.
`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.
பிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா!
ரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.
அப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.
அம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.
கிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.
ஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.
சிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.
இது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....
.