Friday, January 22, 2010

இவர்களும் பெளர்ணமி தான்!.

       வானம் இருட்டிக் கொண்டு வந்தது. மழை வருமோ, குடை
கூட கொண்டு வரலியே என நினைத்தபடியே வீட்டை நோக்கி வேகமாக
நடக்கத் தொடங்கினேன். `அக்கா, நீங்க தானே பார்லர் வச்சிருக்கீங்க’ என்னை வழிமறித்த அந்த பெண்ணுக்கு முப்பது வயதுக்குள் இருக்கும். சாதாரண நடுத்தர குடும்பத் தோற்றம். ஆமாம் என்பதாய் தலையசைத்தபடியே அவளை ஏறிட்டேன்.`அக்கா எம்பொன்ணு கருப்பா இருக்கா, கொஞ்சம் கலராக்க முடியுமா?’ என்றாள். `ப்ளீச்சிங்,பேஷியல் ஏதாவது செய்யலாம். பார்லருக்கு கூட்டிட்டு வாங்க’ என்றேன்.சட்டென ஏதோ தோன்ற உங்க பொண்ணுக்கு என்ன வயசிருக்கும்?எனக் கேட்டேன்.` எட்டு வயசாச்சு’ என்றாள் அவள். தலையிலடித்துக் கொள்ளலாம்போலிருந்தது. நிதானத்தை வரவழைத்துக் கொண்டு,`இந்த வயசுல எதுவும் செய்ய கூடாது. தோல் ரொம்ப மென்மையா இருக்கும். +2 முடிச்சு காலேஜ் போறவயசுல கூட்டிட்டு வாங்க, பாக்கலாம்’. சிந்தனையுடன் நடக்கத் தொடங்கினேன்.

       மேலேகுறிப்பிட்ட சம்பவம்ஒருஉதாரணம்தான்.பெண்குழந்தை
கருப்பாய் பிறந்து விட்டாலே, கவலையும் சேர்ந்தே பிறந்து விடுகிறது
என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்பவர்களுக்கு பெண்குழந்தை என்று பதில் வந்தால், அவர்களின் அடுத்த கேள்வி குழந்தை என்ன கலர் என்பதாகத்தான் இருக்கிறது. என் தோழியின் மகள் ஏழாவது வகுப்பு தான் படிக்கிறாள்.கொஞ்சம் கருப்பாக
இருப்பாள். அவள் நிறத்தை சுட்டிக்காட்டி பேசி ஒருவித தாழ்வுமனப்பான்மையை உருவாக்கி அதீத அல்ங்காரம் செய்யவும் பழக்கிவிட்டனர். விளைவு படிப்பில் நாட்டமின்றி முழுநேரமும் `மேக்கப்செட்’ டும் கையுமாய் அலைகிறாள். இன்னொரு சம்பவம்; B.E. முடித்து ஒரு நிறுவனத்தில வேலை செய்யும் பெண் `மூக்கும் முழியுமாக’ அழகாக இருப்பாள். ஆனால் நிறம் குறைவாக இருப்பாள். அவளுக்கு திருமணம். நிறையநகைகள்
போட்டு, ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர் ஆனாலும் பெண், முகத்தில் மலர்ச்சியில்லை. விசாரித்த போது தெரிந்தது. மாப்பிள்ளை கொஞ்சம் கலராகஇருப்பாராம்.நிச்சயதார்த்தத்தின் போதே பிள்ளைவீட்டார் இவள் நிறத்தைக் குறித்து
ஏதேதோ பேசி அவளை நோகடித்திருக்கின்றனர். கேட்பதற்கே வருத்தமாயிருந்தது.கோபமும் வந்தது. நிச்சயம் இவள் நிறத்தை காரண்ம் காட்டி கூடுதல் வரதட்சணை வாங்கியிருப்பார்கள் என எரிச்சலும் வந்தது


       இந்த வெள்ளை கலர் மோகம் பெரும்பாலான பெண்களை
ஆட்டி படைக்கிறது எனலாம்.கறுப்பாய் இருப்பவர்கள் கொஞ்சம் மாநிறம்
ஆகிவிடமாட்டோமா எனவும், மாநிறமாய் இருப்பவர்கள், கொஞ்சம் வெளுத்து விடவும்,வெளுப்பாய் இருப்பவர்கள் அதை தக்கவைத்துக்
கொள்ளவும் விழைகின்றனர்.கருப்பாய் இருப்பதென்பது
ஒரு குறைபாடில்லை. இயற்கையான விஷயம். அதுவும் இந்த நவீனயுகத்தில் ஓரளவு நிறத்தை மேம்படுத்த எத்தனையோ வழிமுறைகள்
உள்ளன. மேலும் அழகு என்பதொன்றும் நிரந்தரமில்லையே!.

