Monday, February 15, 2010
தோழீ...
வரவே இல்லை...
கொடுத்ததே மறந்து போயிற்று.
பலமாதங்கள் கழித்து
பணம் மட்டுமே வந்தது.
சந்தோஷமாய் இருந்தது,
அவள் செளக்யமாய் இருக்கிறாள்
என்பது புரிந்ததினால்.
* * * * * *
தோழியிடம் வாங்கிய கடன்,
கொடுக்கவும் இயலாமல் - முகத்தில்
விழிக்கவும் முடியாமல்;
அன்பு பரிசாய் குழந்தைக்கு
அவள் அளித்த மோதிரம்,
பணமானது - மனம்
நிம்மதியானது.
Friday, February 12, 2010
சிவராத்திரி விரதமும், நானும்...
சிவராத்திரி தினத்தை நிர்ணயிப்பதிலேயே இந்த முறை குழப்பம் ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் தீபாவளி வரும் போதே, இந்த ஆண்டு சிவராத்திரியும் தை கடைசிநாள் வருகிறது என அறிவிக்கப் பட்டு விட்டது. வழக்கமாக மாசிமாதம் சதுர்த்தசி நாள் தான் சிவராத்திரியாக கொண்டாட படும். கோகுலாஷ்டமி முடிந்த 184 வது நாளில் வரும் சதுர்த்தசியை மகாசிவராத்திரியாக கொண்டாடுவார்களாம்.அப்படித்தான் முதலில் அறிவிக்கப் பட்டது. பின்னர் மாசிமாதம் தான் வர வேண்டும் என மாசி 29 தான் சிவராத்திரி என அறிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கிறார்கள். எங்கள் ஊரிலும் இன்று கொண்டாடப் படுகிறது.
தீபாவளி, பொங்கல் அளவுக்கு இங்கே சிவராத்திரியையும் விசேஷமாக கொண்டாடுவார்கள். சொல்லப் போனால் இதை பெண்கள் திருவிழா என்றே கூறலாம். பெண்கள் அதிகமாக படிக்காத, வீட்டை விட்டு வெளியில் வராத காலங்களில், அவர்கள் சந்திக்க, உரையாட, விளையாடி மகிழ ஒருசில சந்தர்ப்பங்கள் மட்டுமே வாய்க்கும். அதனால் பெண்கள் மிக உற்சாகமாக கொண்டாடுவர். சிவராத்திரியன்று, ஒவ்வொரு தெருவிலும் ஏதாவதொரு வீட்டில் விரதமிருக்கும் பெண்கள் கூடுவார்கள்.அதிகாலை குளித்து பூஜை செய்து விரதம் தொடங்குவார்கள். அதிகாலை வெள்ளி {நட்சத்திரம்} மறையுமுன் தொடங்கி, மாலை வெள்ளி தெரியும் வரை பச்சை தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. வெள்ளி பூத்தபின் ஒரு பெரியநெல்லிக்காயும், ஒரு தம்ளர் தண்ணீரும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.(பழரசமெல்லாம் கிடையாது.} மறுபடி குளித்து விட்டு கோயில்களுக்கு அத்தனை பெண்களும் ,அழகாக அலங்கரித்து கொண்டு ஒன்றாக செல்வர். ஊரின் எல்லாத் தெருப் பெண்களும் ஒரே சமயத்தில் கூடுவதால் கோயிலே வண்ணமயமாக கலகலன்னு இருக்கும். கோயில்களிலும் நான்கு கால பூஜை, இரவு முழுவதும் சொற்பொழிவு, என நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின் பெண்கள் அனைவரும் தத்தமது வீட்டு பட்சணங்களுடன், விரதமிருக்கும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து உண்பர். பின் இரவு முழுவதும் ஒரே விளயாட்டுதான். முன்பெல்லாம் குலை குலையா முந்திரிக்கா, கபடி எல்லாம் உண்டு. இப்போ, டிவிடி யில் படம் அல்லது டிவி என்றாகி விட்டது.ஆனால் இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். விரதமிருப்பவர்கள் தலைக்கு இவ்வளவு பணம், அரிசி என பிரித்து கொள்வர்.அடுத்தநாள் காலைஉணவு, இட்லி, சாம்பார், கேசரி, மதியம், சாதம், சாம்பார், அவியல், பாயாசம் என அந்த விரதமிருக்கும் வீட்டிலேயே விருந்து தயாரித்து கூடி இருந்து உண்பர். ஒரே விளையாட்டும், கூச்சலுமாய் இரண்டு நாட்கள் சந்தோஷமாய் கழியும்.
