Monday, December 28, 2009

அம்மாவின் கொலுசு


அம்மா...! பெயருக்கேற்றார் (ஜோதி) போல் `பளிச்’ என்று இருப்பார்கள். நெற்றியில் திருநீறு, குங்குமப்பொட்டு, சந்தனகீற்று எப்போதும் இருக்கும். அம்மாவுக்கு அழகான முடி, கருகருவென, சுருட்டை சுருட்டையாய், அடர்த்தியாய் ..., எண்ணெய் தேய்த்து அழுந்த வாரி இருப்பார்கள். காலை எழூந்ததுமே முகம்கழுவி, தலைசீவி, பொட்டு வைத்து, அம்மாவின் முதல்வேலையே இதுவாகத்தான் இருக்கும். அம்மாவுக்கு இந்த பழக்கம் அவர்கள் அப்பாவிடம் இருந்துதான் வந்திருக்கும் என நினைக்கிறேன். அம்மா பிறந்தபின் தான் தாத்தாவுக்கு `தொட்டதெல்லாம் துலங்கியதாம்’. வீடு, வயல், ரைஸ்மில், என சொத்துக்கள் நிறைந்ததாம். ``வெள்ளிக்கிழமையுமா எனக்கு மஹாலஷ்மியே பிறந்திருக்கிறாள்’’ என்று சொல்வதோடு, தாத்தா வெளியே கிளம்பும்போதுஅம்மாவின் முகத்தை பார்த்துவிட்டு தான் போவார்களாம். ` அம்மா ஜோதி ’என் தாத்தா கூப்பிடும் போது அம்மா அழகாய் தலைசீவி பூ வைத்து முன்னால் நிற்கவேண்டுமாம். அம்மாவுக்கு நகைகள் அணிந்து கொள்வதிலும் நாட்டமுண்டு. நிறைய நகைகள் போட்டுக்கொள்வார்கள். காலில் பட்டையாக கொலுசு, இரண்டு மூன்று விரல்களில் மெட்டி அண்ந்திருப்பார்கள். ஊரில் சிறு பெண்கள் அம்மாவை `கொலுசு பாட்டி ‘ என்றே அழைப்பதுண்டு. அம்மாவுக்கும் அதில் பெருமையே! கீழே இருக்கும் அம்மாவின் இந்தபுகைப்படம் எடுக்கும்போது அம்மாவுக்கு
கிட்டதட்ட எழுபது வயதிருக்கும்.
அம்மாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு `டயாலி்ஸிஸ்’ க்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார்கள். அப்போது நர்ஸ் அம்மாவின் நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்தார்கள். டயாலிஸிஸ் முடிந்து வந்தபின் அம்மா மற்ற நகைகளை எல்லாம் அணிந்து கொண்டார்கள். கொலுசை மட்டும் என்னிடம் கொடுத்து, `ரொம்ப அறுந்து போச்சுமா; இத மாத்தி நீ போட்ருக்கமாதிரி சின்னதா வாங்கித் தாரியா’ எனக்கேட்டார்கள். `உடம்பு சரியாகி வீட்டுக்கு வாங்கம்மா; வாங்குவோம்’ என்றேன். `காலப் பாரு, மொட்டையா அசிங்கமா இருக்கு. இப்பவே வாங்கித்தா’ என்றார்கள், குழந்தையாய். நாம் வளரும்வரை பெரியவர்களாய் நம்மை அதட்டிக் கொண்டிருப்பவர்கள், நாம் வளர்ந்தபின் குழந்தைகளாகி விடுகிறார்கள். நம் அன்பை எதிர்பார்த்தலில் இருந்து சின்னசின்ன கோபம், பிடிவாதம் என பல விஷயங்களில் சிறாராகி விடுகிறார்கள். குழந்தையாய் கெஞ்சிய அம்மாவிடம் சரியென்றேன். ஆனால் மறந்து விட்டேன்.மறுநாளும் கேட்டார்கள். சரியென்று வீட்டுக்குப் போனவள்; மருத்துவமனைக்கும்
வீட்டுக்கும் அலைந்ததில் மறுபடியும் மறந்துவிட்டேன். இரவு மருத்துவமனை வந்தபோது, அம்மா தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மாவை கவனித்துக் கொள்ளும் நர்ஸ்,`` அக்கா அம்மாவுக்கு கொலுசு வாங்கிட்டு வந்தீங்களா? அம்மா எங்க பாப்பா எனக்கு கொலுசு வாங்கிட்டு வருவான்னு சொல்லிகிட்டு இருந்தாங்களே’’ என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. விறுவிறுவென வெளியேப் போய், பக்கத்தில் இருந்த நகைக் கடையில் அம்மா ஆசை பட்டதுபோல் கொலுசு வாங்கி வ்ந்தேன்.
