.
.
ஜெயாம்மா., கட்டை, குட்டையான உருவம்.விரித்துப் போட்டால் முழங்
காலைத் தொடும் நீளமான முடி. உருவத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத
குரலும், குணமும். தெருவுக்கே, கிட்டதட்ட ஊருக்கே அவளைப் பற்றித்
தெரியும். கை சாமர்த்தியமும், வாய் சாமர்த்தியமும் ஒருங்கே வாய்க்கப்
பெற்றவள். `கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே’ என்ற பழ
மொழிக்கு பெண்பால் உருவம் கொடுத்தால், மிகப் பொருத்தமானவள் நம்
ஜெயாம்மா.
காய்கறி வாங்க கடைக்குப் போனால், கடைக்காரன் அசந்த நேரத்தில்
இரண்டு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி இவை, இழுத்து சொருகி
இருக்கும் அவளது முந்தானைக்குள் அடைக்கலமாகி விடும். கறிக்
கடைக்குப் போனால், `அந்த எலும்பப் போடுங்க, இது வெறும்சவ்வுதான,
சேத்துப் போடுங்க, இந்த மொரயீரலப் போடுங்க’ என கால் கிலோவுக்கு
காசுக் கொடுத்துவிட்டு முக்கால் கிலோ தேற்றி விடுவாள். தெருவுக்குள்
வியாபாரம் செய்யவரும் வண்டிக்காரன், கூடைக்காரி யாருமே இவள்
கூப்பிட்டால்,`அடப் போம்மா’ என ஓடிவிடுவார்கள். கொஞ்சமும் அச
ராமல், ஐம்பது ரூபாய் சாமானை அஞ்சு ரூபாய்க்கு கேட்பாள். வண்டிக்
காரன் அசிங்கமாய் திட்டினாலும், அலட்டிக் கொள்ளமாட்டாள். `முடிஞ்சா
குடு, இல்லன்னா போய்ட்டே இரு’ என அடாவடியாய் கத்துவாள்.
இப்படித்தான் ஒரு தடவை, வயக்காட்டுக்கு புல்லறுக்கப் போயிருந்
தாள். பெரிய சாக்கு நிறைய புல்லை அறுத்துக் கொண்டுவந்து ஆடு,
மாடு வளர்ப்பவர்களிடம் விற்பது இங்குள்ள சில பெண்களுக்குத் தொழில்.
ஒரு கி.மீ நடந்துபோய் வரப்பில் வளர்திருக்கும் புல்லை அறுத்து வரு
வார்கள். தக்காளி, கத்தரித்தோட்டத்தில், காவல்காரன் அசந்த நேரத்தில்
`கொள்ளை’ வைப்பதும் சிலபெண்கள் செய்வதுண்டு. இதற்கு தலைமை
அனேகமாய் நம் ஜெயாம்மாவாய் தானிருக்கும். காவல்காரனிடம் மாட்டி
னால், சாக்கு, அரிவாள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு விரட்டி
விடுவான். பிறகு காவல்காரன் வீட்டுக்கு நடையாய் நடந்து, கெஞ்சிக்
கூத்தாடி அரிவாளை வாங்கி வருவார்கள். சிலபேருக்கு திரும்ப கிடைக்
கவே கிடைக்காது. கத்தரித்தோட்டத்தில் ஜெயாம்மாவை கையும்களவுமாய்
பிடித்த காவல்காரன், இவள் கையிலிருந்த அரிவாளைப் பிடுங்க, இவள்
விடாமல் பதிலுக்கு இழுக்க, காவல்காரன் கையை அரிவாள் பதம்பார்த்து
இரத்தம் கொட்டியது. பயந்துபோன ஜெயாம்மா, பக்கத்தில் கிடந்த பழைய
துணியை வாய்க்கால் தண்ணீரில் நனைத்து, கையில் இறுக கட்டுபோட்டு
விட்டாள். இவள் காவல்கரனின் கையை வெட்டிய வீரப்பிரதாபம், கூடப்
போயிருந்த பெண்கள் மூலம் தெருவுக்குள் பரவியது. அடுத்த நாள் காலை
காவல்காரன், இவள் வாசலில் நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான்.
