துவமாக தேவைப் படுகின்றது.

சரியான முறையில் செய்யப் படும் ஃபேஷியல் மஸாஜ் தூக்கம் வருவது

போல சுகமாகத் தான் இருக்கும். `ப்ளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்

நீக்குவது தான் வலி தரும். ஆனால் தாங்க முடிந்த அளவில் தான்.

மருத்துவரிடம் ஊசி போட்டுக் கொள்வதில்லையா அதுபோல. ஆனால்

உரித்த கோழி உதாரணம் எல்லாம் மிக அதிகம். (முல்லை இதை

நகைச்சுவைக்காகத் தான் சொல்லியிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் ).



புருவம் திருத்திக் கொள்வதென்பது இப்போதெல்லாம் மிகமிக சாதாரண

விஷயமாகி விட்டது. சரியான அளவில், அல்லது கொஞ்சம் சுமாராக

அமைய பெற்றவர்கள் அதை அநாவசியம் என நினைக்கலாம். ஆனால்

அதுவே அதிகமாக பாதி நெற்றியை மறைக்கும் அளவுக்கு இருந்தால்

அவசியமாகி விடுகிறது.. முதலில் ஓரிரு முறை வலி தெரியும்.

தொடர்ந்து செய்யும் போது வலி மிக சாதரணமாகி விடும். ஐந்து

அல்லது பத்து நிமிடங்களில் திருத்திக் கொள்ளலாம் .எட்டாவது,

ஒன்பதாவது படிக்கும் பெண்கள் கூட வருகிறார்கள். +2, அல்லது

காலேஜ் படிக்கும் போது வாருங்கள் என துரத்த வேண்டியருக்கிறது.


.




.





ஒருமுறை, பக்கத்தில், ஒரு குக்கிராமத்தில் இருந்து ஒருப் பெண்ணை

அவள் தாயார் அழைத்து வந்திருந்தார். வயலில் வேலை செய்பவர்கள்.

அவர்கள். அந்த பெண்ணுக்கு திருமணம் பேசிவைத்திருப்பதாகவும்,

பெண்ணைப் பார்த்து சரியென்று விட்டால் உடனே திருமணம் என்றும்

கூறினார். அத்தனை அடர்த்தியான, புருவத்தை நான் பார்த்ததே

இல்லை. சுமார் 1 1/2 இஞ்ச் அகலத்தில் நெற்றிதெரியாதபடி வளர்ந்

திருந்தது. படத்தில் இருப்பதை விடவும் இரண்டு அல்லது மூன்று

மடங்கு இருக்கும். சரிசெய்யும் போது முகச்சுழிப்போ, சிணுங்கலோ

அவளிடம் இல்லை. சரி செய்யப்பட்டபின் பெண்ணின் முகத்தைப்

பார்த்த அம்மா சந்தோஷத்தில், ` நீ நல்லாயிருக்கணும் மா’ என்று

வாழ்த்திய வார்த்தைகளில் அந்த தாயின் வலி வெளிப்பட்டது.

அவளுக்கு திருமணம் முடிவாகி, திருமணத்துக்கு முன்னரும் வந்து

புருவம் திருத்திக் கொண்டது, கூடுதல் சந்தோஷம்...



இப்போதெல்லாம் பெண்கள் அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர்.

அதனால் அதிக அளவு தம் தோற்றத்தில் அக்கறை எடுத்து கொள்

கின்றனர். கணவர் அல்லது நண்பரின் வற்புறுத்தலுக்காக அழகு

நிலையம் செல்வதாக கூறும் பெண்கள் மிக சொற்பமே! `அவர் மட்டும்

தலைக்கு, மீசைக்கு டை அடித்து கொள்கிறார்., என்னை பார்லருக்கு

அனுப்ப மாட்டேங்குறார்’ என்னும் பெண்கள் தாம் அதிகம்.



