Sunday, January 10, 2010

``அழகம்மா’’

நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது. ` ஸ்டடி லீவு’ க்காக வீட்டுக்கு வந்திருந்தேன். என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பெண், நிறைமாத கர்ப்பிணியாயிருந்தாள். புதுமுகமாகத் தோன்றியதால், யாரென்று அம்மாவிடம் விசாரித்தேன். `நம்ம வீட்டுக்கு பின்னால புதுசா குடி வந்திருக்காங்கம்மா’ என்றார்கள். `இந்தக்கா தான் உங்க பொண்ணாம்மா’ என்றபடி என்னைப் பார்த்து சோகையாய் சிரித்தாள், அழகம்மா எனற அந்தப்பெண். அவள் போனதும்,` ரொம்ப சின்னப் பெண்ணாயிருக்காளேம்மா’ என்றேன் அம்மாவிடம். `ஆமாம்மா, இப்பத்தா பதினெழு வயசாவுதாம், ரொம்ப பயந்துப் போயிருக்கா. அதான் தைரியம் சொல்லிட்டிருக்கேன்’ என்றார்கள். இரண்டு நாட்கள் கழித்து அம்மா அழகம்மாவுக்கு, பக்கத்துஊர் அரசினர்மருத்துவமனையில், பெண்குழந்தை பிறந்துஇருப்பதாக கூறினார்கள். சந்தோஷமாயிருந்தது.


இரண்டொருநாட்கள் கழிந்திருக்கும். அம்மா வேகவேகமாய் வந்து என்னிடம்,
`எப்பூ, விஷயம் தெரியுமா, அழகம்மாக்கு பேய் புடிச்சிருக்காம். திடீர்திடீர் னு எழும்பி
உக்காந்து கண்ண உருட்டுறாளாம், பல்ல `நறநற’ னு கடிக்கிறாளாம்’ என்றார்கள்.
`அவா இன்னும் ஆஸ்பத்திரியில தான இருக்கா, யாரு இப்படி முட்டாள்தனமா உளறி
கிட்டு இருக்காங்க’ என்றேன் எரிச்சலுடன். `பின்னால ஒரே பேச்சாகெடக்கு, என்னனு
தெரியல’ என்றார்கள் அம்மா. கொஞ்சநேரத்தில் அழகம்மாவை வீட்டுக்கு அழைத்து
வந்துவிட்டார்கள். விசாரித்ததில் மருத்துவர் யாரிடமும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு
வந்துவிட்டது தெரிந்தது. பின்வீட்டில் `கசகச’ னு ஒரே சத்தம். அம்மா என்னிடம்,
`அவளுக்கு பேயோட்ட ஆள் கூட்டிட்டு வந்திருக்காங்களாம், நீ அந்தப்பக்கம் லா போகாதே’ என்றார்கள். அந்தப்பெண்ணை ஒரு அறையில் போட்டு, ஏதேதோ வேண்டாத பொருட்களை வைத்து புகைமூட்டம் போட்டு, வேப்பிலை அடித்து இருக்கிறார்கள். மனசு தாங்காத அம்மா, அவள் கணவனைத் தனியே அழைத்து, முட்டாள்
தனமா இருக்காதே, பாவம், பச்ச உடம்புக்காரி. இதெல்லாம் தாங்கமாட்டா.
``நோய்க்கும் பாரு, பேய்க்கும் பாரு’’ன்னு சொல்வாங்க, நீ நம்ம லதாம்மாவையாவது
கூட்டிட்டு வந்து காட்டு’ என்று சத்தம் போட்டார்கள். ஏற்கனவெ பயந்திருந்த அவள்
கணவன் லதாம்மாவை அழைத்து வந்தான்.

லதாம்மா என்பவர்கள் ஒரு ஹோமியோபதி மருத்துவர். கைனகாலஜிஸ்ட் இல்லாத அந்த நேரத்தில் அவர்கள் தான் அந்த சுற்றுவட்டார பெண்கள் அனைவர்க்கும்
கண்கண்ட தெய்வம். மிகுந்த அனுபவசாலி. அந்த தொழிலுக்கென்றே அவதரித்தவர்கள்
போல் சாந்தம் தவழும் முகம். ஊர்மக்கள் அவரை `லதாம்மா’ என்றே அன்போடு அழைத்தனர். அந்தம்மா வந்துப் பார்த்துவிட்டு, `நீங்கெல்லாம் மனுஷங்க தானா இல்ல
காட்டுமிராண்டியா, அந்தப் பொண்ணுக்கு புண்ணு ஆறாம செப்டிக் ஆகி ஜன்னி கண்டிருக்கு. தடுப்பூசி ல்லாம் போட்டீங்களா, இல்லையா, கிறுக்குக்கார ஜென்மங்களா,
உடனே ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுங்க’’ என்று பேய்பிடித்தது போல் கத்தவும்
மிரண்டு போனார்கள் உறவினர்கள். அவள் கணவன் அவளை அவசர அவசரமாக மருத்துவமனை அழைத்து சென்றான். இவர்கள் சொல்லிக் கொள்ளாமல் அழைத்துப் போய்விட்டதால் மருத்துவர் அனுமதிக்க ம்றுக்க, அவன் காலில் விழுந்து கெஞ்சியபின்
அனுமதித்து இருக்கின்றனர். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

