Saturday, December 11, 2010

எனது வலைப்பக்கத்தின் வயது ஒன்று; மகாகவிக்கு 128.

.

.சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்ததை எழுத தொடங்கி

இன்றுடன் ஓராண்டு நிறைவுறுகிறது.. பெரிய திட்டமிடல்களோ,

முனைப்போ இன்றி, என் மனம், என் நினைவுகள், என் உணர்வுகள்

என மனதில் பட்டதை ஒரு ஆர்வத்துடன் எழுதினேன். இதுவரை

எழுதிய பதிவுகள் 76, என்னை பின்தொடர்வோர் 140 பேர். மிகப்

பெரிய சாதனையாக இல்லாவிடினும், என் எழுத்துக்கு கிடைத்த

மிகப் பெரிய அங்கீகாரமாகவே கொள்ள முடிகிறது. தமிழ்மணம்

தெரிவு செய்த முதல் இருபது பதிவுகளில் 13 வதாக, ஒருமுறை

வந்ததுமே எனக்கு சாதனையாகத் தான் தெரிகிறது.. என்

பதிவுகளை தொடர்ந்து வாசித்து, வாக்களித்து, பின்னூட்டமிட்டு

எனக்கு அன்பும், ஆதரவும் நல்கும் அனைத்து அன்பு உள்ளங்

களுக்கும், என் அன்பும், நன்றியும். என் பதிவுகள் அச்சில் வர

உறுதுணையாயிருந்த, என்வலைப்பக்கத்தின் முதலாண்டு

நிறைவுக்கு முன்னதாகவே வாழ்த்து தெரிவித்த

திரு.எஸ். வி. வேணுகோபாலன் அவர்களுக்கும் என் நன்றியும்,

அன்பும்.




மகாகவியின் பிறந்த நாளில் என் வலைப்பக்கம் தொடங்கப்

பெற்றது தற்செயலான நிகழ்வெனினும், எனக்கு பெருமைக்

குரியதே! ஆனால் அவர்க்கு அது வருத்தந் தருவதாயிருக்

கலாம். மகாகவியின் பிறந்த நாளில்,


எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணுதல் வேண்டும்.

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்த நல்லறிவு வேண்டும்.

பண்ணிய பாவமெலாம்

பரிதிமுன் பனியேப் போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னையே!


என்பதைத் தவிர வேறென்ன வேண்டிட முடியும்?

.

Friday, December 3, 2010

ஜவ்வு மிட்டாய்

.

’என்னத் தெரியுதா’ சிரித்தபடியே என்னை நெருங்கியவளை முதலில்

இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த `ஸ்பிரிங்’ முடியும், வெகுளி

சிரிப்பும் ஒரு புகைப்படலமாய் நிழலாடியது. `நா ந்தா .....’ பேரைச்

சொன்னதும், சட்டென ஸ்படிகமாய் பளிச்சிட்டன நினைவுகள். `எம் மக’

அவளின் பிரதியாய், அதே சுருட்டை முடியுமாய் நின்ற பெண்ணை

அறிமுகப் படுத்தினாள். `காலேஜ் ல படிக்கா’ குரலில் பெருமை வழிந்தது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின் விலகி சென்ற அவளின் நினைவுகளில்

மூழ்கினேன்.



இருபது வருஷமிருக்குமா அவளைப் பார்த்து... கூடவே இருக்கலாம்.

சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு எதிரில் தான் அவள் வீடு. என்னுடன்

ஐந்தாவதோ, ஆறாவது வகுப்போ, சரியாக நினைவில்லை, சேர்ந்து

படித்தாள். `என்னை தெரியுதா’ என்றோ, அல்லது `நீ ஜோதியக்கா மக

தானே’ எனறோ என்னை அணுகும்பலரை அடையாளம் காட்ட முடியாத

என் ஞாபகசக்தியை அவமானத்துடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவள்

குறித்த அனைத்து நினைவுகளும் பதிந்திருக்க முக்கியமான காரணங்கள்

இருந்தன. முதலாவது அவள் பெயர். இரண்டாவது அவள் அம்மா விற்கும்

ஜவ்வு மிட்டாய்.




`பரிபூரணம்’ இப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என வியப்பாய்

ிருக்கும். இன்னொரு விஷயம், அந்த பெண்ணுக்கு `ர’ வை உச்சரிக்க.