நான் வந்து போது அம்மா ந்ன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மா வின் காலில் கொலுசை அணிவித்தேன். எங்களுக்காக இந்த கால்கள்தான் எவ்வளவு நடந்திருக்கும். நினைக்கும்போதே கண்ணீர் வந்தது.ஒருமுறை என் மகன சிறுவனாயிருந்த போது காய்ச்சல் வந்து ரொம்ப முடியாமல் போய் மருத்துவமனையில் அனுமதித்திருந்தோம்.
விஷயம் அறிந்து அம்மா பதறியடித்து கிளம்ப, அந்நேரத்துக்கு செங்குழியிலிருந்து எங்கள் ஊருக்கு பஸ் இல்லை. மொத்தமே ஒரு நாளைக்கு மூன்று முறை தான் பஸ் உண்டு. பக்கத்து ஊரான சோனகன்விளை சென்றால் பஸ் இருக்கும் என நடந்து வந்தவர்களுக்கு அங்கேயும் பஸ் கிடைக்கவில்லை. அப்படியே, நடந்தே அம்மன்புரம், மூலக்கரை என ஆறுமுகனேரி வரை, கிட்டதட்ட 14 கி.மீ நடந்தே வந்திருக்கிறார்கள். மத்தியானவேளை, மூச்சுவாங்க வந்தவர்களைப் பார்த்து அதிர்ந்துப் போய் ,` என்னம்மா’ என்றேன். `ஒண்ணுமில்ல, புள்ளைக்கு எப்படியிருக்கு? ‘ என்றார்கள். பிறகு விஷயம் தெரிந்து, வருத்ததுடன், `ஏம்மா இப்படி வந்தீங்க?’ என்றேன். `புள்ளைக்கு இப்டி இருக்கும்போது என்னால எப்டீமா அங்க இருக்க முடியும்?’ என்றார்கள். அம்மா... அம்மா...
இரவு நானும், மாது அண்ணாவும் ,அம்மா கூட மருத்துவமனையில் இருப்போம். அதிகாலை நான் வீடு வந்து விட்டேன். திரும்ப மருத்துவமனை வந்த போது அம்மா எழும்பி உட்கார்ந்துஇருந்தார்கள். எப்டீம்மா இருக்கீங்க? அருகில் அமர்ந்தேன். அம்மா பாதங்கள்தெரியும்படி சேலையைத் தூக்கி கால்களை அழகு பார்த்தபடி,`` கொலுசு நல்லாயிருக்கும்மா, எப்போ போட்டுவுட்டே’’ . அம்மாவின் முகமெல்லாம் அப்படி ஒரு சந்தோஷம்.. அன்று இரவே [வியாழகிழமை] அம்மாவுக்கு மறுபடி காய்ச்சல், குறையவே இல்லை. அடுத்தநாள் அம்மாவுக்கு அரைகுறையாக நினைவிருந்தது. மறுநாள் அம்மாவின் உடல்நிலை மிகமோசமாகி `கோமா’ வுக்கு சென்று விட்டார்கள். அதன்பின் வந்தவைக் கொடுமையான நாட்கள். அம்மா எந்த வலியும் தெரியாமல் படுத்திருக்க, அத்தனை வலிகளையும் தாங்கி நாங்கள் தவித்திருந்தோம். ஒரு நிரந்தர பிரிவுக்கு அம்மா எங்களை சிறிது சிறிதாக எங்களை ஆயத்தப் படுத்திக்கொண்டிருந்தார்கள். சரியாக பதினைந்தே நாட்கள், அம்மா எங்களை நிரந்தரமாக பிரிந்துசென்றார்கள்.
அடுத்தநாள், அப்பா என்னிடம் அம்மாவின் நகைகளை என்னிடம் கொடுத்தார்கள். கண்ணீரோடு வாங்கினேன். அப்பாவே தொடர்ந்து,தங்கம் எதுவும் போடக்கூடாது என்பதால், கொலுசு, மெட்டியை மட்டும் விட்டுவிட்டார்கள்.’’ என்றார்கள்.
மெய் சிலிர்த்தது எனக்கு. நான் கடைசியாக வாங்கிக் கொடுத்த கொலுசை அம்மா தன்னுடன்
எடுத்துசென்றார்களா? இருக்கும்வரை தன் பெண்ணுக்கு சீர் கொடுத்த என் அன்புஅம்மா, தான் போகும்போது கொண்டு செல்ல கடைசிசீர் என்னிடம் வாங்கிச் சென்றார்களோ, எனத் தோன்றியது.
இன்று தெய்வமாகிவிட்ட என் அருமைஅம்மாவின் இரண்டாவது நினைவுநாள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாங்கள் சொந்தஊர் செல்கிறோம்...