`என்ன பொம்பள இவ, இவளால கைல ஏழு தையல் போட்டிருக்கு. மரி
யாதையா டாக்டர் செலவக் கொடுத்துரு’ எனக் கத்திக் கொண்டிருந்தான்.
இவள் பதிலுக்கு, நீயே வந்து வெட்டிக்கிட்டா நா என்ன செய்வேன், நாந்
தா பாவமுன்னு கட்டுப் போட்டு வுட்டேன். இல்லன்னா அங்கேய வுழுந்து
கெடந்திருப்ப’ எனக் கத்தவும், அவன் பேச முடியாமல் திரும்பி போய்
விட்டான். பக்கத்திலிருந்த பொடியன்,`ஏங்க்கா, சினிமால எல்லாம்
சேலய தான கிழிச்சி கட்டுவாங்க. நீயும் அப்பிடி கட்டியிருந்தா, இவன்
சண்டைக்கு வந்திருக்க மாட்டான்ல’ என்றதும் அவள் கோபமாகி, போல..
போக்கத்த பயலே’ என்று துரத்தி விட்டாள்.
இவள் வீட்டுக்கு பின் வீட்டிலிருந்த `பார்வதியக்கா‘ என்பவரின் கணவர்க்கு
இன்னொரு மனைவியும் இருந்தாள். பார்வதியக்காவின் புருஷன், அந்த
இன்னொருமனைவிக்கு கொடுக்கவென்று 1500ரூபாய் பார்வதிக்காவுக்கு
தெரியாமல் தோட்டத்தில் ஒளித்து வைத்திருந்தார். அது நம் ஜெயாம்மா
வின் கொள்ளிகண்ணில் தானா படவேண்டும். ரெண்டு சொத்தை கத்தரிக்
காவுக்கே கையை நீட்டுபவள், முள்ளங்கி பத்தை போல ரூபாய் நோட்டு
கள்... விடுவாளா..? பணத்தை பறிகொடுத்தவன், மனைவியிடம் கூற,
பார்வதியக்காவுக்கு புரிந்து விட்டது, இது ஜெயம்மாவின் வேலை தான்
என்று. அவள் ஜெயாம்மாவின் வீட்டுபக்கத்தில் நின்று,` எடுத்தவ நாசமா
போவா, வெளங்க மாட்டா’ என வாயில் வந்தபடி சாபம் விட்டுப்
பார்த்தாள். இரண்டு நாள் திட்டி தீர்த்தபின், மூன்றாவதுநாள், இவள்
காதுபட, `எடுத்தவள சும்மா வுடமாட்டேன். இன்னைக்கு ஏரலுக்கு
போறேன், முட்டைய ஓதி வைக்க போறேன். அதுக்குபெறவு இருக்கு,
என மிரட்டுகிற தொனியில் சொல்லிக் கொண்டிருந்தாள். கேட்டுக் கொண்
டிருந்தவள், நடுங்கிபோய், பார்வதியக்காவின் மகளை கூப்பிட்டு,`எதுக்
கும் போறதுக்கு முன்னால அடுப்பாங்கரைல தேடி பாக்கச் சொல்லு, கை
மறதியா வச்சிருப்பா’ என்று சொல்லியனுப்பியிருக்கிறாள். மகள் தாயிடம்
விஷ்யத்தைக் கூற, அவளும் அடுப்பாங்கரையில் பார்க்க, அறையெங்கும்
ரூபாய் நோட்டுக்கள் இறைந்து கிடந்தன. யாரோ ஜன்னல் வழியாக வீசி
எறிந்திருக்கிறார்கள். இது ஜெயம்மாவின் வேலைதானென்பது புரிந்துபோக,
விஷயம் தெருமுழுக்க பரவியது. ஜெயம்மாவின் தலையைப் பார்த்ததும்,
பெண்கள் கூடிக்கூடி கிசுகிசுக்க, அவமானம் தாங்காமல் வீட்டுக்குள்ளேயே
அடைந்து கிடந்தாள்.
