Wednesday, February 17, 2010

`தைர்ய லட்சுமி’.

               அவள் பிறந்த போது இருந்த அழகைப் பார்த்து பெற்றோரும்,மற்றோரும் வியந்து போனார்கள். கொள்ளை அழகாக இருந்த அவளுக்கு, `லட்சுமி’ என்று அழகாக பெயரிட்டு வாய் நிறைய அழைத்தனர். யார் கண் பட்டதோ, அவளுக்கு ஒரு வயது பூர்த்தி ஆவதற்குள் வினையாய் வந்த காய்ச்சல் அவள் கால்களை முடக்கி போட்டது. அவள் வாழ்வையே புரட்டி போட்டது. எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஏதேதோ சிகிச்சையெல்லாம் மேற்கொண்டனர். அவளால் எதையாவது பிடித்து கொண்டுதான் நிற்க நடக்க முடியும். அவளுக்கு பின் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள், அதன் பின் மூன்று ஆண் குழந்தைகள் என அவர்கள் குடும்பம் பெரிதானது. ஆனாலும் லட்சுமியை பிரியத்தை கொட்டி அவளது குறை தெரியாமல் வளர்த்தனர். லட்சுமியும் வளர்ந்து பருவ வயதை அடைந்தாள். அவளது பெற்றொரின் கவலையும் வளர்ந்தது. அவளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி தீவிர வரன் வேட்டையில் இறங்கினர். எந்த குறையுமில்லாத பெண்ணுக்கு திருமணம் செய்யவே படாத பாடு படுகையில் லட்சுமிக்கு அவ்வளவு எளிதில் வரன் அமைந்து விடுமா. என்னதான் அழகியாயிருந்தாலும், நற்குணவதியாயிருந்தாலும் ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் தியாக சீலர்கள் மலிந்து கிடக்கிறார்களா என்ன? பாவம் லட்சுமியின் பெற்றோர், அடுத்து வளர்ந்து நிற்கும் இரு தங்கைகள் வேறு. பெற்றோர் படும் வேதனை பொறுக்க முடியவில்லை லட்சுமிக்கு. ``பேசாமல் தங்கச்சிக்கு பாருங்கப்பா” என்று சொல்லிப் பார்த்தாள். முடிவில் சல்லடை கொண்டு சலித்து ஒரு மாப்பிள்ளை கண்டுபிடித்தனர். வசதி குறைச்சல் தான், ஆளும் சுமாராக இருந்தான். அவர்கள் குடியிருக்க வீடு, வருமானத்துக்கு ஒரு கடை என சகல சவுகரியங்களும் செய்து கொடுக்க முன் வந்தனர்.

               எளிமையாக திருமணமும் நடந்தேறியது. தனக்கு வாழ்வளித்தவனை தெய்வமாகவே பூஜித்தாள் லட்சுமி. அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் தங்க விக்ரகம் போல் அழகழகாய் இரு பெண்குழந்தைகள். சீராக போய்க்கொண்டிருந்த அவள் வாழ்க்கை பாதையிலும் கோணல் விழத் தொடங்கியது. அவள் கணவன் தன் சுய ரூபத்தை காட்ட ஆரம்பித்தான். கடையில் வியாபாரம் நன்றாக நடந்ததால் பணப்புழக்கம் அதிகமாகவே , வரிசையாக எல்லா பழக்கங்களும் தொற்றி கொண்டன. `நண்டு கொழுத்தால் வளையில் தங்குமா? ’ தண்ணீயடித்து விட்டு வந்து லட்சுமியை கொடுமை படுத்த ஆரம்பித்தான். இவளும் வெளியில் காட்டிக் கொள்ளவே இல்லை. பெற்றோர் வருத்த படுவார்களே என்று அந்த பேதை பெண் அத்தனையும் தாங்கிக் கொண்டாள். ஊரெல்லாம் `பொறுக்க’ ஆரம்பித்த அவன் கண்களை அழகான மைத்துனிகள் உறுத்தினார்கள். மனைவியிடம் மெதுவாக தொடங்கினான், `ஒனக்கும் கொழந்தைகள பார்த்துக்க முடியல. ஒந்தங்கச்சினா ஒனக்கும் ஒத்தாசையா இருப்பா. கொழந்தைகள வளக்கவும் பிரச்சனை யிருக்காது’ அவன் பசப்பு வார்த்தைகள் புரிந்தவளாய், ` வாய மூடுங்க’ ன்னு சீறவும் அவன் தன் மூர்க்கதனத்தை காட்ட ஆரம்பித்தான். இவன் கொடுமை அக்கம் பக்கம் தெரிந்து, அவளது தந்தையின் காதுகளையும் எட்டியது.

