Wednesday, February 16, 2011

மனப்பிறழ்வு..

`தொரலிங்கத்துக்கு பைத்தியம் புடிச்சிட்டாம்’ தெரு முழுசும் ஒரே பேச்சாகக் கிடந் தது. தொரலிங்கம் சுபாவத்தில் ஒரு அப்பிராணி. குரலுயர்த்திப் பேசவோ, சண்டை யிடவோ தெரியாது. அப்படிப் பட்டவன் தான், இப்போது திறந்த வாய் மூடாமல் பேசிக் கொண்டே யிருக்கிறான். ஒரே சொற்பொழிவுதான். அதுவும் எப்படி, பழைய தமிழ் படங்களில் பேசுவார்களே, அப்படி தூய தமிழில் பேசுகிறான். அவன் மனைவி ராஜம் செய்வதறியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாள். `எந் தலவிதியா இது, நல்லா யிருந்த மனுஷன் இப்படி கோட்டி புடிச்சி பேசுராறே, நா என்ன பண்ணுவேன்’ ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாள்.


தொரலிங்கத்துக்கு அம்மா கிடையாது. சின்ன வயசிலேயே இறந்து போயிட்டாங்க. மாற்றாந்தாயிடம் தான் வளர்ந்தான். கொடுமை என்றில்லாவிட்டாலும் பெரிய ஒட்டுறவோ நெருக்கமோ கிடையாது. இரண்டு தம்பிகள், தங்கையிடமும் அப்படியே. சென்னையில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். அப்போது தான் அவனுக்கு கல்யாணமும் முடிவாகியது. பொண்ணு அதே ஊர், அதே தெரு தான்; நாலைந்து வீடுகள் தள்ளி. சின்ன வயசுலப் பார்த்திருக்கிறான். ஆளு நல்ல அம்சமா தான் இருப்பாள். சந்தோஷத்தில் மிதந்தான்.


அவனுக்கு பேசிவைத்திருந்த ராஜமோ சுபாவத்தில் அவனுக்கு எதிர்மாறானவள். வாயாடி, மகா கர்வி. மாநிறம் தான் என்றாலும் `பளிச்’ ன்னு இருப்பாள். ஐந்து தங்கைகள், ஒரு தம்பி என பெரியக் குடும்பம் அவளுடையது. அப்போது இவளுக்கு 18 வயது தான் ஆகியிருந்தது. மாப்பிள்ளை தொரலிங்கத்தை அவளுக்கு அறவே பிடிக்க வில்லை. குள்ளமா இருப்பான். கொஞ்சம் கூன் வேற போடுவான். ரெண்டு கையும் கொஞ்சம் திருகினாப்புல இருக்கும். ஒரு கால் கொஞ்சம் கட்டை என்பதால் நடக்கும் போது ஒரு மாதிரி குதிச்சி குதிச்சி நடக்குற மாதிரி தெரியும். எரிச்சலா வந்தது. அம்மாவிடம் முணங்கிப் பார்த்தாள், மூஞ்சிய காட்டிப் பார்த்தாள். எதுவும் நடக்க வில்லை. வாய மூடிட்டு சும்மாக் கிட, நாம இருக்குற நெலமைல இதவிட நல்ல மாப்ள கெடைக்க மாட்டான். அவனுக்கு என்ன கொறச்சல் ’என மகளை ஒரேயடியாக அடக்கி விட்டாள்.


அத்தனைக் கோபத்தையும் தொரலிங்கத்து கிட்டே காட்டினாள். `உம்மேல ஒரே வீச்சமா வீசுது, கத்தாழ நாத்தம் அடிக்குது, தூரப் போ என விரட்டுவாள். ஒழுங்கா சவரம் செய்யப்படாமல் வளர்ந்திருந்த தாடியப் பாத்து, `ஆட்டு தாடி மாதிரி இருக்கு. பட்டணத்தில் பூதம் ஜீ.பூம்பா’ என்பாள். அவன ஒரு மனுசனாவே மதிக்க மாட்டாள். பாடாப் படுத்தினாள். அவன் `என்ன ராஜம், கொழம்பு இப்படி யிருக்கு’ என்றால் போதும்; வேற வினையே வேண்டாம். பொழிஞ்சு தள்ளிருவாள். `உம்மூஞ்சிக்கு இது போதும், பேசாம தின்னுங்க’ என்பாள். ஆனாலும் கூட அவள் காலால் இட்ட வேலை களை இவன் தலையால் செய்து முடிப்பான். தண்ணி புடிச்சிக் குடுப்பான், துணி தொவச்சிக் குடுப்பான், சமயத்துல வாசல் பெருக்கி தெளிக்கவும் செய்வான். உள்ளூர்லயே ஒரு காண்ட்ராக்டர் கிட்ட வேலைக்குப் போனான. நல்ல உழைப்பாளி அவன். உடம்புக்கு சரியில்ல ன்னாலும் லீவு போட விட மாட்டாள். `உடம்புக்கு என்ன கொள்ளை, பேசாம ஒரு மாத்திரைய முழுங்கிட்டு வேலைக்கு போற வழியப் பாரு’ என்று விரட்டி விடுவாள். மனைவி அமைந்தது அவனுக்கு ஒரு சாபமாகவே ஆகிப் போனது..


