`என்ன நேரத்தில் பெறந்து தொலைச்சேனோ’ என்று சில நேரங்களில் சலித்துக் கொள்கிறோம். அல்லது பிறர் சலித்துக் கொள்வதையாவது கேட்டிருப்போம். பிறக்கும் ஒவ்வொருவரின் நேரமும், குறிக்கப்பட்டு, அந்தநேரத்திற்கான நட்சத்திரமும், குறிக்கப்பட்டு தனித்னியாக பலன்களும் ஜோதிடக் கலையில் உள்ளன. அசுபதியில் ஆரம்பித்து ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் சிலவற்றுக்கு மோசமான பலன்கள் நம் மக்களிடையேக் கூறப் படுகின்றன. நானறிந்த சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு நகைச்சுவை பகிர்வு மட்டுமே. எனக்கு ஜோஸ்யமெல்லாம் தெரியாது.
        முதலில் என்னிடம் இருந்தே ஆரம்பிப்போம். நான் நாலாவதாக பிறந்த பெண். நாலாவதுபெண் நடைகல்லை {வீட்டின் நடைகல்லைத்தான்}பெயர்த்து விடுமாம். அதனால் நான் பிறந்ததுமே வீட்டில் இருந்த பெரியவங்க யாரோ, இவள் என்ன பெயர்ப்பது என்று, தொட்டிலில் கிடந்த என்னோடு போட்டி போட்டுக் கொண்டு, கடப்பாறையால் வீட்டின் நடைகல்லில் ஒரு மூலையை அவர்களே உடைத்து விட்டார்களாம். ஆனால் நான் நடக்க ஆரம்பித்தபின் அதே நடைகல்லில் விழுந்து நெற்றியை பெயர்த்துக் கொண்டது வேறு கதை. இன்னமும் இடது நெற்றியில் தழும்பு இருக்கிறது. கொஞ்சம் பெரிசான பிறகு சொன்னாங்க, `நாலாவது பொண்ணு நாய் படாத பாடு படும்’ என்று. ஆக மொத்தம் நாலாவது பெண் நல்லதில்லை என்பது மட்டும் புரிந்து விட்டது. உறவினர் ஒருவர் `அவிட்ட நட்சத்திரத்தில் பொண்ணு பொறந்தா தவிட்டு பானையல்லாம் தங்கம்’ என்று கூற, நானும் ஒரு பானையில் தவிடு போட்டு வைக்கச் சொல்லி அம்மாவை நச்சரித்தேன். ஆனால் அம்மாவோ, `பானையில் தவிடு போட்டு வச்சா தங்கமெல்லாம் வராது. வண்டும் புழுக்கூடும் தான் வரும்’ என்று என் தங்கக் கனவை ஒரேயடியாக தகர்த்து விட்டார்கள்.
        மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் `முற்றத்து மாமியார் மூலையிலே’ என்பார்கள்.அதனால் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமியார், அல்லது மாமனார் இல்லாத வீட்டில் தான் திருமணம் செய்ய வெண்டுமாம். என் கணவரின் நண்பர், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். காதல் திருமணம் செய்து கொண்டார். பெண்வீட்டினர் மிகுந்த ஜாதக நம்பிக்கை உள்ளவர்கள் என்பதால் தன் நட்சத்திரத்தையே மாற்றிக் கூறி திருமணம் செய்து கொண்டார். 17 வருடங்கள் ஆகிறது. மாமனார் மாமியார் இருவருமே நன்றாகத்தான் உள்ளனர்.
         இன்னோருவர்க்கு, நட்சத்திரத்தில் ஆரம்பித்து பத்து பொருத்தங்கள் இருப்பதாக கூறி திருமணம் செய்வித்தனர். ஆனால் திருமணம் ஆன மறுநாளிலிருந்தே அவர்களுக்குள் `ஏழாம் பொருத்தம்’ தான். இப்போது டைவர்ஸ் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. `உத்திரத்து தாலி உறியிலே’, `பூராடம் கழுத்திலே நூலாடாது’ என்பனவும் சாதாரணமாய் கூறப் படுவன. ஆனால் தங்கம் விற்கும் விலையைப் பார்த்தால் இனி பலபேரின் கழுத்தில் நூல் தான் ஆடும் போல் தெரிகிறது.