நான் சிறுபெண்ணாக இருந்த போது, ஏழாவது படித்தேன் என நினைக்கிறேன், நானும் விரதமிருக்க ஆசைப் பட்டதால், அம்மா பக்கத்து வீட்டு அக்காக்களுடன் எனக்கும் ஒரு பங்கு கொடுத்து சேர்த்துவிட்டர்கள். `ஆனா சின்ன பொண்ணு எல்லாம் சாப்பிடாம இருக்கனும்னு அவசியமில்லை, நீ சாப்டுட்டு இரு’ என்ற க்ண்டிஷனுடன். வீட்ல அண்ணன்கள், தம்பி எல்லாம் ஒரே கேலி. `இது எங்கே சாப்டாம இருக்கும், கண்டிப்பா திருட்டுத்தனமா எதையாவது சாப்டுருவா ‘ என நக்கல் செய்யவும் எனக்கு ரோஷம் வந்துவிட்டது. பிடிவாதமா இருந்தே காட்டணும் னு ஒண்ணும் சாப்டாம இருந்தேன். பசி வயிற்றை கிள்ளியது. மத்தியானம் ஆனதும் தலை சுத்துற மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்தா அம்மா வச்சிருந்த பருப்பு குழம்பும், வெண்டைக்கா பொரியலும் அன்னைக்கு பாத்து வாசமா தெரிஞ்சுது. சாப்டுரலாமான்னு சபலம் தட்டியது. அதுக்குள்ள தம்பி, `இதோ சாப்ட வந்துட்டா, தின்னி பண்டாரம் னு’ கேலி செய்தான். `நா ஒண்ணும் சாப்ட வரலை. சும்மாத்தான் வந்தேன்’ என மகா ரோஷமாய் ஓடி விட்டேன். சாயங்காலம் விஜியண்ணன்,கல்லூரியில் இருந்து வந்தவன், `இந்தா, உனக்காகத்தான் கொண்டு வந்தேன்’ என அவன் டிபன்பாக்சை கொடுத்தான்.திறந்து பார்த்தால், நான் பல நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்த `மல்பெர்ரி’ பழங்கள். கல்லூரியில் உள்ள மரத்தில் இருந்து பறித்து கொண்டு வந்திருந்தான். ஆசையா சாப்பிட போனவள், நிமிர்ந்து பார்த்தால் வீட்டில் எல்லோரும் என்னை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தான் விரதம் நினைவு வந்தது. பிறகென்ன, டிபன்பாக்சை வைத்துவிட்டு விரதமிருக்கும் வீட்டுக்கு போய், `வெள்ளி தெரியுதா வெள்ளி தெரியுதா ன்னு வானத்தையே பாத்துட்டு இருந்தேன். தொலை தூரத்தில் ஒரு வெள்ளி என்னைப் பார்த்து கண்சிமிட்டவும், உற்சாகமாய்,` அதோ, அதோ’ என வெற்றிகரமாய்.விரதம் முடித்துக் கொண்டேன். அதன்பின் உயர்நிலை பள்ளி முடியும் வரை விரதம் தொடர்ந்தது. பின் கல்லூரி, திருமணம், சிறுகுழந்தைகள், என விட்டிருந்த விரதம் இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மறுபடி தொடரப்படுகிறது.
Monday, February 8, 2010
நினைவுகளின் பக்கங்கள்
டீனேஜ் டைரியின் பக்கங்கள் எனும் தொடர்பதிவுக்கு நம் முல்லை அழைத்திருந்தார்கள். அந்த வயதில் டைரி எழுதும் பழக்கம் இருக்கவில்லை. இப்போதும் இல்லை. உண்மைகளை எழுத முடியாததால் டைரி எழுதுவதில்லை என்று யாரோ ஒரு மேதை குறிப்பிட்டிருந்தார். நானும் என்னை மேதை என்று நினைத்து கொண்டு டைரி எழுதுவதில்லை. டைரி எதுவும் இல்லாததால் என் நினைவின் பக்கங்களில் இருந்து சிலவற்றை உங்களோடு பகிர்கிறேன்.
