என் பதின்ம தோழி அவள். ஆறாம் வகுப்பிலிருந்து, பள்ளியிறுதி வரை
ஒன்றாகவே படித்தோம். படிப்பு, விளையாட்டு, ஆட்டம், பாட்டம் என
அனைத்திலும் ஒன்றாகவே பங்கேற்போம். எங்கள் ரசனைகள் ஒத்தி
ருந்ததால், படித்த கதைபுத்தகங்கள், பிடித்த பாடல்கள் என அனைத்தும்
பகிர்ந்து கொள்வோம். கல்லூரிப் படிப்பை வேறு வேறு கல்லூரிகளில்
தொடர்ந்ததால் நாங்கள் பிரிந்தோம். நான் இளங்கலை படிப்புடன் முற்று
புள்ளி வைத்து விட, அவள் முதுகலை முடித்து, பக்கத்து ஊரில் ஒரு
பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். பக்கத்து ஊர் தான் என்ற போதும்
அவளை சந்திக்க முடியவில்லை. அப்போது போன் போன்ற தொடர்பு
சாதனங்களும் மிகக் குறைவு என்பதால், எங்களுக்குள் ஒரு இடைவெளி
ஏற்பட்டிருந்தது. எனக்கு திருமணமாகி, இரு பையன்களும் பிறந்து விட,
அவளுக்கு மிக தாமதமாகத் தான் திருமணம் ஆயிற்று. ஏதோ காரணம்,
அவள் திருமணத்துக்குக் கூட செல்ல முடியவில்லை.
ஒருநாள் நான் கேள்விபட்ட அந்த அதிர்ச்சியான செய்தியை என்னால்
நம்பவே முடியவில்லை. என் தோழியின் கணவர், இருதயநோய் காரண
மாக மரணமடைந்து விட்டார் என்றறிந்த போது, மணமாகி ஒன்றறை
ஆண்டுகளே கடந்திருந்த நிலையில், கையில் இரண்டே மாதம் நிரம்பிய
ஆண்குழந்தையோடு, அவளுக்கு வாழ்க்கையே முடிந்து விட்டிருந்தது.
அப்போது அவளுக்கு முப்பது வயது தானிருக்கும். அவளை சந்திக்க
அவா இருந்தாலும், வாய்ப்பு கூடவே இல்லை.
ஏழெட்டு வருடங்கள் கழிந்திருக்கும், அந்த வேளையும் தானே அமைந்தது.
வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி, எங்கள்
தெருமுனையில் இருந்த பள்ளியில் நடைபெற்றது. நீண்ட வரிசையில்,
ஆண்களும், பெண்களுமாய், நிறைய பேர் காத்திருந்தனர். அங்கு வந்த
கல்லூரிவிரிவுரையாளர் ஒருவர், கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர், தம்
அருமை மனைவியை அங்கிருந்த இருக்கையில் அமர செய்து விட்டு,
கையெழுத்திடப் பட வேண்டிய ரிஜிஸ்டர் முதலியவற்றை அந்தம்மா இருக்
கும் இடத்திற்கு தூக்கி சென்று கையெழுத்து வாங்க முயன்றார். வரிசை
யில் காத்திருந்த பலரும் ஆட்சேபம் தெரிவித்து கூக்குரல் எழுப்பவும்,
பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதிகாரியுடன் விவாதித்துக் கொண்டிருந்த
பெண்குரல் பரிச்சயமானது போலிருக்க, யாரெனப் பார்த்தேன். அவள்தான்
என் பால்ய தோழியேதான். என் கையை அன்புடன் பற்றி, ஆர்வத்துடன்
பேசிய அவளது வெறுமைக் கோலம், அடிவயிற்றை ஏதோ செய்தது.