ஒரு ஆண் இண்டர்வியூ க்கு செல்லும் போது, முடி வெட்டி, `ஷேவ்’

செய்து, திருத்தமான உடை உடுத்தி போவதில்லையா? என்னிடம்

நிறைய திறமைகள் இருக்கின்றன, நான இயல்பாகத்தான் இருப்பேன்

என கலைந்த ஆடைகளுடன், சவரம் செய்யாத முகத்துடன் சென்றால்

என்ன நடக்கும்? பல சமயங்களில் புறத் தோற்றமும், மிக மிக

அவசியமே! `ஏன் ஷேவ் பண்ணிக்கலை’ என்று ஆணிடம் கேடபதைப்

போல ஏன் `ஐ ப்ரோ பண்ணிக்கலை’ என பெண்ணிடம் கேட்கும் காலம்

விரைவில் வரலாம்.


இன்னும் நிறைய குறிப்பிடலாம். பதிவு ஏற்கனவே பெரிதாகி விட்டது.

.

Monday, August 23, 2010

எங்கள்அன்புத்தம்பி...

.

.`எக்கோவ்’ என பாசமாக, `ஏ புள்ள’ என செல்லமாக, அழைக்கும்

அன்புக்குரல் காணாமல் போய் ஐந்து வருடங்களாகின்றன. அற்புதமான

ஓவியன், அருமையான பாடகன், இனிய நண்பன், எங்களுக்கு செல்ல

தம்பி.



என் அக்காவின் மகன் இப்படித்தான் இருப்பான் என பையனை

பார்க்க வரும்போது, கற்பனையில் வரைந்து கொணர்ந்த ஓவியம் கண்முன்

சிரிக்கிறது. அழகாக பாட, ரசித்துக் கேட்டிருந்த காதல்ஓவியம் பட பாடல்கள்

கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனையோ நினைவுகள் பசுமையாய்....



ஜுலை18 அன்று என் தம்பியின் மகள், `அத்தை, இன்று என் டாடியின்

பிறந்தநாள், என எஸ் எம் எஸ் அனுப்பிய போது ஆறுதல் கூற வார்த்தை

இல்லாமல் கலங்கிப் போனேன்.



தம்பி, விமானப்படையில் சேர்ந்து, பெங்களூரில் டிரெய்னிங் முடித்ததும்,

அவனுக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் முதல் போஸ்டிங். போய்

சேர்ந்ததும் எழுதிய முதல் கடிதத்தில்` இந்தியா மேப்‘ வரைந்து, அதில்

ஆறுமுகனேரியையும், பஞ்சாபையும் குறித்து, `நீங்கள் அங்கே இருக்

கிறீர்கள், நான் மட்டும் இவ்வளவு தூரத்தில் இருக்கிறேன்’ என்று எழுதியி

ருந்தான். இப்போது எங்களை தவிக்க விட்டு தொலைதூரம் பறந்து

விட்டான்.



காலம் எல்லாவற்றையும் ஆற்றும், மாற்றும் என்பார்கள். நினைத்த

மாத்திரத்தில் விழி நிறையும் நீரும், நெஞ்சை அடைக்கும் பெருமூச்சும்

மாறவே யில்லை.

.

Tuesday, August 17, 2010

என் ஆண்டுவிழா அனுபவங்கள்...( தொடர்பதிவு)

.

.பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங்

களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது.



அப்போது நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி

சுதந்திர தினவிழாவுக்கான நடன நிகழ்ச்சியில் என்னை சேர்த்திருந்தார்கள்

அதுதான் என் முதல் நிகழ்ச்சி என நினைக்கிறேன். நடனம் சொல்லித்

தந்த ஆசிரியை, வீட்டில் போய் ப்ராக்டிஸ் பண்ணிப் பார்க்குமாறு சொல்லி

அனுப்பினார்கள். அது போதாதா..? நிற்கும்போது, நடக்கும் போது என

எல்லாப்பொழுதும் ஆடிக் கொண்டே அலைந்தேன். ``ஆடுவோமே, பள்ளு

பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்...ஆ.. டமார். ஒன்றுமில்லை. வீட்டின்

முன்னிருந்த திண்ணையில் நின்று ஆடிக்கொண்டிருந்த நான் தான் விழுந்து

விட்டேன். கீழ்பல்லில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அப்பாவும், அம்மா