       மிகப் பழைய படம், நானும் ஒரு பெண் என நினைக்கிறேன், விஜயகுமாரி , `கண்ணா கருமை நிற கண்ணா’ என அழுதழுது
பாடுவார். ஆண்டுகள் பல கழிந்துவிட்டாலும் இன்னும் பல விஜயகுமாரிகள் ஆங்காங்கே அபஸ்வரத்தில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

28 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

உடல்கலர் என்னனு பார்க்குறாங்களே ஒழிய மனக்கலர் என்னன்னு யாரும் பார்ப்பதில்லை...
அப்படி கறுப்பா பொண்ணு இருக்குறான்னு குறை சொல்லுறதும் பெண்கள்தான்...
பெண்கள் பெரும்பாலும் கலரா இருக்குறவங்களைத்தானே விரும்புகின்றனர்...

ஃபார்மெட்டிங் கொஞ்சம் கவனிங்க வரிகள் விட்டு விட்டு சிதைந்து இருக்கின்றது

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் குறிப்பிட்ட பாடலில் சில வரிகள் வரும்

மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா //

அதென்னமோ நம்ம ஊர்ல வெளுப்புக்கு கொடுக்குற மரியாதைய கருப்புக்கு கொடுக்கத் தயங்கறாங்க.

கருப்பே அழகு; காந்தலே ருசி.

க.பாலாசி said...

நல்ல இடுகை...

//பெண்குழந்தை
கருப்பாய் பிறந்து விட்டாலே, கவலையும் சேர்ந்தே பிறந்து விடுகிறது //

பெண்குழந்தை பிறந்தாலே சிலருக்கு கவலை வந்துவிடுகிறது.

இதை அந்தந்த பெண்களும் உணரவேண்டும்...

பா.ராஜாராம் said...

அருமையான பார்வை.பகிர்வு,அம்பிகா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பெண் பார்க்கற விளம்பரத்துல பாத்திருக்கீங்கள்ள ..கலர் கண்டிப்பா இருக்கும் லிஸ்ட் ல.. இப்பல்லாம் சினிமால நோ கருப்பு ஹீரோயின்ஸ் , எல்லா விளம்பரமும் கலர் பத்தி பேசுது.. :(

எங்க வீட்டுக்காரங்களோட பாட்டி நல்ல கருப்பு.. தாத்தா நல்ல வெள்ளை.. அவங்க எப்பவும் பாடச்சொன்னா , கருமை நிற கண்ணாவும் , காற்றினிலே வரும் கீதமும் பாடுவாங்க.. கருமை நிறக்கண்ணாவை .. ஏன் செலக்ட் செய்து பாடறாங்கன்னு அடுத்த முறை பாக்கும்போது கேக்கனும்..

கபிலன் said...

ஐயோ நீங்க வேற...பொண்ணுங்க மட்டும் இல்ல...ஆண்களும் தாங்க...

எங்க வீட்ல வந்து பாருங்க.....பரணை மேல எத்தனை Fair & Lovely மூட்டை இருக்குன்னு......கலர் வந்த மாதிரி தெரியல : )

மாதவராஜ் said...

நல்ல பதிவு, கருப்பு என்பது குறைபாடு அல்ல என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய்ச் சொல்லி இருக்கலாமோ...

சரி, அதை ஏன் மாற்ற வேண்டும்? மாற்ற முடியும் எனச் சொல்ல வேண்டும்?

அண்ணாமலையான் said...

ஆமாங்க. என்ன கூட கருப்பா இருக்கறேன்னு சில பொண்ணுங்க வேனாம்னு போய்ட்டாங்க...?!

