Sunday, February 28, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!...

                             நேற்று மருத்துவமனை சென்றிருந்தேன். மருத்துவர்

வருகைக்காக காத்திருந்த போது தான் அந்த காட்சியை காண நேரிட்டது.

ஒரு சிறுவன், நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம். முகம்,

கை, கால்களெல்லாம் வீங்கி, சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்

பட்டிருந்தான். என் அம்மா, கிட்டதட்ட, ஒருமாதம் அங்கு அனுமதிக்க

பட்டிருந்ததால், அந்த நர்ஸ்களோடு நல்ல பரிச்சயம உண்டு. ஒரு

நர்ஸ்இடம் அந்த சிறுவனை பற்றி விசாரித்தேன். அந்த சிறுவனுக்கு

இரண்டு கிட்னியும் பாதிக்கப் பட்டு `டயாலிசிஸ் ’ செய்து கொண்டிருப்பதாக

கூறிய அவள், விரைவிலேயே மாற்று சிறுநீரகம் பொருத்தப் படாவிட்டால்

உயிருக்கே ஆபத்து எனவும் கூறிய போது வேதனையாய் இருந்தது.

கேட்கும் நமக்கே பதறுகிறதே, பெற்றவர்கள் என்ன பாடு படுவார்கள்

என நினைத்தவள்,வாய்விட்டும் கூறினேன். நர்ஸ் கூறிய பதில்

அதிர்ச்சியாயிருந்தது. `அட போங்கக்கா, நீங்க வேற’ என்றவள்

தொடர்ந்தாள். அப்பா, அம்மா, நேருங்கிய உறவினர்களை அழைத்து

மருத்துவர் நிலைமையை கூறிவிட்டு, மாற்று சிறுநீரகம் பொருத்த

வேண்டும் என்பதையும் விளக்கியிருக்கிறார். இரத்தசம்பந்தம்

உள்ளவர்கள் கொடுப்பது நல்லது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

உறவினர்கள் மறுநாளிலிருந்து பார்க்கக் கூட வரவில்லையாம்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டையாம். அம்மா, தான் கிட்னி

கொடுத்தால் செத்து போய்விடுவேனென்றும், தன் பெண்ணை பார்த்துக்

கொள்ள வேறு ஆளில்லை,என்றும் சண்டை போட்டு தன்

தாய்மையை நிரூபித்திருக்கிறார். அப்பாவோ தன்னால் முடியாது

என்பதை வெளிப்படையாகவே கூறிவிட்டாராம். அவர்களிடம்

மீண்டும் மீண்டும் பேசிப் பார்த்த மருத்துவர்

பொறுமையிழந்து திட்டி விட்டாராம். உடனே அவர்கள்

பையனை டிஸ்சார்ஜ்’ செய்து விடுமாறும், தாங்கள் வேறு

மருத்துவமனையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டனராம்.

                    
      நம்ப முடியாத நிஜம். மனிதம் செத்து போய்விட்டதெனக்

கூறுகிறார்கள். பெற்ற பாசமும், இரத்த பாசமும் கூட செத்து

போய்விட்டதா என நினைக்கத் தோன்றுகிறது. இப்படி ஒரு குழந்தையை

சாகடித்து விட்டு இவர்கள் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்?.

தெரியவில்லை.

                    

      என் அம்மா மருத்துவமனையில் இருந்த போது நடந்த

இன்னோரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இதே

நிலையில் இருந்த மற்றோரு நோயாளி, வயது 35, சாகும்

வயதில்லை. அவரது 30 வயதேயான மனைவி, கணவரை `டயாலிசிஸ்’ க்கு

அனுப்பி விட்டு அறைக்கு வெளியே கண்ணீரோடு காத்திருந்தாள். நானும்

அதைப் போலவே அம்மாவுக்காக காத்திருந்தேன். அந்த பெண்ணிடம்

அவள் கணவரைப் பற்றி கேட்டது தான் தாமதம், யாராவது கேட்க

மாட்டார்களா என காத்திருந்தது போல கண்ணீரோடு மனசையும்

கொட்டித் தீர்த்து விட்டாள். தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு கணவர்