வும் பல்டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். பல்லை எக்ஸ்ரே எடுத்துப்

பார்த்து விட்டு, `நல்லவேளை, க்ராக் எதுவும் இல்லை, லேசாக அசைய

மட்டும் தான் செய்கிறது,’’ என்று கம்பி போட்டு அடுத்த பல்லோடு

சேர்த்து கட்டி விட்டார். இரண்டு மூன்று நாட்களில் வலியும், வீக்கமும்

குறைந்து, வெற்றிகரமாக நடனமும் ஆடினேன். ஆனந்த சுதந்திரம்

அடைய நானும் ரத்தம் சிந்தியிருக்கிறேன் என்பதை வரலாறு மறந்தாலும்,

நான் மறக்க மாட்டேன்.




சென்னையிலிருந்து ஊருக்கு படிக்க வந்த போது பட்டணத்து பிள்ளைகள்

என்று அத்தனை ஆசிரியர்களுக்கும் எங்களை மிகவும் பிடித்துப் போனது.

செல்வின் என்ற டீச்சர்,``நீ என் வகுப்புக்கு’’ என்று தோளில் கைபோட்டு

அன்போடு அழைத்து சென்றது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவர்கள்

தான் அங்கே நடன ஆசிரியை என்பதால், ஒவ்வொரு வருடமும் பள்ளி

ஆண்டுவிழாவில், இரண்டு நடனத்தில் கட்டாயம் நானிருப்பேன். இருபது

நாட்களுக்கு மேல் ப்ராக்டீஸ் இருக்கும். க்ளாஸ்க்கு அட்டெண்டென்ஸ்

கொடுத்தால் போதும். எம்ட்ராய்டரி, ஜமிக்கி சேலைகள் தெருவில்

இருக்கும் பெரிய அக்காக்களிடம் (அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப

செல்லம்) இரவல் வாங்கி போவேன். அதை பெரிதுபெரிதாக ப்ரில் எடுத்து

எங்கள் அளவுக்கு வைத்து பாவாடை மாதிரி கட்டி விடுவார்கள். ரிங்

கொண்டை, பன் கொண்டை என்று தலைஅலங்காரம் பண்ணிவிடுவார்கள்.



இப்படி நடனத்தோடு நின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ராமாயணத்தில்

ராமர் காட்டுக்கு செல்ல கைகேயி வரம்வாங்கும் காட்சியும், தசரதர் உயிர்

துறக்கும் கட்சியையும் நாடகமாக போட்டார்கள். ராமராக நடிக்க என்னை

தேர்வு செய்தார்கள். அவ்வளவு சாந்தசொரூபியாகவா நான் இருந்தேன்?

ஆண்டுவிழாவுக்கு முன்தினம் கரஸ்பாண்டெண்ட் முன்னால் ஒத்திகை

நடக்கும். நாடகத்தில் கடைசிக் காட்சியில் தசரதராக நடித்த எபனேசர்,

கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக கீழே விழுந்தாள்.எல்லோரும்

சிரிக்க, நானும் சத்தமாக சிரித்து விட்டேன். `அப்பா விழுந்து கிடக்கும்

போது நீ சிரிப்பியா?’’ என்று செண்டிமெண்டலாக காய்ச்சி எடுத்து

விட்டனர். நானும் எபனேசரிடம்,`உனக்கென்ன அவார்டா கொடுக்குராங்க

இப்படி ஓவர் ஆக்ட் பண்றீயே’’ன்னு சொல்லி பார்த்தேன். ஆனால் ஆண்டு

விழாவின் போதும் இதேபோல் விழுந்து என்னை மாட்டிவிடப் போகிறாள்

என்று நிச்சயமாக தெரிந்தது. அதுக்கும் டீச்சரே வழிசொன்னாங்க. அவள்

விழுந்ததும், `ஐயோ தந்தையே’ன்னு கத்திட்டு அவள் பக்கத்துல

உக்கார்ந்து அழுற மாதிரி எம்ஜிஆர் ஸ்டைல்ல மூஞ்சிய மூடிக்கன்னு

சொன்னாங்க. நானும் அப்படியே செய்து சமாளித்தேன்.