         ``மழ மேகத்துக்கும், மடிப் புள்ளைக்கும் நேரங் காலம் கெடையாது’’ என்று கிராமத்தில் சொல்வதுண்டு. ஆனால் இப்போது நல்லநேரம், நட்சத்திரம், எல்லாம் ஜோஸ்யரிடம் குறித்து வாங்கி அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்க வைத்து விடுகின்றனர். இப்படித்தான் எனக்கு தெரிந்த பெண்ணோருத்திக்கு, மே மாதம் மூன்றாம் வாரத்தில் பிரசவம் இருக்கும் என மருத்துவர் கூறியிருந்தார். சித்திரை மாதம் குழந்தை பிறந்துவிடக்கூடாதே என்று, {ஏனென்றால் சித்திரை அப்பன் தெருவிலேயாம் } மே மாதம் 18 எனக் குறித்து, அறுவை சிகிச்சை செய்யவும் தீர்மானித்திருந்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு மே 16 ந்தேதி இரவே வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. பெண்ணின் அம்மாவோ இன்னும் ஒரு நாள் தானே என்று வயிற்று வலிக்கென ஏதோ மாத்திரை கொடுத்துள்ளார். நேரமாக நேரமாக பெண்ணுக்கு கடும் உதிரப்போக்கு ஏற்பட்டு, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய சிஸேரியன், சிக்கலாகி, அந்தப் பெண்ணுக்கு இரண்டு யூனிட் இரத்தம் ஏற்றப் பட்டு மிகவும் சிரமமாகி விட்டது.
         அடுத்த நாள் அந்த பெண்ணின் தாயார் மிகவும் கவலையோடு, `சித்திரைல பெறக்கக் கூடாதுன்னு எவ்வளவோ முயற்சி செஞ்சோம். பெறந்ததென்னமோ வைகாசி தான். ஆனா நட்சத்திரம் சித்திரையாப் போச்சே. என்ன பாடு படுத்தப் போவுதோ? நாம என்னதான் மாத்தணும்னு நெனச்சாலும் சித்திரைல பெறக்கணுனு விதி இருந்தா அத யாரால மாத்த முடியும்’ என்றார்கள் மிகத் தெளிவாக. கேட்டுக் கொண்டிருந்த நான் தான் இப்போது குழம்பிப் போனேன்.
16 comments:
//விதி இருந்தா அத யாரால மாத்த முடியும்//
அவ்வளவுதான்!! :-)
நாள், நட்சத்திரம் குறித்தெல்லாம் அனுபவங்களோடு எழுத ஆரம்பித்துவிட்டாயா? அடுத்த பரிமாணம்.
// இன்னோருவர்க்கு, நட்சத்திரத்தில் ஆரம்பித்து பத்து பொருத்தங்கள் இருப்பதாக கூறி திருமணம் செய்வித்தனர். ஆனால் திருமணம் ஆன மறுநாளிலிருந்தே அவர்களுக்குள் `ஏழாம் பொருத்தம்’ தான்.//
சட்டென்று சிரிப்பு வந்தது. உனக்கே உரிய நையாண்டி!
”நான் தான் இப்போது குழம்பிப் போனேன்.” அதான் நடக்கும் இதலாம் நம்புனா
/`பானையில் தவிடு போட்டு வச்சா தங்கமெல்லாம் வராது. வண்டும் புழுக்கூடும் தான் வரும்’ என்று என் தங்கக் கனவை ஒரேயடியாக தகர்த்து விட்டார்கள்/
:-))நல்லாருக்குங்க...
ஆனா. அந்த சித்திரை வைகாசி குழந்தை விஷயம்...சிரிக்கறதா..அழறதான்னு தெரியலை...
நகைச்சுவைப் பதிவு என்று சொன்னாலும் மிக சீரியஸான ஒரு விஷயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் அக்கா.