14 comments:

பிரியமுடன்...வசந்த் said...

காலத்திற்க்கும் மறையா பாச நினைவாய் மாறிவிட்டிருக்கிறது அந்த கொலுசு...!

ஆரூரன் விசுவநாதன் said...

//நாம் வளரும்வரை பெரியவர்களாய் நம்மை அதட்டிக் கொண்டிருப்பவர்கள், நாம் வளர்ந்தபின் குழந்தைகளாகி விடுகிறார்கள். நம் அன்பை எதிர்பார்த்தலில் இருந்து சின்னசின்ன கோபம், பிடிவாதம் என பல விஷயங்களில் சிறாராகி விடுகிறார்கள். குழந்தையாய் கெஞ்சிய அம்மாவிடம் சரியென்றேன்.//


உண்மைதான்......

அண்ணாமலையான் said...

அம்மாவுக்கு மரியாதை...!

Anonymous said...

அண்ணி!!!

எல்லாம் எனக்கு தெரியும்!!!!
ஆனால் உங்கள் பதிவை படித்தபின்......
கண் கலங்கியது!!!!!

PONRAJ-TUTICORIN

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லவேளையாய் நீங்கள் போட்ட கொலுசை பார்க்கும் தருணம் உங்கள் அம்மாவிற்கு வாய்த்திருக்கிறதே!

மிகவும் நெகிழ்ச்சியான நினைவலைகள்.

பா.ராஜாராம் said...

கண் நிறைந்து போயிற்று அம்பிகா...

காமராஜ் தளத்தில்தான் அம்மா நினைவு நாள் அறிந்து வந்தேன்.இங்கு,அம்மா முகம் பார்த்த நிறைவு..இனிதான் நம் மாதவன் கை பற்ற வேணும்.

காமராஜ் said...

தாங்கமுடியவில்லை அம்பிகா.
அம்மா முடியாமல் படுத்தபின்
இரண்டு முறை வந்ததாக ஞாபகம்.
முகத்தைப் பார்க்கவில்லை.
தெம்பில்லை.

butterfly Surya said...

நெகிழ்ச்சியான பதிவு.

அம்பிகா said...

அன்பை பகிர்ந்து கொண்ட அனைவர்க்கும் என் அன்பும், நன்றியும்.

ராகவன் said...

அன்பு அம்பிகா அவர்களுக்கு,

ப்ரியத்தில் பூத்துக் கண் சிமிட்டுகிறது ஒரு நிலாமுற்றம். எல்லோரும் கொண்டு வருகிறோம், அவரவர் வீட்டிலிருந்து. ஒன்றாய் கலந்து பரிமாறியதில், உண(ர்)வை ஊட்டியதில் யார் பங்கு அதிகம், யார் அதிகம் கொண்டது யாருக்கும் அக்கறையில்லை. இருக்கும் வரை வழித்து தின்று விட்டு இன்னும் கொண்டு வந்திருக்கலாமோ என்று ஏக்கத்தில் எல்லாரும் புறங்கைகளிலும் ஒட்டியிருக்கும் துனுக்குகளை, பருக்கைகளை, நினைவுகளை எட்டி பிடித்து நக்கித் தின்ன ஆசை வருகிறது. அட்சய பாத்திரமாய் ஊறுகிறது, சுரக்கிறது இந்த அன்பு,ப்ரியம் இட்ட பாத்திரம். உறவுகள் கொட்டிய கலைடாஸ்கோப் திருப்ப திருப்ப விதவிதமான வண்ணத்தையும், வடிவத்தையும் தருகிறது.

அழகான உணர்வுப் பதிவு!

அன்புடன்
ராகவன்

Sangkavi said...

அம்மாவைப்பற்றியான அழகான பதிவு

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்................

Deepa said...

அக்கா!
மறக்க முடியாத பதிவு.

சின்னப் பிள்ளை போல் பிடிவாதத்துடன் கொலுசை வாங்கி அணிந்தது உங்கள் அன்பை என்றென்றும் தன்னுடன் வைத்துக் கொள்ளத்தான் போலும்!

sornavalli said...

ellorukkum

oru golusu
marakka mudiyathathaagi vidukirathu

நேசமித்ரன் said...

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்