கல்லூரி வந்தபின் இப்படி அரைகுறை ஞானத்தோடு நடனம், நடிப்பு

எதிலும் சேர்வதில்லை என்ற நல்ல முடிவோடு, முழுமையாய் தெரிந்த

அரட்டை கச்சேரியில் மட்டும் சேர்ந்தேன்.கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ்

வீக்’ என்று கலைவிழா நடத்துவர்கள். டிப்பார்ட்மெண்ட்வாரியாக,

அனைத்து வகை போட்டிகளும் நடக்கும். நான் இரண்டாமாண்டு படிக்கும்

போது, சீனியர் அக்கா, `விஸ்வநாதா, வேலை வேண்டும் பாட்டுக்கு

க்ரூப் டான்ஸ் போடப் போறோம், நீ சேர்றீயா‘ன்னு கேட்டாங்க. `எனக்கு

டான்ஸ் சரியா ஆட வராது; வேணும்னா மாடிலருந்து தண்ணீ ஊத்துவாங்

களே, அதுக்கு வரட்டுமா’ன்னு பணிவோடு கேட்டேன். என்னை மகா

உஷ்ணமாய் முறைத்து விட்டு, அந்த சீனெல்லாம் கிடையாதுன்னு

போயிட்டாங்க.



ஆனால் விதி என்னை வேறு ரூபத்தில் மாட்டி விட்டது. `ப்ளாக்போர்டு

ட்ராயிங் நல்லா வரையும் பெட்டில்டா என்னும் சீனியர் அக்கா காய்ச்சல்

காரணமாக வராததால், வேற யாராவது வரைறவங்க இருந்தா சொல்லுங்

கன்னு கேட்டப்போது, தோழிகள் என்னை மாட்டிவிட்டனர். பத்திரிக்கை

களில் வரும் ஜெ... படங்களை நோட்டுகளில் வரைந்து பார்ப்பேன்.

அவ்வளவுதான். வேறுவழியில்லாமல் நானும் தோழிகளும், எங்களுக்கு

ஒதுக்கியிருந்த அறைக்கு சென்றோம். இது குழுவாக பங்கெடுக்கும்

போட்டி. கொடுக்கப்பட்ட தலைப்பு `பாரதி கண்ட கனவு’. கையில் விலங்

குடன், கண்ணீரோடு ஒரு பாரதமாதா, விலங்குகள் உடைக்கபட்டு வீரமாக

ஒரு பாரதமாதா வரைந்து விட்டு, எதாவது ஒரு பாரதியார் பாட்டு சொல்

லுங்கப்பா’ என்றேன். காற்றுவெளியிடை கண்ணம்மான்னு ஒருத்தி

சொல்ல, `சனியனே! பாரதமாதாவும், ஜெமினியும் டூயட்டா பாடுறாங்க

படத்துக்கு பொருத்தமா சொல்லு’ என்றாள் இன்னொருத்தி. முடிவில்

`என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’, இன்னொரு படத்துக்கு மேல

`விடுதலை விடுதலை விடுதலை’ என்று எழுதினோம். எங்க மிஸ் பாரத

மாதா ஜெ... ஓவிய சாயல்ல இருக்காங்க என்று கேலி செய்தார்கள்.

மற்ற டிப்பார்ட்மெண்ட் எல்லாம்,`ஆலைகள் செய்வோம்; கல்வி சாலை

கள் செய்வோம், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று

போர்டு முழுவதும் வரைந்து வைத்திருந்தார்கள். நான் பேசாமல்

விடுதிக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன். திடீரென என் தோழிகளின்

சத்தம். `உன் டிராயிங் க்கு தான் முதல் பரிசு‘ என எழுப்பிய போது

நம்பவே முடியாத சந்தோஷம். கல்லூரிக்கு சென்றபோது மிஸ்ஸெல்லாம்

கை கொடுத்தாங்க...



