.
.பள்ளி, கல்லூரி, ஆண்டுவிழாக்களில் பங்கெடுத்துக் கொண்டஅனுபவங்
களை பகிர்ந்து கொள்ளும்படி தீபா அழைத்திருந்த தொடர்பதிவு இது.
அப்போது நான் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி
சுதந்திர தினவிழாவுக்கான நடன நிகழ்ச்சியில் என்னை சேர்த்திருந்தார்கள்
அதுதான் என் முதல் நிகழ்ச்சி என நினைக்கிறேன். நடனம் சொல்லித்
தந்த ஆசிரியை, வீட்டில் போய் ப்ராக்டிஸ் பண்ணிப் பார்க்குமாறு சொல்லி
அனுப்பினார்கள். அது போதாதா..? நிற்கும்போது, நடக்கும் போது என
எல்லாப்பொழுதும் ஆடிக் கொண்டே அலைந்தேன். ``ஆடுவோமே, பள்ளு
பாடுவோமே, ஆனந்த சுதந்திரம்...ஆ.. டமார். ஒன்றுமில்லை. வீட்டின்
முன்னிருந்த திண்ணையில் நின்று ஆடிக்கொண்டிருந்த நான் தான் விழுந்து
விட்டேன். கீழ்பல்லில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. அப்பாவும், அம்மா
வும் பல்டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். பல்லை எக்ஸ்ரே எடுத்துப்
பார்த்து விட்டு, `நல்லவேளை, க்ராக் எதுவும் இல்லை, லேசாக அசைய
மட்டும் தான் செய்கிறது,’’ என்று கம்பி போட்டு அடுத்த பல்லோடு
சேர்த்து கட்டி விட்டார். இரண்டு மூன்று நாட்களில் வலியும், வீக்கமும்
குறைந்து, வெற்றிகரமாக நடனமும் ஆடினேன். ஆனந்த சுதந்திரம்
அடைய நானும் ரத்தம் சிந்தியிருக்கிறேன் என்பதை வரலாறு மறந்தாலும்,
நான் மறக்க மாட்டேன்.
சென்னையிலிருந்து ஊருக்கு படிக்க வந்த போது பட்டணத்து பிள்ளைகள்
என்று அத்தனை ஆசிரியர்களுக்கும் எங்களை மிகவும் பிடித்துப் போனது.
செல்வின் என்ற டீச்சர்,``நீ என் வகுப்புக்கு’’ என்று தோளில் கைபோட்டு
அன்போடு அழைத்து சென்றது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவர்கள்
தான் அங்கே நடன ஆசிரியை என்பதால், ஒவ்வொரு வருடமும் பள்ளி
ஆண்டுவிழாவில், இரண்டு நடனத்தில் கட்டாயம் நானிருப்பேன். இருபது
நாட்களுக்கு மேல் ப்ராக்டீஸ் இருக்கும். க்ளாஸ்க்கு அட்டெண்டென்ஸ்
கொடுத்தால் போதும். எம்ட்ராய்டரி, ஜமிக்கி சேலைகள் தெருவில்
இருக்கும் பெரிய அக்காக்களிடம் (அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப
செல்லம்) இரவல் வாங்கி போவேன். அதை பெரிதுபெரிதாக ப்ரில் எடுத்து
எங்கள் அளவுக்கு வைத்து பாவாடை மாதிரி கட்டி விடுவார்கள். ரிங்
கொண்டை, பன் கொண்டை என்று தலைஅலங்காரம் பண்ணிவிடுவார்கள்.
இப்படி நடனத்தோடு நின்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும். ராமாயணத்தில்
ராமர் காட்டுக்கு செல்ல கைகேயி வரம்வாங்கும் காட்சியும், தசரதர் உயிர்
துறக்கும் கட்சியையும் நாடகமாக போட்டார்கள். ராமராக நடிக்க என்னை
தேர்வு செய்தார்கள். அவ்வளவு சாந்தசொரூபியாகவா நான் இருந்தேன்?
ஆண்டுவிழாவுக்கு முன்தினம் கரஸ்பாண்டெண்ட் முன்னால் ஒத்திகை
நடக்கும். நாடகத்தில் கடைசிக் காட்சியில் தசரதராக நடித்த எபனேசர்,
கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு வேகமாக கீழே விழுந்தாள்.எல்லோரும்
சிரிக்க, நானும் சத்தமாக சிரித்து விட்டேன். `அப்பா விழுந்து கிடக்கும்
போது நீ சிரிப்பியா?’’ என்று செண்டிமெண்டலாக காய்ச்சி எடுத்து
விட்டனர். நானும் எபனேசரிடம்,`உனக்கென்ன அவார்டா கொடுக்குராங்க
இப்படி ஓவர் ஆக்ட் பண்றீயே’’ன்னு சொல்லி பார்த்தேன். ஆனால் ஆண்டு
விழாவின் போதும் இதேபோல் விழுந்து என்னை மாட்டிவிடப் போகிறாள்
என்று நிச்சயமாக தெரிந்தது. அதுக்கும் டீச்சரே வழிசொன்னாங்க. அவள்
விழுந்ததும், `ஐயோ தந்தையே’ன்னு கத்திட்டு அவள் பக்கத்துல
உக்கார்ந்து அழுற மாதிரி எம்ஜிஆர் ஸ்டைல்ல மூஞ்சிய மூடிக்கன்னு
சொன்னாங்க. நானும் அப்படியே செய்து சமாளித்தேன்.