வீடு அருகிலிருந்ததால் அழைத்து வந்தேன். நீண்ட இடைவெளியை இட்டு
நிரப்பும் அளவுக்கு நிறைய பேசினோம். அவள் மகன் நான்காவது படிப்ப
தாக கூறினாள். போனில் அடிக்கடி பேசிக்கொள்வோம். அவள், அம்மாவு
டன் பக்கத்து ஊரில் இருப்பதையும், பக்கத்து ஊர் பள்ளியில் +2 க்கு ஆசிரி
யையாயிருப்பதையும் அறிந்து கொண்டேன். ஒருநாள் பேசும் போது, அவ
ளது தோற்றம் கூறித்து கேட்டேன். `இப்போது தான் பொட்டு, பூ எல்லாம்
வைத்து கொள்கிறார்களே, நீயும் கொஞ்சம் சாதாரணமாயிருக்கலாமே’
என்றேன். அவள் சார்ந்த சமூகத்தில் மிகவும் கட்டுபாடுகள் உண்டு எனவும்
அவளுக்கு அதிலெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை என்றும் கூறினாள்.
அதுவும் உண்மைதான். பள்ளிநாட்களிலேயே, ஏதாவது ஸ்பெஷல்க்ளாஸை
சாக்கிட்டு நாங்களெல்லாம் கலர்கலராய் வரும்போது கூட அவள் சாதாரண
மாயிருப்பாள். அவளது வேலை, இப்போதைய மாணவர்கள், பழையதோழி,
கள் என நிறைய பேசுவோம்.
ஒரு சோம்பேறிதனமான மதியம், மூன்று மணியிருக்கும், அவளிடமிருந்து
போன். எதுவும் பேசாமல் அவள் அழும் குரல் கேட்கவும் பதட்டமானேன்.
என்ன நடந்தது என்ற என் கேள்விக்கு பதில் கூறாமல், அழவும் நான் அவச
ரமாய் அவள் வீடு சென்றேன். அழுகையினூடே அவள் கூறியது, ஆத்திரத்
தையும், வருத்தத்தையும் தந்தது. முன்தினம், அவள் அண்ணன் வாங்கிக்
கொடுத்திருந்த காட்டன் புடவை, சரிகையெல்லாம் போட்டு அழகாய் இருந்
திருக்கிறது, கட்டி சென்றிருக்கிறாள். மறுநாள், அதாவது இன்று, ஸ்டாப்
ரூமில் வைத்து சக ஆசிரியை, இவள் கட்டியிருந்த புடவை போல் வாங்கி
தரும் படி கணவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவள் கணவன், இப்படி
ட்ரெஸ் பண்ணிட்டு வர்றது மட்டும் தான் அவங்களுக்கு கிடைச்ச சந்தோ
ஷம், உனக்கு அப்படியா என்றும், இன்னும் அசிங்கமாக ஏதேதோ கூறி
யிருக்கிறார். அதை கொஞ்சம் கூட லஜ்ஜையின்றி, அந்த ஆசிரியை கூறி
சிரித்திருக்கிறாள், அதுவும் இவள் காது படவே. இதைக் கேட்டு கூசிப்
போன என் தோழி அரை நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வீடு வந்து எனக்கு
போன் செய்திருக்கிறாள். `இப்படியெல்லாம் பேச்சு கேட்க வேண்டியிருக்
கும் என்பதினால் தான் பழைய காலத்தில் `உடன்கட்டை’ ஏறியிருப்பார்
கள் போல’ என்று அவள் அழுத போது எனக்கும் தாங்க முடியவில்லை.
ஒரு நாளேனும், அவள் பேச்சில் சுயபச்சாதாபம் தொனித்திருந்ததில்லை.