பள்ளி, கல்லூரி நினைவுகள் பொக்கிஷம் போன்றவை. அந்த சந்தோஷ

தருணங்களை மீட்டெடுக்க உதவிய தீபாவுக்கு நன்றி.

.

இந்த தொடரை தொடர நான் அழைப்பவர்கள்,

1) இரண்டு அண்ணனை மட்டும் கூப்பிட்டதற்கு உரிமையோடு கோபித்துக்

கொண்ட பாரா அண்ணன்,

2) பொன்ராஜ்,

3) தம்பி செ,சரவணக் குமார்,

4) எதையும் கலகலப்பாக எழுதும் சித்ரா.


நேரம் கிடைக்கும் போது தொடருங்கள் உங்கள் அனுபவங்களை...

.

Friday, August 13, 2010

``அந்த அரபிக்கடலோரம்’’ ஒரு சின்னபெண்ணின் பார்வையில்

..

தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘

ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை

யோடு பார்த்துக் கொண்டிருந்தனர். என்னிடம் ஏதோ கேட்க வந்த பக்கத்து

வீட்டு சிறுபெண், எட்டு வயதுக்குள் இருக்கும், அவளும் பாடலை

பார்த்துக் கொண்டிருந்தாள்.



பாடலின் இடையில் ஒருக்காட்சியில், அரவிந்தசாமி, மணீஷாகொய்ராலா

வின் கைகளை பற்ற, மணீஷா கைகளை விடுவித்துக் கொள்ளும்போது,

வளையல்கள் மட்டும் கழன்று அரவிந்தசாமியின் கைகளில் இருக்கும்.

அதைப் பார்த்த அந்த சிறுபெண், ``ஈட்டுக்கு (அடகுக்கு) கழட்டுறாங்க’’

எனக் கூற, அனைவரும் சிரித்தனர்.


அந்தக் காட்சிக்கான அவளது புரிதல் புரிந்த போது..., எனக்கு சிரிப்பு

வரவில்லை.
.
.

Wednesday, August 11, 2010

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

.
.
ஈ.மெயிலில் வந்த ஒரு உண்மை சம்பவம் இது.



அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். அதிர்ந்து பேச‌மாட்டான். மிக அமைதி

யான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால்

வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌

நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும்

வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர்

ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌

த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டி

லிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டு

வ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி.



பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில்

அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000. பிற‌ந்த‌து

முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌

தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறை

தான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச்

செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது

அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.



ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை

ஒழிய‌ த‌ன்க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும்

என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு

எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு

ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.




அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில்

உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தி

னான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே

விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்! அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள்

அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக்

கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌

ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ்

நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு

செய்தார்.



பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிந்தது,

அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு

மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன்

குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3,000ல் போக்குவ‌ர‌த்து,

அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக்

க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை

உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.

இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி

அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில்

மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல

அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌

பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.




ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும்

இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் தவிர்த்த

விடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும்

கார‌ண‌ம்.."டைம் இல்ல‌ ". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல்

அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்


இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

.
.

Friday, August 6, 2010

போபால்...தலைமுறைகள் தாண்டியும் தொடரும் சோகம்...


..
கண்கள், முகம் அத்தனையும், நெருப்பாய் எரிய, அந்த

டிசம்பர்மாத நள்ளிரவில், உயிரை காப்பாற்றிக் கொள்ள

வேக வேகமாய் ஓடினோம்; வேக வேகமாய் ஓடி,

வேக வேகமாய் நச்சுக் காற்றை உள்வாங்கி மக்கள் விழுந்தனர்.

குழந்தைகள் எங்கேயென்று தாய்க்கு தெரியவில்லை;

குழந்தைகட்கு தன் தாய் எங்கேயென்று தெரியவில்லை.;

ஆண்களுக்கு தன் குடும்பம் எங்கேயென்று தெரியவில்லை.