கெஞ்சுவதைக் கூறிய போது நானும் கலங்கி போனேன்.இங்கேயும்

பெற்றோரும், உடன் பிறந்தோரும் ஏதேதோ சாக்குகள் கூறி மறுத்துவிட,

கூடவே பணப் பிரச்சினை வேறு. நானும், என் கணவரும்,

பணத்தை கவலைப் படவேண்டாம். P.M.Fund, Lion`s club, என

ஏதாவது ஏற்பாடு செய்யலாம், நீங்கள் கிட்னி கொடுக்க மட்டும்

ஏற்பாடு செய்யுங்கள், என்று அந்த பெண்ணிடமும், அவள்

உறவினர்களிடமும் பேசினோம். என் கணவரின் தொலைபேசி

எண்ணும் கொடுத்திருந்தோம். அதற்குள் என் அம்மா இறந்துவிட,

நாங்கள் ஊருக்குப் போய்விட்டோம். திரும்பி வந்தபின் மருத்துவ

மனையில் விசாரித்த போது அவர்கள் வேறு மருத்துவமனை

போய்விட்டதாக கூறினார்கள். அந்த பெண்ணையும் தொடர்பு

கொள்ள முடியவில்லை.


                    

      சுஜாதாவின் கதை ஒன்று, பெயர் நினைவில்லை,

இதே நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்டது. படிக்கும்

போதே கண்கள் கலங்குவதையும், மனது பதறுவதையும் தவிர்க்க

முடியாது. அப்போது நினைத்தேன், அவர் மிகை படுத்தி எழுதி

யிருக்கிறார், இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்க மாட்டார்கள்

என்று. ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசியோ என்று இப்போது

நினைக்கத் தோன்றுகிறது. ஒருவேளை இப்படி ஒரு நிகழ்வின்

பாதிப்பு தான் அவரையும் எழுத தூண்டியிருக்குமோ என்னவோ!.

`தான் பெறனும் பெறவி, தன்னோட பெறக்கனும் பெறப்பு’

என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அதுவும் பொய்த்து

போய் விடுமோ?...

22 comments:

சுந்தரா said...

//`தான் பெறனும் பெறவி, தன்னோட பெறக்கனும் பெறப்பு’ என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அதுவும் பொய்த்து போய் விடுமோ?...//

இனிமே போகவேண்டியதில்லை அம்பிகா. ஏற்கெனவே 90% பொய்த்துப்போயிடிச்சு :(

கும்க்கி said...

சொல்லிய வருத்தங்களை புரிந்துகொள்ள முடிகிறது..

சுஜாதாவை நினைவு கூறாமல் பதிவு எழுதவே முடியாத சூழல் உருவாக்கப்பட்டிருப்பதும்..நீங்கள் இன்னும் மேலே தீர்கதரிசி என்று கூறியிருப்பதுவும் நெருடுகிறது சகோ..

மனதில் பட்டது.

அப்புறம் எழுத்துக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் படிக்க சிரமமாயிருக்கிறது.
கவனத்தில் எடுத்துக்கொள்ளவேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஹுஸைனம்மா said...

அந்தச் சிறுவன், நம்பவே முடியவில்லை அம்பிகா. ஆண்டவா!!

ராகவன் said...

அன்பு அம்பிகா,

நல்ல பதிவு... கும்க்கி சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு... எழுத்துக்கள் நெருக்கி நெருக்கி இருப்பது... ஆனால் நெருக்கி கட்டிய மல்லிகை மாதிரி வாசம் குறையவில்லை...

அன்புடன்
ராகவன்

சந்தனமுல்லை said...

hmm..மிகுந்த வருத்தத்தைத் தருகிறது....பகிர்வுக்கு நன்றி!

பா.ராஜாராம் said...

மிகுந்த வருத்தமளிக்கும் பதிவு அம்பிகா.

