Monday, December 13, 2010

விட்டில் பூச்சிகள்.

.

அந்த வீட்டை கடந்து செல்கையில் அவளைப் பார்த்தி்ருக்கிறேன். புதிதாக

குடிவந்திருந்தார்கள் போலும். நைட்டி அல்லது சுடிதார் அணிந்து வாசலில்

அமர்ந்திருப்பாள். பக்கத்துவீட்டு சிறுபெண்களை அழைத்து வைத்து பேசிக்

கொண்டிருப்பாள். குழந்தைத்தனம் மாறாத முகம். கல்லூரிமாணவி போல்

இருந்தாள். ஆனால் கழுத்தில் இருந்த தாலி திருமணம் ஆனவள் என்பதை

பறைசாற்றியது. நிரம்பவும் சின்னப் பெண்ணாயிருக்கிறாளே எண்ணமிட்ட

படியே கடந்து சென்றுவிடுவேன். சில நாட்களிலேயே அவளைப் பற்றிய

செய்திகள் தெரிய வந்தன. அவள் சென்னையை சேர்ந்தவள் என்பதும்,

பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமல் அவள் கணவன் என சொல்லிக்

கொள்ளும் நபரோடு வந்துவிட்டாள் என்பதும், அந்தநபர்க்கு 45 வயதுக்கு

மேலிருக்கும் என்பதும் தெரிந்தது. அதன்பின் அவளைப் பார்க்கையில்

எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. என்னப் பிரச்சனையோ, அந்தப்பெண்

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கொளுத்திக் கொண்டாள்

என்றும், மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்

பட்டிருக்கிறாள் என்றும் அதிர்ச்சியோடு பேசிக் கொண்டார்கள். அவள்

கணவன் என சொல்லிக் கொண்ட நபர், போலிஸ், விசாரணைக்கு பயந்து

எங்கோ ஓடிவிட்டான். அந்தப் பெண்ணைப் பற்றிய விபரங்கள், பெற்றவர்,

முகவரி எதுவும் தெரியாத நிலையிலே அந்த பரிதாபத்துக் குரியவள்

இறந்து விட்டாள். பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டை கடக்க நேர்கையில்

அந்த குழந்தைத்தனம் மாறாத முகம் நினைவுக்கு வந்து சங்கடப்

படுத்துக்கிறது.சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் நினைவுக்கு

வருகிறது. அந்தப்பெண்ணுக்கும் 18வயது போல் தான் இருக்கும். ஒரு

கடையில் வேலை செய்து வந்தாள். நல்ல அமைதியான சுபாவமுடைய

பெண் தான். ஆனாலும் விதியோ அல்லது அவளது மதியோ, கடை

முதலாளியோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரும் இதேபோல் நடுத்தர

வயதினர் தான். மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவளுக்கு அம்மா

மட்டும்தான். அந்த ஏழைத்தாயால் அவளைக்கண்டிக்க முடியவில்லையோ

அல்லது எல்லோரும் கூறியது போல் அந்த முதலாளியின் பணம் ஊமை

யாக்கிற்றோ, அவர்கள் பழக்கம் தொடர்ந்தது.ஊமை ஊரைக் கெடுக்குங்குறது சரியாத்தா இருக்கு’ என்று ஏசுவோரும்

இருந்தனர். `நல்ல புளியங்கொம்பாத்தா புடிச்சிருக்கா’ எனப் பொறாமைப்

படுவோரும் இருந்தனர். அவளும் ஒரு பெண்குழந்தைக்கு தாயானாள்.

அவள் இரண்டாம்முறை கருவுற்ற பின் அவர் வருவது குறைந்து

போயிற்று. அடுத்ததும் பெண் தான். அவரிடமிருந்து சில சமயங்களில்

பணம் மட்டுமே வந்தது. உறவினர்கள் ஏதோ பஞ்சாயத்து பேசினர்.

கொஞ்சம் பணத்துடன் அவளது உறவு தீர்க்கப் பட்டது. `ரெண்டும்

பொண்ணாப் போச்சி, ஆம்புளப்புள்ளனா வந்திருப்பாரு’ என முதலாளி

யின் மோசடிக்கு சப்பைக் கட்டப்பட்டது.