போபால் விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்த ஒரு பெண்மணியின்

நினைவுகூறல் இது. `உலகின் மிக மோசமான ரசாயன பேரழிவு’ என

வர்ணிக்கப் படும் போபாலின் கொடூர நிகழ்வு குறித்து அறிந்திருந்தாலும்

கொஞ்சம் ஆழமாய் உட்செல்லும் போது அறியவரும் உண்மைகள்,

உயிரை உலுக்குகின்றன.



இத்தகைய ஆபத்தான தொழிற்சாலை, எங்கள் மண்ணுக்கு தேவை

யில்லை என பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளால் நிரா

கரிக்கப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனம், இந்திய மண்ணில் ,

போபாலில் தன் தொழிற்சாலையை தொடங்குகிறது. நெருக்கமான

குடியிருப்புகளுக்கு அருகாமையில் இத்தகைய ஆபத்தான தொழிற்

சாலை அமைக்கப்பட்டது முதல் தவறு.. .தொடர்ந்த விபத்துகள்,

பாதுகாப்பு ஏற்பாடுகளை அலட்சிய படுத்துதல் என பல்வேறு குளறு

படிகள். 1983ல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்

பட்டு, அதன் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த

பட்டன., ஆனால் இங்கில்லை, வெர்ஜீனியாவில் உள்ள அதன் இன்னொரு

தொழிற்சாலையில். ஏனெனில் அமெரிக்கர்களின் உயிர்கள் மட்டுந்தானே

மதிப்பு வாய்ந்தவை. போபால் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருக்கிறது

என பலரது எச்சரிக்கையையும் அலட்சியப் படுத்தியதன் விளைவு, அந்த

கொடூரம் நிகழ்ந்தே விட்டது. 42 டன் மெத்தில் ஐசோசயனைட், மொத்த

மாக ஒரே கலனில் சேமிக்கபட்டிருந்தது விபத்தின் கொடூரத்தை மிக

மோசமானதாக்கி விட்டது..



முதல் நாளில் 3,000 பேருக்கு மேல், முதல் வாரத்தில் 8,000 பேர், மொத்தம்

23,000 என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டது. 2000 வருடத்துக்கு

பிறகான இழப்புகள் கணக்கில் கொள்ளப் படவில்லை. 1,00,000

மேலானோர் மிக மோசமாக பாதிக்கப் பட்டனர். பார்வை கோளாறுகள், ,

சுவாச சீர்கேடுகள் நரம்பு மண்டல பாதிப்புகள், கருச்சிதைவுகள், இன்னும்

பல வகை்படுத்த முடியா பாதிப்புகள்.

சம்பவத்துக்கு பின், சிதைந்த நிலையில் பிறந்த

சிசுக்கள், கண்ணாடி சீசாக்களில் ஸ்பெஸிமன்களாய் வைக்கப்

பட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்த போது,
ஒரு தாயாய்

அடிவயிறு கலங்கி போனேன். மீண்டுமொருமுறை அதைப் பார்க்கும்

திராணியில்லாததால் பிரசுரிக்கவில்லை. இதைப் போன்ற நிகழ்வு

உலகின் எந்த மூலையிலும் நடக்கக்கூடாது.





பாதிக்கப்பட்ட, இந்த பெயரில்லாத, குரலில்லாத பல ஆயிரம் அப்பாவி

களுக்கு, 26 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை. யூனியன் கார்பைட்

நிறுவனத்தை வாங்கியுள்ள டவ் கெமிக்கல்ஸ், அதனுடைய எந்த கடன்

களுக்கும் பொறுப்பேற்க மறுத்து விட்டது. யூனியன் கார்பைடின் அதிகாரி

கள் தப்பியோடி விட, அந்நிறுவனத்தின், எஞ்சியிருந்த அத்தனை ரசாயன

நச்சுகளும், இன்னமும் அகற்றப் படவில்லை. அதன் பின்னரான 25 ஆண்டு

கால பருவமழையில் அத்தனை நச்சுகளும் மண்ணின் அடி ஆழம் வரை

ஊடுருவி, நிலத்தடி நீரை மோசமாக்கி வைத்திருக்கிறது. வேறுவழியின்றி,

20,000க்கும் மேலானோர் அதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.



