Friday, February 12, 2010

சிவராத்திரி விரதமும், நானும்...

               சிவராத்திரி தினத்தை நிர்ணயிப்பதிலேயே இந்த முறை குழப்பம் ஏற்பட்டுள்ளது. புரட்டாசி மாதம் தீபாவளி வரும் போதே, இந்த ஆண்டு சிவராத்திரியும் தை கடைசிநாள் வருகிறது என அறிவிக்கப் பட்டு விட்டது. வழக்கமாக மாசிமாதம் சதுர்த்தசி நாள் தான் சிவராத்திரியாக கொண்டாட படும். கோகுலாஷ்டமி முடிந்த 184 வது நாளில் வரும் சதுர்த்தசியை மகாசிவராத்திரியாக கொண்டாடுவார்களாம்.அப்படித்தான் முதலில் அறிவிக்கப் பட்டது. பின்னர் மாசிமாதம் தான் வர வேண்டும் என மாசி 29 தான் சிவராத்திரி என அறிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கிறார்கள். எங்கள் ஊரிலும் இன்று கொண்டாடப் படுகிறது.

               தீபாவளி, பொங்கல் அளவுக்கு இங்கே சிவராத்திரியையும் விசேஷமாக கொண்டாடுவார்கள். சொல்லப் போனால் இதை பெண்கள் திருவிழா என்றே கூறலாம். பெண்கள் அதிகமாக படிக்காத, வீட்டை விட்டு வெளியில் வராத காலங்களில், அவர்கள் சந்திக்க, உரையாட, விளையாடி மகிழ ஒருசில சந்தர்ப்பங்கள் மட்டுமே வாய்க்கும். அதனால் பெண்கள் மிக உற்சாகமாக கொண்டாடுவர். சிவராத்திரியன்று, ஒவ்வொரு தெருவிலும் ஏதாவதொரு வீட்டில் விரதமிருக்கும் பெண்கள் கூடுவார்கள்.அதிகாலை குளித்து பூஜை செய்து விரதம் தொடங்குவார்கள். அதிகாலை வெள்ளி {நட்சத்திரம்} மறையுமுன் தொடங்கி, மாலை வெள்ளி தெரியும் வரை பச்சை தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது. வெள்ளி பூத்தபின் ஒரு பெரியநெல்லிக்காயும், ஒரு தம்ளர் தண்ணீரும் அருந்தி விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.(பழரசமெல்லாம் கிடையாது.} மறுபடி குளித்து விட்டு கோயில்களுக்கு அத்தனை பெண்களும் ,அழகாக அலங்கரித்து கொண்டு ஒன்றாக செல்வர். ஊரின் எல்லாத் தெருப் பெண்களும் ஒரே சமயத்தில் கூடுவதால் கோயிலே வண்ணமயமாக கலகலன்னு இருக்கும். கோயில்களிலும் நான்கு கால பூஜை, இரவு முழுவதும் சொற்பொழிவு, என நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்பின் பெண்கள் அனைவரும் தத்தமது வீட்டு பட்சணங்களுடன், விரதமிருக்கும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து உண்பர். பின் இரவு முழுவதும் ஒரே விளயாட்டுதான். முன்பெல்லாம் குலை குலையா முந்திரிக்கா, கபடி எல்லாம் உண்டு. இப்போ, டிவிடி யில் படம் அல்லது டிவி என்றாகி விட்டது.ஆனால் இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும். விரதமிருப்பவர்கள் தலைக்கு இவ்வளவு பணம், அரிசி என பிரித்து கொள்வர்.அடுத்தநாள் காலைஉணவு, இட்லி, சாம்பார், கேசரி, மதியம், சாதம், சாம்பார், அவியல், பாயாசம் என அந்த விரதமிருக்கும் வீட்டிலேயே விருந்து தயாரித்து கூடி இருந்து உண்பர். ஒரே விளையாட்டும், கூச்சலுமாய் இரண்டு நாட்கள் சந்தோஷமாய் கழியும்.