தாயின் அவலநிலை காண சகியாமலோ, தானும் துன்பம் தர வேண்டா

மென்றோ, இரண்டாவது குழந்தை சில நாட்களிலேயே கண்ணை மூடி

விட்டது. இளவயதில் அடுத்தடுத்த இரண்டு பிரசவங்கள், ஒழுங்கான

பராமரிப்பின்மை, மனப்பாரம் எல்லாமாக சேர்ந்து அவளை காசநோயில்

தள்ளியது. அக்கம்பக்கத்தினர் முகத்தில் விழிக்கவும் முடியாமல், ஆற்ற

முடியாத துயரத்துடன் சரியான சிகிச்சையின்றி, குடிசையிலே அடைந்து

கிடந்தவள், ஓரிரு மாதங்களிலேயே இறந்தும் விட்டாள். அவளது

சாவுக்குக் கூட அந்த முதலாளி வரவில்லை.


`இவ ஒழுங்கா இருந்தா இந்த நெலம வ்ந்துருக்குமா?’, `அடுத்தவ

புருசனுக்கு ஆசப் பட்டா இப்பிடி தா ஆவும்‘, என அவளைப் பற்றின

விமர்சனங்கள் தொடர்ந்தன. `ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா

மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா

இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்

பட்டன. மகன் தவறு செய்தால், `நீ சரியா இருந்தா, அவன் ஏன் இப்படி

அலைறான்’ என மருமகளை குற்றம் சாட்டும் மாமியார்கள், மருமகன்

தவறு செய்தால் ,`பார்த்து பதவிசா நடந்துக்க’ என்று மகளுக்கு புத்தி

கூறும் அன்னையர்கள், கணவன் தவறு செய்தால், `ஏதோ கெட்டநேரம்’

என்று கையாலாகத்தனதுடன் ஏற்றுக் கொள்ளும் மனைவிகள், என எல்லா

கட்டங்களிலும் ஆண்களின் தவறுகள் அங்கீகரிக்கப் படுகின்றன.இங்கே, இந்த இரண்டு பெண்களின் செய்கையுமே முட்டாள்த்தனமானது,

ஏற்புடையது அல்ல என்ற போதிலும், இருவருக்குமே வாழ்வின்

சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்

வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது

புரியாதா?

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?

.

27 comments:

தமிழ் உதயம் said...

மகள்வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?
;////

எல்லாமே தெரிகிறது. ஆனால் திமிர், இம்மாதிரியான செயல்களை செய்ய தூண்டுகிறது.

வினோ said...

சகோ.. இப்படிப்பட்ட ஆண்கள் உணரும் நேரம் தவறுகள் மறையும்...

தமிழ் வினை said...

குற்றம் இருவரின் மீதெனினும் கடைசியில் பழியும், பாவமும், தண்டனையும் பெண்ணுக்குத்தானே சேர்கிறது. ஆணுக்குத் திருந்தி வாழும் சந்தர்ப்பமாவது கிடைக்கிறது. பெண்ணுக்கு உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்ணின் இயலாமையைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள்தான் இதில் முதல் குற்றவாளிகள்.

Chitra said...

`ஆம்புளன்னா அப்படித்தா, சேறக் கண்டா

மிதிப்பான், தண்ணியக் கண்டா கழுவுவான், பொம்பளயில்ல ஒழுங்கா

இருக்கனும்’ என ஆண்களின் `கல்யாண குணங்கள்’ நியாயப் படுத்தப்

பட்டன.

...... என்ன கொடுமைங்க இது? பெண் என்பவள் தான் பாவபழிகளை சுமக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியை நம் ஊரில் இன்னும் இருக்கிறதே. என்றுதான் மாறுமோ?

ஹேமா said...

பெண்ணாய்ப் பிறக்க புண்ணியம் செய்ய வேணும் என்பார்கள்.
இப்படிப்பட்ட ஆண் உலகத்தில் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் நாங்கள் !

காமராஜ் said...

//`பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் உள்ள மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?//

இன்னும் கனமாகக்கூடச் சொல்லியிருக்கலாம் அம்பிகா.இந்த இந்தியா ஆண் ஆண்டைகளால் ஆனது.

Gopi Ramamoorthy said...

\\மகள் வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது புரியாதா?\\

நல்ல கேள்வி. ஆனால் மீண்டும் மீண்டும் இது போன்ற தவறுகள் நிறைய நிகழவே செய்கின்றன:(

சந்தனமுல்லை said...