நான் பள்ளியில் படித்த காலங்களில் யூனிபார்ம் பாவாடைதாவணிதான். அதுவும் தாவணியை பின்னால் `v shape' வர்ற மாதிரியெல்லாம் கட்டக் கூடாது. 2 1/2 மீட்டர் வாயில் தாவணி, முன்னால் 2சுருக்கு வைத்து தான் கட்ட வேணடும். நல்ல திக்கு பச்சை கலரில் பாவாடை தாவணி, ஒற்றை பின்னல், கருப்பு ரிப்பன் வைத்து மடித்து கட்ட வேண்டும். ஒரு மார்க்கமாக இருப்போம். என் ப்ரெண்ட், சுமதி னு ஒரு பொண்ணு, ஆசையா 2 மீட்டர் ல தாவணி எடுத்து வி ஷேப்ல கட்டிட்டு வந்தா. அசெம்பிளி யில நிக்கவச்சு H.M விட்ட டோஸ் ல, மறுநாளே ஒரு தாவணிய ரெண்டா வெட்டி மத்த தாவணியோட ஒட்டு போட்டு, அடக்க ஒடுக்கமா கட்டிகிட்டு வந்தா.
டீனேஜ் டைரி குறிப்பு, சி.பி.ஐ டைரி குறிப்பு மாதிரி சுவாரஸ்யமா இல்ல னு பாக்குறீங்களா?. நான் படித்ததெல்லாம் முழுக்க முழுக்க பெண்கள் பள்ளிதான். கிராமம் வேறு, அதனால் பேப்பர் வைக்கிறது, ஸ்டிக்கர் ஒட்டுறது எல்லாம் கிடையாது. அதிலும் மூன்று அண்ணன்கள், ஒருதம்பி என நாலு பையன்கள் இருக்கும் வீட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்ய யாருக்கு துணிச்சல் வரும். காதலுக்கு மரியாதை பாணியில் வாங்கி கட்டிக்கொள்வோம் என்ற பயமாகக் கூட இருக்கலாம். நாங்கள் பள்ளி செல்லும் வழியில் பள்ளிக்கு கொஞ்சம் முன்னால் ஒருகடை உண்டு. அதில் பையன்கள் கூட்டமாய் நிற்பான்கள். அந்த கடையை தாண்டும் வரை நாங்கள் எதுவும் பேசமாட்டோம். ஆனாலும் ஏதாவது சொல்லி சிரிப்பான்கள். எனக்கு வில்லன் என் பெயர் தான். எப்படியோ என் பேரை தெரிஞ்சுகிட்டு, நான் போகும் போதெல்லாம் “அம்பிகையே, ஈஸ்வரியே, என்னை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமகாரி ”ன்னு பாடுவான்கள். நானும் இரண்டொரு நாள் முறைத்துப் பார்த்தேன். அதற்குள் பள்ளி ஆண்டுவிழா வர, அதில் ஒரு நாடகத்தில் நான் ராமராக நடித்தேன். தசரதராக நடித்த என் தோழி எபனேசர், நிஜமாகவே அப்பா மாதிரி இருப்பாள்.அப்படி ஒரு ஆகிருதி, குரல். நாடகம் முடிந்த மறு நாளிலிருந்து, என்பெயர் மாறி விட்டது. ராமர் ராமர் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். உடன்வந்த என் நாடக அப்பா, `எவன் ல‘ அது ன்னு கட்டைகுரலில் அதட்ட, அனைவரும் கப்சிப். நாங்கள் H.M. இடம் புகார் செய்ய, அவர்கள் கடைக்காரரை கூப்பிட்டு மிரட்டிய மிரட்டலில் மறுநாளில் இருந்து கடை, கடையாக மட்டும் இருந்தது.
கல்லூரியில் படிக்கும் போது தோழியொருத்தி, சகதோழிகளுடன் சினிமாவுக்கு போயிருக்கிறாள். அவளது அண்ணன், அவளை பார்த்துவிட்டு, தியேட்டரில் வைத்தே அவளை அடித்து அழைத்துப் போயிருக்கிறான். இப்படியும் இருப்பார்களாவென அதிர்ச்சியாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மாவோ, அப்பாவோ, அண்ணன்களோ, இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என எனக்கு எந்த கோடுகளும் கிழிக்கவில்லை. அண்ணன்கள், தம்பியோடு சண்டைகள், விளையாட்டுகள் இருந்தனவே தவிர சந்தேக பார்வைகளோ, மிரட்டல்களோ ஒரு நாளும் இருக்கவில்லை. என்னை ஒரு இளவரசியாகத்தான் வைத்து இருந்தார்கள்.
என் சந்தோஷமான நாட்களை நினைவுகூரச் செய்ததற்காக, முல்லை உங்களுக்கு என் அன்பும், நன்றியும்..
நானும் தொடர்பதிவுக்கு யாரையாவது அழைக்க வேண்டுமே!. ஹூசைனம்மா, கண்ணகி, சங்கவி, ராகவன், விருப்பமிருந்தால் தொடருங்களேன்...