மறுநாள் காலைவிழிக்கும்போதே ஒரே சத்தம். அம்மா, மிகுந்த சோகத்துடன்
``விடியக்காலைலேயே அழகம்மா செத்துப் போயிட்டாளாம்’’ என்றார்கள். அதிர்ச்சியில்
உறைந்து போனேன். சோகையாய் என்னிடம் சிரித்த முகம் நினைவு வர, பின் வீட்டில் கேட்ட ஒப்பாரி சத்தம் அடிவயிற்றை பிசைந்தது... அந்த சத்தம் காதில் கேளாதபடி கதவுகளை சாத்திவிட்டு அழலானேன். மறுநாள் நான் கல்லூரி சென்று விட்டேன். தேர்வுகள் முடிந்து வந்தபோது பின்வீடு பூட்டியிருந்தது. ` வீடு ராசி இல்லேன்னு காலி பண்ணிட்டுப் போயிட்டாங்கம்மா’ என்றார்கள் அம்மா.

நான்கைந்து வருடங்கள் கழிந்தன. படிப்பு முடிந்து, திருமணமாகி, என் பெரியபையன் கவீஷூம் பிறந்திருந்தான். என்னைப் பார்க்கவந்த அம்மா, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம், `நீ தான் எங்க பாப்பா வீட்ல வேலை செயறியா, இது உன் குழந்தையா’ என்றவர்கள் என்னிடம், ‘இது யாரு தெரியுமா, பேறுகாலத்தில செத்துப் போனாளே... அழகம்மா, அவ புருசனுக்குத் தான் இவளை
ரெண்டாந்தாரமா கட்டியிருக்கு’ என்றார்கள். அவள் குழந்தையிடம்,` பாப்பா உன் பேரு என்ன? என்றேன். அது `அளகு’ என்றது அழகாக. `எங்க மூத்தாள் பேரைத்
தான் வச்சிருக்கோம்’ என்றாள் அந்தப் பெண். சோகையாய் என்னைப் பார்த்து சிரித்த அழகம்மாவின் முகம் நினைவில் வந்தது.

27 comments:

காமராஜ் said...

எழுத்து நடை திரும்ப அந்த தேரிச்செம்மண்ணுக்கு இழுத்துப்போகிறது. வழக்குத்தமிழில் இன்னும் கூடுதலாக எழுதலாம் அம்பிகா. அழகம்மா நெகிழ வைக்கிறாள்.

மாதவராஜ் said...

கண்கள் தளும்புகின்றன.....

Sangkavi said...

அழகம்மா மனதில் நிற்கிறார்....

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

முனைவர்.இரா.குணசீலன் said...

சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் ஓராயிரம்..
அதிலொன்றை அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்...

VijayaRaj J.P said...

நோய்க்கும் பாரு...பேய்க்கும் பாரு...என்பது
திருத்த முடியாத மூடநம்பிக்கையை
சமாளிப்பதற்கான பழமொழியோ....

மனதை நெருடும் பதிவு.

சந்தனமுல்லை said...

மனம் கனத்துவிட்டது அம்பிகா!!

அருமையான இடுகை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அறியாமையால ஒரு உயிரே பலி போயிருக்கு. ப்ச், மனது மிகவும் கஷ்டமாகிடுச்சு கடைசில.

Deepa said...

அதிரவைத்த பதிவு. என்ன கொடுமை இதெல்லாம்.. :(

அம்பிகா said...

காமராஜ் அண்ணா,
மாதண்ணா,
நன்றி

நன்றி. சங்கவி.
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், பொங்கல், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

முனைவர் குணசீலன்,
எவ்வளவு தான் முன்னேறினாலும், இதைப் போல சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
பகிர்வுக்கு நன்றி.

உண்மைதான் அண்ணா,
சில நேரங்களில் இப்படி பழமொழியும் தேவைப் படுகிறது, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்.

அம்பிகா said...

முல்லை,
அமித்தம்மா,
பகிர்வுக்கு நன்றி.

கொடுமைதான் தீபா.
அந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு இன்னமும் மனம் அதிரத்தான்
செய்கிறது.

Anonymous said...

அழகம்மாவின் மகள் எப்படி இருக்கிறாள் என்று சொல்ல வில்லையே

பா.ராஜாராம் said...

//அவள் குழந்தையிடம்,` பாப்பா உன் பேரு என்ன? என்றேன். அது `அளகு’ என்றது அழகாக. `எங்க மூத்தாள் பேரைத்
தான் வச்சிருக்கோம்’ என்றாள் அந்தப் பெண். சோகையாய் என்னைப் பார்த்து சிரித்த அழகம்மாவின் முகம் நினைவில் வந்தது.//

கிரேட்!