வராது `ஹ’ ன்னு தான் சொல்வாள் இதுக்காகவே ஸ்கூலில் நிறைய

பேர் அவளை கேலி செய்வதுண்டு.

ஒம் பேரு என்ன?

பஹிபூஹணம்.

ஒங்கம்மா பேரு...

ஹாஜபூபதி ( ராஜ பூபதி.)

உந் தம்பி பேரு

ஹாம தொஹ (ராம துரை)

தங்கச்சி...

ஹாஜ குமாஹி (ராஜ குமாரி)

எல்லோரும் கெக்கலி கொட்டி சிரிப்பார்கள். அவளை பார்க்க பாவமா

யிருக்கும். சில சமயம் அழுதும் விடுவாள். அவர்கள் வீட்டில் அத்தனை

பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்

இருந்தது. ` நாக்குல வசம்ப சுட்டு தேச்சி வுட்டா, நாக்கு திருத்தமா

பேச்சி வரும்’னு மருந்து சொல்வோரும் இருந்தனர். வீட்டின் வறுமை

காரணமாக அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள்.



ஸ்கூலுக்கு எதிரில், மேஜையாகவும் இல்லாத, ஸ்டூல் மாதிரியும்

இல்லாத ஒரு பலகை வச்சி, அதில் ஜவ்வு மிட்டாய் வச்சி அவங்க

அம்மா வியாபாரம் பண்ணுவாங்க. அவங்க ஜவ்வுமிட்டாய் ஸ்கூல்

பிள்ளைகளிடம் மிகவும் பிரபலம். நல்ல பஞ்சுமிட்டாய் ரோஸ்கலர்ல,

மஞ்சள் கலரில், பொரிகடலை நொறுக்கி அதில் தூவி, என தினுசு்தினுசா

வச்சிருப்பாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா அம்மா திட்டுவாங்க.

ஈ மொய்க்கும் வாங்க கூடாதுன்னு சொல்வாங்க. அதனால ஒரு தடவ

`அம்மா இப்போ தா போட்டுட்டு இடுக்காங்க’ ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு

போனா. அவங்கம்மா பாகு காய்ச்சிட்டிருந்தாங்க. தம்ளர் தண்ணியில

ஒரு சொட்டு பாகை வுட்டு `இப்பிடி கரையாம இருந்தா பதம் வந்துட்டு’

ன்னு சொல்லி ஒரு அகல பாத்திரத்துல தேங்கா எண்ணய தேச்சி அதுல

ஊத்தி ஆற வச்சாங்க. பாதி சூட்டிலேய எடுத்து, கைலயும் எண்ணய

தேச்சிட்டு, மொத்த பாகையும் சுருட்டி கைல எடுத்தாங்க. சூடா இருக்கும்

போதே இழுக்கணும்‘ னு ஒரு கொக்கில போட்டு இழுக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்குன்னே வாசல் நெலை ல `ட’ மாதிரி ஒரு கொக்கி அடிச்சி வச்சி

இருந்தாங்க. அது எண்ண கசடேறி பளபளன்னு இருந்திச்சி. சூடு தாங்காம

அடிக்கடி கைய ஊதிக்கிட்டாங்க. சூடா மிட்டாய இழுத்து இழுத்து, அவங்க

கையெல்லாம் காய்ப்பு புடிச்சி இருந்திச்சி. ரொம்ப நேரம் இழுத்திட்டே

இருந்தாங்க. `இப்புடி இழுக்கலன்னா மிட்டாயி ஜவ்வு இல்லாம கடுக் கடுக்

ன்னு ஆயிரும்‘னு சொல்லிட்டே எனக்கு மிட்டாய் குடுத்து அனுப்னாங்க.



நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு திடுமென நினைவு வந்தது. அவள்

மகள் அவளைப் போலில்லாமல் சுத்தமாக பேசுவாளா, `ர’ வை அழுத்த

மாய் உச்சரிப்பாளா, என்ன பெயர் வைத்திருப்பாள்? கவலையாய் நினைத்த

போதே, அந்த பெண்ணின் திருத்தமான முகம் நினைவு வந்தது. அதில்

தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய் தோன்றியது. கல்லூரி

யில் படிப்பதாய் கூறியது நினைவு வந்தது. ஜவ்வு மிட்டாயின் இனிப்பு

இப்போதும் தித்தித்தது.