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை அம்பிகா. கடைசியில் சொன்ன மாதிரி ஆண்டுகள் பல கழிந்தாலும் நம் மக்கள் மனோபாவம் மாறவில்லை என்பது வருத்தமான விடயம்.

கண்ணகி said...

ஆமாம் அம்பிகா. பெண்களுக்கு அது ஒரு தடைக்கல்லாக்வே இருக்கிறது.படிப்பு, குணம் எல்லம் மறுபடிதான்.

காமராஜ் said...

இதுவும் கூட நுண் அரசியல் தான் அம்பிகா.அதை அணிச்சையாக்கிவிட்டார்கள். அதுதான் சோகம்.
என் மகள் இப்படிச் சொல்லுவாள் நீங்கள் மதிக்கிற சிவப்பு என் பாதத்தில் இருக்கிறது.
நீங்கள் வெறுக்கிற கருப்போ என் கண்ணுக்குள் இருக்கிறது.
என்றாலும் பலநேரம் வெறித்தபடி உட்கார்ந்திருப்பாள்.

அம்பிகா said...

பிரியமுடன்... வசந்த்,
குறை சொல்வது வேண்டுமானால் பெண்களாக இருக்கலாம். ஆனால் கலராக வேண்டும் என்று விரும்புவது அதிகமாக ஆண்கள் தான்.
`கருப்பு தா எனக்கு புடிச்ச கலரு’னு
எந்த ஆணும் பாடின மாதிரி தெரியலையே!
ஃபார்மெட்டிங் கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். சுட்டி காட்டியதற்கு
நன்றி.

அம்பிகா said...

இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய்
கண்ணா; நல்ல
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய்
கண்ணா.
எத்தனை பொருள் நிறைந்த வரிகள்.
அழகாக அடியெடுத்து கொடுத்திருக்கிறீர்கள்,அமித்தம்மா. நன்றி.

அம்பிகா said...

\\க.பாலாசி said...
பெண்குழந்தை பிறந்தாலே சிலருக்கு கவலை வந்துவிடுகிறது. \\
உண்மைதான் பாலாசி. இன்னமும் இந்த நிலை தொடரத்தான் செய்கிறது.

நன்றி, பா.ரா.

நன்றி, சங்கவி. ஆனா எல்லோரும் அப்படி நினைக்க மாட்டேங்குறாங்களே!

நிஜம் தான் முத்துலெட்சுமி,
பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாலே, நல்ல கலரா, என்று தான் ஆரம்பிக்கிறோம்.
நன்றி. முத்துலெட்சுமி.

வாங்க, கபிலன்,
ஃபேர் அண்ட் லவ்லி கம்பெனிக்கு நல்ல வருமானம்தான்.

அம்பிகா said...

மாதண்ணா,
கருப்பு குறைபாடு இல்லை தான், ஆனா குறைபாடாக ஆக்கிவிட்டார்கள்.

\\சரி, அதை ஏன் மாற்ற வேண்டும்? மாற்ற முடியும் எனச் சொல்ல வேண்டும்?\\
கருப்பாக இருப்பவர்கள் படும் கவலை
அவர்களுக்கு தான் தெரியும். நான் லேசாக கோடிட்டுதான் காட்டி யிருக்கிறேன். சில வீட்டில் பெற்றோரே
`கருப்பி, காக்காச்சி’ என்று காரணப் பெயரிட்டு அழைக்கும் அவலங்கள் நடக்கின்றன. அதனால் தான் இப்படி நினைக்க வேண்டியிருக்கிறது.

அம்பிகா said...

வாங்க, அண்ணாமலையான்,
உண்மையாகவா சொல்றீங்க?
பரவாயில்லை. அவர்களுக்கு தான் நஷ்டம் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி ராமலஷ்மி, மக்கள் மனோபாவம் மாறவே இல்லை என்பது தான் உண்மை.

அம்பிகா said...

காமராஜ் அண்ணா,
உங்கள் பெண் எவ்வளவு அழகா சொல்லியிருக்கா? ஆச்சரியமாயிருக்கு.
அவளுக்கு என் வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

ஆமாம் க்ண்ணகி, பெண்களை பலவீனபடுத்தும் தடைகல்லாகவே அமைந்து விடுகிறது. பகிர்வுக்கு நன்றி

Deepa said...