மனிதம்?

ஜெரி ஈசானந்தா. said...

கனமாய் இருக்கிறது...நெஞ்சு....

அக்பர் said...

மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கண்ணகி said...

மனிதம் செத்துக்கொண்டிருக்கிறதோ...

DREAMER said...

அதிர்ச்சியாக இருக்கிறது. நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மானுடம் மாறிக்கொண்டிருப்பதை நினைக்க சற்று பயமாகவே இருக்கிறது.

நல்ல பகிர்வு...

Madurai Saravanan said...

மனிதன் மாறவில்லை. மனதை சுடுகிறது உங்கள் பதிவு.சுஜாதாவுடன் ஒப்பிடு அருமை. வாழ்த்துக்கள்.

முகுந்த் அம்மா said...

அய்யோ!! எங்கே போனது மனிதம்?. இவர்கள் எதை கொண்டு போக போகிறார்கள்!!. உள்ளம் அழுகிறது அந்த சிறுவனுக்காக.

thenammailakshmanan said...

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா அம்பிகா

Seemachu said...

அந்தச் சுஜாதாவின் கதை காகிதச் சங்கிலிகள். கிட்டத்தட்ட நீங்கள் விவரித்த பெண்ணின் கதை போலிருக்கும்...

Anonymous said...

manitha neyam paasam ellam setthukkondirukkirathu.very sad.

VijayaRaj J.P said...

பார்க்க கூடாத காட்சிகள்...

சந்திக்க விரும்பாத மக்கள்...

வரக்கூடாத நோய்கள்

க.பாலாசி said...

தன்னோட அம்மாவுக்கு வாராவாரம் தவறாமல் பலஆயிரம் செலவுசெய்து டயலஸிஸ் செய்யும் நண்பர் ஒருவரை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்....

சுஜாதா உண்மையில் தீர்க்கதரிசிதாங்க... அவரோட சொந்த வாழ்க்கைக்கே கதையெழுதியவர்...கற்றதும் பெற்றதும் படித்தால் தெரியும்...

நினைவுகளுடன் -நிகே- said...

கனமாய் இருக்கிறது...நெஞ்சு....

ponraj said...

இறைவனிடம் கோபம் படாமல்....

சிறுவனுக்காக வேண்டுவோம்!!!

சிறுவனுக்கு
உதவி கிடைக்க,
நலம் பெற......

அமுதா said...

அந்த சிறுவன் பற்றி கேட்கவே வருத்தமாக உள்ளது.

அம்பிகா said...

நன்றி சுந்தரா.

சகோதரர் கும்க்கி,
இரண்டாவது நிகழ்வு சுஜாதவின் கதையை பிரதிபலித்ததால் அவ்வாறு குறிப்பிட்டேன்.

எழுத்துக்கள் நெருக்கமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். திருத்திக் கொளகிறேன். கருத்துக்கும், அறிவரைக்கும், நன்றி கும்க்கி.

நிஜம்தான், ஹூஸைனம்மா.

ராகவன்,
ஆனால் நெருக்கி கட்டிய மல்லிகை மாதிரி வாசம் குறையவில்லை...

உங்கள் அன்புக்கு நன்றி.

நன்றி முல்லை,

நன்றி பாரா.

ஜெரி ஈசானந்தா, அக்பர், மதுரைசரவணன், DREAMER,
முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

கண்ணகி,முகுந்த் அம்மா,
உங்கள் வருத்தம் புரிகிறது.

சீமாச்சு,
காகித சங்கிலிகள், சரிதான்.
முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி

Anonymous, நன்றி.

உண்மைதான் விஜியண்ணா.

பகிர்வுக்கு நன்றி பாலாசி.

நன்றி நினைவுகளுடன் நிகே.

பொன்ராஜ், நம்மால் அதை தான் செய்ய முடியும்.

பகிர்வுக்கு நன்றி அமுதா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ச்சே :((((( என்ன மாதிரியான பெற்றோர்கள்.