Tuesday, December 15, 2009
ஒரு முடிவிருந்தால், அதில் தெளிவிருந்தால்......
குபேரேந்திரராஜ். இது அவருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர். ஆனால் அது நாளடைவில் மருவி, திரிந்து கோவிந்தராஜ் ஆகிவிட்டது. பெயரில் இருந்த குபேரனும், இந்திரனும் காணாமல் போய்விட்டதாலோ என்னவோ அவர் `கோவிந்தா’ராஜ் , மன்னிக்கவும், கோவிந்தராஜ் ஆகி விட்டார். ஒரு சிறு ஓட்டுவீடும், கொஞ்சம் வயலும், ஒரு சிறிய பனந்திரடும் அவரது பூர்வீக சொத்துக்கள்.
`ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’, என்பார்கள். ஆனால் இவரோ தனது ஆஸ்தியை ஆள ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக வரிசையாக ஐந்து பெண்களை பெற்றார். ` ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ’, என்பார்கள். இவருக்குத்தான் அந்த கவலையில்லையே. ஆனால் இவரது மனைவிதான் ஐந்தாவதும் பெண்ணாக பிறந்துவிட்டதே என்று மருத்துவமனையில் வைத்து மிகவும் அழுததாக சொன்னார்கள். ஆனால் அதுவும் பிரசவவைராக்கியம் தான் என்பது அடுத்த சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது. ஆறாதாக ஒரு ஆண்குழந்தை பிறந்து அவரது வாரிசு ஆசைக்கு முற்றுபுள்ளி வைத்தது.
இவரது ஐந்தாவது மகள் வசந்தி. இவள் தான் நமது கதாநாயகி. இவள் எட்டாவது படிக்கும் போதே மூத்த அக்காவுக்கு திருமணமாகி விட்டது. +2 படிக்கும்போது, இரண்டாவது அக்கா. மற்ற இருவரும் ஒரு ஜவுளிக்கடையில் 800 ரூ சம்பளத்துக்கு வேலை செய்தார்கள். நம் வசந்திக்கு மட்டும் படித்து நல்ல வேலைக்கு போகவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. பக்கத்தில் இருந்த தமிழ்மீடியம் பள்ளியில் தான் படித்தாள். +2 வில் 1043 மதிப்பெண்கள் எடுத்தும் அவளை, பெற்றோர் மேலே படிக்க அனுமதிக்கவில்லை. விஷயம் அறிந்த நான் அவள் அம்மாவிடம் பேசினேன். ``அவளுக்கு கண்டிப்பா இன்ஜினியங் கிடைக்கும். படிப்பு செலவுக்கு பேங்க் ல லோன் கொடுக்குறாங்க. உங்களுக்கு அதிக செலவு இருக்காது, படிக்கவைங்க, அக்கா’’ என்றேன். அவங்களோ,`` எப்பூ, சுசி ( இரண்டாவது மகள் ) கல்யாணகடனே இன்னும் அடைக்கல. அதுக்குள்ள அவ பேறுகாலத்துக்கு வந்துருக்கா. அதையும் பாக்கணும். லோன் கெடச்சாலும் போகவர செலவு, துணிமணி இன்னும் எவ்ளோ இருக்கு. ஆம்புள புள்ளயவே படிக்க வைக்கல. இவளுக்கு ஆச வேறா. வெரலுக்கு தக்க தா வீங்கனும்’’ னு ஒரேயடியாக இரண்டு பேர் வாயையும் அடைத்து விட்டார்கள். நீர் நிறைந்த கண்களோடு தலைகுனிந்து நின்ற அவளைப் பார்க்கவே பாவமாயிருந்தது.
சில மாதங்கள் கழித்து அவள் அம்மா என்னிடம்,`` பக்கத்துல இருக்க கடைக்கு வேலைக்கு போகமாட்டேங்குறா. கொஞ்சம் சொல்லுப்பூ’’ என்றார்கள். அவளிடம் கேட்டேன். அவள், `` இப்போ வேலைக்கு போயிட்டா பெறவு படிக்கவே வைக்கமாட்டாங்க. நா கண்டிப்பா படிப்பேன்’’ என்றாள் உறுதியாக. அந்த சின்னப் பெண்ணின் உறுதி ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சந்தோஷமாக ஓடி வந்தாள்.அக்கா, கவர்ன்மெண்ட் நர்சிங் ட்ரைனிங் கோர்ஸ் ல சேர எழுதிப்போட்டிருந்தேன், அப்ளிகேஷன் வந்திருக்கு’’ என்றாள். ``ஃபில் அப் பண்ணி அனுப்புமா, உனக்கு கண்டிப்பா கிடைக்கும் ‘’ , என்றேன்.