எப்படியோ ரெண்டு பொண்ணுங்க பொறந்துச்சுங்க. மூத்தவ அப்படியே தாயைக் கொண்டிருந்தாள்; தோற்றத்திலும், குணத்திலும். சின்னவ அப்படியே தகப்பன எங்கேன்னு இருந்தாள். இதோ முப்பது வருச குடும்ப வாழ்க்கையும் கழிந்து விட்டது. போன வாரம் தான் ரெண்டாவது பொண்ணுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாவது நாளில் இருந்து தான் இவன் இப்படி பேச, சிரிக்க ஆரம்பித்தான்.


கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தவன், இப்போது கம்பீரமாக பேசலானான். முகத்தில் ஜீ.பூம்பா தாடியெல்லாம் இல்லை. மகள் கல்யாணத்திற்காக ஷேவ் செய்திருப்பான் போலும். `ஏய் , ராஜம், இங்கே வா’ கம்பீரமாக அதட்டும் அவனை முறைத்த படியே, `என்ன அதிகாரமெல்லாம் ஒரேயடியா இருக்கு’, என்றவளை மீண்டும் அதட்டினான். `மறு பேச்சு பேசாதே, வா என்றால் வா’ என்றான். எங்கேயோ தேடிப்புடிச்சி சமையல் குறிப்பு புத்தகங்கள் நான்கைந்து வாங்கி வந்தான். `உனக்கு சமையல் செய்யவே தெரிய வில்லை. இதைப் படித்து விட்டு ஒழுங்காக செய்’ என்றவனை பயத்துடன் பார்த்தாள். நடுராத்திரி 12 மணிக்கு எழும்பி உட்கார்ந்து சாமி படத்தை எல்லாம் எடுத்து வைத்து ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜை செய்தான். `ஏ ராஜம், உன்மேல் துர்நாற்றம் வீசுகிறது, போ, போய் குளித்து விட்டு வா’ என்றான். `ஆமா... எனக்கு வேற வேல இல்லை பாரு’ என மறுத்தவளை பளார் பளாரென நான்கைந்து அறைகள் விட்டான். `அய்யய்யோ.... இந்த பாவி என்ன கொல்றானே’ அலறியடித்து பக்கத்து வீட்டுக்கு ஓடினாள்.


மறுநாள் கலையில் இளைய மகள் அப்பாவை பார்க்க வந்தாள். சர்வாங்கமும் நடுங்கி கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த அம்மாவை பார்க்க இப்போது பாவமா யிருந்தது. தொரலிங்கம் இப்போதும் விறைப்பாக நின்று பேசிக் கொண்டிருந்தான். மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாசலில் கார் வந்து நின்றது. `எனக்கா பைத்தியம், வாசல்நிலையில் ஓங்கி குத்தியவன், எனக்கொன்றும் பயமில்லை, நான் எங்கு வேண்டுமானாலும் வருவேன், பின்வாசல் வழியாக வர வேண்டுமா அல்லது முன்வாசல் வழியாக வர வேண்டுமா’ வீரவசனம் பேசியபடி காருக்குள் போய் அமர்ந்து கொண்டான். `பாத்தியா, இப்படித்தான் வசனமா பேசிக்கிட்டே இருக்காரு’, மகளிடம் சொன்னவள், `செத்த நேரம் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கெடங்களேன்’ பழக்க தோஷத்தில் மறுபடி அதட்டினாள். `அம்மா, நீங்க கொஞ்சநாள் அப்பாகிட்ட சண்ட போடாம, எதுத்து பேசாம, அன்பா இருங்க, அப்பாக்கு தன்னால சரியாயிரும்’ என்றாள் மகள் அழுதுகொண்டே!.

.

23 comments:

எல் கே said...

