Wednesday, April 6, 2011

`அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’



சாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.


திரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே!


டைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.


இளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.







அன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக்கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.



ஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...!





சுஜாதா...! எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.

.