பக்கத்தில் பாளையங்கோட்டையிலேயே கிடைத்தது. கவர்ன்மெண்ட் கோர்ஸ் என்பதாலும், பக்கத்தில் என்பதாலும் அதிக செலவில்லை. அக்காவும் பிரசவம் முடிந்து ஊருக்கு போய்விட்டாள். இவள் பிடிவாதத்தின் காரணமாக, வேறு வழியின்றி அனுமதித்தார்கள். சந்தோஷமாக படித்தாள். மூன்று வருட கோர்ஸ் போன வருடம் முடிந்தது. ஒரு வருடம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் 4000ரூ சம்பளத்தில் வேலை செய்தாள். இரண்டு மாதங்களுக்கு முன் அரசாங்கவேலை கிடைத்தது., அதுவும் பக்கத்து ஊரிலேயே போஸ்டிங்.
அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் மருத்துவரிடம் பேசும்போது கூறினார்கள்,`` எங்களுக்கெல்லாம் தலை நரைத்த பிறகு அரசாங்க வேலை கிடைத்தது. இந்த பொண்ணுக எல்லாம் குடுத்து வச்சதுக. 21, 22 வயசுல அரசாங்க வேலை. ட்ரைனிங் முடிச்சதும் 18000 ரூ க்கு மேல சம்பளம். 38 வருஷம் சர்வீஸ் வேற’’ , என்றார் சற்று பொறாமையோடு. எனக்கோ வசந்தியை நினைத்து பெருமையாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
அருமையான பதிவு!!!
வாழ்த்த வயது இல்லை
பொன்ராஜ்-தூத்துக்குடி
அருமையான அனுபவ பகிர்வு, மற்றும் எழுத்து!!
சுவையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்
சீரான எழுத்து நடை. அருமையான இன்னும் பல விஷயங்கள் வெளிப்படும் என நினைக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.
ஒரு சிறுகதை போலச் சொல்லிப் போகிறீர்கள். போகிற வழியில்தான் வாழ்க்கையின் எத்தனை கூறுகளை பிசிறில்லாத பாணியில் மிக இயல்பாக அடையாளப்படுத்தி நடக்கிறீர்கள். கச்சிதமாகப் பயன்படுத்துகிறீர்கள் சொற்களை, ஹைக்கூ போல. பொற்கொல்லர் வீசிக் கொட்டி வழிந்து அலம்பிப் போகும் நீரில் நனைந்த மண்ணெடுத்து வந்து அலசி அலசி மீட்டெடுத்துக் காட்டுகிறீர்கள் மிகக் கொஞ்சவும் போலான பொன் துகளை...அதனால் என்ன ஆகிவிடப் போகிறதோ என்று நிமிர்வதற்குள் உங்கள் ரசாயனக் குடுவைக்குள் இறங்கிய மஞ்சள் துகள்கள் ஆபரணமாக வெளியில் தெறித்து விழுவதைக் காட்டிச் சிரிக்கிறது உங்கள் பதிவு. அடேங்கப்பா, இதே உண்மைக் கதையை எத்தனை துயரமாகவும், சோகமாகவும் பிழிந்து நிராசையாக முடித்துவிட வாய்ப்பு இருக்கையில், வென்று காட்டுகிற சாதனையாளரை உண்மை நிகழ்வுகளிலிருந்து படம் பிடித்திருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ, அந்த 18,000 சம்பளமோ, 38 வருட சர்வீசோ பெரிய மயக்கத்தை உண்டுபண்ணவில்லை. ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுத்து அனுப்புவதற்காக வீடு முழுக்க நிறைந்திருந்த கன்வேயர் பெல்ட் போன்ற இயந்திரகதியான வாழ்க்கைக்கு எதிராக நின்று, தனது உணர்வுகளுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணம் அவள் போராடியதுதான் சொக்க வைத்தது. அந்த உறுதிக்கு உங்கள் தலைப்பு அற்புத பொருத்தம்.
