Wednesday, March 10, 2010

மக்களை பெற்ற மகராசி..!

                                        
                      அசப்பில் பாக்கியம்ராமசாமியின், சீதாப்பாட்டி

போலிருக்கும் அந்தபாட்டியின் பெயர் செல்லம்மா. ஆனால்சீதாபாட்டியின்

மிடுக்கோ, கம்பீரமோ நம் பாட்டியிடம் துளிக்கூட கிடையாது. பரமசாது.

தன் சொத்தாக, ஒரு பழைய வீட்டையும், வாரிசுகளாக நான்கு குழந்தை

குழந்தைகளையும் பாட்டியிடம் விட்டுவிட்டு, பாட்டியின் கணவர் போய்

சேர்ந்துவிட்டார். பன்னிரெண்டிலிருந்து ஆறு வயதுக்குள்ளாக மூன்று

பையன்களும், ஒருபெண்ணும் வரிசையாக நின்றனர். கலங்கிபோனாலும்

பாட்டி சோர்ந்து போய்விடவில்லை. தன்னையும் சேர்த்து ஐந்து ஜீவன்

களின் வயிற்றை நிரப்ப பாட்டி போராட தொடங்கினார். என்னென்ன

வேலை கிடைத்ததோ, அத்தனையும் செய்தார். உப்பளத்தில் பாத்தி

மிதிப்பது, சித்தாள் வேலை, வயல்காடுகளில், களை எடுக்க, நடுவை,

அறுப்பு, எனஎதையும் விட்டு வைக்கவில்லை. பையன்கள் தச்சுவேலை

கற்று கொண்டனர். ஆயிற்று, ஒரு வழியாக வாழ்க்கை போராட்டத்தில்

பாட்டியும் கரை சேர்ந்தார். மகளை தன் உறவுக்கார பையனுக்கு மண்ம்

செய்து அவளும் மும்பை போய் சேர்ந்தாள். பையன்கள் குணத்தில் தன்

தாயைக் கொண்டிருந்தனர். மூன்று மகன்களுக்கும் திருமண்ம் முடிந்து

மருமகள்களும் வந்து சேர்ந்தனர்.


           பாட்டி இப்போது வெளி வேலைக்கு போவதில்லை.

கைக்குழந்தைகளை பார்த்துக்கொள்ள, பாத்திரம்தேய்க்க, கடைகண்ணிக்கு

போகவர, தண்ணீர் பிடித்து கொடுக்க என மூன்று மருமகளுக்கும் பார

பட்சமில்லாமல் வேலை செய்து கொடுத்தார். பாட்டியின் பழைய வீடு

சிதிலமாகி, இடியும் நிலையில் இருந்ததால், மகன்கள் வீட்டை விற்று

எண்ணினர்.பாட்டியும் சரியெனவே வீடுவிற்க பட்டது. பாட்டி தன்மகள்

திருமணத்தின் போது நகை, ரொக்கம் என எதுவும் கொடுக்க வில்லை.

வீடு விற்கும் போது தருவதாக பேச்சு. விற்றபணத்தில் மகளுக்கு சேர

வேண்டியதை கொ்டுத்துவிட்டு, மீதியை மூன்று்மகன்களுக்கும் பகிர்ந்து

கொடுத்தார். அங்கே பிடித்தது பாட்டிக்கு ஏழரை. மருமகள்கள் மூன்று

பேருமே மகாவாயாடிகள். `எப்படி பணத்தை உன்மகளுக்கு கொடுப்பாய்,

நாங்கதான ஒனக்கு சோறுபோடுறோம். போ, ஒன் மகா கிட்டயே போ’

என பாட்டிக்கு ஒரே ஏச்சும் பேச்சும் தான். இத்தனைக்கும் கடைசி

மருமகள் பாட்டியின் சொந்த தம்பி மகள்.


      பாட்டியின் மகன்கள் மூன்று பேருமே நல்ல

உழைப்பாளிகள். தச்சுவேலையில் தினம் 300, 350 ரூ சம்பாதித்தனர்.

தனித்தனியே சின்னதாய் இடம் வாங்கி, ஒருகுச்சியோ, ஓட்டுவீடோ

கட்டிக் கொண்டு தனித் தனியே போய் விட்டனர். குழந்தைகளும்

வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்து விட்டனர். பாட்டியால் முன்போல்

வீட்டு வேலை செய்ய முடியவில்லை. பணக்காரர்களுக்கே உரித்தானது

என கருத படும் சர்க்கரை நோயும் தப்பாக வந்து சேர்ந்து கொண்டது.

அந்தநோய்க்கே உரித்தான கால்காந்தலும் சேர்ந்து கொள்ள, முதுமைக்கு

உரிய உடல்உபாதைகளால் அவஸ்தை பட ஆரம்பித்தார். கவர்ன்மெண்ட்

ஆஸ்பத்திரியில் காட்டி மருந்து மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வார்.

