Friday, December 3, 2010

ஜவ்வு மிட்டாய்

.

’என்னத் தெரியுதா’ சிரித்தபடியே என்னை நெருங்கியவளை முதலில்

இனம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த `ஸ்பிரிங்’ முடியும், வெகுளி

சிரிப்பும் ஒரு புகைப்படலமாய் நிழலாடியது. `நா ந்தா .....’ பேரைச்

சொன்னதும், சட்டென ஸ்படிகமாய் பளிச்சிட்டன நினைவுகள். `எம் மக’

அவளின் பிரதியாய், அதே சுருட்டை முடியுமாய் நின்ற பெண்ணை

அறிமுகப் படுத்தினாள். `காலேஜ் ல படிக்கா’ குரலில் பெருமை வழிந்தது.

பரஸ்பர நலவிசாரிப்புகளுக்கு பின் விலகி சென்ற அவளின் நினைவுகளில்

மூழ்கினேன்.



இருபது வருஷமிருக்குமா அவளைப் பார்த்து... கூடவே இருக்கலாம்.

சிறு வயதில் நான் படித்த பள்ளிக்கு எதிரில் தான் அவள் வீடு. என்னுடன்

ஐந்தாவதோ, ஆறாவது வகுப்போ, சரியாக நினைவில்லை, சேர்ந்து

படித்தாள். `என்னை தெரியுதா’ என்றோ, அல்லது `நீ ஜோதியக்கா மக

தானே’ எனறோ என்னை அணுகும்பலரை அடையாளம் காட்ட முடியாத

என் ஞாபகசக்தியை அவமானத்துடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவள்

குறித்த அனைத்து நினைவுகளும் பதிந்திருக்க முக்கியமான காரணங்கள்

இருந்தன. முதலாவது அவள் பெயர். இரண்டாவது அவள் அம்மா விற்கும்

ஜவ்வு மிட்டாய்.




`பரிபூரணம்’ இப்படி ஒரு பெயரை யார் வைத்தார்கள் என வியப்பாய்

ிருக்கும். இன்னொரு விஷயம், அந்த பெண்ணுக்கு `ர’ வை உச்சரிக்க.

வராது `ஹ’ ன்னு தான் சொல்வாள் இதுக்காகவே ஸ்கூலில் நிறைய

பேர் அவளை கேலி செய்வதுண்டு.

ஒம் பேரு என்ன?

பஹிபூஹணம்.

ஒங்கம்மா பேரு...

ஹாஜபூபதி ( ராஜ பூபதி.)

உந் தம்பி பேரு

ஹாம தொஹ (ராம துரை)

தங்கச்சி...

ஹாஜ குமாஹி (ராஜ குமாரி)

எல்லோரும் கெக்கலி கொட்டி சிரிப்பார்கள். அவளை பார்க்க பாவமா

யிருக்கும். சில சமயம் அழுதும் விடுவாள். அவர்கள் வீட்டில் அத்தனை

பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்

இருந்தது. ` நாக்குல வசம்ப சுட்டு தேச்சி வுட்டா, நாக்கு திருத்தமா

பேச்சி வரும்’னு மருந்து சொல்வோரும் இருந்தனர். வீட்டின் வறுமை

காரணமாக அத்துடன் படிப்பையும் நிறுத்தி விட்டாள்.



ஸ்கூலுக்கு எதிரில், மேஜையாகவும் இல்லாத, ஸ்டூல் மாதிரியும்

இல்லாத ஒரு பலகை வச்சி, அதில் ஜவ்வு மிட்டாய் வச்சி அவங்க

அம்மா வியாபாரம் பண்ணுவாங்க. அவங்க ஜவ்வுமிட்டாய் ஸ்கூல்

பிள்ளைகளிடம் மிகவும் பிரபலம். நல்ல பஞ்சுமிட்டாய் ரோஸ்கலர்ல,

மஞ்சள் கலரில், பொரிகடலை நொறுக்கி அதில் தூவி, என தினுசு்தினுசா

வச்சிருப்பாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். ஆனா அம்மா திட்டுவாங்க.

ஈ மொய்க்கும் வாங்க கூடாதுன்னு சொல்வாங்க. அதனால ஒரு தடவ

`அம்மா இப்போ தா போட்டுட்டு இடுக்காங்க’ ன்னு வீட்டுக்கு கூட்டிட்டு

போனா. அவங்கம்மா பாகு காய்ச்சிட்டிருந்தாங்க. தம்ளர் தண்ணியில

ஒரு சொட்டு பாகை வுட்டு `இப்பிடி கரையாம இருந்தா பதம் வந்துட்டு’

ன்னு சொல்லி ஒரு அகல பாத்திரத்துல தேங்கா எண்ணய தேச்சி அதுல

ஊத்தி ஆற வச்சாங்க. பாதி சூட்டிலேய எடுத்து, கைலயும் எண்ணய

தேச்சிட்டு, மொத்த பாகையும் சுருட்டி கைல எடுத்தாங்க. சூடா இருக்கும்

போதே இழுக்கணும்‘ னு ஒரு கொக்கில போட்டு இழுக்க ஆரம்பிச்சாங்க.

