Tuesday, January 11, 2011

75 + லும் சாம்பியன்

.
``இன்னும் தூங்கிட்டா இருக்கீங்க ? நேரமாச்சு.. சீக்கிரம் குளிச்சி கிளம்புங்க‘’ அதிகாலையில் எல்லோரையும் விரட்டும் இந்த சுறுசுறுப்பான குரலுக்கு சொந்தக்காரர், அம்மாவின் தம்பி... முழுப்பெயர் சித்தரஞ்சன். எங்களுக்கு `ரஞ்ச மாமா’. எங்கள் குடும்பத்து விசேஷம் என்றில்லை, உறவினர்கள், நண்பர்கள் என அனைவர் வீடுகளிலும் மாமாவின் கலகலப்பான குரல் எல்லோரையும் அதட்டிக் கொண்டிருக்கும்.





ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் யுனிவெர்சிட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தடகள விளையாட்டுபோட்டிகளில் 75 வயதினர்க்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் பங்கேற்று மூன்று பதக்கங்களுடன் ( இரண்டு முதல் பரிசு, மூன்றாம் பரிசு ஒன்று ) வெற்றி வீரராக நேற்று மாமா வந்திருந்தார்கள். 60 வயது தாண்டிவிட்டாலே, ` அய்யோ வலிக்குதே’, என்று இடுப்பையும், முழங்கால்களையும் பிடித்துக் கொள்பவர்கள் மத்தியில் மாமா விதிவிலக்கானவர்கள். 76 வயதுக்கு அதிபயங்கர சுறுசுறுப்பு. காலையிலேயே குளித்து தவறாது கோயிலுக்கு போய்வருவார்கள். எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது கூட மாமா அனேகமாக அங்கும் இங்குமாக நடந்து கொண்டே தான் பேசுவார்கள்.







பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மாமா சிறந்த விளையாட்டு வீரர் என்று தெரியும். சிறுகிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர்கள் பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆனது குறித்து அவர்களிடமே விசாரித்து தெரிந்து கொண்டது:-

ஆறுமுகனேரியில் நடுநிலைப்படிப்பை முடித்து, மெஞ்ஞானபுரம் csi ஹைஸ்கூலில் சேர்ந்தபின் தான் ஆர்வத்துடன் விளையாட்டுபோட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்கள். 400mts, 800mts ஓட்டபந்தயங்களில் கலந்து கொண்டார்கள். சுற்று வட்டாரங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றும் விளையாடி வெற்றியும் பெற்றார்கள். இண்டர்மீடியட் (தற்போதைய +1, +2, அப்போது கல்லூரியில்) படிப்புக்காக பாளையங்கோட்டை செயிண்ட். ஜான்ஸ் கல்லூரியில் சேர்ந்தார்கள். இண்டர்காலேஜ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400mts, 800mts கலந்து கொண்டு வெற்றிபெறாவிட்டாலும் நிறைய அனுபவங்கள் பெறமுடிந்தது. போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மணவரிடம் அவரது பயிற்சி முறைகள் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார்கள். அந்தமாணவர் ஆற்று மணலில் ஓடி பயிற்சி எடுப்பேன் என்றாராம். அந்த வருடம், 2 மாத கோடை விடுமுறையில், காயல்பட்டினம், அடைக்கலாபுரம் (இரண்டும் பக்கத்து ஊர்கள் ) ரெயில்வேலைனை ஒட்டி இருந்த வழியில், (மணல்வெளியாக இருக்குமாம்), ஓடி பயிற்சி எடுத்தார்களாம். இரண்டாமாண்டு படிக்கும் போது 400 மீ, 800மீ, 400மீ தடை ஓட்டம், லாங்ஜம்ப் அனைத்திலும் கலந்து கொண்டதில் 400மீ ரன்னிங்கில் யுனிவெர்சிட்டி சாம்பியன். அப்போது ஏரியாக்கு ஒரு யுனிவெர்சிட்டியெல்லாம் கிடையாது. சதர்ன் யுனிவெர்சிட்டி என ஒரே யுனிவெர்சிட்டி தான். அதன்பின் கோச் மூலம் மாமாவுக்கு டிரெய்னிங் கொடுக்கப் பட்டிருக்கிறது. இதுதான் முறைப்படி எடுத்துக் கொண்ட முதல் டிரெய்னிங். அந்த வருடம் கல்லூரியின் அனைத்து போட்டிகளிலும் மாமாதான் சாம்பியன்.