விஷவாயுவின் பாதிப்புகள், தலைமுறைகள் தாண்டி, இன்னும் தொடர்ந்து

கொண்டுதானிருக்கிறது. குழந்தைக்கு புகட்டும் தாய்பாலில் கூட விஷத்தின்

வீரியம் இன்னும் இருக்கிறது. சம்பவத்தில் உயிர் தப்பிய ரஷ்தா என்னும்

பெண்மணி, தன் ஐந்து மகன்களை புற்றுநோய்க்கு காவு கொடுத்தவர்

சொல்கிறார்.

``சம்பவத்தில் உயிரிழந்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகள்;

உயிர் தப்பிய நாங்கள் தான் துரதிர்ஷ்டசாலிகள்’’



போபால் சம்பவத்திலிருந்து பாடம் கற்று கொண்டதாக `டவ் கெமிக்கல்ஸ்

கூறியுள்ளது.. இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள பலியானவை, ஆயிரக்

கணக்கான அப்பாவிகளின் இன்னுயிர்கள்.. ஆனால் நம் இந்திய அரசாங்கம்

பாடம் கற்று கொண்டதாக தெரியவில்லை.



R.தினேஷ் என்பவர் இந்திய ஜனநாயகத்தை பற்றிக் கூறியது இது.

ஜனநாயகம் இனிமேலும்,

``of the people, by the people, for the people'

என்பதில்லை.

``off the people, buy the people, far the

people''

என்றாகிவிட்டது. என்கிறார். இதேநிலை நீடித்தால், `எங்கள் பாரததேசம்’’

என்று தோள் தட்ட முடியுமா..?
.
.

Tuesday, August 3, 2010

ஆடிப் பெருக்கு ; தங்கம் பெருகுமா..?

.
.
. .``ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி,

. . வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக-எம்மை

. . வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக...


சிறுவயதில் வானொலிகளில் கேட்ட பாடல். என்ன படம் என்றெல்லாம்

தெரியாது. ஆடிப் பெருக்கின் சிறப்பை உணர்த்தும் பாடல். ஆனால் இப்

போதெல்லாம் நகைக்கடை, ஜவுளிக்கடை விளம்பரங்கள் தான் ஆடிப்

பெருக்கை நினைவூட்டுகின்றன.


ஆடிமாதம், பதினெட்டாம் தேதியன்று, பதினெட்டாம் பெருக்கு அல்லது

ஆடிப்பெருக்கு, காவேரி கரையோர மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாட

படுகின்றது. விவசாயிகள் காவேரிஅன்னைக்கு வழிபாடு நடுத்துவது, புது

மணப்பெண்கள், மஞ்சள் கயிறு அணிந்து சிறப்பு வழிபாடு நடத்துவது இந்

நாளின் சிறப்பம்சங்களாகும்.








நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் இத்தகைய

திருவிழாக்கள், இன்று நகை வியாபாரிகளால் வியாபார திருவிழாக்களாகிக்

கொண்டிருக்கின்றன.










.

.
ஆடிப்பெருக்கு என்றலே நகை, புடவை வாங்க வேண்டுமென்றாகி விட்டது.

என் உறவுக்கார பெண் என்னிடம், ``ஆடிப்பெருக்குக்கு நீங்க என்ன

வாங்க போறீங்க.?’’ என்றாள்.

``நல்லதா ரெண்டு பெருக்குமாறு வாங்க போறேன்’’ என்றேன். என்னை

ஒரு மாதிரி பார்த்து விட்டு, ``எங்க வீட்டுக்காரர் கிட்டே கேட்டதுக்கு

அவரும் இதையே தான் சொன்னாரு’’ என்றாள் மகா சோகமாக.


காவேரியிலே தான் தண்ணியே இல்லையே, பின் எங்கிருந்து வெள்ளப்

பெருக்கு, ஆடிப்பெருக்கு எல்லாம், என்கிறீர்களா?. அதுவும் சரிதான்.
.
.