பார்வதியக்காவைக் கூப்பிட்டு, `முட்டை ஓதி வைக்கிறதுன்னா என்ன’
என்று கேட்டேன். `அதெல்லாம் ஒண்ணுந் தெரியாது. மனசாட்சிக்கு தா
பயப்பட மாட்டேங்குறா. மந்திரத்துக்காவது பயப் படுறாளான்னு பாத்தேன்,
மந்திரம் பலிச்சிட்டு’ என்றாள் நமுட்டு சிரிப்புடன். நானும் சேர்ந்து
சிரித்தேன்...
.
.
18 comments:
இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அம்பிகா.
வாசித்து முடிக்கும்போது சிரிப்பும் வந்துவிட்டது.என்னதான் அட்டகாசம் பண்ணினாலும் பயமும் இருக்குத்தானே !
:-).
கொஞ்சநாள் வர முடியல சகோ.
வந்து பார்க்கிறபோது நல்ல ஸ்லாங்கம்...
படிச்சுப் போயிருக்கீங்க. :-)
good!!
உங்க ஊர்ல இப்படித்தான் பணத்தை தோட்டத்தில் ஒளித்த்வைப்பாங்களா? இந்த விஷயம் முன்னாலேயே தெரிந்திருந்தால், ஊருக்கு வரும்போது, ஆறுமுகனேரி வந்திருப்பேன். மிஸ் ஆகிடுச்சு.
என் வாழ்கையிலும் இது போல் சிலர் கடந்து போய் இருகிறார்கள்...நல்ல பதிவு...
இந்த மாதிரி பயம் இல்லாட்டி கொள்ளை அதிகமா இல்லை போயிடும் :)
மனசாட்சிக்கு தா
பயப்பட மாட்டேங்குறா. மந்திரத்துக்காவது பயப் படுறாளான்னு பாத்தேன்,
மந்திரம் பலிச்சிட்டு’ என்றாள் நமுட்டு சிரிப்புடன். நானும் சேர்ந்து
சிரித்தேன்...
..... நானும் சிரித்தேன்...... பணம் கிடைத்து விட்டதே..... அப்பாடி! அனுபவத்தை நல்ல எழுத்து நடையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
நல்ல மந்திரம்!
எத்தனை அருமையான எழுத்து..
அருமை சகோதரி.
நிகழ்வைக் கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.
வாழ்த்துகள்.
இந்த மாய மந்திரம்தான் நிறைய பிரச்சனைகளுக்கு நீதி மன்றம்..
கெட்டிக்காரி - ரொம்ப கெட்டிதான்
மூட நம்பிக்கை என்றாலும், சில சமயம் இவை கொடுக்கும் பலன்கள் நம் (நல்ல)நம்பிக்கையையே தடுமாற வைக்கும்!!
தலைப்பை" யார் கெட்டிக்காரி?" என்று
வைத்து இருக்கலாம்.
VijayaRaj J.P said...
//
தலைப்பை" யார் கெட்டிக்காரி?" என்று
வைத்து இருக்கலாம்.//
இதுவும் நல்லாருக்குங்கண்ணா.
அம்பிகா எழுத்தில் தங்குதடையற்றவேகம் இருக்கிறது.அருமை.
சரள்மாக வருகிறது..எழுத்துநடை...
ஜெ - அம்மா!! அருமை???
நல்ல ஒரு ஸ்வாரஸ்யமான நடை!!
தெரிந்த விஷயம், ஆனால் உன் எழுத்து நடையில் அபாரம்.
Genial fill someone in on and this enter helped me alot in my college assignement. Thank you for your information.
Post a Comment