வாழ்வு குறித்த அவநம்பிக்கை இருந்ததில்லை. இதுதான் வாழ்வு என்றான
பின், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் தெளிவும், நிதானமும் அவ
ளுக்கு வாய்த்திருந்தது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்
பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ
திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது. சிலருக்கு அது கர்வமாக கூட தோன்றி
யிருக்கலாம். போதாதற்கு, தலைமைஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்
மத்தியில் அவளுக்கு நல்ல மதிப்பிருந்தது. அதை பொறுக்க முடியாத,
பொறாமைத் தீயின் வெளிப்பாடே, இந்த கேவலமான தாக்குதல். என்ன
தான் மனோதிடம் இருந்தாலும், ஒரு பலஹீனமான தருணத்தில்,பெண்
மையின் மென்மை வெளிப்படத்தான் செய்கிறது. `இந்த பேச்சுக்கெல்லாம்
மதிப்பு கொடுத்தால் நிறைய பேசுவார்கள். நாளை இதை விடவும் நல்ல
புடவையணிந்து போனால், தன்னால் வாயை மூடிக்கொள்வார்கள். அவர்க
ளிடம் உன் வேதனையை வெளிப் படுத்திக் கொள்ளாதே’ என ஏதேதோ
கூறி அவளை தேற்ற முயற்சித்தேன். மறுநாள்காலை, அவள் பள்ளி
செல்கிறாளா என அறிய போன் செய்தேன். `இதோ கிளம்பிட்டேன்’ என்ற
அவள் குரலில் பழைய தெளிவிருந்தது. எனக்கும் நிம்மதியாயிருந்தது.
+2 தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம், அவள் பள்ளிதான், அங்கிருக்
கும் அனேக பள்ளிகளுக்கு தேர்வேழுதும் சென்ட்டராக திகழ்ந்தது. என்
இளையமகனும் அங்கேதான் தேர்வெழுத சென்றிருந்தான். தேர்வுக்கு முன்
ஒரு மாணவன், அவள் காலைத் தொட்டு வணங்கி விட்டு ஹாலுக்குள்
சென்றதாக, என் மகன் வந்து ஆச்சரியத்துடன் சொன்னான். இத்தகைய
அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த
மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது. நிறைவாகவும்
இருந்தது.
.
23 comments:
மனதை உருக்கும் இடுகை.
சொல்லில் அம்பிருக்கும்
எல்லாரும் தன்னை உயர்த்திக்காண்பிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.
பிறத்தியார் எதாவதொருவகையில் தன்னிலும் கீழ் என்பதை நிலைநாட்டும் கணவனும் மனைவியும் போகட்டும்.
புரிந்துகொள்ள மீதி உலகம் இருக்கு.
அருமையான பகிர்வு அம்பிகா மேடம். உங்கள் தோழி ரொம்ப தைரியசாலி, தன்னமபிக்கை மிக்கவர் என்பதை உங்கள் பதிவிலிருந்து காணமுடிகிறது.
நமக்கான வாழ்க்கை நம்கையில்தான். அடுத்தவங்க என்னசொன்னாலும் டோண்ட் கேர். அப்போதான் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும்.
அருமையான பகிர்வு அம்பிகா.
May God bless your friend.
நல்ல இடுகை. பொறாமை பிடித்தவர்களின் நோக்கம் நாம் நிலைகுலைய வேண்டும் என்பதுதான். அதைப் புரிந்துகொண்டு திடமனத்துடன் நம் வேலையைப் பார்பதுதான் அவர்களை அடக்க ஒரே வழி. உங்கள் தோழியின் தன்னம்பிக்கையும், உங்கள் சரியான அறிவுரையும் பாராட்டுக்கு உரியன.
உங்கள் தோழி பற்றி வாசித்த பொழுது, அவர்களின் தன்னம்பிக்கை, உறுதியான மன நிலை, துவண்டாலும் உடனே துள்ளி எழுந்தி விடும் மனோ பாவம், மாணவர்களும் வணங்கி செல்லும் மரியாதைக்குரிய குணம் எல்லாம் அறிந்து பெருமையாய் இருந்தது. இப்படி ஒரு தோழி, உங்களுக்கு அமைந்து இருப்பது கண்டு, வாழ்த்துக்கள்!
Convey our regards to her!
நெகிழ்ச்சியான இடுகை. தங்களின் தோழி போல மனதைரியமுள்ள பெண்களை பார்த்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறமையே கிண்டலாக வெளிவந்து இருக்கிறது. உங்கள் தோழி இதையெல்லாம் தாண்டி கட்டாயம் வெளிவருவார்.