கோபத்தையும் வருத்தத்தையும் ஒருசேர தந்த இடுகை.....இன்னும் பெண்களை மட்டும் குற்றம் சொல்வது எத்தனைநாள்தான் நீடிக்குமோ....

நல்லா எழுதியிருக்கீங்க அக்கா, வழக்கம்போல...

ஹுஸைனம்மா said...

”திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பதற்காக நாம் வீட்டைப் பூட்டாமலா இருக்கிறோம்? நம் அளவில் விழிப்போடும், அறிவோடும் இருந்துகொண்டால் இம்மாதிரி கயவர்கள் ஏன் பெருகுகிறார்கள்?

இம்மாதிரி ஏமாற்றுக்காரர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கும் சட்டமும், அரசாங்கமும் இல்லையென்பதும் இவர்கள் விட்டில் பூச்சிகளைத் தொடர்ந்து வீழ்த்துகின்றனர்.

படிச்ச/படிக்காத பெண்கள் என்று விதிவிலக்கில்லாமல் இப்படி தாமாகவே பாழுங்கிணற்றில் விழுவதைப் பார்த்து வேதனைப்படுவதைத் தவிர என்ன செய்ய முடிகிறது? இவர்களைப் பார்த்து ஒருசிலராவது பாடம் படித்துக் கொண்டால் சரி.

ராமலக்ஷ்மி said...

வருத்தம் தரும் நிகழ்வுகள். முன் வைத்த கேள்விகளுக்கான பதிலை யோசிக்கவே விரும்பாமல் பலர்:(! உணரும் காலம் வருமா?

சே.குமார் said...

//"என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் உள்ள மனிதப் பிறவி"
என்பதை எப்போது உணர்வார்கள்?//

இப்படிப்பட்ட ஆண்கள் உணரும் நேரம் தவறுகள் மறையும்...

சுந்தரா said...

//இருவருக்குமே வாழ்வின்
சூட்சுமங்கள் புரிபடாத வயது. ஆனால் அந்த ஆண்கள்....? மகள்
வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?
அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது
புரியாதா?//

அட, இதெல்லாம் எங்க புரியப்போகுது அம்பிகா.

தன்வீட்டுப் பொண்ணுன்னா, அப்படியிருக்கணும் இப்படியிருக்கணுமென்று ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். ஆனா, அடுத்தவீட்டுப் பொண்ணுன்னா, அவங்களுக்கு இளக்காரம்தான்.

ponraj said...

அருமையான பதிவு!!!!

ஈரோடு கதிர் said...

விட்டில்கள் !

((((((::::

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

சிவகுமாரன் said...

////பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது
தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’என்பதை எப்போது உணர்வார்கள்?////

உணர வேண்டியது இருபாலரும் தான். பெண்ணடிமை கொடுமைக்கு சில பெண்களும் துணை போவது கொடுமை.
மிக நல்ல பதிவு.

Gokul Rajesh said...

//அதன்பின் அவளைப் பார்க்கையில் எரிச்சல் கலந்த பச்சாதாபம் தோன்றும்.//

ஏன்?

அம்பிகா said...

கோகுல்,
பொருத்தமில்லாத துணையை தேர்ந்தெடுத்ததொடு, பெற்றவரிடம் சொல்லாமல் `ஓடி’ வந்ததால் எரிச்சல், இப்படி வாழ்வை வீணாக்கிக் கொண்டாளே என்பதால் பச்சாதாபம்.
சரிதானா?
நன்றி கோகுல், படித்ததோடு, கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும்.

கோமதி அரசு said...

உங்கள் பதிவு படித்தவுடன் வேதாத்திரி மகரிஷியின் கவிதை நினைவுக்கு வந்தது.

//கற்பதனைப் காப்பாற்ற இருபாலருக்கும்
கடமைபொதுவேஎனினும்,
தவறிவிட்டால்
அற்புதமாம் இயற்கயிலே அமைந்த வேகம்
ஆணைவிட்டுப் பெண்ணுக்கே சின்னம் வைக்கும்.
சற்புத்திரன் போலே அவன் உலாவ,
சமூகத்தால் அவள் தூற்றப்ப்டுவாள்.அதனால்
நற்பண்பாம் கற்பொழுங்கை உயிரின் மேலாய்
நாடுகின்றார் அறிவுடைய பெண்கள் எல்லாம்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பர்கள்.