அவசியமான பதிவு. இது பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும்.

முத்துலெட்சுமி சொல்வது போல் ஊடகங்களும் விளம்பரங்களும் இந்த வெறிக்கு முக்கிய காரணங்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் பார்த்து ரசித்து, ஏன் பொறாமைக் கூட பட்ட பெண்கள் எல்லாருமே மாநிறம் அல்லது கறுப்பு. க்ரிஸ், அகிலா, முல்லை, மெர்ஸி, சங்கீதா என்று பலரைச் சொல்லலாம்.

அவர்களின் அழகுக்கும், ஸ்டைலுக்கும், தன்னம்பிக்கைக்கும் முன் பக்கத்தில் நிற்க முடியாது!

சாந்தி மாரியப்பன் said...

நல்ல பகிர்வு அம்பிகா..எல்லாத்தகுதிகளிலும் நிறைந்திருந்தாலும் கூட, கலர் என்ற ஒரு தகுதி குறைந்துவிட்டால்,மற்ற எல்லாம் அடிபட்டுப்போகின்றன.குணம் கூட அப்புறம்தான்.

அதுவே, வேறு எதுவும் இல்லாவிட்டாலும்,கலர் மட்டும் இருந்தால் மதிக்கும் அவலமும் இங்கேதான் இருக்கிறது.

வெளிநாட்டுக்காரர்கள் நம் நிறம் வரவேண்டுமென்பதெற்காக சூரியக்குளியல், tan cream எல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் நாம்?????.

"உழவன்" "Uzhavan" said...

இந்த மாதிரியான எண்ணம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் "கறுப்புதான் எனக்குப் பிடித்த கலரு" என்ற பாடல் வந்தது.
நல்ல இடுகை

Deepa said...

அம்பிகா அக்கா!

உங்கள் “அழகம்மா” இடுகை வண்ணக்கதிர் இதழில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
Keep rocking அக்கா!!!

அம்பிகா said...

உண்மைதான், தீபா,
தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான விஷயம். அது இருந்தால் எதையும் சாதிக்கலாம். இதில் பெற்றோரின் பங்கு முக்கி்யமானது.
வாழ்த்துக்களுக்கு நன்றி. தீபா.

அம்பிகா said...

மிகச் சரியாக சொன்னீர்கள் அமைதிச்சாரல். நாம் தான் இந்த வெளிறிய நிறத்துக்கு பித்து பிடித்து அலைகிறோம்.

வாங்க, உழவன்,
பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

அருமையான பாடல் அது.

ஊடகங்களின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவு இது. படித்தவர்களும் தம் பெண்குழந்தைகள் கருப்பாக இருப்பது குறித்து கவலைப்படுவதைச் சாடினாலும், அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

அறிவியல்ரீதியாக, கருப்புத்தோலுடையவர்களுக்கு தோல் கேன்ஸர் வரும் வாய்ப்பு குறைவு.(விட்டமின் டி அதிகம் என்பதால்) ஐரோப்பிய நாடுகளில் இக்கேன்ஸர் அதிகம் உண்டு. என்னத்த சொல்லுங்க, கலரா இல்லியேன்னுதான் கவலை.

அம்பிகா said...

உண்மைதான் ஹுஸைனம்மா.
இந்த உண்மை தெரிந்தாலாவது வெள்ளை கலர் மோகம் குறையுமான்னு தெரிய வில்லை.
பகிர்வுக்கு நன்றி ஹுஸைனம்மா.

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_06.html

Santhosh said...

மனிதனின் தோலில் மெலனின் என்ற நிறமி உள்ளது. இது தோலை வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு இயற்கையாக அமைந்து. இது அதிகமாக இருப்பதால்தான் முகம் கருப்பாக தோன்றுகிறது. கலராக இருப்பவர்களின் தோலில் மெலனின் குறைவாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் சிவப்பாக இருப்பவர்கள்தான் குறைபாடுடையவர்கள் என்பது தெளிவாகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இறைவன்தான் மனிதனை படைக்கிறான் என்று நம்புகிறீர்கள். அப்படி இருக்கும் போது ஒருவர் கருப்பாக இருப்பது அவருடைய தவறாகுமா?