.

Wednesday, December 1, 2010

வினோத நட்பு

.

.விலங்குகளின் வினோத நட்பு பற்றிய சில புகைப்படங்கள், இணையத்தில்

( கூகிள் ) காணக் கிடைத்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.




ஓ..... எத்துணை இனிமையானவை..., அன்பு நண்பனின் கரங்கள்.

-மேரி ஏங்கல் ஃப்ரைட்.




.நட்பு என்பது, ஒரே ஆன்மா.., இரு உடல்களில். _ அரிஸ்டாடில்




நண்பனுடன் இருட்டில் நடப்பது, வெளிச்சத்தில் தனியே நடப்பதை

விடவும் இனிமையானது. - ஹெலன் ஹெல்லர்.





உங்கள் உறவுகளை நிர்ணயிப்பது விதியென்றாலும், உங்கள் நட்பை

நீங்கள் நிர்ணயம் செய்ய முடியும். _ஜக்யுஸ் டிலைட், பிரெஞ்சு கவி





உண்மையான சந்தோஷம் எத்தனை நண்பர்கள் என்பதில் இல்லை,

நண்பர்கள் யார் என்பதிலேயே....- சாமுவெல் ஜான்சன், பிரிட்டிஷ்

எழுத்தாளர்.





நண்பர்களை் அளவிட நினைத்தால், உன்னால் யாரையுமே நேசிக்க

முடியாது. _ மதர் தெரசா.





நட்பு, நிதானமாக அமையலாம்; ஆனால் இறுக்கமானதாகவும்,

நிலையானதாகவும் அமைய வேண்டும்._ சாக்ரடீஸ்




என்னுடைய சந்தோஷத்தை என் நண்பனின் இழப்பில் கொண்டாட

முடியாது._ ஜார்ஜ் வாஷிங்டன்.





ஒரு உண்மையான நண்பன் 10,000 உறவினர்களுக்கு சமம்.

_ யூரி பைட்ஸ் , கிரேக்க எழுத்தாளர்.


.

Thursday, November 25, 2010

பலநாள் பாவமும், ஒருநாள் புண்ணியமும்...

.

.நேற்று மாலையிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது.

பலத்தமழை இல்லையென்றாலும், கொஞ்சம் பலத்த தூறலாக, அவ்வப்

போது கொஞ்சம் பலமாக என இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது.

அந்த சின்ன குடிசையின், முன்னிருந்த ஒட்டு திண்ணையில் சுருட்டி

மடக்கி உட்கார்ந்து இருந்தார் தண்டுபத்து பாட்டி. குடிசையின் பல இடங்

களில் மழைநீர் சொட்டிக் கொண்டிருந்தது. அலுமினிய போணி, தகர

வாளி, பிளாஸ்டிக்டப்பாஎன அங்கங்கே ஒவ்வொன்று, சொட்டும் துளிகளை

வாங்கிக் கொண்டிருந்தன.



பக்கத்து தெருவிலிருக்கும் இந்துஸ்கூலில் லீவு விட்டுவிட்டார்கள் போலும்

குழந்தைகள் `ஹைய்யா’ என்ற உற்சாக ஆரவாரத்துடன், `இன்னிக்கு

ஃபுல்லா மழ பெய்யுமாம்’ எனக் கத்தியபடி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாயங்காலம் மாதிரி அடைத்து இருட்டிக் கொண்டிருந்த வானத்தை பார்க்க,

பார்க்க பாட்டிக்கு வயிற்றில் புளியை கரைத்தது போலிருந்தது.


பாட்டியின் பேரே நிறைய பேருக்கு தெரியாது. பிறந்த ஊரான தண்டுபத்தி

லிருந்து வாழ்க்கை பட்டு வந்ததிலிருந்து `தண்டுபத்தாள்’ தான்.இதைப்

போல `காயாமொழியாள், மூலக்கரையாள்’, என ஊர் பெயரே சொந்த

பேரானவர்கள் நிறைய பேர் இருந்தனர். கொஞ்சம் பெரிசுகளுக்கு தண்ட

பத்தக்கா, மற்ற எல்லோருக்கும் தண்டபத்து பாட்டி தான். பாட்டி அவள்

கணவர்க்கு இரண்டாம் தாரம். அவரை விட அவர் கணவர் இருபது

வயது கிட்ட மூத்தவர். மூத்தாள் மகன் ராமசாமிக்கு 18 வயதிருக்கும்.