கல்லூரி வந்தபின் இப்படி அரைகுறை ஞானத்தோடு நடனம், நடிப்பு
எதிலும் சேர்வதில்லை என்ற நல்ல முடிவோடு, முழுமையாய் தெரிந்த
அரட்டை கச்சேரியில் மட்டும் சேர்ந்தேன்.கல்லூரியில் பைன் ஆர்ட்ஸ்
வீக்’ என்று கலைவிழா நடத்துவர்கள். டிப்பார்ட்மெண்ட்வாரியாக,
அனைத்து வகை போட்டிகளும் நடக்கும். நான் இரண்டாமாண்டு படிக்கும்
போது, சீனியர் அக்கா, `விஸ்வநாதா, வேலை வேண்டும் பாட்டுக்கு
க்ரூப் டான்ஸ் போடப் போறோம், நீ சேர்றீயா‘ன்னு கேட்டாங்க. `எனக்கு
டான்ஸ் சரியா ஆட வராது; வேணும்னா மாடிலருந்து தண்ணீ ஊத்துவாங்
களே, அதுக்கு வரட்டுமா’ன்னு பணிவோடு கேட்டேன். என்னை மகா
உஷ்ணமாய் முறைத்து விட்டு, அந்த சீனெல்லாம் கிடையாதுன்னு
போயிட்டாங்க.
ஆனால் விதி என்னை வேறு ரூபத்தில் மாட்டி விட்டது. `ப்ளாக்போர்டு
ட்ராயிங் நல்லா வரையும் பெட்டில்டா என்னும் சீனியர் அக்கா காய்ச்சல்
காரணமாக வராததால், வேற யாராவது வரைறவங்க இருந்தா சொல்லுங்
கன்னு கேட்டப்போது, தோழிகள் என்னை மாட்டிவிட்டனர். பத்திரிக்கை
களில் வரும் ஜெ... படங்களை நோட்டுகளில் வரைந்து பார்ப்பேன்.
அவ்வளவுதான். வேறுவழியில்லாமல் நானும் தோழிகளும், எங்களுக்கு
ஒதுக்கியிருந்த அறைக்கு சென்றோம். இது குழுவாக பங்கெடுக்கும்
போட்டி. கொடுக்கப்பட்ட தலைப்பு `பாரதி கண்ட கனவு’. கையில் விலங்
குடன், கண்ணீரோடு ஒரு பாரதமாதா, விலங்குகள் உடைக்கபட்டு வீரமாக
ஒரு பாரதமாதா வரைந்து விட்டு, எதாவது ஒரு பாரதியார் பாட்டு சொல்
லுங்கப்பா’ என்றேன். காற்றுவெளியிடை கண்ணம்மான்னு ஒருத்தி
சொல்ல, `சனியனே! பாரதமாதாவும், ஜெமினியும் டூயட்டா பாடுறாங்க
படத்துக்கு பொருத்தமா சொல்லு’ என்றாள் இன்னொருத்தி. முடிவில்
`என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’, இன்னொரு படத்துக்கு மேல
`விடுதலை விடுதலை விடுதலை’ என்று எழுதினோம். எங்க மிஸ் பாரத
மாதா ஜெ... ஓவிய சாயல்ல இருக்காங்க என்று கேலி செய்தார்கள்.
மற்ற டிப்பார்ட்மெண்ட் எல்லாம்,`ஆலைகள் செய்வோம்; கல்வி சாலை
கள் செய்வோம், சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்று
போர்டு முழுவதும் வரைந்து வைத்திருந்தார்கள். நான் பேசாமல்
விடுதிக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன். திடீரென என் தோழிகளின்
சத்தம். `உன் டிராயிங் க்கு தான் முதல் பரிசு‘ என எழுப்பிய போது
நம்பவே முடியாத சந்தோஷம். கல்லூரிக்கு சென்றபோது மிஸ்ஸெல்லாம்
கை கொடுத்தாங்க...
பள்ளி, கல்லூரி நினைவுகள் பொக்கிஷம் போன்றவை. அந்த சந்தோஷ
தருணங்களை மீட்டெடுக்க உதவிய தீபாவுக்கு நன்றி.
.
இந்த தொடரை தொடர நான் அழைப்பவர்கள்,
1) இரண்டு அண்ணனை மட்டும் கூப்பிட்டதற்கு உரிமையோடு கோபித்துக்
கொண்ட பாரா அண்ணன்,
2) பொன்ராஜ்,
3) தம்பி செ,சரவணக் குமார்,
4) எதையும் கலகலப்பாக எழுதும் சித்ரா.
நேரம் கிடைக்கும் போது தொடருங்கள் உங்கள் அனுபவங்களை...
.