Thursday, February 4, 2010
சந்தோஷ கல்யாணம்.
இல்லாமல;
வரதட்சணை, ரொக்கம்
இல்லாமல்;
பெண்ணுக்கு நகைநட்டு, சீர்செனத்தி
இல்லாமல்;
மாப்பிள்ளை `முறுக்கு’
இல்லாமல்;
பெண்ணுக்கு செயற்கைபூச்சு, ஒப்பனை
இல்லாமல்;
பயமும் பதட்டமும்
இல்லாமல்;
பிள்ளைகள் பெற்றோருக்கு
செய்து வைக்கும் ஒரு
சந்தோஷ கல்யாணம்;
அப்பா அம்மாவின்
அறுபதாங் கல்யாணம்.
.
Sunday, January 31, 2010
நட்சத்திரங்களும், நாமும்...
        `என்ன நேரத்தில் பெறந்து தொலைச்சேனோ’ என்று சில நேரங்களில் சலித்துக் கொள்கிறோம். அல்லது பிறர் சலித்துக் கொள்வதையாவது கேட்டிருப்போம். பிறக்கும் ஒவ்வொருவரின் நேரமும், குறிக்கப்பட்டு, அந்தநேரத்திற்கான நட்சத்திரமும், குறிக்கப்பட்டு தனித்னியாக பலன்களும் ஜோதிடக் கலையில் உள்ளன. அசுபதியில் ஆரம்பித்து ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் சிலவற்றுக்கு மோசமான பலன்கள் நம் மக்களிடையேக் கூறப் படுகின்றன. நானறிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு நகைச்சுவை பகிர்வு மட்டுமே. எனக்கு ஜோஸ்யமெல்லாம் தெரியாது.
        முதலில் என்னிடம் இருந்தே ஆரம்பிப்போம். நான் நாலாவதாக பிறந்த பெண். நாலாவதுபெண் நடைகல்லை {வீட்டின் நடைகல்லைத்தான்}பெயர்த்து விடுமாம். அதனால் நான் பிறந்ததுமே வீட்டில் இருந்த பெரியவங்க யாரோ, இவள் என்ன பெயர்ப்பது என்று, தொட்டிலில் கிடந்த என்னோடு போட்டி போட்டுக் கொண்டு, கடப்பாறையால் வீட்டின் நடைகல்லில் ஒரு மூலையை அவர்களே உடைத்து விட்டார்களாம். ஆனால் நான் நடக்க ஆரம்பித்தபின் அதே நடைகல்லில் விழுந்து நெற்றியை பெயர்த்துக் கொண்டது வேறு கதை. இன்னமும் இடது நெற்றியில் தழும்பு இருக்கிறது. கொஞ்சம் பெரிசான பிறகு சொன்னாங்க, `நாலாவது பொண்ணு நாய் படாத பாடு படும்’ என்று. ஆக மொத்தம் நாலாவது பெண் நல்லதில்லை என்பது மட்டும் புரிந்து விட்டது. உறவினர் ஒருவர் `அவிட்ட நட்சத்திரத்தில் பொண்ணு பொறந்தா தவிட்டு பானையல்லாம் தங்கம்’ என்று கூற, நானும் ஒரு பானையில் தவிடு போட்டு வைக்கச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். ஆனால் அம்மாவோ, `பானையில் தவிடு போட்டு வச்சா தங்கமெல்லாம் வராது. வண்டும் புழுக்கூடும் தான் வரும்’ என்று என் தங்கக் கனவை ஒரேயடியாக தகர்த்து விட்டார்கள்.
        மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் `முற்றத்து மாமியார் மூலையிலே’ என்பார்கள்.அதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமியார், அல்லது மாமனார் இல்லாத வீட்டில் தான் திருமணம் செய்ய வெண்டுமாம். என் கணவரின் நண்பர், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். காதல் திருமணம் செய்து கொண்டார். பெண்வீட்டினர் மிகுந்த ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் தன் நட்சத்திரத்தையே மாற்றிக் கூறி திருமணம் செய்து கொண்டார். 17 வருடங்கள் ஆகிறது. மாமனார் மாமியார் இருவருமே நன்றாகத்தான் உள்ளனர்.