இவரைவிட நான்கைந்து வயது தான் குறைவு. திருமணமான கொஞ்ச

நாளிலேயே கணவர் போய் சேர்ந்துவிட, குழந்தை குட்டி இல்லாத

பாட்டி தனியானார். `சொந்த மகனே ஒண்ணும் செய்றதில்ல, இவ எங்க

நம்மள கவனிப்பா’ன்னு பாட்டி தன்கையே தனக்குதவின்னு வேலை செய்ய

ஆரம்பத்தார்.


நல்ல மினுமினுக்கும் கறுப்பு நிறம், எண்பது வயதுக்கு தளராத தேகம்.

மூணு வருஷத்துக்கு முன் `சிக்கன்குனியா’ காய்ச்சல் வரும்வரை,

பாட்டி அறுப்பு, நடவு என ஏதோ ஒரு வயல் வேலை பார்த்துக் கொண்டு

தானிருந்தார். தெருவில் முக்கால்வாசி பேரின் நடையே காய்ச்சலால்

வித்தியாசமாக மாறிவிட்டது. பாட்டியையும் மூட்டுவலி படாதபாடு படுத்தி

விட்டது. காய்ச்சலில் கிடந்த போது, ராமசாமியின் மகள் பாக்கியம் தான்

பார்த்துக் கொண்டாள். கொஞ்சம் முன்கோபம் அதிகமே தவிர ஓரளவு

செய்வாள். யார்யாரையோப் பார்த்து, எழுதிப்போட்டதில் முதியோர்

உதவித் தொகை 400 ரூ வருகிறது. அதில் 200 ரூ வை சாப்பாட்டுக்கு

என பாக்கியத்திடம் கொடுத்து விடுவாள். மிச்சப் பணத்தை சேர்த்து

வைத்ததில் 2000 ரூ இருக்கிறது.



கூரைக்கு புதுஓலை வைக்கலாம் என விசாரித்துப் பார்த்தாள். `ஓல

வாங்க மட்டுமே 2000 ரூ ஆவுமாம், அப்புறமா மோட்டு ஓல தனியா

வேணும், இத்துப் போன நாலஞ்சு கம்ப மாத்தணும், கூலி தலக்கி

400 ரூன்னு ரெண்டு பேருக்கு, ‘ பாட்டி தனக்குள் கணக்கு பார்த்துக்

கொண்டு இருந்தார்.



மழை விடுவதாக இல்லை. `போனதடவ ரோடு போடுறேன்னு ரோட்ட

வேற ஒசத்திப் புட்டானுவ. மழத்தண்ணீ உள்ள வந்துறும் போல இருக்கு’

எரிச்சலோடு அங்கேஇங்கேயிருந்து நாலைந்து துண்டு செங்கல்லை எடுத்து

வந்து வாசல் முன்னால அடுக்கி வச்சு, அதும்மேல கொஞ்சம் மண்ணை

அள்ளிப் போட்டு தற்காலிகதடுப்பு சுவர் அமைத்து அதையே பயத்துடன்

பார்த்துக் கொண்டிருந்தார். `ஹூம்... பல நாள் பாவத்த தாங்குனாலும்,

ஒரு நாள் புண்ணியத்த தாங்க முடியாது போல’, அங்கலாய்த்துக் கொண்டு

இருந்தார். மழை இன்னும் பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. பக்க வாத்யமாக

பாட்டியின் புலம்பலும் சேர்ந்து கொண்டது.

.

Friday, November 19, 2010

நல்லதொரு குடும்பம்...., பதிவுலகம்.

.

பதிவர் செல்வேந்திரனின் திருமணத்தில் கலந்து கொள்ள மறுநாள் காலை

திருச்செந்தூர் வரப்போவதாக, புதன்இரவு மாதுஅண்ணனிடம் இருந்து

போன் வந்தது. பதிவுலக நண்பர்கள் சிலரும் வந்திருப்பதாகவும்,

திருமணம் முடிந்து திரும்பும் போது என்னை பார்க்க வருவதாகவும்

மாதுஅண்ணன் கூறியதும் சந்தோஷத்துடன், ``அப்போ நம்ம வீட்டுக்கு

மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள்’ என்றேன். நண்பர்களிடம்

கேட்டு, அண்ணன் சரியன்றதும், மிக உற்சாகமாக, சந்தோஷமாக

காத்திருந்தேன். ஸாரி, காத்திருந்தோம். ஆம், என் கணவரும் லீவு

போட்டுவிட்டு வீட்டிலிருந்தார்.