இதுக்குன்னே வாசல் நெலை ல `ட’ மாதிரி ஒரு கொக்கி அடிச்சி வச்சி

இருந்தாங்க. அது எண்ண கசடேறி பளபளன்னு இருந்திச்சி. சூடு தாங்காம

அடிக்கடி கைய ஊதிக்கிட்டாங்க. சூடா மிட்டாய இழுத்து இழுத்து, அவங்க

கையெல்லாம் காய்ப்பு புடிச்சி இருந்திச்சி. ரொம்ப நேரம் இழுத்திட்டே

இருந்தாங்க. `இப்புடி இழுக்கலன்னா மிட்டாயி ஜவ்வு இல்லாம கடுக் கடுக்

ன்னு ஆயிரும்‘னு சொல்லிட்டே எனக்கு மிட்டாய் குடுத்து அனுப்னாங்க.



நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு திடுமென நினைவு வந்தது. அவள்

மகள் அவளைப் போலில்லாமல் சுத்தமாக பேசுவாளா, `ர’ வை அழுத்த

மாய் உச்சரிப்பாளா, என்ன பெயர் வைத்திருப்பாள்? கவலையாய் நினைத்த

போதே, அந்த பெண்ணின் திருத்தமான முகம் நினைவு வந்தது. அதில்

தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய் தோன்றியது. கல்லூரி

யில் படிப்பதாய் கூறியது நினைவு வந்தது. ஜவ்வு மிட்டாயின் இனிப்பு

இப்போதும் தித்தித்தது.

.

19 comments:

'பரிவை' சே.குமார் said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு.

எல் கே said...

நலல் கொசுவர்த்தி

pichaikaaran said...

தித்திக்கும் எழுத்து

Unknown said...

Wow. Very Nice.

சுந்தரா said...

சுவாரசியமான நினைவுகள் :)

Asiya Omar said...

உங்க ப்ளாக் இப்ப தான் வரேன்னு நினைக்கிறேன், பகிர்வு அருமை.ஜவ்வு மிட்டாய் அருமை,நானும் பள்ளி நாட்களில் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்குப்பா, ஜவ்வுமிட்டாயும் கொசுவத்தியும்..

வினோ said...

கதையா இல்ல உண்மை நிகழ்வா?

ராமலக்ஷ்மி said...

ஜவ்வு மிட்டாய் செய்யப்படும் விதத்தையும் நினைவு கூர்ந்திருப்பது அழகு.

ரொம்பச் சின்னக் குழந்தைகளுக்குதான் இப்படி ஓரிரு எழுத்துக்கள் வராதென கேள்விப் பட்டிருக்கிறேன். பாவம்தான்.

//தெளிவும், தன்னம்பிக்கையும் விரவி நின்றதாய்//

அப்படியேதான் இருக்கட்டும்.

தித்திக்கும் பதிவு.

அன்பரசன் said...

//அவர்கள் வீட்டில் அத்தனை
பேருக்கும் இந்த குறையும் இருந்தது, அத்தனை பேர் பெயரிலும் ர வும்
இருந்தது.//

விதி வலியது.

அன்பரசன் said...

நினைவுகள் அருமை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜவ்வுமிட்டாய சாப்பிட ரொம்ப நல்லாருக்கும். ஸ்கூல் படிக்கும்போது சாப்பிட்டது. எங்க பக்கத்து வீட்டுல சொந்தக்காரங்க பெரியம்மா ஜவ்வு மிட்டாய் செய்து பள்ளிக்கு அருகில் விற்பாங்க.. ஆசையுடன் வரும் பிள்ளைகள் கூட்டம் பெரியம்மாவை சுற்றிலும் ஈமாதிரி மொய்ப்பாங்க..

உங்க நினைவுகளும் அதைத்தான் சொல்கிறது. பகிர்வு அருமை.

Chitra said...

மனதை விட்டு நீங்கவில்லை.

Unknown said...

ஜவ்வு மிட்டாய் போலவே .. தித்திப்பாக நினைவுகள் ...

எஸ்.கே said...

அருமையான நினைவுகள்!

ஹேமா said...

நினைவலைகளுக்குள் எங்களையும் இருத்திவிடுகிறீர்கள் அம்பிகா !

தினேஷ்குமார் said...

அனுபவம் அருமையாக சொல்லியிருக்கீங்க

அமுதா said...

அழகாக ஒரு நினைவுகூறல்.

ரிஷபன் said...

ரசிக்க வைத்த நினைவுகள்..