பொங்கலுக்கு வழங்கபடும் இலவச ரேஷன்சேலைகளே பாட்டிக்கு உடுத்தி

கொள்ள வாய்த்தன. மருமகள்களுக்கு பாட்டி இப்போது பாரமாய்

தெரிந்தார். `இங்கேயே கெடக்கியே, அந்த மகன் வீட்டுக்கு போயேன்’

என மூத்தவளும், `ஒந்தம்பிமக வீட்டுக்கு போயேன்’ என அடுத்தவளும்

அவர்களுக்கு தான் சளைத்தவளில்லை என தம்பி மகளும் மாறி மாறி

பந்தாட ஆரம்பித்தனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமென்றால் பாட்டிக்கு

மூன்று பக்கமும் இடி.



          ` ஊர்ல ஒலகத்துல மாதிரியா எம்புள்ளைங்க இருக்கானுவ,

ஒவ்வொருத்தன், சம்பாதிக்கதுல பாதிய சாராய கடைல வுட்டுட்டு,

பொண்டாட்டிய போட்டு அடிக்கானுவ. எம்புள்ளைக அப்டியா?

குடிக்கானுவளா?; இல்ல, அங்க, இங்க ன்னு அலைரானுவளா?

சம்பாத்தியத்த அவளுவ கைல குடுத்துட்டு, போட்டத தின்னுட்டு

கெடக்கானுவ. ஆம்புள இப்படி அப்புராணியாவும் இருக்கக்கூடாது, அதான்

அவளுவ, இந்த ஆட்டம் போடுறாளுவ. இருக்கட்டும், நாளைக்கி

அவளுவ புள்ளைங்க அவளுவள தொரத்தாமல போயிருவானுவ?’

வயிற்றெரிச்சலில் புலம்பிக் கொண்டிருப்பார். ` ராசா மாதிரி மூணு

புள்ளைங்க இருந்தும், இந்த பாடுபடுறேன், இருப்பு இருக்கவரைக்கும்

இவளுக கிட்ட இந்த `இடிசோறு’ தான் திங்கனும் போல.’ அழும்

போது பாவமாயிருக்கும்.



          செல்லம்மாபாட்டி, இங்கே தான் என்றில்லை.

வேறு வேறு பெயர்களில், அநேகமாக எல்லா ஊர்களிலும், அல்லது

முதியோர் இல்லங்களில், விதியை சபித்தபடி வாழ்ந்து கொண்டு

இருக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும்

ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு புறக்கணிக்கப் பட்ட சோகம்

நிச்சயம் இருக்கும். இன்று செல்லம்மாபாட்டி..., நாளை..., அதே

இடத்தில் நாம்... காலச் சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது.

நாம் மட்டும் மார்க்கண்டேயனை போல் வரம் வாங்கி

வந்திருக்கிறோமா என்ன..?

10 comments:

ponraj said...

மனதை கணமாகியது உங்கள் பதிவு!!!

மாதவராஜ் said...

அம்பிகா, சொல்ல வந்த விஷயத்தைவிட, உன் மொழியும், நடையும் என்னை மிகவும் கவர்ந்தன. கதைசொல்லிக்கான இயல்பும், சுவாரசியமும் இருக்கின்றன. நெகிழ்ச்சியான ப்திவு.

ஹுஸைனம்மா said...

வாசிக்க சுவாரசியமா இருக்கு. என்னமோ இந்த மாதிரி கதைகளைக் கேட்கும்போது மனதுக்குள் ஒரு பயம் வருகிறது.

க.பாலாசி said...

//பந்தாட ஆரம்பித்தனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமென்றால் பாட்டிக்கு /

ரொம்ப கொடுமையா இருக்குங்க... இந்த மாதிரி புள்ளைங்கள நெனச்சா கோபந்தாங்க வருது....

நல்ல இடுகை....

VijayaRaj J.P said...

பாக்கியம்ராமசாமியின் சீதாப்பாட்டி...என்று தொடங்கியதும்
நகைச்சுவை கதையை எதிர்பார்த்தேன்.

ஆனால் சோகத்தை சொல்லும் கதையாக அமைந்து விட்டது.

Thenammai Lakshmanan said...

உண்மை சுடுகிறது அம்பிகா :((

சாந்தி மாரியப்பன் said...

//அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும் ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஒரு புறக்கணிக்கப் பட்ட சோகம் நிச்சயம் இருக்கும்//

யதார்த்தமான உண்மை. நெகிழ்ச்சியான பதிவு அம்பிகா.

காமராஜ் said...

எங்கும் விலகாமல் ஒரே மூச்சில் சொல்லிமுடிக்கிற பக்குவம் கைவந்திருக்கிறது. இப்படி கதை சொல்லல் பாடுபொருளை அருமையானதாக்கிவிடும்.இன்னும் சொல்ல பல பிரமாதங்கள் இருக்கிறது அம்பிகா எழுத்தில்.

சந்தனமுல்லை said...

நல்லா இருக்குங்க..அதே சமயம் ரொம்ப கஷ்டமாவும்! அவங்களுக்குன்னு எதுவும் சேர்த்து வைத்துக்கொள்ளாத தன்மையும்...எனக்கும் நிறைய ஆயாக்களை நினைவு படுத்திவிட்டீர்கள்!

vijayan said...

சகோதரிகளே மனதை விசாலமாக்கி கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.எல்லோரும் வயோதிக பருவம் அடைவோம்,மறக்கவேண்டாம்.