                அலறியடித்து வந்தனர் பெற்றோர். உருக்குலந்து போயிருந்த மகளை காணவும் அதிர்ந்து போய், மகளிடம் நடந்ததை விசாரித்தனர். மருமகனை அழைத்து சமாதானம் செய்யவும், அவனோ, விரைத்து கொண்டு நின்றான். அவனுக்கு ஒத்துஊத சில சொந்தக்காரர்களை அழைத்து வந்தான். ஆளாளுக்கு பேசவும், அவன் தீர்மானமாக, கொஞ்சமும் கூசாமல் தன் மனைவியின் முன்னாலேயே, `இந்த நொண்டிய கட்டிகிட்டு நா என்ன சொகத்த கண்டேன். எனக்கு ஆம்புள புள்ள வேற இல்ல. பேசாம சின்னவள கட்டி தாங்க, நா ரெண்டு பேரையும் நல்லா வச்சிக்குறேன்’ ன்னு சொன்னான். இடிவிழுந்தது போலிருந்தது பெற்றோருக்கு. பாவம் லட்சுமி, அழுவதை தவிர அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. ``பாவம். அவனுந்தா என்ன செய்வான். அவன் கேக்குறது நியாயம் தானே’. அவனுக்கு ஜால்ரா போடவும் சிலர் இருந்தனர்.

               அழுதழுது ஓய்ந்து போன லட்சுமி தன்னை சுதாரித்து கொண்டு, சுவர்களை பற்றியபடி மெதுவாக எழுந்தாள். அவள் அப்பாவை நோக்கி,` போதும்பா, என்னால நீங்க அழுதது போதும். எனக்கு நீங்க எந்த கொறையும் வைக்கல. குமரியில்லாம கல்யாணமும் பண்ணியாச்சு, மலடில்லாம புள்ளையும் பெத்தாச்சு. போதும் நா வாழ்ந்தது. இனுமயும் இந்த மனுசங்கிட்டே நா சீரழிய வேண்டா, என்னால எந்தங்கச்சிங்க வாழ்க்க நாசமா போக வேண்டாம். என்ன உங்களோட கூட்டிட்டு போயிருங்கப்பா’ தோளில் சாய்ந்து கத்றிய மகளை அணைத்து கொண்டார் தந்தை. `இல்லம்மா வந்து ... ஏதோ பேச ஆரம்பித்த தந்தையிடம் தீர்மானமாக சொல்லி விட்டாள் லட்சுமி, தான் அவனுடன் வாழப் போவதில்லையென. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை, அவளது கணவன் உட்பட. கிணறு தோண்ட பூதம் புறப்பட்ட கதையாய், வாயடைத்துப் போனான். தலை குனிந்தபடி அவமானத்துடன் வெளியேறுவதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அன்று ஊரை விட்டுப் போனவன் தான், என்ன ஆனான் என்றே யாருக்கும் தெரியாது. யாரும் தேடவும் இல்லை. தன் அழகு மகள்களுடன் தன் பிறந்த வீட்டை தஞ்சம் புகுந்தாள் லட்சுமி. அவளை எந்த குறையுமில்லாது பார்த்துக் கொண்டதோடு, அவள் குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினர், அவளது பெற்றோரும், அவளது உடன் பிறந்தோரும்...

27 comments:

Deepa said...

சபாஷ்! அந்தத் தைர்ய லட்சுமி யார் அக்கா? கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போலிருக்கிறது.

