Monday, December 21, 2009

ஒரு முட்டையும், இரண்டு சிகரெட்டும்.


தட்டில் சோறு போட்டு குழம்பு ஊற்றி மகனிடம் கொடுத்து, ``சாப்டுட்டிரு, ஆம்லெட் போட்டு கொண்டாறேன்’’ என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள் ருக்கு. முட்டைக்கல்லை ஸ்டவ்வில் வைத்தவள், வெட்டிவைத்திருந்த வெங்காயத்தை கிண்ணத்தில் போட்டாள். முட்டையை எடுத்து, கையிலிருந்த கரண்டியின் நுனியால் இலேசாக தட்டினாள். உடையவில்லை. மறுபடியும் தட்டினாள். அப்போதும் உடையாமலிருக்கவே எரிச்சல் வந்தது. ``இதென்ன, சனியன்! ஏவல் கீவல் வச்சிட்டாங்களா?’’ அங்கலாய்த்தவாறே மறுபடியும் உடைத்து பார்த்தாள். கோபத்தில் மகனிடம் கத்தினாள்,`` என்ன முட்ட வாங்கிட்டு வந்த? ஒடஞ்சு தொலைய மாட்டேங்குது. கூமுட்டையா இருக்குமோ, ஒடஞ்சா வீடெல்லாம் நாறிப் போயிரும். கடைல குடுத்து மாத்திட்டு வா!’’ சாப்பிட்டுக் கொண்டிருந்த மகனை கடைக்கு விரட்டினாள். ``என்னம்மா, சாப்டவுடாம, ‘’ எரிச்சலுடன் முணங்கியவாறே கடைக்கு போனான்.
                           `` அண்ணே இந்த முட்ட சரியில்ல. ஒடைய மாட்டேங்குது. வேற முட்ட தாங்க,’’ முட்டையை கடைக்காரனிடம் நீட்டினான். கையில் வாங்கியவன் , ``நல்லாத்தான இருக்கு’’ என்றவாறே உடைத்துப் பார்த்தான். மறுபடியும் கொஞ்சம் வேகமாய்... முட்டையின் மேல் ஓடு மட்டும் இலேசாக நொறுங்கி வந்தது. உற்றுப் பார்த்தவன், `` அட, அவிச்ச முட்ட !!!.... அவிச்சமுட்ட எப்டி கடைக்கு வந்துச்சி?.....’’ யோசித்தான்.... திடீரென நினைவு வந்தவனாக பக்கத்தில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்த பையனின் கையை எட்டிப் பிடித்தான். ``ஏல ! கொஞ்சமுன்னால நீதான முட்டைய வேணாமுன்னு குடுத்துட்டு ரெண்டு சிகரெட்டு வாங்கிட்டுப் போன; அதுக்குள்ள திருப்பியும் சிகரெட்டு வாங்க வந்துட்டியா?. இரு, இரு, ஒங்கம்மாவக் கூப்டுறேன்... ஏ.......பாலாக்கா..... பாலாக்கா......’’ கத்தினான். பக்கத்து வீட்டில் இருந்த பாலாக்கா வெளியே எட்டி பார்த்தவள், `` எம்புள்ளய எதுக்கு புடிச்சு வச்சிருக்க’’ இவனிடமே சண்டைக்கு வந்தாள்.
                           ``ஒம் புள்ள செஞ்ச வேலயப்பாரு.... வீட்ல அவிச்சி வச்சிருந்த முட்டய எங்கிட்ட குடுத்து ரெண்டு சிகரெட்டு வாங்கிட்டுப் போயிட்டான்..’’ இதற்குள் பையன் கையை உதறி விட்டு ஓடிவிட்டான்.
                           ``அடப்பாவி..... திங்க வச்சிருந்த முட்டய குடுத்து சிகரெட்டு வாங்கி குடிச்சிருக்கியே....! நீ உருப்படுவியா.....? ஒன்னயவும் ஒருப் புள்ளனு பெத்தேம்பாரு.‘’ பாலாக்கா துரத்துகிறாள்....

16 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை. நல்ல நடை. வாழ்த்துக்கள் அம்பிகா.

Anonymous said...

GOOD JOKE!!!!!!?

PONRAJ-TUTICORIN

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்வ்! :-)

சந்தனமுல்லை said...

தமிழ்மணத்தில் இணைத்து விடலாமே..தங்கள் பதிவை!

அம்பிகா said...

வாங்க. ராமலஷ்மி.

உங்கள் முதல் வருகைக்கும்,
வாழ்த்துக்களுக்கும் நன்றி.

அம்பிகா said...

உண்மைலேயே ஜோக்கா?...

நன்றி. பொன்ராஜ்.

அம்பிகா said...

நன்றி. முல்லை.

அன்புடன் நான் said...

நல்ல பதிவு... ஆனா ஊட்டசத்த கொடுத்து நாச சத்த வாங்கிய அந்த காரியம்..மனம் மறுகுதுங்க.

அம்பிகா said...

உண்மைதான், கருணாகரசு.
சின்ன பையன்களை கையில்
சிகரெட்டுடன் பார்க்கும் போது
மனம் வலிக்கத்தான் செய்கிறது.

VijayaRaj J.P said...

நகைச்சுவையான பதிவு.

யதார்த்தமான நடை.

ஆனால் 1 முட்டை விலைக்கும்,2சிகரெட் விலைக்கும்' டேலி'ஆகவில்லையே....

அம்பிகா said...

ஒரு முட்டைவிலை 2.75 பைசா.

பிராண்ட் இல்லாம, லோக்கல் சிகரெட் 1 ரூ க்கு கூடக் கிடைக்குது.

இப்போ டேலி ஆகுதா?

எப்டீ லா கேள்வி கேக்கீங்கப்பா?

பா.ராஜாராம் said...

:-)))

டேலி ஆயிருச்சு..அம்பிகா!

சுவராஸ்யம்!பதிவும் பின்னூட்டங்களும்.முக்கியமாய் இந்த டேலி..

அம்பிகா said...

வாங்க, பாரா..,

டேலி ஆயிடிச்சில்ல. அப்பாடா... ரொம்ப நன்றி.

butterfly Surya said...

நடை ந்ல்லாயிருக்கு.

வாழ்த்துக்ள் அம்பிகா.

தொடர்ந்து எழுதுங்கள்.

அம்பிகா said...

வாங்க, butterfly Surya,

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட!!!! (டேலி ஆக்கியதும் சூப்பர்)