ஒரு சின்ன இணைப்பு. முடிவில் தெளிவிருந்தால்....என்பது, முடிவற்ற தெளிவுடனே இனி வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று வாழ்த்தவும் செய்கிறோம்.
கதை சொல்லிகள் பெண்களாக இருக்கும்போது, நுட்பமான சில தடயங்கள் பிடிபடும். வாழ்வு குறித்த கூர்ந்த நோக்கின் தடயங்கள் அவை. வேகவேகமான அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் உங்கள் இந்தப் பதிவில் கூட அவை மின்னுகின்றன......வாழ்த்துக்கள்.
எஸ் வி வேணுகோபாலன்
பொன்ராஜ்,
கலையரசன்,
அண்ணாமலையான்,
நன்றிகள்.
மாதண்ணா,
இந்த பிஸியான நேரத்திலும், என் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருப்பது சந்தோஷமாயிருக்கிறது.
உங்கள் போராட்டம் விரைவில் வெற்றி அடைய வேண்டும்
வேணுகோபாலன் ஸார்,
உங்கள் பாராட்டுக்கள்.
உற்சாக படுத்துகின்றன.
எனக்கென்னவோ, அந்த 18,000 சம்பளமோ, 38 வருட சர்வீசோ பெரிய மயக்கத்தை உண்டுபண்ணவில்லை.
உண்மைதான்.
எந்த பின்பலமோ, ஆதரவோ இன்றி தனித்து நின்று சாதித்த அவளது வெற்றியை வெளிப்படுத்தவே அதை குறிப்பிட்டிருந்தேன்.
அருமை அம்பிகா, அருமை
சீரான எழுத்து நடை
நல்லப் பதிவு
வசந்திக்கு வாழ்வு வசமாகட்டும்
நம்ம ப்ளாக் பக்கம் வாங்க
நமக்கு கிடைக்கும் அனுபவங்களை கதையாகவோ அல்லது ஆக்கங்களாக கொடுப்பதன் மூலம் எழுதுபவரும் பயன் அடைகிறார், வாசிப்பவரும் பயன் அடைகிறார். நல்ல இடுகை.
நல்ல அனுபவப் பகிர்வு, அம்பிகா அக்கா!
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட அந்த பெண்ணுக்கு வாழ்த்துகள்!
தொடர்ந்து எழுதுங்கள்!
வசந்திக்கு வாழ்த்துக்கள், தலைப்பும் சூப்பர்.
தொடர்ந்து எழுதுங்க, அப்புறம் மார்கழி நினைவுகளை கட்டாயம் எழுதிடுங்க.
வாழ்வில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். வாழ்த்துக்கள்.
நன்றி, விஜியண்ணா.
அண்ணாமலையான். வந்து கமெண்ட்டும் போட்டாச்சு.
உண்மைதான். தமிழுதயம்.
உங்க பேர் நல்லாயிருக்கு.
முல்லை, அமித்தம்மா,
உங்கள் வாழ்த்துக்கள் அவள் வாழ்வை மேலும் வளப்படுத்தட்டும்.
மலைக்க வைக்கிறது அந்தப் பெண்ணின் மும்முரம். இந்த உரம் பெற்றால் எத்தனை பெண்கள் வாழ்வு சீர் பெறும். வசந்திக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் அம்பிகா.
நல்ல எழுத்துகள் வழிகாட்ட மறப்பதில்லை. மேன்மேலும் வளம் பெற வாழ்த்துகள்.
நல்ல பதிவு
ஒரு சிலருக்கே எது வேண்டுமென்பதில் தெளிவிருக்கிறது. அவர்களே வெற்றி அடைகிறார்கள். ‘Positive' ஆன பதிவு.
வல்லிசிம்ஹன். உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
நன்றி. த்யாகு அண்ணா!.
அருமையான பகிர்வு!
வாழ்த்துக்கள் வசந்தி!
உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக அவள் வாழ்வை வளமாக்கும்.
தங்களின் கட்டுரை மிக நேர்த்தியாக... உள்ளது வசந்திக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும்
நன்றி, கருணாகரசு.
Post a Comment