               நான் சிறுபெண்ணாக இருந்த போது, ஏழாவது படித்தேன் என நினைக்கிறேன், நானும் விரதமிருக்க ஆசைப் பட்டதால், அம்மா பக்கத்து வீட்டு அக்காக்களுடன் எனக்கும் ஒரு பங்கு கொடுத்து சேர்த்துவிட்டர்கள். `ஆனா சின்ன பொண்ணு எல்லாம் சாப்பிடாம இருக்கனும்னு அவசியமில்லை, நீ சாப்டுட்டு இரு’ என்ற க்ண்டிஷனுடன். வீட்ல அண்ணன்கள், தம்பி எல்லாம் ஒரே கேலி. `இது எங்கே சாப்டாம இருக்கும், கண்டிப்பா திருட்டுத்தனமா எதையாவது சாப்டுருவா ‘ என நக்கல் செய்யவும் எனக்கு ரோஷம் வந்துவிட்டது. பிடிவாதமா இருந்தே காட்டணும் னு ஒண்ணும் சாப்டாம இருந்தேன். பசி வயிற்றை கிள்ளியது. மத்தியானம் ஆனதும் தலை சுத்துற மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்தா அம்மா வச்சிருந்த பருப்பு குழம்பும், வெண்டைக்கா பொரியலும் அன்னைக்கு பாத்து வாசமா தெரிஞ்சுது. சாப்டுரலாமான்னு சபலம் தட்டியது. அதுக்குள்ள தம்பி, `இதோ சாப்ட வந்துட்டா, தின்னி பண்டாரம் னு’ கேலி செய்தான். `நா ஒண்ணும் சாப்ட வரலை. சும்மாத்தான் வந்தேன்’ என மகா ரோஷமாய் ஓடி விட்டேன். சாயங்காலம் விஜியண்ணன்,கல்லூரியில் இருந்து வந்தவன், `இந்தா, உனக்காகத்தான் கொண்டு வந்தேன்’ என அவன் டிபன்பாக்சை கொடுத்தான்.திறந்து பார்த்தால், நான் பல நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்த `மல்பெர்ரி’ பழங்கள். கல்லூரியில் உள்ள மரத்தில் இருந்து பறித்து கொண்டு வந்திருந்தான். ஆசையா சாப்பிட போனவள், நிமிர்ந்து பார்த்தால் வீட்டில் எல்லோரும் என்னை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தான் விரதம் நினைவு வந்தது. பிறகென்ன, டிபன்பாக்சை வைத்துவிட்டு விரதமிருக்கும் வீட்டுக்கு போய், `வெள்ளி தெரியுதா வெள்ளி தெரியுதா ன்னு வானத்தையே பாத்துட்டு இருந்தேன். தொலை தூரத்தில் ஒரு வெள்ளி என்னைப் பார்த்து கண்சிமிட்டவும், உற்சாகமாய்,` அதோ, அதோ’ என வெற்றிகரமாய்.விரதம் முடித்துக் கொண்டேன். அதன்பின் உயர்நிலை பள்ளி முடியும் வரை விரதம் தொடர்ந்தது. பின் கல்லூரி, திருமணம், சிறுகுழந்தைகள், என விட்டிருந்த விரதம் இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மறுபடி தொடரப்படுகிறது.

21 comments:

ராமலக்ஷ்மி said...

//இப்போது நான்கைந்து ஆண்டுகளாக மறுபடி தொடரப்படுகிறது.//

வாழ்த்துக்கள்! பகிர்வு அருமை!

நேசமித்ரன் said...

பகிர்வு அருமை!

வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

ஆஹா, முதல் விரதம் இருந்த கதைன்னு ப்ரு தொடர்பதிவு ஆரம்பிச்சுடலாம் போலயே!!

இந்துமதத் திருநாட்களல்லெல்லாம் எப்படி கணக்கிடுவார்கள் என்ற கேள்வி இருந்தது. ஓரளவு புரிகிறது.

Anonymous said...

நமது மன உறுதியை நாமே பரீட்சை செய்து வலுப்படுத்த விரதங்கள் பக்கபலமாக இருக்கின்றன என்பதை உறுதிபடுத்தி விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்!

V.A.S.SANGAR said...

சரி இப்ப எப்ப விரதம் இன்டைக்கு ஓர் மார்ச்

மாதவராஜ் said...

அப்படியே ஆறுமுகநேரிக்குள் உலாவி விட்டு வந்தது போலிருந்தது. விரதங்களில் நம்பிக்கையில்லையென்றாலும், சில அழகுகளும், அனுப்வங்களும் ரசிக்கிற மாதிரி இருக்கு...... இந்தப் பதிவைப் போல.

thenammailakshmanan said...