//பெண்ணின் அம்மாவோ இன்னும் ஒரு நாள் தானே என்று வயிற்று வலிக்கென ஏதோ மாத்திரை கொடுத்துள்ளார். // அநியாயக் கோபம் வருகிறது. நியாயப்படி பார்த்தால் அந்தம்மாவை உள்ளே தள்ள் வேண்டும்.
`மழ மேகத்துக்கும், மடிப் புள்ளைக்கும் நேரங் காலம் கெடையாது’’
அச்சு அசலான பழமொழி.நல்லா இருக்கு அம்பிகா.
நகைச்சுவையாயிருந்தாலும், கடைசிப்பகுதி கவலைப்படத்தான்வைத்தது.
உத்திரத்து தாலி உறியிலே- இது, நான் இதுநாள்வரைக்கும் கேட்காத ஒன்று...புதுசா தெரிஞ்சுகிட்டேன்.
திருச்சி பக்கமெல்லாம், 'ஆடியிலே பிள்ளை பிறந்தா ஆட்டிப்படைக்கும்' என்ற சொல்வழக்கும் இருக்கிறது.
நல்ல இடுகை அம்பிகா. இந்த பழமொழி எல்லாம் சும்மா ரைமிங்காக சொல்லப் பட்டது என்பேன் எப்போதுமே நானும். அதிலேயும் மூல நட்சத்திரத்தாலே தடைபட்டுப் போகிற திருமணங்கள் ஏராளமே. இன்னும் ஒருபடி மேலே போய் வசதியா ‘ஆண்மூலம் அரசாளும். பெண்மூலம் நிர்மூலம்’னு சொல்வாங்க. இப்படி நிறைய இருக்கு:(!
ஹூஸைனம்மா,
இப்படிதான் நிறைய விஷயங்களில் விதி மீது பழியை போட்டு விடுகிறோம்.
மாதண்ணா,
மனப்பொருத்தம் இல்லாவிட்டால் எத்தனை பொருத்தம் இருந்தாலும் ஏழாம் பொருத்தம் தான்.
ஆமாம் அண்ணாமலையான்.
குழப்பி தான் விடுகிறார்கள்.
நன்றி. முல்லை.
இப்படி நம்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆமாம் தீபா.
கோபம் தான் வருகிறது.
நன்றி காமராஜண்ணா.
வாங்க சுந்தரா,
ஆடி குழந்தை... நானும் கேள்விப் பட்டதில்லை. நமக்கு தெரியாமல் இப்படி நிறைய இருக்கத்தான் செய்கின்றன.
பகிர்வுக்கு நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
நீங்கள் குறிப்பிட்டபடி பெண்களுக்கு தான் மோசமான பலன்கள் அதிகம் சொல்லப் பட்டிருக்கின்றன.
பகிர்வுக்கு நன்றி .
நானும் அவிட்ட நட்சத்திரம்தான் அம்பிகா.தவிடும் இல்லை.பானையும் இல்லை.
:-)
தங்கம் மாதிரி ரெண்டு குழைந்தைகள்.பானையை நிரப்பிக் கொண்டேன்.
:-))
அவசியமான பதிவு.
\\தங்கம் மாதிரி ரெண்டு குழைந்தைகள்.பானையை நிரப்பிக் கொண்டேன்.\\
அதேதான்
நன்றி பா.ரா.
எவ்வளவு நுட்பமான சமூக நம்பிக்கை விஷயத்தைப் பற்றி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பெரிய மிரட்டல் வார்த்தைகளைப் போடாமால் மிக இயல்பான ஒரு நடையில் அத்தனை பளீரென்று உங்களால் சொல்ல முடிந்திருக்கிறது.
சரி, இதற்காக உங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது சொல்ல மாட்டேன். பத்து, பதினோரு தேதி வாக்கில் சொல்கிறேன்.
எனது மனைவி, மாமியார் (இவர் ஓர் அற்புத வாசகர்) எல்லோரும் ரசித்த பதிவுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.
Post a Comment