மாதுஸ் டச்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம்.. இது இன்னும் தொடருதுங்க.. தில்லியில் வீட்டுவேலைகளுக்காக வருகிற தமிழ்நாட்டு பெண்கள் பலரும் சிறுவயதில் கல்யாணமாகி குழந்தைகளையோ அவர் உடல்நலனையோ மொத்தமா கொன்னுக்கிட்டே இருக்காங்க.. :(

குடந்தை அன்புமணி said...

இது போன்ற மூடநம்பிக்கை கொண்டவர்களால் அம்மாவை இழந்த குழந்தைகள் பாவம்...

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

மனசு கனக்குது இதப் படிச்சதுல.

//மூத்தாள் பேரைத்தான் வச்சிருக்கோம்..//

யதார்த்தம்...

Venugopalan said...

உடனடியாகப் பின்னூட்டம் எழுதவில்லையே தவிர, எத்தனை பேரிடம் பகிர்ந்து கொண்டுவிட்டேன் இந்தக் கதையை.........

மருத்துவர் பி வி வெங்கட்ராமன் (ஓமியோபதி) இல்லத்தில் வைத்து நேற்றிரவு அவரது கணினிப் பொறியிலேயே நான் வாசிக்க வாசிக்க என்னவோ ஆகிப் போயின அவரது கண்கள்.....

வாழ்வின் பாதையில் கல்லும், முள்ளும் மட்டுமல்ல கண்ணீர் கொட்டிச் சேற்றின் தடமும் அழுந்தி அழுந்தி நடக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் பூங்கொத்தை நீட்டும்போது புன்னகைக்கிறோம். கனமான தந்தியொன்றைக் காட்டும்போது சிதறுகிறோம்.

நீங்கள் எழுதாத போதே நடந்துவிட்ட அந்தக் கதை, இப்போது வாசிப்பவர்களுக்காக இன்னொரு முறை நடப்பது மாதிரி எழுதுகிறதே உங்கள் கை...படைப்பிலிருந்து தவிப்பும், படைப்பிலிருந்து இளைப்பாறுதலும். படைப்பிலிருந்து தடுமாற்றமும், படைப்பிலிருந்தே மீண்டெழுதலும்.

தொடர்ந்து எழுதி கொண்டிருக்கட்டும், எங்கள் தோழியின் கை............

எஸ் வி வேணுகோபாலன்

kaNNIr

அம்பிகா said...

அழகம்மாவின் மகள், அழகம்மாவின் அம்மா வீட்டில் வளர்ந்தாள்.
நன்றி, Anonymous.

வாங்க, பாரா.
அன்புக்கும், பாராட்டுக்களுக்கும், நன்றி.

உண்மைதான் முத்துலெட்சுமி,
இளவயது திருமணங்கள், தாய், சேய் இருவரையும் பாதிக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி, முத்துலெட்சுமி.

அம்பிகா said...

இப்படி அனாதையாக்கப் படும் குழந்தைகளும் பரிதாபத்துக்குரியவர்களே!..
நன்றி, குடந்தைமணி.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும், அன்புகனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

வாங்க ஹூஸைனம்மா,
உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

அம்பிகா said...

வாங்க வேணுகோபாலன்,

என்னைப் போல் புதிதாக எழுதுபவர்களுக்கு இதைப்போன்ற பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தான், கிரியா ஊக்கிகள்.
வந்தனமும், நன்றியும்.

SanjaiGandhi™ said...

:(

ராகவன் said...

அன்பு அம்பிகா,

அழ வருகிறது. நல்ல நாளும் அதுமா என்ன கண்ண கசக்கிட்டு... என்று அழாம அடக்கிக் கொள்கிறேன். நெகிழ்வு சரியான வார்த்தையான்னு தெரியலை... ரொம்ப தொடுகிறது உள் வரைக்கும்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

cheena (சீனா) said...

அன்பின் அம்பிகா

அழகம்மா - மனம் அழுகிறது - நல்ல நடையில் எழுதப்பட்ட சம்பவம். காலம் மாறினாலும் கிராமப்புறங்களில் இன்னும் இப்படிச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் அம்பிகா

நிலாரசிகன் said...

தூத்துக்குடி மண்ணின் வாசனை எழுத்தில் மிளிர்கிறது.

சுந்தரா said...

ஆறுமுகநேரித் தெருக்களும்,எப்போதோ பார்த்த லதாம்மாவின் முகமும் நினைவுக்கு வந்துபோனது.

நிகழ்வுகளை இயல்பாகச்சொல்லும் கலை உங்களுக்கு எளிதாகக் கைவருகிறது அம்பிகா.

அழகம்மா மனசிலிருந்துபோக நாட்களாகும்ன்னு நினைக்கிறேன்.