இவர்களுடைய விளையாட்டுத் திறமையால் சென்னை லயோலா கல்லூரியில் B.A; வில் இடம் கிடைத்தது. அதலெடிக்ஸ் பிரிவில் 400மீ, 800மீ, 400மீ தடையோட்டம், எல்லாவற்றிலும் மாமா தான் சாம்பியன். வாலிபாலில் யுனிவெர்சிட்டி ப்ளெயர் இரண்டாமாண்டு படிக்கும் போது வாலிபால் டீம் காப்டனாக இருந்திருக்கிறார்கள். அலிகார்யுனிவெர்சிட்டி, கல்கத்தா, அகமதாபாத் ல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.


கல்லூரி படிப்பு முடிந்து வேலை, குடும்பம் என்றான பின் விளையாட்டை தொடர முடியவில்லை. சமீபத்தில் முதியோருக்கான தடகளப் போட்டிகள் நடப்பதை கேள்விப் பட்டு 70+ பிரிவில் கலந்துகொண்டு ரன்னிங்கில் இரண்டாம் பரிசு பெற்றார்கள். சிறுவயதில் விளையாடும் போது இரண்டு முறை கீழே விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால், அந்தகாலில் வீக்கம் ஏற்பட்டு அடுத்த வருடம் விளையாட முடியாது போயிற்று. அதிகம் ஓடவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டதால், எறியும் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டு அதில் கலந்து கொண்டார்கள். இந்த வருடம் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவற்றில் முதலிரண்டில் முதல் பரிசும், மற்றதில் மூன்றாவது பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.


சென்றவருடம், லயோலாகல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, விளையாட்டுபோட்டிகளில் இவர்களது திறமை பற்றி தெரிந்து கொண்டதும், மேடையில் அமரவைத்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் முன்னாள் டி.ஜி.பி.ஸ்ரீபால், தற்போதைய ஜார்கண்ட்கவர்னர், தயாநிதி மாறன் போன்றோரும் கலந்து கொண்டனராம்.






அடுத்தமாதம் சண்டிகாரில் ஆல் இண்டியா போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதாக ஆர்வத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கூறும் மாமாவுக்கு ஷுகர், பிபி, கொலாஸ்டிரல் எதுவும் கிடையாது. உணவில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதீத ஆர்வத்துடன் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் மாமா, இப்பவும் பேரன்களுடன் சேர்ந்து ஆசையாக பட்டம் விடுவார்கள். தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்.

19 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பகிர்வு அம்பிகா மேடம். சித்தரஞ்சன் சாரை பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டோம். அவரது தன்னம்பிக்கை, உழைப்பு, லட்சியக் குறிக்கோள்களை எல்லோரும் பின்பற்றலாமே..

Chitra said...

வாவ்! உங்கள் மாமாவுக்கு எங்கள் வணக்கங்களும் வாழ்த்துக்களும்! I am sure that he is a great inspiration to many!

Unknown said...

ஆஹா சூப்பர். ஆரோக்கியமான மனிதர். எல்லோருக்கும் முன்னுதாரணமா இருக்கிறது சந்தோசம்.அவருக்கு வணக்கங்கள். 50 வயதில் வயசான மாதிரி டிராமா போடற ஆளுங்கள நிறையப் பார்க்கலாம்.

போன வருஷம் லயோலா வில் ஒரு பெரிய விழாவா கொண்டாடினாங்க. சிதம்பரம் கூட கலந்து கொள்ளப் போவதாக சொன்னங்க. தெரியல. நண்பன் தான் reception கமிட்டியில் பங்காற்றினான். தொலை தூரத்திலிருப்பதால் கலந்து கொள்ள முடியல.

பா.ராஜாராம் said...

what a interesting personality! வாழ்த்துகள் மாமா!

//இவர்கள் எனக்கு மாமா மட்டுமில்லை, மாமனாரும்கூடத்தான்//

ஆஹா, அதுதான் மோகன் அத்தானும் அப்படி ஓடினாரா?

('ஓடினாரா'விற்கு பிறகு (உனக்கு பயந்து) என பிராக்கெட்டில் போடலாமான்னு யோசிச்சேன் அம்பிகா. sportsman sprit-ஐ disturb பண்ண வேணாமே..) :-)

அத்தான், நீங்க ஓடுங்க. :-))

வினோ said...

இளமையின் ரகசியம் என்னன்னு கேட்டு சொல்லுங்களேன்....

மாதவராஜ் said...

ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மாமா இங்கு சாத்தூரில்தான் வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். துறுதுறுவென்று அங்குமிங்கும் சாடிக்கொண்டு இருப்பார்கள். காலையில் நாலு, நாலரைக்கு எழும்பி, உலகத்தையே எழுப்பிவிடுற மாதிரி சத்தமாய் பேச ஆரம்பிப்பார்கள். சாத்தூரிலிருந்து கிளம்பும் முதல் பஸ்ஸில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஏற்றிவிடச் சொன்னார்கள். முதல் பஸ் எப்போது என்று தெரியாதே என்றேன். பிறகு பேச்சுவாக்கில் சில ரெயில்கள் வருகிற நேரம் கேட்டார்கள். தெரியாதே என்றேன். இதுகூடத் தெரியாமல் நீயெல்லாம் என்ன மனுஷன் என்றார்கள். சிரிப்பாய் வந்தது எனக்கு. இப்படி அடிக்கடி மாமாவிடம் ‘என்ன மனுஷன்’ ஆனேன்.

வீட்டுக்கு வந்த காமராஜ் மாமாவை உற்றுப்பார்த்துவிட்டு, ‘அப்படியே அம்மாவைப் பார்ப்பது போலிருக்கிறது’ என்றான். நான் மாமாவின் கைகளை கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டேன்.

சாந்தி மாரியப்பன் said...

முப்பத்தஞ்சு நாப்பது வயசாயிட்டாலே, 'எனக்கு வயசாயிட்டுது'ன்னு அலப்பறை விடற ஆளுங்களுக்கு மத்தியில உங்க மாமா உண்மையிலேயே வணங்கப்பட வேண்டியவர்.. hats off to him :-))

ஆமினா said...

இந்தவயதிலும் இப்படியொரு உழைப்பா??

என ரகசியம்னு கேட்ட்டு சொல்லுங்கோ!!

தமிழ் உதயம் said...

தன்பிள்ளைகள், பேரன்கள் யாரும் விளையாட்டில் பிரகாசிக்க வில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்பொழுது பேச்சில் வெளிப்படும். ////

ஆதங்கத்துடன், அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடும்.

'பரிவை' சே.குமார் said...

அக்கா மாமாவுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்கவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Sriakila said...

உங்கள் மாமாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 40 ஐக் கடந்துவிட்டாலே 'ஐயோ! வயதாகிவிட்டதே' என்று சலித்துக்கொள்ளும் இக்காலத்தில் உங்கள் மாமா நிச்சயம் ஹீரோதான்.

உழைப்பும், வயதை எதிர்கொள்ளும் பக்குவமும், இளமையான மனதும் இருந்தால் வாழ்க்கையில் கவலைகளுக்கு இடமே இல்லை என்பதை வாழ்ந்து காட்டுகிறார் மாமா.

மாமா வாழ்த்த எனக்கு வயதில்லை என்பதால் வணங்குகிறேன்!

ராகவன் said...

அன்பு அம்பிகா,

அருமையான பகிர்வு... எங்க அப்பாவும் அப்படித்தான்... பயங்கர சுறுசுறுப்பு...

மாதவராஜின் பின்னூட்டம் அழகு!

அன்புடன்
ராகவன்

ராமலக்ஷ்மி said...

பல பாடங்கள் சொல்லும் நல்லதொரு பகிர்வு அம்பிகா. உங்கள் மாமாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

ஹேமா said...

எங்களவர்களுக்குள் அதிசயமானவர்தான் உங்கள் மாமா.இன்னும் நிறைந்த சுகம் கடவுள் தரட்டும் !

ஆயிஷா said...

உழைப்பு, லட்சியம் வயது ஒரு தடியல்ல.என்பதற்கு உதாரணம் மாமா சித்தரஞ்சன் சார்

நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

ponraj said...

பதிவைப் படித்ததில் எனக்கு பெருமையாக இருக்கு.
ஏன் என்றால் அவர்கள் எனக்கு பெரியப்பா!!!!
அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!
மிக அருமையான பதிவு!!! உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!!

Asiya Omar said...

சாம்பியன் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.சிறப்பான பகிர்வு.

அன்புடன் நான் said...

உங்க மாமாவுக்கு பாராட்டுக்கள்.....இன்னும் பல சாதனைகல் படைக்க வாழ்த்துக்கள்....

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அவருக்கு குடும்பத்தில் ஒரு விளையாட்டு வாரிசு இல்லாதது ஒரு க்றைதான். யாராவது ஒருத்தர் ஆர்வம் காட்டிருந்தாலும், நல்ல பயிற்சி கிடைச்சிருக்குமே? நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க!!