//நமக்கான வாழ்க்கை நம்கையில்தான்.//
இதை நானும் வழிமொழிகிறேன். என் அம்மாவுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு. செருப்பு போட்டுக்கொண்டு சென்றதையே கிண்டலடித்தவரும் உண்டு.கிண்டல் செய்தவரும் ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியை என்பதுதான் விசேஷம்.Hats off to your friend.
உருக்கமான பதிவு.
அதே சமயம் நம்பிக்கையூட்டும்
விதமாக எழுதப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள் அம்பிகா
மிக மிக உருக்கமான ஒன்று. உங்கள் தோழியின் நம்பிக்கை மற்றும் துணிச்சல் பாரட்ட தக்கது
உருக்கமான பதிவு.
பாராட்டுக்கள்!!
நல்ல பதிவு....
ஆண்,பெண் இரு பாலரும் படித்துக் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..
உங்கள் தோழியின் மன உறுதிக்குப் பாராட்டுக்கள்.அவரை என்றும் உற்சாகப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவு அவருக்கு மிக மிக முக்கியம்.
நெருக்கமான தோழி என்பதால் அந்த நேர மனக்குமுறலை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பிறகு எப்படி தேற்றிக் கொண்டு தொடர்ந்திருக்கிறார் பாருங்கள்.
//இத்தகைய அன்பும், பாராட்டும், பணியில் அவள் கொண்டிருக்கும் ஈடுபாடுமே, இந்த மனோதிடத்தை அவளுக்கு தந்திருக்கும் என தோன்றியது.//
நிச்சயமாக.
ஆனால் மறுபக்கத்தில் சமூகம் தன்னை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறது என்கிற ஆதங்கத்தையும் எழுப்புகிறது உங்கள் பதிவு.
நெகிழ்வும், உருக்கமும் ஒருசேர உணர்கிறேன்...
தெளிந்த எழுத்து நடை. தெளிவான பார்வை. மனதை நெகிழச் செய்யும் பதிவு.
மிகவும் அருமையான பகிர்வு அம்பிகா
இதே மனோதிடத்தையும் தன்னம்பிக்கையையும் கடவுள் அவர்களுக்கு எல்லா சந்தர்ப்பத்திலும் அருளட்டும்
இந்த மாதிரி கொடுமைகள் இன்னுமா நடக்கிறது. படிப்பு மட்டும் நல்ல சிந்தனையை வளர்க்காது என்பதற்கு ஓர் உதாரணம்தான் உங்கள் தோழிக்கு நடந்தது, இல்லையெனில் சக ஆசிரியரால் உங்கள் தோழி சங்கடப் பட்டிருக்கமாட்டார்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் அவர்கள் திருந்தவேண்டும் என்று பிரார்த்தனை செய்திருப்பேன்.
உங்கள் தோழிதான் சிந்தித்து செயல்படவேண்டும், அதற்கு தாங்கள் பக்க பலமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நெகிழ்ச்சியான பகிர்வு.
பிடித்திருக்கிறது அம்பிகா அக்கா, இந்த இடுகை! நல்ல பகிர்வு! சில இடங்களில் எங்கள் வீட்டு பெண்களையும் பார்த்தது போல இருந்தது!
hai ambika,
very nice post. convey my regards to ur friend.tell her to simply ignore this type of words from others.
gandhidurai
தோழிக்குப் பாராட்டுக்கள்!!
உங்க தோழியை பற்றி எழுதியதை படித்த போது மனது வலித்தது!மேலும் அவங்க தைரியம், தன்னம்பிக்கை இதை எல்லாம் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
//அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது, புலம்பும்
பெண்கள், (சில சமயம் ஆண்களும்கூட), மத்தியில் அவளது இந்த மனோ
திடம் ஆச்சரியமளிப்பதாயிருந்தது./... உண்மைதான், பெண்கள் எந்த நிலையிலும் மன திடத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம்தான்.
தோழியின் திடத்திற்கு நல்வாழ்த்துகள்..
Post a Comment