இந்த டிசம்பர் வந்தால், `சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற பீடிகை

யுடன் பதிவுலகத்துக்கு வந்து ஒரு வருடம் முடியப் போகிறது. எழுத

ஆரம்பித்த சில நாட்களில், `நான் உங்கள் பக்கத்து ஊர்க்காரி, தற்சமயம்

துபாயில் இருக்கிறேன்’என்று் இமெயிலில் அறிமுகமானவர் அன்புத்தோழி

சுந்தரா. பின்னர் chat ல் தொடர்ந்த அன்பு, சென்ற ஆகஸ்ட் மாதம்,

லீவில் ஊர் வந்திருந்த போது, ஆறுமுகனேரி வந்து, என் வீட்டை

விசாரித்து, திடீரென என்முன் வந்து நின்றபோது சந்தோஷத்தில் திக்கு

முக்காடிப் போனேன். மிகக் குறைந்த நேரமே பேசிக் கொண்டிருந்தோம்.

அவரும் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. நானும் வெளியே

கிளம்பிக்கொண்டிருந்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச் சென்றார்.

மறுநாள் செல்லில் அழைதுப் பேசினேன். இரண்டொரு நாளில் ஊர்

திரும்புவதாகவும், அடுத்தமுறை வரும்போதும் கட்டாயம் வருவேன் என்று

விடைபெற்றார். நான் சந்தித்த முதல் வலையுலக சொந்தம் இவர் தான்.



சமீபத்தில் சென்னை வந்திருந்த போது பதிவர் தீபாவின் வீட்டில் வைத்து,

அகிலா ஸ்ரீ அகிலாவை தீபா அறிமுகப் படுத்தினார். `அக்கா’ என வாய்

நிறைய அழைத்து அன்போடு பேசிய அகிலாவை சந்த்தித்தது அதுதான்

முதல்முறை என என்னாலேயே நம்ப முடியவில்லை.


நேற்று (வியாழன்) மதியம் பன்னிரண்டு மணியளவில், மாதுஅண்ணன்

பாரா அண்ணன், அண்ணன் மணிஜீ, வடகரைவேலன் ஆகியோர் வந்தனர்.

பின்னூட்டங்கள் மூலம் அன்பை பொழியும் பாரா அண்ணன், எங்கேயோ

கண்காணாத தேசத்தில் இருந்து அன்பால் அறிமுகமான பாரா அண்ணன்,

என்முன் எளிமையான சிரிப்புடன் அமர்ந்திருந்தார். என்னை கட்டாயம்

பார்க்க வேண்டும் என்றதாக மாதுஅண்ணன் கூறிய போது நெகிழ்ந்து

போனேன். அண்ணன் மணிஜீ, வேலன் ஆகியோர் எழுத்துக்களை ஓரளவு

வாசித்திருக்கிறேன். சிறிது நேரம் குடும்பம், குழந்தைகள் என பரஸ்பர

அறிமுகங்கள், விசாரிப்புகளை தொடர்ந்து கலகலப்புக்கு பஞ்சமில்லாத

அரட்டை, சிரிப்பு, பேச்சு, பின் மதிய உணவு என நேரம் போனேதே

தெரியவில்லை. தங்கையின் கணவரை அத்தான் என்றுதான் அழைப்

போம் என பாராஅண்ணன், என் கணவரை அத்தான் என்று உரிமையோடு

பாசத்தோடு அழைத்த போது, அவரும் நெகிழ்ந்து தான் போய்விட்டார்.

மணிஜீஅண்ணன் பிறந்தநாள் என்றறிந்து சந்தோஷத்துடன் வாழ்த்தினோம்

அப்பாவை வணங்கி பிறந்தநாள் ஆசீர்வாதங்கள் பெற்றபின்னர், அனைவ

ரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றனர். வீடு வெறுமையாய் ஆனாலும்

மனம் நிறைந்திருந்தது.