Sunday, August 1, 2010

என்னை, நானே...! [ தொடர்பதிவு ]

.
.
அமைதிச்சாரல் அழைத்திருந்த தொடர்பதிவு இது. பதிவுலகில் நாம்

எப்படி பட்டவர் ?. நம்மை நாமே சுயவிமர்சனம் செய்து கொள்வதன்

மூலம் நம்மிடம் உள்ள குறை, நிறைகளை உணர, களைய ஒரு

வாய்ப்பாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அம்பிகா.


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில்

பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


உண்மையான பெயரே தான். [ நல்லா தானே இருக்கு.]



3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

அண்ணன் மாதவராஜ் ஒரு பதிவில் என்னை பற்றி இப்படி எழுதி இருந்தார்.

”என்னோடு பால்ய காலத்தில் கதைகளை நோக்கி ஓடிவந்த என் தங்கை,

இதே நேரம் தன் பையனின் அல்லது கணவனின் துணிமணிகளைத்

துவைத்துக் கொண்டிருப்பாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு

"இப்பல்லாம் புத்தகங்கள் படிக்கிறியா" என்று கேட்டபோது, சிரித்துக்

கொண்டே "காபி சாப்பிடுறியா" என்று அவள் என்னிடம் கேட்டாள்.”


உண்மையும் அதுதான். அதை படித்தபின் ஏற்பட்ட ஆர்வத்தில், வலை

பக்கங்களை படிக்க ஆரம்பித்தேன். பின் பின்னூட்டங்கள்... போன

டிசம்பரில் வலைப்பக்கம் தொடங்கி எழுதலானேன்.



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன

வெல்லாம் செய்தீர்கள்?


வலைப் பதிவு தொடங்கிய புதிதில், என் பெரிய மகன்,` மாமாவிடம்

சொல்லி `தினத்தந்தியில்’ விளம்பரம் செய்யுங்க’ என்று கேலி செய்வ

துண்டு. `ஹூம் ’ என அவனை முறைத்து விட்டு மிகுந்த `தன்னம்பிக்

கையுடன்?’ எழுதிக் கொண்டிருக்கிறேன். [ ஒரு நாள் பிரபலம் ஆவோம்

என்ற நம்பிக்கையுடன் ]



5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து

கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை

என்றால் ஏன்?


ஓரளவு. பகிர்ந்து கொள்வதால் ஒரு நெருக்கம் தோன்றுகிறது.



6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது

பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


நம் உணர்வுகளை பதிய, வெளிப்படுத்த, நம் போன்றோரை அறிந்து

கொள்ளும் களமாக வலைத்தளம் உதவுகிறது. [ சம்பாதிக்கிறதா?

ஹா..ஹா..]



7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?

அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


இந்த ஒன்று மட்டுமே!



8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது

பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்


பொறாமையெல்லாம் இல்லை. ஆனால் பலரது எழுத்துக்களால் ஈர்க்கப்

பட்டிருக்கிறேன். அவர்களை போல எழுத வேண்டும் எனும் ஆசை உண்டு.



9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு

பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


முதன் முதலில் பாராட்டியவர்கள் என்றால்; மாதுஅண்ணன்,

திரு. வேணுகோபாலன் அவர்கள், சகோதரர் பாரா, காமராஜ் அண்ணன்,

சகோதரிகள் முல்லை, தீபா... இப்போது ... நீங்கள் எல்லோருமே!

பாராட்டுக்கள் உற்சாகப் படுத்துகின்றன. நன்றாக எழுத வேண்டும் எனும்

உத்வேகம் தருகின்றன.



10கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு

தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்


என்னை பற்றி நிறைய எழுதி விட்டேன். இங்கு வந்து நிறைய நட்புகள்,

சொந்தங்கள் கிடைத்திருக்கின்றன. நெகிழ்வாக உணர்கின்றேன். இன்னும்

எழுத்துக்களை செம்மை செய்ய வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.


பதிவை தொடர நான் அழைப்பது,

மாதவராஜ்

காமராஜ்

நேரம் அனுமதித்தால் தொடருங்கள்.
.
.