அந்த அயோக்யனுக்கு ந‌ல்லா வேணும்! கிண‌று வெட்ட்ப் பூத‌மா? என‌க்கு இன்னும் கூட சில‌ ப‌ழ‌மொழிக‌ள் தோன்றுகின்ற‌ன‌. :))))

//பாவம். அவனுந்தா என்ன செய்வான். அவன் கேக்குறது நியாயம் தானே’. அவனுக்கு ஜால்ரா போடவும் சிலர் இருந்தனர்//
இவர்களையெல்லாம்... வேண்டாம்.

Thenammai Lakshmanan said...

உண்மையிலேயே தைரிய லெச்சுமிதான் அம்பிகா

ராமலக்ஷ்மி said...

தைரிய லட்சுமிக்கு ஆதரவாய் இருந்த பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

sathishsangkavi.blogspot.com said...

சபாஷ்.... லட்சுமியின் பெற்றோருக்கு.....

அகநாழிகை said...

இது போன்ற நிலைகளில் பெண்களுக்கு சுற்றத்தார் உறவினர் தரும் ஊக்கமும், தன்னம்பிக்கையுமே அவரது வாழ்வை மேம்படுத்தும். சமூகம் பலவிதங்களில் பெண்களின் முனைப்புகளை தடுத்துக்கொண்டேதான் இருக்கிறது.
அருமையான பகிர்தல்.

Vidhoosh said...

:) திருமணத்தைக் குறித்துதான் பெண்கள் வளர்க்கப் படுகிறார்கள் என்பது வேதனை. "வாழ்க்கைப் படுவது" மட்டுமே பெண்களுக்கு வாழ்க்கையாகி விடுகிறது. திருமணம் வாழ்கையில் ஒரு பகுதிதான் என்பதை என்று உணரப் போகிறோமோ தெரியவில்லை. :(

தைரியலட்சுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தைர்ய லட்சுமியே தான்..
உறுதுணையா இருக்க்ம் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்கள்.

VijayaRaj J.P said...

தன் வாழ்க்கை மீதான தைரியத்தைவிட...

தங்கைகள் வாழ்க்கை மீதுள்ள பாசமே

மேலோங்கி தெரிகிறது.

நம்பிக்கையூட்டும் பதிவு

ponraj said...

உலகில் எல்லாப்பெண்களும் லட்சுமியை போல் இருக்க வேண்டும்!!!!

லட்சுமிக்கும்,அவள் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!!!!

ஹுஸைனம்மா said...

என்ன கஷ்டம்னாலும், தங்கச்சிங்களை நெனச்சாவது அவனோட அனுசரிச்சு இருன்னு சொல்லாத அவளின் பெற்றோர்தான் அதிகப் பாராட்டுக்குரியவர்கள்.

//குடியிருக்க வீடு, வருமானத்துக்கு ஒரு கடை என சகல சவுகரியங்களும்//

திரும்பப் பெற்றுவிட்டார்கள்தானே?

சந்தனமுல்லை said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!

/தனக்கு வாழ்வளித்தவனை தெய்வமாகவே பூஜித்தாள் லட்சுமி./

இந்த கண்ணோட்டம்தான் வியப்பளிக்கிறது, இல்லையா அம்பிகா அக்கா! :-)

க.பாலாசி said...

நல்லவேளை பெற்றோராவது அவங்களுக்கு உறுதுணையா இருக்காங்களே... உண்மையில் மனம் வருந்துகிறது....பெண்களுக்குத்தான் எத்தனை இடைஞ்சல்கள்...

பா.ராஜாராம் said...

அருமையான பகிரல் அம்பிகா!

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு.
லட்சுமி நிமிர்ந்து நிற்கிறாள் எல்லோர் நெஞ்சிலும். அவள் கணவனே குறுகி ஊனமுற்றுப் போகிறான்.

உண்மைத்தமிழன் said...

தைரியலட்சுமி - பொருத்தமான தலைப்புதான்..!

ஊருக்கு ஒருவர் இப்படியிருந்தால் போதும்...! இவர்களைப் பார்த்து மற்றவர்களும் திருந்துவார்கள் அல்லது திருத்திக் கொள்வார்கள்..!

அமிர்தவர்ஷினி அம்மா said...