புதியவர்கள், முதல்முறையாக சந்திக்கிறோம் போன்ற உணர்வுகளின்றி,

ஒரு குடும்பத்தவர் போல் நெருக்கமாய் உணர்ந்தோம். எங்கோ ஒரு

கிராமத்தில் வாழும் என்னையும், இணைய குடும்பத்தில் இணைத்து

வைத்த பதிவுலகை, சந்தோஷமாய், பெருமையாய், நன்றியுடன்

நினைக்கிறேன். இந்த சந்தோஷத்துக்கு காரணமான செல்வேந்திரன்

தம்பதியினர்க்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

.

Friday, November 12, 2010

ரயில் பயணத்தில் ஒரு கனவான்.

.

.சமீபத்தில் சென்னை செல்ல நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸை தேர்ந்தெடுத்த

போது எனக்கு அத்துணை விருப்பமில்லை.ரயில்பயணம் பிடிக்காததால்

அல்ல. இங்கு நாலரை மணி லிங்க் ட்ரெய்னில் ஏறி, நெல்லை சென்று,

அ்ங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸில் பயணித்து, சென்னை சென்றடையும்

நேரம் காலை 6 1/2 என்பது பலசமயங்களில் 7 1/2 ஆகிவிடுமாதலால்

மொத்தம் 15 மணிநேரம் பயணம்.., வெறுத்துப் போய்விடுகிறது. ரயில்

பயணம் சௌகர்யம் என்றாலும், அலுப்பு தட்டிவிடுகிறது. இதைவிட10 1/2

அல்லது 11 மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடுகிற ஆம்னிபஸ்

களே தேவலாம் என்றிருக்கிறது.



நானும், கணவரும் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரில் ஒரு பெண்மணி,

பள்ளி ஆசிரியை என்பது கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்து

தெரிந்தது. அடுத்து இரு ஆண்கள், சைட் சீட்டில் ஒருகணவன், மனைவி

இரு பெண்குழந்தைகள். முதல் பெண்ணுக்கு ஐந்து வயது இருக்கலாம்.

அடுத்தது ஏழெட்டு மாதமே நிரம்பியிரு்ந்த கைக்குழந்தை. அந்த கணவர்

நல்ல கண்ணியமான தோற்றத்துடன் காணப்பட்டார். நேர்த்தியாக உடை

அணிந்திருந்தார். பார்க்க படித்தவர் போல் தெரிந்தார். ரயில் கிளம்பியது

தான் தாமதம், ஒரு வாராந்தரியை எடுத்துக் கொண்டு மேல் பெர்த்துக்கு

சென்று விட்டார். அந்த முதல்பெண் `துறு துறு வென ஓடிக்கொண்டும்,

மேல்பெர்த்துக்கும், கீழ்பெர்த்துக்கும் ஏறி இறங்கிக் கொண்டுமாக இருந்தது.

மின்விளக்கு, மின்விசிறிகளின் சுவிட்சுகளை போட அணைப்பதுமாக

விளையாடிக் கொண்டிருந்தது. அந்தபெண் மடியில் கைக்குழந்தையை

வைத்துக் கொண்டு, பெரியபெண்ணின் அத்தனை குறும்புகளையும்

சமாளித்துக் கொண்டிருந்தார்.



சற்று நேரத்தில் அனைவரும் சாப்பிட தொடங்கினர். அந்த கணவர்

கொண்டு வந்திருந்த பார்சலை எடுத்து தருமாறு உத்தரவிட்டார்.

மேலிருந்தபடியே பார்சலை வாங்கிக் கொண்டு அங்கேயே வைத்து

சாப்பிட தொடங்கினார். பெரிய பெண்ணுக்கு அம்மா ஊட்டிக் கொண்டி

ருந்தார்.பெண் தண்ணீர் கேட்க, அந்த பெண் கணவரிடமிருந்த தண்ணீர்

பாட்டிலை தருமாறுக் கேட்டார். அவர்,`ஏன் வேற பாட்டில் இல்லையா’

என்று கேட்டார். மனைவி இல்லையென தலையாட்டியதும், அவருக்கு

வந்ததே கோபம்.,` ஒரு பாட்டில் தண்ணீ எப்படி போதும், காலைல

வரைக்கும் வேண்டாமா? அறிவிருக்கா ஒனக்கு’ என காச்மூச் எனக் கத்த

ஆரம்பித்தார். ``மூணு பெருக்கு ஒரு பாட்டில் தண்ணீ... ஹூம்..’’