விரதம் இருப்பதும் உடம்பை சுத்தப்படுத்தத்தான் அதை அருமையான இடுகை யாக்கி இருக்கீங்க அம்பிகா

Sangkavi said...

உங்கள் இடுக்கையை மிகவும் ரசித்தேன்....

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு சகோதரி.

VijayaRaj J.P said...

சிவராத்திரி....

சுவாரசியமான ராத்திரி.

பழையசம்பவங்களை நினைவுபடுத்தும் பகிர்வு.

Deepa said...

நேற்றே படித்து விட்டேன். என் மகள் மடியில் உட்கார்ந்து கமெண்டே போட விடவில்லை.

ரொம்ப அழகாப் பகிர்ந்திருக்கீங்க அக்கா. ஒரே வீட்டில் பெண்கள் எல்லாம் கூடுவதும் விளையாடுவதும், விருந்து சாப்பிடுவதும்!
சே, இப்படி ஒரு அனுபவம் வாய்க்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.
ஆனால் பசி தாங்குவதை நினைத்தால் தான் கலக்கமாக இருக்கிறது. எப்படித் தான் இருந்தீர்களோ!

மல்பெரி பழம் சாப்பிடுவதற்காக வெள்ளி தெரியுதா என்று பார்த்தது.. ச்சோ ச்வீட்! :-))

அகநாழிகை said...

நல்லா எழுதியிருக்கீங்க.

மின்னல் said...

விரதம் தொடரட்டும்.வாழ்த்துகள்

அம்பிகா said...

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி நேசமித்ரன்

ஹூசைனம்மா, தொடர்பதிவு ஆரம்பிச்சுரலாமா? உங்களுக்கு விரதமிருந்த அனுபவங்கள் நிறைய இருக்குமே! பகிர்வுக்கு நன்றி.

Anonymous, விரதமிருப்பதின் முக்கிய நோக்கமே அதான். பகிர்வுக்கு நன்றி.

V,A.S.சங்கர், நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை. மன்னிக்கவும்.

அம்பிகா said...

நன்றி மாதண்ணா.

நம் ஜீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கத்தான் விரதம் அனுஷ்டிக்க பட்டதாக கூறுகிறார்கள். நன்றி தேனம்மை.

நன்றி சங்கவி.

நன்றி சரவணகுமார்.

அம்பிகா said...

இயந்திரமான வாழ்க்கையில் இப்படியும் சில சுவாரசியங்கள் தேவைபடுகின்றன. நன்றி விஜியண்ணா.

தீபா,
இதை போல சந்தோஷங்கள், விளையாட்டுகள் கிராமங்களின் கொடுப்பினை என்றே கூறலாம்.
நன்றி தீபா. நேஹாவுக்கு என் அன்பு.

நன்றி அகநாழிகை.

பகிர்வுக்கு நன்றி மின்னல்.

சந்தனமுல்லை said...

:-) சுவாரசியமாக இருந்தது தங்களின் நினைவுகள்! விரதம்னு இருந்தது இல்லை...கோச்சுக்கிட்டு ரெண்டு மூணு தடவை சாப்பிடாம இருந்திருக்கேன்!

/ஆசையா சாப்பிட போனவள், நிமிர்ந்து பார்த்தால் வீட்டில் எல்லோரும் என்னை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்./

ஆவ்வ்வ்வ்..என்னா வில்லத்தனம்!:-))

சுந்தரா said...

ரெண்டுமூணு கிலோமீட்டர் தூரம், இவ்வளவு சுவாரசியங்களுக்குத் தடையாகிப்போச்சேன்னு நினைக்கும்போது வருத்தமாய்த்தான் இருக்கு அம்பிகா.

நாம வளர்ந்ததெல்லாம்
பிரியாணிக்குப் பேர்பெற்ற உங்க பக்கத்து ஊர்லதான் :)

அம்பிகா said...

\\ஆவ்வ்வ்வ்..என்னா வில்லத்தனம்!:-))\\
இந்த மாதிரி நிறைய உண்டு முல்லை. அப்போ சண்டை போடுவேன். இப்போ ... சந்தோஷமாக இருக்கிறது..
பகிர்வுக்கு நன்றி முல்லை.

அம்பிகா said...

வாங்க சுந்தரா,
காயல்பட்டினம் தானா?.ரொம்ப பக்கம் தானே! ஊருக்கெல்லாம் வருவதுண்டா சுந்தரா?

கமலேஷ் said...

நல்ல பகிர்வுங்க..