தன் மகள்களுக்காக தன்னை அடக்கிக் கொண்டவன், பின் வீறு கொண்டு எழுகிறான். நல்ல நடை

'பரிவை' சே.குமார் said...

Kathai romba nalla irukku... avar thanathu pala varuda adakku muraiyai ippadi paithiyam pola kattukiraro...?

Sriakila said...

அடக்கி வைத்திருந்த மன அழுத்தம் வெளியே வரும்போது அனைவருக்கும் பைத்தியமாகத்தான் தெரிவோம். அன்பு தொலையும் இடத்தில் அகங்காரமும், அழுத்தமும் பாடாய்படுத்தி எடுத்துவிடும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும்.

நீங்கள் பதிவில் சொன்ன கதையில், அன்பை செலுத்த முடியாத அளவுக்கு மனஅழுத்தம் உருவாக காரணம் கட்டாயக் கல்யாணம்தான்.

நல்ல பகிர்வு!

Chitra said...

`அம்மா, நீங்க கொஞ்சநாள் அப்பாகிட்ட சண்ட போடாம, எதுத்து பேசாம, அன்பா இருங்க, அப்பாக்கு தன்னால சரியாயிரும்’ என்றாள் மகள் அழுதுகொண்டே!.


......மனதை கனக்க வைத்த இடம்.... நேரில் இருந்து பார்ப்பது போல, ஒரு feeling கொண்டு வரும் எழுத்து நடை. பாராட்டுக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

இதை ஒரு குறும் படமாகவே எடுக்கலாமே.....
அருமை அருமை..... எதுக்கும் இதை காப்பி ரைட் எடுத்து வச்சிக்கோங்க.....

ஹுஸைனம்மா said...

புழுங்கிய மனசு, காற்று வாங்குகிறது இப்ப.

ஹேமா said...

அம்பிகா...ஒவ்வொருவரும் ஒருவித பைத்தியங்களே.இப்படியானவர்கள் நடுவில் அகப்படும் குழந்தைகள்தான் பாவம் !

சி.பி.செந்தில்குமார் said...

கதை நல்லாருக்கு

பா.ராஜாராம் said...

நல்லாருக்குடா அம்பிகா! :-)

ராமலக்ஷ்மி said...

மிக நன்று அம்பிகா.

வகையில், அனுபவக்கதை எனும் குறிப்பு இன்னும் அதிர்வைத் தருவதாக உள்ளது.

ஜீவன்சிவம் said...

மனதை தொடும் எழுத்து நடை. வாழ்த்துக்கள் அம்பிகா

Unknown said...

எங்க கிராமத்துல தொரலிங்கம் மாதிரியே ஒரு ஆளு இருந்தாரு..

கண்முன் அவர் குடும்பத்தை பார்த்த மாதிரி எழுதி உள்ளீர்கள்...

பாராட்டுக்கள்,,

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லாருக்குங்க..

அடக்கி வைக்கப்பட்டவர்கள் என்றாவது ஒரு நாள் வெடித்தெழத்தான் செய்வார்கள். சிலர் மட்டும் இப்படியும்...

சுந்தரா said...

ஆழ்மனதில் அடக்கிவைத்திருந்த உணர்வுகள், அது, செந்தமிழில் வெளிவருவதுதான் வித்தியாசம்.

நல்ல பகிர்வு அம்பிகா.

வினோ said...

கடைசி வரியில் வாழ்கிறது உண்மை...

ஓலை said...

நல்ல இடுகைங்க.

pichaikaaran said...

இதயம் தொட்ட கதை

sury siva said...

ராமலக்ஷ்மி வலைப்பதிவு வழியே உங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன்.
உள ரீதியான காரணங்களை உள்ளடக்கி
ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள். இதை கதை என்று சொல்லி விட இயலாது.
என்னுடைய சுற்றத்தால் வீட்டிலும் இது போன்று ஆனாலும் மாற்றி நடந்திருக்கிறது.
அந்த பெண் அழகென்றால் அப்படி ஒரு அழகு. அவள் அப்பா அவளை நீ இன்னும் ஒரு
எம். எஸ். சுப்பு லக்ஷ்மி யாக திகழப்போகிறாய் என்று சொல்லும் அளவுக்கு இசையில் நாட்டமும்
திறமையும் கொண்டிருந்தாள். இருந்தாலும், அந்தக்கால, ஒரு ஆர்தொடாக்ஸ் குடும்பத்தில்
அவள் வாழ்க்கைப்பட்டாள்
(contd...)
subbu rathinam

sury siva said...