தலையிலடித்துக் கொண்டார். அவரின் மனைவி தலை கவிழ்ந்து,

கீழுதட்டை கடித்து, பொங்கிவரும் கண்ணீரை அடக்க பிரயத்தனம் செய்து

கொண்டிருந்தார். அந்த இடமே நிசப்தமாகி விட, அத்தனை பேரும் அந்த

கனவானை உறுத்துப் பார்த்தோம். `நீயெல்லாம் ஒரு மனுஷனா?’ என்ற

கேள்வி அனைவர் பார்வையிலும் தொக்கி நின்றது. நான்குபேர் முன்னிலை

யில் குழந்தைகளை அதட்டுவதே நாகரீகமான செயல் அல்ல. ஆனால்

அந்த கனவான் எதைப்பற்றியும் கவலைப்படாமல், விடுவிடென இறங்கி

சென்றவர், சற்று நேரம் கழித்து வந்தார்; மீண்டும் மேலேறினார்.

மல்லாந்து படுத்தவர் நிச்சிந்தையாக தூங்க ஆரம்பித்தார். கீழே அந்தப்

பெண் அழும் கைக்குழந்தைக்கு பசியாற்றிக் கொண்டிருந்தார். மெல்லிய

குறட்டையொலி வெளிப்பட்டது அந்த கனவானிடமிருந்து.

.

Tuesday, November 9, 2010

பொறுப்புணர்வு.

.

.நான் எழுதிய `கொட ரிப்பேர்’ என்ற சொற்சித்திரம், செம்மலர் தீபாவளி

மலரில் வெளியாகியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்

மகிழ்கிறேன்.


பொறுப்புணர்வு

.நான்கு சாலைகள் சேரும் இடத்தில், ஒர்ஓரமாக அந்த பெரிய சின்டெக்ஸ்

நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப் பட்டிருந்தது. சுற்றிலுமிருந்த நான்கைந்து

தெருமக்கள் குடிநீர் தவிர்த்த மற்றைய அனைத்து தேவைகளுக்கும் அந்த

நீர்தேக்கத்தொட்டியையே நம்பியிருந்தனர்.வீடுகளில் கிணறு, போர்வெல்

அமைத்திருந்தவர்கள் தவிர, மற்ற அனைவரும் அங்கே தான் தண்ணீர்

பிடிப்பார்கள். தொட்டியின் இருமருங்கிலும், குழாய்கள் அமைக்கப்பட்டு

சுற்றிலும் சிமெண்ட்டினால் மேடை கட்டப் பட்டிருந்தது. அதிக உப்பாயிரா

மல், கொஞ்சம் சப்பென்றிருக்கும். குடிநீர்குழாய்கள் காலை வாரிவிடும்

சமயங்களில், சோறு பொங்கவும், ஏன் குடிப்பதற்கும் கூட சிலர் இந்நீரை

பயன்படுத்துவதுண்டு.



அந்தப்பகுதியை கடந்து செல்கையில் கவனித்தேன், அந்த தொட்டியில்

சிறுதுளை ஏற்பட்டு, அதன் வழியே தண்ணீர் சர்ரென்று பீய்ச்சியடித்துக்

கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சிலர் தண்ணீர் பிடித்துக்

கொண்டிருந்தனர். இலேசாக M_Seal வைத்துக்கூட அடைத்து விடலாமே

என எண்ணமிட்டவளாய் கடந்து சென்றுவிட்டேன். இரண்டு நாட்களாய்

இதே நிலை தொடர்ந்தது.



மூன்றாவது நாள் பார்க்கும் போது துளை அடைக்கப் பட்டிருந்தது. சரி

செய்து விட்டர்கள் போலும் என நினைத்தவள், அருகிலிருந்த சிறுமி

யிடம் ``இதை அடைத்துவிட்டார்களா’’ எனக் கேட்டேன். அந்தப்பெண்

தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை சுட்டிக் காட்டி

`அதோ அவங்க தா பபுள்கம்மை வச்சி அடைச்சி வச்சிருக்காங்க’’

என்றாள்.

.