         இன்னோருவர்க்கு, நட்சத்திரத்தில் ஆரம்பித்து பத்து பொருத்தங்கள் இருப்பதாக கூறி திருமணம் செய்வித்தனர். ஆனால் திருமணம் ஆன மறுநாளிலிருந்தே அவர்களுக்குள் `ஏழாம் பொருத்தம்’ தான். இப்போது டைவர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. `உத்திரத்து தாலி உறியிலே’, `பூராடம் கழுத்திலே நூலாடாது’ என்பனவும் சாதாரணமாய் கூறப் படுவன. ஆனால் தங்கம் விற்கும் விலையைப் பார்த்தால் இனி பலபேரின் கழுத்தில் நூல் தான் ஆடும் போல் தெரிகிறது.
         ``மழ மேகத்துக்கும், மடிப் புள்ளைக்கும் நேரங் காலம் கெடையாது’’ என்று கிராமத்தில் சொல்வதுண்டு. ஆனால் இப்போது நல்லநேரம், நட்சத்திரம், எல்லாம் ஜோஸ்யரிடம் குறித்து வாங்கி அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்க வைத்து விடுகின்றனர். இப்படித்தான் எனக்கு தெரிந்த பெண்ணோருத்திக்கு, மே மாதம் மூன்றாம் வாரத்தில் பிரசவம் இருக்கும் என மருத்துவர் கூறியிருந்தார். சித்திரை மாதம் குழந்தை பிறந்துவிடக்கூடாதே என்று, {ஏனென்றால் சித்திரை அப்பன் தெருவிலேயாம் } மே மாதம் 18 எனக் குறித்து, அறுவை சிகிச்சை செய்யவும் தீர்மானித்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு மே 16 ந்தேதி இரவே வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. பெண்ணின் அம்மாவோ இன்னும் ஒரு நாள் தானே என்று வயிற்று வலிக்கென ஏதோ மாத்திரை கொடுத்துள்ளார். நேரமாக நேரமாக பெண்ணுக்கு கடும் உதிரப்போக்கு ஏற்பட்டு, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய சிஸேரியன், சிக்கலாகி, அந்தப் பெண்ணுக்கு இரண்டு யூனிட் இரத்தம் ஏற்றப் பட்டு மிகவும் சிரமமாகி விட்டது.
         அடுத்த நாள் அந்த பெண்ணின் தாயார் மிகவும் கவலையோடு, `சித்திரைல பெறக்கக் கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சோம். பெறந்ததென்னமோ வைகாசி தான். ஆனா நட்சத்திரம் சித்திரையாப் போச்சே. என்ன பாடு படுத்தப் போவுதோ? நாம என்னதான் மாத்தணும்னு நெனச்சாலும் சித்திரைல பெறக்கணுனு விதி இருந்தா அத யாரால மாத்த முடியும்’ என்றார்கள் மிகத் தெளிவாக. கேட்டுக் கொண்டிருந்த நான் தான் இப்போது குழம்பிப் போனேன்.
Thursday, January 28, 2010
சித்திரமும் கை பழக்கம் ?????...
        அழகாக வரைய பெற்ற பென்சில் சித்திரங்கள் சில கீழே இடம் பெற்றுள்ளன.





         ஓவியங்கள் அனைத்தும் கண்ணையும், கருத்தையும் கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.வியப்போ, அதிர்ச்சியோ, உண்மை என்னவெனில் இந்த அருமையான கலைஞருக்கு இரு கைகளும் கிடையாது.
        இப்படித்தான் இந்த அற்புதமான கலைஞர் தம் படைப்புக்களை செதுக்குகிறார். `Physicaiiy unabled’ என்பதை `Differently abled' என குறிப்பிடலாம் என்று எங்கோ படித்த நினைவு. அதை மெய்ப்பிக்கிறார் இந்த படைப்பாளி.
Monday, January 25, 2010
முதல், முதலாக...
24.01.10அன்றுவெளியான தீக்கதிர் இதழின் ஞாயிறு இணைப்பான
வண்ணக்கதிர் இதழில் வெளியாகியுள்ளது. என் எழுத்துக்கள் முதன்
முறையாக அச்சேறி உள்ளது. இச்சிறு வெற்றியை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். இதற்கு உறுதுணையாக
இருந்த திரு எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களுக்கும், தீக்கதிர்
அசிரியருக்கும் என் நன்றியும், வந்தனமும்.
விடுமுறை...
அப்பாடா,
நாளை விடுமுறை.
நிம்மதியா ஓய்வு எடுக்கலாம்;
உனக்கென்ன
தினமும் விடுமுறைதான்,
கேலியாக கணவன்;
வருடமுழுவதும்
ஆன் ட்யூட்டி தான்,
விடுமுறை நாட்கள்,
ஓவர் டைம் தான்;
மெளனமாய் புன்னகைக்கும்
மனைவி...