Vidhoosh said...
:) திருமணத்தைக் குறித்துதான் பெண்கள் வளர்க்கப் படுகிறார்கள் என்பது வேதனை. "வாழ்க்கைப் படுவது" மட்டுமே பெண்களுக்கு வாழ்க்கையாகி விடுகிறது. திருமணம் வாழ்கையில் ஒரு பகுதிதான் என்பதை என்று உணரப் போகிறோமோ தெரியவில்லை. :(

தைரியலட்சுமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வழிமொழிகிறேன்.

ஆடுமாடு said...

தைரிய லட்சுமிக்கு வாழ்த்துகள்.

ஹேமா said...

தைரிய லட்சுமி தளர்ந்து விடக்கூடாது.வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

ஹி ஹி ஹி!

சுந்தரா said...

தைரிய லட்சுமிக்கு சபாஷ்!

மிச்ச வாழ்க்கையையும் நிச்சயமாக தைரியத்தோடுதான் எதிர்கொள்ளுவாள்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு. உண்மையில் லட்சுமி அவர்களின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள். தைரிய லட்சுமிக்கு ஒரு சல்யூட்.

கமலேஷ் said...

உண்மையிலேயே தைரிய லெச்சுமிதான்....

சபாஷ்....

நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்...

கண்ணகி said...

லட்சுமியின் முடிவு அருமை...இப்படி பெண்கள் பொங்கி எழுந்தால் போதும்...தலைவிதியே என்று சகித்துக்கொள்ளாமல் மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டாள்.. பாராட்டுக்குரிய பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

பல பெண்களும், பெற்றோர்களும் படிக்கவேண்டிய பதிவு.

ராகவன் said...

அன்பு அம்பிகா,

தைர்ய லட்சுமி, ரொம்ப அழகாய் இருக்கிறது இந்த பதிவு. ”குமரியில்லாம கல்யாணமும் பண்ணியாச்சு, மலடில்லாம புள்ளையும் பெத்தாச்சு”. மனசை கிழித்துப் போடும் வேதனை சுமக்கும் வரிகள். இவ்வளவு எளிமையாய், வலிமையாய் இருக்கிறது இந்த பதிவு.

வாழ்த்துக்கள்!

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

தீபா,
உன் கோபம் நியாயமானதே!
இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நன்றி, தேனம்மை.

உண்மைதான் ராமலக்ஷ்மி, அந்த பெற்றோர் அவளுக்கு ஆதரவாகவே இருந்தனர். திருமணத்தோடு கடமை முடிந்து விட்டதாக நினைக்கவில்லை.
பகிர்வுக்கு நன்றி, ராமலக்ஷ்மி.

நன்றி சங்கவி.

இந்தமாதிரி பெண்களுக்கு சமூகத்தின் ஆதரவும் உறவினர்களின் அன்பும் இன்றியமையாதது.

திருமணம் ஒருபகுதியாக இருந்தாலும் பெற்றோருக்கு ஒரு கடமையாகவே தெரிகிறது. உங்கள் முதல் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி விதூஷ்.

நன்றி முத்துலெட்சுமி.

நன்றி விஜியண்ணா.

நன்றி பொன்ராஜ்.

ஆமாம் ஹூசைனம்மா. அவனே போய்விட்டான்.

இப்படி பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த கணவர்கள் இப்படி மிதிக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி முல்லை.

நன்றி பாலாசி.

நன்றி பா.ரா.

நன்றி மாதண்ணா.

வாங்க உண்மை தமிழன்,
இது போன்ற முடிவுகளே சில சமயம் தேவைப் படுகிறது. பகிர்வுக்கு நன்றி.

நன்றி அமித்தம்மா.

வாங்க ஆடு மாடு.
உங்கள் முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

நன்றி சுந்தரா.

நன்றி சரவணகுமார்.

நன்றி கமலேஷ்.

வாங்க ஹேமா,
உங்கள் முதல் வருகைக்கும்
பகிர்வுக்கும் நன்றி.

நன்றி கண்ணகி.

வாங்க உழவன்.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

வாங்க ராகவன்,
இதைப் போல வலி தரும் வார்த்தைகள், அதுவும் பெண்களுக்கு நிறையவே சொல்ல பட்டிருக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

Very good