கணவர் மிகவும் கெள்ரவமான அரசாங்க வேலை தான். இருந்தாலும்
அப்பா அம்மா சொல் தாண்டமாட்டார். மாமியார் மாமனார் படுத்தும் பாடுகளுக்கும், கெடுபிடிகளுக்கும்

தாங்க முடியாமல், தத்தளித்தாள். கணவர் வாளா இருந்தார். அப்பா அம்மா செய்வது கொடுமை தான் என்று

தெரிந்தாலும்
ஒன்றும் செய்ய இயலாத நிலை. அப்பா அம்மாவை எதிர்த்து பேச அவருக்கு மனம் வந்ததில்லை. இப்படியே
காலம் கழிந்தது. மூன்று குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிறந்தன. அவர்க்ளையும் உருவாக்குவதில்
அவள் மிக்க சிரத்தையும், சிரமமும் மேற்கொண்டாள். உதாரணத்திற்கு சொல்லப்போனால், குழந்தைக்கு
ஜுரம் அடிக்கிறது டாக்டரிடம் அழைத்துப்போவோம் என்றால் கூட அனுமதி பெறாமல் செல்லக்கூடாது.
செவ்வாய், சனி அன்று முதல் தடவையாக டாக்டரிடம் செல்லக்கூடாது என்றெல்லாம் இருந்தது. அந்த
சமயம் பார்த்து இவளுக்கு அந்த மாதம் மூன்று நாளாக இருந்தால், ஜுரம் அடிக்கும் குழந்தையை பார்க்கக்
கூட முடியாது.
(contd...)
subbu rathinam

sury siva said...

தினப்படி, எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின், மதியம் ஒரு மணிக்கு உணவு. அதுவும்
முந்தைய நாள் இரவு சோறு மிச்சத்தை தான் முதலில் தீர்க்கவேண்டும். இப்படி எல்லாம்

கெடுபிடி.இத்தனைக்கும்
அவள் மாமனார் மாமியார் இருவரையும் மனம் கோணாது அவர்கள்: சொல் தட்டாது நடந்தாள்.

காலம் நழுவி ஓடியது.
முப்பது வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் மாமனார் காலமானார்.
இவள் காத்திருந்தவள் போல, வீட்டு நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்ளவேண்டிய காலம் துவங்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக, இரண்டே வருடங்களில், இவள் தன் மாமியாரை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்.
யானைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம் என்று வெளிப்படையாக வே சொல்லி, பலர் முன்னிலையும்
என்னை நீங்கள் எப்படிஎல்லாம் செய்தீர்களோ அப்படி யே தானே நானும் உங்களுக்கு செய்கிறேன். கூட‌
இருந்தால் சொல்லுங்கள் என்று சீண்டவும் செய்தாள்.

(contd..)
subburathinam

sury siva said...

அவளது கணவனோ ( இப்போது அவர் அரசாங்கத்தில் ஒரு மிகப்பெரிய அதிகாரி) இப்பொழுதும்
வாளா இருந்தார். அம்மா கண்ணீர் வடித்தாள் அதைத் துடைக்கும் தைரியம் அவரிடம் இல்லை.
அன்று மனைவி கொடுமைப்படுத்தப்படும்பொழுது எப்படி பேசாமல் இருந்தாரோ அதே போல்;
இப்பவும் இருந்தார்.
நான் அவரிடம் ஒரு நாள் சொன்னேன்: நீங்கள் அன்று செய்ததும் சரியில்லை. இன்று செய்வதும்
சரியில்லை .
அவர் சொன்னார்: அவரவர் கர்ம வினையை அவரவர் அனுபவிக்கத்தானே செய்யவேண்டும்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெண்ணுக்கு பெண் தான் எதிரியோ என எண்ணினேன்.
அது சரி.
' சாது மிரண்டால்' என்ற படம் ஒரு 40 ஆண்டு களுக்கு முன்னால் வந்தது. அது உங்கள் பதிவு
படித்தபின் நினைவுக்கு வந்தது.

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com
http://vazhvuneri.blogspot.com

ponraj said...

ஒரு நல்ல பதிவு!!

Thenammai Lakshmanan said...

முகத்தில் அறைந்தது யதார்த்தம்.. இப்படித்தான் ஆகிறது அடங்கிக் கிடந்தவர்களின் நிலைமை.. நாம் தெரியாமல் பைத்தியம் என்கிறோம்..ஒவ்வொண்ணுக்கும் ரீசன் இருக்கு என்பதி உணர வைத்த பதிவு அம்பிகா..