விழிப்புணர்வு தேவை அம்பிகா.

venu's pathivukal said...

அன்புத் தோழர் அம்பிகா அவர்களுக்கு

ஜவ்வு மிட்டாய் பதிவை இன்று காலை மீண்டும் எனது மனைவிக்கு வாசித்தபடி கடக்கும்போது நெகிழ வைத்தது. ஆனால், விட்டில் பூச்சிகள் அடுத்த நிலையில் வைக்கப்படவேண்டிய பதிவு.

நேரடியாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் அக்கப்போரைத் தாண்டியோ, ஒன்றிரண்டு உச்சுக் கொட்டுதலுக்கு மேலாகவோ இன்றைய வாழ்க்கை முறையில் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் உங்களால் அதை உருக்கமான சிறுகதையாகச் சொல்லவும், அதன் ஒரு கட்டத்தில் ஆற்றாமையில் மடிந்துபடும் அபலைகளின் கண்ணீரில் தோய்த்த தூரிகையைக் கொண்டு அதற்கு அடிப்படையான ஆணாதிக்கப் போக்குக்கு எதிராக ஒரு நெருப்புப் பொறியைத் தீட்டவும் சாத்தியமாகிறது.

ஓய்வாக (?) இருக்கும்போது தோழர் ராஜி (மா ராஜேஸ்வரி- என் துணைவி) உங்களுக்குப் பின்னூட்டம் போடக் கூடும்.

காமராஜூம் மற்றவர்களும் குறிப்பிட்டிருக்கும் வரிகள் பளீரெனத் தாக்கியதை எல்லோருமே உணர்வார்கள்.

ஒரு சிறிய பதிவில், பல பக்கங்களில் எழுதப்படும் கட்டுரைகளில் வந்தடைகிற இடத்தை நீங்கள் மிக இலகுவாக எட்டிப் பிடிப்பது உங்களின் அனுபவ ஞானத்தையும், மனம் திறந்த வாழ்வியல் பார்வையையும், உணர்வுகளோடு கெட்டிப்படுத்தப்பட்ட வாசிப்பையும் பிரதிபலிப்பதாகக் காண்கிறேன்.

இத்தனைச் செறிவாய் அந்தப் பெண்களின் நிலையையும், அதன் மேடையில் நின்று சமூகத்தின் அழுக்கையும் இப்படி காத்திரமாகச் சொல்கிற தன்மை ஏன் ஒரு நாவல் எழுத உங்களை இன்னும் தூண்டவில்லை....

பெண்ணிய சிந்தனையின் அழுத்தமான அந்தப் பொறி உங்களின் இயங்குதளத்தை ஏன் விரிவுபடுத்த உந்தித் தள்ளவில்லை?

எஸ் வி வேணுகோபாலன்

Thanglish Payan said...

Samugathin sattaiadi intha pathivu..

pengalai alugu pommayagavum , virsam thundum porulagavum parkum varai ithu oyathu..

Penmai unara vaikkanum..

Anonymous said...

http://ipc498a-misuse.blogspot.com/2010/12/blog-post_16.html

Please see above link. Naagalum pavam thanga by Appavi Paiyan....

நிலாமதி said...

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’என்பதை எப்போது உணர்வார்கள்?

excellent.........

தோழர் மோகன் said...

//மகள்

வயதொத்த பெண்ணின் வாழ்வை பாழாக்குகிறோம் என்பது தெரியாதா?

அவர்களின் ஏழ்மையை, அறியாமையை உபயோகப்படுத்திக் கொள்வது

புரியாதா?

``பெண் என்பவள் மிதிப்பதற்கும், கழுவதற்கும், சேறோ அல்லது

தண்ணீரோ இல்லை, உயிரும் உணர்வுகளும் நிரம்பிய மனிதப் பிறவி ’’

என்பதை எப்போது உணர்வார்கள்?//

மிக அருமையான பகிர்வு தோழி,தொடர்ந்து சாட்டை வீசுங்கள் இங்கு நிறைய உணர்த்தவேண்டியிருக்குது....

puthuvayal said...

ஒன்று மட்டும் உண்மை;வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் நல்லவர்கள் தான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

venu's pathivukal said...

அன்பு அம்பிகா

இந்த இடுகை, ஜனவரி இரண்டாம் தேதிய வண்ணக்கதிரில் அற்புதமான படத்துடன் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்...

எஸ் வி வேணுகோபாலன்